காழ்ப்புகளுக்கு முன் செயலுடன் நிற்றல்

அன்புள்ள ஜெ,

உங்கள் அறுபது மணிவிழா பற்றிய செய்திகள் வந்தபோது ஒரு so called மார்க்சியர் ‘ஜெயமோகன் எல்லாம் உயிரோடு இருக்கும்போது பிரான்சிஸ் கிருபா செத்திருக்கவேண்டாம்’ என எழுதினார். யூடியூபில் உங்கள் மணிவிழா உரைக்கு கீழேயே ‘தமிழ்த்தேசியர்கள் எல்லாம் அற்பாயுசில் சாகும்போது இவன் எல்லாம் அறுபது வயதுவரை சாகாமலிருக்கிறான்’ என்று கமெண்ட் இருக்கிறது. முகநூலில் பல அறியப்பட்ட இடதுசாரிகள், திராவிடத்தரப்புகள் எல்லாம் ‘இவன் எல்லாம் ஏன் சாகவில்லை’ என்று எழுதியிருந்தனர். எந்த so called வலதுசாரியும் எந்த இடதுசாரியின் அறுபது, எண்பது, நூறு விழாக் கொண்டாட்டங்களில் இப்படி எழுதி நான் பார்த்ததில்லை. மாறாக மனமார்ந்த வாழ்த்துக்களைத்தான் தெரிவித்திருக்கிறார்கள். இடதுசாரியாக இருப்பதென்றால் நாகரீகமில்லாமல் இருப்பதுதானா? இந்த கமெண்டுகளை மூடிவைத்தாலென்ன என்றும் தோன்றியது. என் மனவருத்ததைச் சொல்கிறேன்.

ஸ்ரீனிவாசன் ராமானுஜன்

*

அன்புள்ள ஸ்ரீனிவாசன்,

நீங்கள் சொல்லும் தரப்புக்குச் சமானமாகவே எனக்கு இந்துத்துவ தரப்பில் இருந்தும் செத்துத் தொலை என்னும் வாழ்த்துக்கள் வந்தன. எல்லா அரசியல் தரப்பும் ஒரே மனநிலை கொண்டவைதான். ஆகவேதான் அவர்கள் ஓர் எல்லையில் இருந்து மறு எல்லைக்கு எளிதில் செல்லமுடியும்.

கமெண்டுகளில் அவை இருக்கட்டும், அவையும் எதிர்வினைகளே. என் நிலைபாடும் என் ஆளுமையும் எத்தகையது என்பதை ஐயமறக் காட்டும் சான்றுகள் அவை. அவற்றைக் கண்டே என்னிடம் இளைஞர் வருகிறார்கள். ஏனென்றால் கசப்பும் காழ்ப்பும் கொண்டவர்களிடம் உளச்சிக்கல் கொண்டவர்களே செல்வார்கள். கலையை, சேவையை, செயலை நாடுவோர் நேர் எதிராக என்னை நோக்கித் திரும்புவார்கள்.

அக்காழ்ப்பை கொட்டுவர்களிடம் பகைமையோ கசப்போ இல்லை. அவர்களை நேரில் சந்தித்தால் மகிழ்ச்சியுடன் பேசவும் எனக்கு விருப்பமே. (நம் நண்பர்கள் பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுண்டு. ஆனால் அது என் கொள்கை)

இவர்கள் கொட்டும் இந்த வசைபாடல்கள், காழ்ப்புகள், வெறுப்புகள் எல்லாமே ஒருவகை பாவனைகள் மட்டும்தான். பொதுவெளிக் காட்சிப்படுத்தல்கள், தனக்குத்தானே செய்துகொள்ளும் நடிப்புகள். இவை ஒரு வகை உளப்போதாமை காரணமாகவே இவர்களுக்குத் தேவைப்படுகின்றன. இவற்றுக்கு எந்த கொள்கையோ, அரசியலோ காரணம் அல்ல. உண்மையிலேயே இத்தனை கொள்கைப்பற்றும், தீவிரமும் இருக்குமென்றால் இங்கே எத்தனை பெரும்பணிகள் நிகழ்ந்திருக்கும். எத்தனை களச்செயல்பாடுகள் நடைபெற்றிருக்கும். எதுவுமே நிகழ்வதில்லை.

