இசைவிமரிசகரின் நண்பராக இருப்பதன் இருபத்திஐந்து பிரச்சினைகள்

download

1. இசைவிமரிசகர் என்றால் பந்தநல்லூர் பங்காரு பிள்ளை, கோனேரிராஜபுரம் கோவிந்தசாமி அய்யர் என்றெல்லாம் பெயர் இருந்தால் சிக்கலில்லை. இசைவிமரிசகர் என்று அறிமுகப்படுத்தியபின்னர் ”…பேரு ஷாஜி தாமஸ்” என்று சொல்லும்போது எதிரே நிற்பவர் முகத்தில் ஏற்படும் பதற்றம் காணச்சகிக்கத்தக்கதல்ல. சிலர் தங்கள் செவித்திறனை நம்பாமல் ”மேசை விற்கிறாருஙகளா? எங்க?” என்றுகேட்டு ”…சார் ஆக்சுவலா இப்ப இந்த டபிள் ·போல்டு மேசை அந்தளவுக்கு ஸ்டிராங்கா இருக்குமா? எதுக்குச் சொல்றேன்னா நான் போனவாரம் ஒண்ணு வாங்கினேன்.. என்ன வெலைங்கறீங்க..”என்று ஆரம்பித்துவிடுவார்கள்

2. இசைவிமரிசகர் குள்ளமாக ஜிப்பா போட்டு, செல்லத்தொப்பையுடன், மீசை இல்லாமல், பீடா வாயை தொட்டிபோல ஆக்கி அண்ணாந்து நோக்கி தொண்டைகாறிவிட்டு பேசுபவராக இருப்பது தமிழ் வழக்கம். ஆறரையடி உயரத்தில் தடித்த மீசையும் சிவப்பு நிறமுமாக, டிஷர்ட் ஜீன்ஸ் அணிந்து, வில்லன் நடிகர் தேவனுக்கு தம்பி போல இருப்பதும் சிக்கலே. அவரை எம்.ஆர்.எ·ப் டயர் ஏஜெண்ட் என்று நாம் சொல்லவேண்டுமென்றே தமிழுலகு எதிர்பார்க்கும்

3. இசைவிமரிசகர் எட்டு மொழிகளில் மலையாள நெடியுடன் பேசக்கூடியவர் வாய்திறக்கும் முன் அவரை பஞ்சாபி என்று சொல்லக்கூடுமென்றாலும் திறந்தபின் அவரை மலையாளி என்று சொல்லவேண்டிய தேவையே இல்லை. மலையாளிகளுக்கு இசை இல்லை, தோணிப்பாட்டு மட்டுமே உண்டு [ஓஓஒ ஓஓஒ ஓ!] என்பது உலகமறிந்ததாகையால் ”சும்மா வெளையாடாதீங்க சார்!”என்று தமிழர்கள் சிணுங்குவது வழக்கம்.

4. இசைவிமரிசகர் சகிக்க முடியாத குரல் கொண்டிருக்கவேண்டும் என்பது விதியாகையால் கேட்டால் பெரிய அளவுக்கு பயம் வராத குரலுடன் இவர் இருப்பதும் பிரச்சினைகளை உருவாக்குகிறது.

5. டிசம்பரில் கிறிஸ்துமஸ் காலம் அன்றி இசை ஒலிக்காத கேரள மலைக்கிராமமான கட்டப்பனையில் பிறந்தவர் இவர். அங்கே சங்கீதத்தையே ”கிறிஸ்து பெறப்புக்கு கேக்குமே ஒருமாதிரி ஒரு சத்தம் — அது” என்றுதான் குருமிளகு கிராம்பு விவசாயிகள் அடையாளம்சொல்வார்கள்.

6. இசைவிமரிசகர் காதலித்து மணம்புரிந்துகொண்டவர். மலரினும் மெல்லிய உணர்வுகள் கொண்டவர். ஜெஸ்ஸியைக் கண்டதுமே நேரில் போய் முகத்தைப்பார்த்து ‘பச்சை மலையாளத்தில்’ ”நான் உன்னை கட்ட விரும்புகிறேன். நீ ரெடி என்றால் நாளைக்குச் சொல்’ என்று மயிலறகு போல மிருதுவாக காதலை தெரிவிக்க அவர் பதறியடித்து லேடீஸ் ஹாஸ்டலுக்குள் ஓடி உயிர்தப்பியதாக கூறப்படுகிறது. அவரது அறைத்தோழி ”ஆசாமி பெரிய மீசை வைச்சு ஆறடி உயரமா இருந்தானா?” என்று கேட்க இவர் ”ஆமாம் ”என்று கண்கலங்க ”பயமே வேண்டாம். இதெல்லாம் ஹென்பெக்டாகவே டிசைன் பண்ணி மேலேருந்து கீழே அனுப்பப்பட்ட உயிர்கள். கழுத்தில் ஒரு சங்கிலி போட்டு சோபா காலில் கட்டிப்போடலாம் ”என்று அனுபவசாலி சொல்லியதாகவும் மறுநாளே காதல் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

