வெந்து தணிந்தது காடு – பார்வை

அன்புள்ள ஜெமோ,

வெந்து தணிந்தது காடு பற்றி விமர்சனங்களை குறிப்பிட்டிருந்தீர்கள். நம் விமர்சகர்களில் பலர் வழக்கமான கேஜிஎஃப் படத்தை எதிர்பார்த்துச் சென்றவர்கள். பலர் வில்லன் ஹீரோ என்றே பேசிக்கொண்டிருந்தனர். வில்லத்தனமும் ஹீரொயிசமும் அவர்களுக்குப் பத்தவில்லை. அவர்களுக்கு அவ்வளவுதான் தேறும்.

ஆனால் ரசிகர்கள் வேறுமாதிரி. அவர்களுக்கு சுயமான பார்வை உண்டு. அவர்கள் கதைக்குள் சென்றுவிட்டார்கள். அதனால்தான் படம் ஓடுகிறது. அதிரடித்தனம் இல்லாத நிதானமான ஒரு படத்தின் வெற்றி என்பது ஒரு ஆச்சரியமான விஷயம்தான்.

நான் பார்த்தவரை இந்த விமர்சனம் சிறப்பானது. எல்லா நுட்பங்களையும் தொட்டு எழுதப்பட்டிருந்தது. இன்றைய சலசலப்புகள் தாண்டியதும் ஓடிடியில் வெளிவந்ததும் இன்னும் அதிகமான பேரால் ஆழமான ரசிக்கப்படுமென நினைக்கிறேன்

ஜெயக்குமார் ராஜ்

வெந்து தணிந்தது காடு
சுரேஷ் கண்ணன்

கௌதம் வாசுதேவ மேனனின் வழக்கமான திரைமொழி, புரட்டிப் போட்டது போல் அப்படியே மாறியிருப்பதற்கு ஜெயமோகனுடனான கூட்டணிதான் முக்கியமான காரணமாக இருக்கக்கூடும். சிம்பு மாதிரியே கௌதமும் முற்றிலும் வேறு ஆளாக மாறிப் போயிருக்கிறார். படத்தின் ஆரம்பக்காட்சிகளைப் பார்த்தால் இயக்குநர் பாலாவின் வாசனை சற்று வருகிறது. நாமே முள்ளுக்காட்டின் நடுவில் நிற்பது போன்ற சூடு. ஜெயமோகன் எழுதிய ‘ஐந்து நெருப்புகள்’ சிறுகதையை பிறகு வாசித்துப் பார்த்தால் இது புரியும். இந்தப் பகுதியை துல்லியமாக அப்படியே வரிக்கு வரி அற்புதமாக படமாக்கியிருக்கிறார் கௌதம்.

மிகச் சாதாரண பின்புலத்திலிருந்து கிளம்பும் ஒருவன், காசுக்காக கொலை செய்யும் ஒரு கும்பலில் தன்னிச்சையாக விழுந்து உயர உயர முன்னகரும் வழக்கமான கதைதான். ஆனால் கௌதமும் ஜெயமோகனும் இணைந்து இந்த அனுபவத்தை புதுமையானதாக மாற்றியிருக்கிறார்கள்.

இது வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை. இதர படங்களில் பார்த்தால் ஒரு கட்டத்தில் வன்முறையின் மீது ஹீரோவிற்கு ஒரு வெறியே வந்து விடும். அந்த வெறித்தன உணர்வு நமக்குள்ளும் பரவி விடும். (கேஜிஎப் போல).

ஆனால் இந்தப் படத்தில் வன்முறையின் மீது ஹீரோவிற்கு ஒருவகையான அசூயை படம் முழுவதும் இருக்கிறது. துப்பாக்கியை ‘சனியன்’ போலவே பார்க்கிறான். ஒளித்து வைக்கிறான். விலகி நிற்க முடிவு செய்கிறான். ஆனால் அது நிழலைப் போல துரத்திக் கொண்டே இருக்கிறது. அவனால் அதைக் கை விட முடிவதில்லை. இந்த வளர்ச்சி மாற்றம் படத்தில் மிக இயல்பாகவும் யதார்த்தமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

‘திக்கத்தவங்களுக்கு தெய்வம்தான் துணை’ என்று ஆதிகாலத்துப் பழமொழியைச் சொல்லி தன் மகனை ஊருக்கு அனுப்பி வைப்பார் அம்மா. அப்போது ஹீரோ ஒன்று சொல்வான். “தெய்வம் இல்லைன்னா. பேய்’.. இதுதான் படத்தின் ஒன்லைன். இதை வலுவாகப் பற்றிக் கொண்டால் படம் நகரும் விதம் மனதில் அருமையாக பதிவாகும்.