இங்கே இடதுசாரி அரசியலென்பது இன்று அதிகார அரசியலின் ஒத்து ஊதுவதும், பொது ஊடகங்களில் பேசிக்கொண்டிருப்பதும் மட்டுமே. உண்மையிலேயே பணியாற்றும் இடதுசாரிகள், திராவிட இயக்கத்தவர் பலரை எனக்குத் தெரியும். அவர்களிடம் இந்தக் காழ்ப்பும் கசப்பும் இருப்பதில்லை. அவர்களிடம் ஒருவகையான கள்ளமின்மையும் எளிமையும் இருக்கும். அது அளிக்கும் நம்பிக்கையே அவர்களைச் செயல்படச் செய்கிறது. காழ்ப்பும் கசப்பும் கக்கிக்கொண்டிருக்கும் ஒருவர் அதைத்தவிர செயல் என வேறு எதையும் செய்ய முடியாது. அது அடிப்படை மானுட இயல்பு.

இந்த அரசியல் காழ்ப்புகள் பலவற்றில் உள்ளுறைந்து மதக்காழ்ப்பு இருப்பதைக் காணலாம். குறிப்பாக திமுக, திராவிட இயக்கச் சார்பை நடித்து காழ்ப்பை கக்குபவர்கள் பலர் தங்களை அப்போர்வையில் மறைத்துக்கொண்ட மதவெறியர்கள். இந்த மதவெறியர் உருவாக்கும் கறை திமுகவுக்கு மிகப்பெரிய எதிர்விசையாக ஆகும். அதை அவர்கள் உணர்ந்தால் நன்று. இந்த மதவெறியர்கள் பிறிதொரு தரப்பை கவனிக்கக்கூட முடியாதவர்கள், ஆனால் வெறுப்பு மட்டும் நிறைந்திருப்பவர்கள்.

அரசியல் என்பதுகூட பெரும்பாலும் சாதி, மத உள்ளடக்கம் கொண்டது. இங்கே சொந்தச்சாதி மீதான இயல்பான பற்றையே கட்சிப்பற்றாக ஆக்கிக்கொள்கிறார்கள். இந்தச் சார்புநிலையில் எந்த அறமும், முறைமையும் இவர்களிடம் இருப்பதில்லை.

இவர்கள் கண்மூடித்தனமான கொள்கைச்சார்புநிலையால் காழ்ப்பு கொண்டு நம்மை திட்டுகிறார்கள் என நினைக்கிறீர்கள், ஆனால் அவர்கள் ஆதரிக்கும் தரப்பு செய்யும் எல்லா தலைகீழ் மாற்றங்களையும் அவர்கள் அப்படியே ஏற்றுக்கொள்வதைக் காணலாம். திமுக பாரதிய ஜனதாவை ஆதரித்தால், இடதுசாரிகள் சசிகலாவின் காலடியில் அமர்ந்தால் அக்கட்சி ஆதரவாளர்களுக்கு ஒரு பிரச்சினையும் இருப்பதில்லை என்பதை கண்டிருக்கிறோம்.

ஏன் இந்த காழ்ப்புகள் இவர்களுக்கு தேவைப்படுகின்றன? வேறொன்றுமில்லை, அன்றாடத்தை சற்றேனும் விசைகொண்டதாக்கிக் கொள்ளத்தான். எளிய நிகழ்வாழ்க்கையின் சலிப்பை வெல்லத்தான். அதற்காகத்தான் சிலர் ஒரு நடிகரின் ரசிகர்களாகி இன்னொரு நடிகரை வசைபாடுகிறார்கள். மதவெறியும் சாதிவெறியும் கொண்டு பூசலிடுகிறார்கள். அதேதான் இங்கும், எந்த வேறுபாடுமில்லை.

ஆனால் இவர்கள் சலிப்பை கடக்க காழ்ப்பைச் சூடிக்கொள்ளும்போது வாழ்க்கையை துன்பமயமாக்கிக் கொள்கிறார்கள்.  இந்த வன்மத்தில் வாழ்பவர்கள் பல ஆண்டுகளாக ஒரே மனநிலையில், மாறாநோயால் பீடிக்கப்பட்டவர்கள் போல, வேறெதையுமே செய்ய முடியாதவர்களாக, வாழ்க்கையில் எதிலுமே மகிழாதவர்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் இருபத்துநாலு மணிநேரமும் என்னை வெறுத்து, நாள்தோறும் வசைபாடும் ஒருவரைக் கண்டால் பரிதாபமாக இருக்கிறது. எவ்வளவு கொதிப்பு, எவ்வளவு துன்பம். ஒவ்வொரு நாளும் அவர்கள் எரிவதற்காக ஏதேனும் ஒன்று கிடைக்கிறது. ‘எதற்காக இந்த வலியை நீயே இழுத்து வைத்துக்கொள்கிறாய் நண்பா, இதைக் கொஞ்சம் இறக்கிவைத்துவிட்டு சிறிதுநேரம் மகிழ்ச்சியாகத்தான் இரேன். வாழ்க்கை எவ்வளவு இனியது’ என்று கேட்கவேண்டும் போலிருக்கிறது.