7. மனைவியடிமைகளாக இருப்பவர்களை இசைவிமரிசகர் கடுமையாக விமரிசனம் செய்வது வழக்கம். காரணம் அவர்களின் சகல ரகசியங்களும் இவருக்கு ஐயம் திரிபறத் தெரியும். செல் சிணுங்கியதுமே முதல் ஒலித்துளிக்குள்ளாகவே பாய்ந்து எடுத்து பதற்றத்தில் நாலைந்து பித்தான்களை அழுத்தி காதில் வைத்து அறைமூலைக்கு ஓடி ஒருகையால் செல் வாயை மூடி சற்றே பவ்யமாகக் குனிந்து பரிதாபமாக ”ஆ ஜெஸ்ஸி” என்று இவர் சொல்லும்போது பார்க்கும் எவருக்கும் நெக்குருகும். பின்னர் எல்லா சொற்களும் சமாதானங்கள், சாக்குகள், அசட்டுச்சிரிப்புகள். இசைவிமரிசகர் பல்லவி மீண்டும் மீண்டும் பாடப்படுவதில் ஆர்வமுள்ளவர். பேசிமுடித்து வரும்போது இவரில் தெரியும் விடுதலை உணர்வு ஆன்மீகமானது

8 .இசை விமரிச்கர் மூவேளையும் பீ·ப் பொரியலுக்கு தொட்டுக்கொள்ள சப்பாத்தியோ ரொட்டியோ சாப்பிடும் வழக்கம் கொண்டவர். சற்றே கொலஸ்டிரால் கண்டடையப் பட்டதும் சப்பாத்தியை குறைத்துக் கொண்டார்.

9. இசைவிமரிசகர் சமீப காலம்வரை கிளிப்பச்சை நிறத்தில் மாருதி வாக்னர் கார் வைத்திருந்தார். பல்லாயிரம் கார்கள் நடுவே இந்தக்காரை கண்டடைதல் மிக எளிது. ஒரேதிசையில் ஸ்டீரிங்கை எண்பத்தாறுமுறை ஆவேசத்துடன் சுழற்றமுடியும் என்பதையும் அந்தக்கார் அதற்கு ஈடுகொடுக்கும் என்பதையும் இசைவிமரிசகர் வழியாகவே இதை எழுதுபவர் அறிந்திருக்கிறார். எங்கும் எவ்விதமும் எப்போதும் காரை திருப்பும் நிபுணராகிய இசை விமரிகருக்கு எப்படியும் பார்க்கிங் இடம் கிடைத்துவிடும். ஆனால் அவசரத்துக்கு ஒருமுறை நிறுத்திவைக்கபட்டிருந்த குவாலிஸ் காரின் திறந்திருந்த டிக்கிக்குள் இவர் தன் காரை ஏற்றி பார்க் செய்ததாகச் சொல்லப்படுவதில் சற்று மிகை இருக்கலாம்

10.இசைவிமரிசகர் நல்ல சமையற்காரர். ஆனால் சமையல் என்றாலே பீ·ப் பொரிப்பது என்றுதான் இவர் அறிந்திருக்கிறார். சமைக்கும்போது தேர்ந்த இசைநடத்துநர் பணியாற்றும்போது ஏற்படும் மோனநிலை இவர் முகத்தில் குடியேறுகிறது. இவர் நடமாடும் வழிகளில் சமையலுக்கு தடையாக உள்ள அனைத்து பாத்திரங்களையும் பேரோசையுடன் ஒரு மூலைநோக்கி செலுத்துவது இவரது இயல்பு.