உடம்பின் எடையைக் குறைத்தது மட்டுமல்ல, சிம்புவின் உடல்மொழியே வெகுவாக மாறியிருக்கிறது. படம் முழுவதும் ஒருவிதமான முகச்சுளிப்புடன் வருவது பார்க்க வித்தியாசமாக, நன்றாக இருக்கிறது. சட்டைக்காலரில் அவ்வப்போது வாயைத் துடைத்துக் கொள்ளும் அந்த மேனரிசமும் நன்று. (என்னவொன்று.. அப்போதுதான் உயர்தர சலூனுக்குச் சென்று திரும்பியது போன்ற ஹோ்ஸ்டைலை சற்று கலைத்துப் போட்டிருக்கலாம்). மற்றபடி பழைய முழுக்கைச் சட்டை, தொள தொள பேண்ட்டுடன் ஆளே மாறியிருக்கிறார். காட்சிகளின் வளர்ச்சிகளின் படி அவருடைய தோற்றமும் உடல்மொழியும் மாறிக் கொண்டே வருவது சிறப்பு.

படத்தின் இரண்டாம் பகுதி சலிப்பாக இருந்ததாக பலர்  சொல்லியிருந்தார்கள். ஆனால் எனக்கு அதுதான் மிக மிக சுவாரசியத்தை ஏற்படுத்தியது. அப்போதுதான் படத்தின் பல முக்கிய தருணங்கள் நிகழ்கின்றன. “நீ என்னைக் கொல்ல மாட்டேன்னு நானா நெனச்சிக்கிடுதேன்” என்று மெயின் வில்லன் சொல்லும் வசனமெல்லாம் தமிழ் சினிமாவிற்கு மிக மிக புதியது.

கௌதமின் வழக்கமான ரொமான்ஸ் அம்சங்கள், இந்தப் படத்தில் இல்லை என்று பலர் சொன்னார்கள். எல்லாப் படத்திலும் ஒரே மாதிரி இருந்தால் எப்படி ரசிக்க முடியும்? “நீ எனக்கு உதவி செஞ்சேன்னுல்லாம் உன்னை லவ் பண்ண முடியாது” என்று ஹீரோயின் சொல்லும் பகுதியும் பிறகு இருவருக்கும் நடக்கும் உரையாடல் எல்லாம் அற்புதம் என்றே சொல்வேன். ஸித்தி இத்னானி இந்தப் பாத்திரத்தில் மிக கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். ஹீரோவை ஒரு வித விலகமும் விருப்பமும் கொண்டு அணுகுகிற உடல்மொழியை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

படத்தில் நான் மிகவும் ரசித்த அம்சம், நீரஜ் மாதவ்வின் பாத்திரம். வன்முறையை ஆழ்மனதில் விரும்புகிறவனின் கதையும், அதை செய்யவே துணியாத ஒருவனின் கதையும் இணைக்கோடாக வந்து கொண்டே இருக்கிறது. படத்தின் இறுதிக்காட்சி ஓர் அற்புத தருணம் எனலாம். இரண்டாம் பகுதியில் நீரஜ்ஜின் பாத்திரம் வேறு வகையான விஸ்வரூபத்தை எடுக்கும் என்று யூகிக்கிறேன். அப்புக்குட்டியின் பாத்திரம் ஓர் இனிய ஆச்சரியம். படத்தின் இறுதிப்பகுதி, அடுத்த பாகத்திற்கான அவசரத்துடன் விரைகிறது. மாறாக ‘நச்’சென்று முடித்திருந்தால் எதிர்பார்ப்பு எகிறியிருக்கும்.

இதுவொரு ஒரு வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை, எனவே அந்த மாதிரியான பரபரப்பு இருக்காது என்பதை மனதில் நிறுவிக் கொண்டு படம் பார்த்தால் மிக அற்புதமான காட்சிகள் நிறைந்திருக்கின்றன. பாடல்களிலும் பேக்ரவுண்ட் ஸ்கோரிலும் ரஹ்மான் ரகளை செய்திருக்கிறார்.

சில அற்புதமான தருணங்களுக்காக இந்தப் படத்தைப் பார்க்கலாம் என்று பரிந்துரைக்கிறேன். விரும்புகிறவர்கள், செயல்படுத்துங்கள்.

முந்தைய கட்டுரைஇரு வாழ்த்துக்கள்
அடுத்த கட்டுரைசிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், உரைகள்