வாழ்க்கையை நேர்நிலையாகத் தீவிரப்படுத்திக் கொள்ளாதவரை இன்பம் இல்லை. கல்வியும் செயலாற்றலுமே அதற்கு முதன்மையான தேவைகள். கலைகள், கலாச்சாரச் செயல்பாடுகள் எல்லாமே அதற்கு உதவியானவை. பயணங்கள், நட்புக்கூடல்கள் அடுத்தபடியாக இன்றியமையாதவை. அவற்றைக்கொண்டு வாழ்க்கையை விசைகொள்ளச்செய்யலாம், காலத்தை நிறைக்கலாம்.

நம் ஆற்றலில் ஒருதுளியும் எஞ்சாமல் செலவழிப்பதே இன்பம், விடுதலை. ஆனால் அது பயனுள்ள செயலாக இருக்கவேண்டும். அச்செயல் நம்மை மகிழ்விக்கவேண்டும். செயலுக்குப்பின் நாம் சற்றேனும் வளர்ந்திருக்க வேண்டும்.

தீவிரமான, கண்மண் தெரியாத செயல்விசையே நேர்நிலைப் பேரின்பம் என்பது என் சொந்த அனுபவம். அது ஒரு தியானம். இன்று, பொன்னியின் செல்வன் வெளியீட்டுநாள் (30-9-2022) செல்பேசியை அணைத்துவிட்டு ஒன்பது மணிநேரம் தமிழ் விக்கியில் உழைத்தபின் நிமிர்கையில் உலகம் ஒருங்கிணைவும் ஒளியும் கொண்டதாக இருக்கிறது எனக்கு. என்னைச் சுற்றி நூல்கள் குவிந்து கிடக்கின்றன. ஒரு பெருங்கொண்டாட்டத்தின் மிச்சங்கள். என் உலகம் செயலால் ஆனது. ஆகவே  தொடர்வெற்றிகளும் சாதனைகளும் மட்டுமே கொண்டது. வெற்றியில் உள்ள களிப்பை விட செயலாற்றுவதிலுள்ள களிப்பு பலமடங்கு.

இன்று காந்தியின் நாள். காந்தி போராடியது அவரைச் சூழ்ந்திருந்த கடும் காழ்ப்புகளுடன். அவரிடம் ’நீங்கள் ஏன் இன்னும் சாகவில்லை?’ என்றுதான் அவருடைய முதிய வயதில் கேட்டுக்கொண்டிருந்தனர். அவர் பலமுறை அதற்குச் சிரித்தபடி பதிலும் சொல்லியிருக்கிறார். அக்காழ்ப்புகள் இன்றும் நீடிக்கின்றன.

காந்தி செயலாற்றிய பெரும்பரப்பு திகைப்பூட்டுகிறது. எத்தனை ஆயிரம் பக்கங்கள். எத்தனை சந்திப்புகள். எத்தனை பயணங்கள். அவர் செய்த பயணங்களை சேர்த்து நீட்டினால் எத்தனை முறை உலகைச் சுற்றிவந்திருப்பார். காந்தி அளிக்கும் செய்தி அதுதான். செயலே விடுதலை.

ஜெ

சியமந்தகம், கடிதங்கள்

அறுபது, கடிதங்கள்

அறுபது, இரு கடிதங்கள்

கோவை விழா, கடிதங்கள்

இரு வாழ்த்துக்கள்

சியமந்தகம், கடிதம்

கோவை விழா, கடிதங்கள்

தத்தமில் கூடினார்கள்- மரபின்மைந்தன் முத்தையா

கோவை விழா, கடிதங்கள்

நன்றிகளும் வணக்கங்களும்

கோவையில் ஜெ 60 விழா- ஒரு நிறைவான நாள்

முந்தைய கட்டுரைமோகனாங்கி, பொன்னியின் செல்வன் யுகத்தில்…
அடுத்த கட்டுரைதர்ஷன் தர்மராஜ்- அஞ்சலி