11. இசைவிமரிசகர் மின்கருவிகளில் ஆர்வம் கொண்டவர். எங்கு எந்தக்கருவியைப் பார்த்தாலும் உணர்ச்சிவசப்பட்டு அக்கணமே அதை பிரித்துப் பரப்பும் பண்புநலன் கொண்டவர்– விருந்தாளியாகப்போன வீடுகளும் விதி விலக்கல்ல. ஒருமுறை ஒரு டிவியை பிரித்தபின் ”ஓகோ!” என்று இவர் வியப்படைய அதன் உரிமையாளர் சற்றே நம்பிக்கை மீளப்பெற்று ” என்ன ஆச்சு?”என்று வினவ ”இப்பல்ல தெரியுது?” என்று இவர் மேலும் வியக்க ”என்ன ?”என்று அவர் தவிக்க ”இந்த டைப்பை பிரிச்சா அப்டி ஈஸியா மாட்டிர முடியாது…” என்று இவர் தலையை ஆட்டினாராம்

12 இசைவிமரிசகர் சகல பொம்மைகளையும் வாங்கி சிலநாள் கையில் வைத்திருப்பார். ”…இது ஒரு பேஜ் செல்போன். இதிலே இந்தா இந்த பென்சிலாலே எழுதினாப்போரும் .அப்டியே எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்…”என்று குதூகலத்துடன் சொல்லி சிலேட்டில் எழுதும் எல்கேஜி பாப்பா போல நாக்கை துருத்தி ஒருமுகப்பட்டு எழுத தலைப்பட்டார். ஷாஜி சென்னை.. ”கண்டோ?” அடுத்தமுறை அது கையில் இருக்காது. ”இந்த செல்போனிலே நாம சீட்டு வெளயாடலாம்..”. இப்போதைய திட்டம் உயர்தர பைனாகுலர் ஒன்று வாங்கவேண்டும். எதற்கு? என்ன கேள்வி இது? அப்படி ஒன்று இருப்பதனால்தான்.

13. கடும் உழைப்பில் பிரியம் கொண்ட இசைவிமரிசகர் இரவெல்லாம் தூங்காமலிருந்து பிரேம்நஸீர் பாடி நடித்த பழைய பாடலின் வாயில் தானே பாடிய நாலுபேர் கேட்க ஒவ்வாத பாடலை கனகச்சிதமாக ‘ஸிங்க்’ செய்து தானே பலமுறை கேட்டு சிரித்து மகிழ்ந்தபின் விடியற்காலையில் கண்ணயர்வார். ”இதெந்து ரோகம்?”என்று ஆரம்பகாலத்தில் வியந்த ஜெஸ்ஸி ”வேற ஒரு பிரச்சினையும் இல்லியே…சரி” என்று ஆறுதலடைந்ததாக தகவல்.

14 இசைவிமரிசகர் தீர்க்கமான முடிவுகளை எடுக்கக் கூடியவர். இவர் அமர்ந்து எழுதும் நாற்காலி சற்று பெரிதாகையால் அறைக்கதவை திறக்க முடியவில்லை என அறிந்ததும் அதை வேலைக்காரிக்குக் கொடுத்துவிட்டு உடனே போய் சிறிய ஒன்றை வாங்கிவந்து போட்டு அதில் கால்மடக்கி அமரவே முடியவில்லை என்று கண்டு, வேலைக்காரிக்குக் கொடுத்தது போலவே வேறு ஒன்றை அதே நிறத்தில் அதே வடிவில் வாங்கி வந்து போட்டுக் கொண்டு வேலைக்காரியால் விசித்திரமாகப் பார்க்கப்பட்டவர்.

15 இசைவிமரிசகர் நேரடிச்சோதனை சார்ந்த ஆய்வுமுறைமையில் நம்பிக்கை கொண்டவர். இவர் எலிகளை பயன்படுத்துவதில்லை, எலிகளுக்கு தமிழ் தெரியாது. ஆகவே இவர் சுரேஷ் கண்ணனைப் பயன்படுத்துகிறார். தன் கட்டுரைகளின் கருவை முதலில் விரிவாக எடுத்துரைத்து, அதை சான்றுகளுடன் மெய்ப்பித்த பின்பு கட்டுரையை எழுதி அதை ·போனிலேயே வாசித்துக்காட்டி அதன்பின் அச்சேறிய கட்டுரையுடன் அவசரமாக வந்து முழுக்க வாசிக்கும்படி செய்து முகபாவனைகளை கூர்ந்து அவதானித்து அதில் தான் எழுத விட்டுப்போனவற்றை சொல்லி அவற்றுக்கும் எதிர்வினை வாங்கி [பிடுங்கி] பின்பு அக்கட்டுரைக்கு வரும் எதிர்வினைகள் மேல் கருத்துக்களை தொகுத்துரைத்து ஆய்வுபகரணத்தில் அவை என்ன விளைவுகளை உருவாக்குகின்றன என்று கூர்ந்து அவதானிப்பது இவரது வழக்கம். மேலும் அவையனைத்தையும் அவ்வாய்வின் விளைவுகளுடன் சேர்த்து அக்கட்டுரைகளை முக்கி முக்கி மொழிபெயர்த்த இவ்வாசிரியரிடமே விரிவாகக் கூறும் வழக்கமும் இவருக்கு உண்டு

