தமிழ் விக்கி ஏன் தேவை என்பதற்கான சான்று ஒவ்வொரு கட்டுரையிலும் உள்ளது. தமிழின் தலைசிறந்த பண்பாட்டுநாயகர்கள் பற்றி மிக மேம்போக்கான குறிப்புகளே வாசிக்கக் கிடைக்கின்றன. தமிழ் விக்கி கட்டுரைகளை படிக்கும்போதுதான் எவ்வளவு மகத்தான ஆளுமைகள் என்ற பிரமிப்பு உருவாகிறது.
சுவாமி விபுலானந்தர், சி.வை.தாமோதரம் பிள்ளை போன்றவர்களைப் பற்றிய செய்திகள் தெரியும் என்றாலும் இத்தனை முழுமையான ஒரு கட்டுரை தமிழில் படிக்கக்கிடைக்கவில்லை. டேனியல் பூர், பட்டுக்கோட்டை குருமடம் பற்றிய கட்டுரைகள் எல்லாமே புத்தம் புதியவை.
நேற்று ஆனந்த குமாரசாமி பற்றி தேடப்போய் தமிழ் விக்கியை படித்தேன். பிரமிப்பு. எவ்வளவு விரிவான கட்டுரை. எவ்வளவு கூரிய செய்திகள். புதுமைப்பித்தனில் ஆனந்த குமாரசாமியின் தாக்கம், ஆனந்த குமாரசாமி இந்து துறவியாக என்ணியிருந்தார் என்ற செய்தி எல்லாமே ஆச்சரியமானவை.
தமிழில் ஓர் அறிவியக்கமாகவே தமிழ் விக்கி ஆகியிருக்கிறது. வாழ்த்துக்கள்
ராமசுப்ரமணியம் எஸ்
ஆனந்த குமாரசாமி தமிழ் விக்கி
அன்புள்ள ஜெ,
தமிழ் விக்கியில் வந்த பல கட்டுரைகளை பெரும் ஆச்சரியத்துடன் வாசித்தேன். வள்ளலார் பற்றி வந்த கட்டுரை ஓர் அற்புதம். தமிழில் இவ்வளவு வள்ளலார் நூல்கள் வந்துள்ளன. அனைத்திலுமுள்ள எல்லாச் செய்திகளும் இந்த ஒரே கட்டுரையில் சீரான பகுப்புகளுடன் சொல்லப்பட்டுள்ளன. அச்சில் இருபத்தைந்து பக்கம் வரும் இணைப்புக் கட்டுரைகளான தொழுவூர் வேலாயுத முதலியார், அருட்பா மருட்பா விவாதம் கதிரைவேற்பிள்ளை எல்லாவற்றையும் சேர்த்தால் இருநூறு பக்க புத்தகம். செறிவான செய்திகள் மட்டுமே கொண்ட புத்தகம்.
தமிழில் இவ்வளவு செய்திகள் இவ்வளவு முழுமையாக பொதுவெளியில் கிடைப்பதென்பது ஓர் அற்புதம். கலைக்களஞ்சியம் என்றால் என்ன என்று தமிழ்விக்கி காட்டுகிறது. அதை அவதூறு கேலி அபத்தமான குறைநோண்டுதல் எல்லாம் செய்தவர்கள் மனசாட்சி என ஒன்று இருந்தால் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். இங்கே எவரும் எதுவும் செய்வதில்லை. செய்பவர்கள் மேல் நக்கல் நையாண்டி காழ்ப்பு என ஆயிரம்பேர் கிளம்பிவிடுகிறார்கள். உவேசா முதல் நீங்கள் வரை அனைவருக்கும் இதே தலையெழுத்துதான் இங்கே
சண்முகசுந்தரம் நாகமணி