16 இசைவிமரிசகர் இங்கிதம் உள்ளவர். ”ஜெயமோகன் பிஸியா..?”. ”ஆமா, கொஞ்சம் வேலை.ஏன்னா…” ”அதுசரி…நான் கூப்பிட்டது ஒருமுக்கியமான விசயம் சொல்றதுக்காக. ப்ளூஸ் மியூசிக்குக்கு ஒரு ஸ்பெஷாலிட்டி என்னான்னா….”என்று ஒன்றரை மணிநேரம் பேசிவிட்டு ”அப்ப சரி நான் அப்றமா கூப்பிடுறேன். எனக்கு ஒரு வேலை வருது…”என்று ·போனை வைப்பவர்.

17 இசைவிமரிசகர் நாகரீகமரபுகளை வலியுறுத்துபவர். ”…ரொம்ப மெனக்கெடுத்திட்டேனோ?” என்று ஒவ்வொரு நீள் உரையாடலுக்குப் பின்னும் கேட்க மறக்கமாட்டார். ”ஆமா….”என்று இதை எழுதுபவர் உண்மையைச் சொல்லும்போது ”சேச்சே…என்ன இது? ஒரு மேனர்ஸ் வேண்டாமா? ஜெயமோகன். இதையெல்லாம் எண்ணைக்கு கத்துக்கிடப் போறீங்க? ‘நோ நோ ஆக்சுவலி இட் இஸ் எ பிளஷர்’ னு இந்தக் கேள்விக்கு பதில் சொல்லணும். என்ன நீங்க?”

18. இசைவிமரிசகர் ஒரே சமயத்தில் பலபணிகளில் ஈடுபடுபவர். கார் ஓட்டியபடியே இசை விவாதம் ”… சலீல் சௌதுரியோட மியூஸிக் சுத்தமான வெஸ்டர்ன் அப்டீன்னு நமக்குத்தோணும்.ஆனா அதுக்கு நம்ம ஃபோக் மியூசிக்கிலேதான் பெரிய வேர் இருக்கு. செம்மீனிலே உள்ள பாட்டுகள….டேய் த்த்தா லெஃப்டுலே ஒடிடா…வாறான் பாரு…டேய் போடா ….எப்பவுமே ஃபோக் பாட்டுகளாத்தான் நினைச்சிருக்காங்க .இப்பகூட கடலோரம் போய் உங்க ஜாதிப்பாட்டுகளைப் பாடுங்கன்னு சொன்னா செம்மீன் பாட்டுகளைப் பாடுறாங்க…ட்டேய் எவண்டாவன்?”

19 இசைவிமரிசகர் நாத்திகர். அதாவது ‘கடவுள் இன்மை’ மேல் பெரும் பக்தி கொண்டவர். எங்கு எவர் கடவுள் பற்றி சொன்னாலும் பாய்ந்து கழுத்தைக் கடித்து ரத்தம் குடிப்பார். உலகில் பக்தர்கள் எல்லாரும் அனைத்துவகை துன்பங்களையும் அனுபவிக்க நாத்திகர்கள் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என ஏராளமான ஆதாரங்கள் மூலம் நிரூபிப்பார்– அதாவது நாத்திகர்களுக்குத்தான் கடவுளின் அருள் பூரணமாக இருக்கிறது என்று.

20 இசைவிமரிசகருக்கு ஏசு, பாதிரி, சர்ச் என்ற மூன்றையும் கேட்டாலே சன்னதம் வரும். ‘சொர்க்கம்னா என்ன? இங்கேருந்து மேலே போன பாதிரிமாரும் பக்தர்களும் அங்க ஒரு கெழட்டுப் பிதாவைச் சுற்றி உக்காந்து கண்ணைச் செருகி வச்சுட்டு ஓயாம அல்லேலூயா அல்லேலூயான்னு பாடிட்டே இருப்பாங்க. அந்தாள் மெண்டல் மாதிரி நாள்கணக்கா வருஷக்கணக்கா அதைக் கேட்டுட்டே இருப்பாரு… அவரு மனுஷ ஜென்மங்களைப் படைச்சதே இப்டி அவங்க பாடிதான் கேக்கணும்ணுதான்… அதுக்கு சைக்காலஜியிலே என்ன பேர்னா…”

21. இசை விமரிசகர் புராணக்குப்பைகளை கிண்டி குவித்துவிடும் தீவிரம் கொண்டவர். ‘ஹரித்வார மங்கலம்’ என்று கேட்டதுமே ஹரிக்கு ஏது துவாரம் என்று கேட்கத் தயங்க மாட்டார்

22 இசைவிமரிசகர் டி.எம்.எஸ் குரலில் மேடைகளில் பாடியவர்- கட்டப்பனையில் எதுவுமே சாத்தியம். இப்போதும் இசை நுட்பங்களை விவரிக்க எந்த ரெஸ்டாரெண்ட் மேஜையிலும் தாளமிட்டு பாட தயங்க மாட்டார். ”பார்த்த முதல்நாளே – உன்னை பார்த்த முதல்நாளே… ஏசு அழைக்கின்றார் அல்லேலூயா ஏசு அழைக்கின்றார்!” என்று அவர் ஒலியெழுப்ப பக்கத்து ஸீட்டில் நாசூக்காக குலாப் ஜாமூன் சாப்பிடும் மார்வாடிக் குண்டர் ஸ்பூனில் ஜாமூனுடன் திகைத்துப் பார்ப்பதை இம்மியும் பொருட்படுத்தமாட்டார்

23 இசைவிமரிசகர் எப்போதுமே பாட்டு கேட்டுக் கொண்டிருப்பவர். அவர் எப்போது எந்தப்பாட்டைக் கேட்பார் என்பதை அவராலேயே ஊகித்துவிடமுடியாது. திடீரென்று காத்தனூர் கறுத்தம்மா குழுவினரின் ஒப்பாரிப்பாடல்களை அவர் கேட்க ஆரம்பித்தால்கூட இதை எழுதுபவர் ஆச்சரியப்படப்போவதில்லை.

24 இசை விமரிசகர் ‘ஒன்று வாத்தியார் தலையிலே, இல்லாட்டி வகுப்புக்கு வெளியிலே’ என்ற நிலைபாடுகள் கொண்டவர். ஏ- நல்ல பாடகி, ஆகவே அவர் ஒரு இதிகாசம். பி -க்கு சுருதி இல்லை ஆகவே அவரை குழிவெட்டி மூடி அதன் மீது தப்பான நினைவுக்கல்லையும் நாட்டவேண்டும். இந்த இயல்பு காரணமாக இசைக்கு வலப்பக்கம் இடப்பக்கம் உண்டுதானே என்று ஐயம் கேட்கும் ஒரு சுத்த நாயரை இவர் தன் முதல் இசைநண்பராக வைத்திருக்கிறார். நாயர் இசை பற்றி எப்பொருள் எவ்வாய் கேட்பினும் அப்பொருள் அப்படியே அங்கீகரிக்கும் தன்மை கொண்டவராதலால் இசைவிமரிசகருக்கு நேர்மாறாக ‘வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை’ கோட்பாடு கொண்ட கவிஞர் யுவன் சந்திரசேகரிடமும் ஒரே சமயம் நட்பாக இருக்கிறார். அவர் பி-யை கோயில் கட்டிகும்பிட்டுவிட்டு ஏ-க்கு திவசம் செய்து சவண்டிக்கு சாப்பாடும் போடக்கூடாது என்று விளக்குவார்.

25 இசைவிமரிசகர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நண்பர்களை இடம் வலம் விளாசுபவர். சமீபத்தில் ஒரு வீடு வாங்கிய எஸ்.ராமகிருஷ்ணன் மாட்டிக் கொண்டார் என்று கேள்வி. ஆனால் இவ்வாசிரியர் நாசூக்கும் நுட்பமும் கவனமும் கொண்ட எவருக்கும் இல்லாத அளவு தீவிரமான நெடுநாள் நட்புகள் இசைவிமரிசகருக்கு மட்டும் இருப்பதை கவனித்திருக்கிறார். அவர் மனதிலும் இசைவிமரிசகரின் இனியநினைவு பொழுது விடிந்த முதல்கணமே புன்னகையுடன் எழுவதையும் கண்டிருக்கிறார். எண்ணி எண்ணி எல்லாவற்றையும் செலவிடும் வாழ்வில் எதையும் எண்ணாமல் தோள் தொட்டு நிற்கும் ஒரு நட்பு என்பது ஒரு பெரிய வரம் என்று எண்ணிக் கொள்கிறார்

[இசை விமரிசகர் உயிர்மை இதழில் எழுதிவரும் ‘இசைபட வாழ்தல்’ புகழ்பெற்ற தொடர். இப்போது உயிர்மை வெளியீடாக ‘சொல்லில் அடங்காத இசை ‘ என்ற நூல் வெளிவந்துள்ளது ]

மறுபிரசுரம் முதற்பிரசுரம் 2008 ஜனவரி

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 39
அடுத்த கட்டுரைகாவியத்தலைவன் நாளை