ஆனந்தக் குமாரசாமியும் நிலவியலும் -கடிதம்

ஆனந்தக் குமாரசாமி – தமிழ் விக்கி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

இன்று கல்லூரியில் கனிமங்களை ,அதிலும் REE எனப்படும் rare earth elements பற்றிய குறிப்புக்களுக்காக இலங்கையின் அரிய கனிமங்களை குறித்தான பழைய கட்டுரைகளை தேடி வாசித்துக்கொண்டிருந்தேன். ஒரு ஆய்வறிக்கையில்  1904ல் Ananda Coomaraswamy  என்பவர் இலங்கையில் இருந்து சேகரித்த  யுரேனினைட் என்னும் கனிமம் குறித்தும் பின்னர்  அதில் இருநது ஏராளமான தோரியம் கண்டறியப்பட்டதையும் வாசித்தேன்.  அந்த ஆனந்த குமாரசுவாமி  தமிழ் விக்கி மூலமாக நான் அறிந்துகொண்டிருக்கும்  ஆனந்த குமாரசுவாமிதான்.

இலங்கையின் அரிய கனிம வளங்களை  1821ல் முதன் முதலில் ஆராய்ந்தவர் இங்கிலாந்தின் மின்னியலாளரும் வேதியியலாளரும் ஆன ஹம்ப்ரி டேவியின் சகோதரரான  ஜான் டேவி. அவருக்கு பிறகுதான் இலங்கையின் அரிய கனிமங்களை குறித்து உலகம் அறிந்துகொண்டிருக்கிறது.  ஆனாலும் 1903 வரை சொல்லிக்கொள்ளும் படியான கனிம ஆய்வுகள் ஏதும் இலங்கையில் நடைபெற்றிருக்கவில்லை.

1903ல் திரு Dunstan என்பவரின் மேற்பார்வையில்  தொடங்கிய இலங்கையின் கனிம வளங்கள் குறித்த ஆய்வின் போதுதான் ஆனந்த குமார சுமாமியும் ,ஜேம்ஸ் பார்சன்ஸ் என்பவருமாக அவர்களுக்குக் கிடைத்த கரிய எடை மிகுந்த கனிமத்துண்டுகளை  அவை யுரேனினைட் ஆக இருக்கலாம் என்று யூகித்து ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள் ஆனால் அதில் தோரியத்தின் அளவு 75 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்ததால்  ஆய்வு முடிவுகளை குறிப்பிட்டு இதற்கு தோரியனைட் என பெயரிடலாமென்று நேச்சர் இதழில் ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பட்டிருக்கிறது. (Nature, march 30, 1904 p.510)

1904ல்  இலங்கையின் கனிமவளத்துறையின் இயக்குநராக இருந்த ஆனந்த குமாரசுவாமி  அவரது இந்த கண்டுபிடிப்பை குறித்தும் நேச்சர் இதழில் வெளியான கட்டுரையை தொடர்ந்து அதில் தோரியம் இருக்கின்றது, இல்லை என எழுந்த சர்ச்சைகளை குறித்தும் விரிவாக எழுதியிருக்கிறார்.பேட்டியளித்துமிருக்கிறார்

இலங்கையின் கனிம வளங்களுக்கான தேடலின் போது  ’நம்பு’ nampu என அழைக்கப்பட்ட கனிமங்களை கொண்டு வந்து தரும் உள்ளுர்க்காரர்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டிருக்கிறது. இப்படி பல சுவாரஸ்யமான தகவல்களுடன் ஆனந்த குமாரசுவாமியின் கண்டுபிடிப்பை குறித்த பல கட்டுரைகள் இணையத்தில் இருக்கின்றன.

//Until 1903 there was no proper Geological Survey Unit in Sri Lanka and matters related to mineralogy was looked after by the Ceylon Survey Department. In 1903 Ceylon Mineralogical Survey was established under the directorship of Ananda Coomaraswamy, previously serving as the Mineralogical Surveyor of the Ceylon Survey Department . Ananda Coomaraswamy invigorated mineralogical studies in the country, making many original contributions, most notable being the discovery of a new mineral in collaboration with the amateur mineralogist W.D Holland in 1903-1904//

பல கட்டுரைகளில் அவர்  “the groundbreaking theorist who was largely responsible for introducing ancient Indian art to the West”.என்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார்.

ஆனந்த குமாரசுவாமி நான்கு மனைவிக்காரர். தந்தை இலங்கைத்தமிழர், தாய் ஆங்கிலேயர்,   தாத்தா பிரிட்டிஷ்  அரசாங்கத்தில் அரசியல்வாதி மற்றும் மொழிபெயர்ப்பாளர்,

தந்தை சர் பட்டம் பெற்றவர்,சைவச்சித்தாந்தத்தை ஆசியச்சங்கத்தின் இலங்கைக் கிளையில் 1857-ல் ஆங்கிலேயருக்கு வாசித்துக் காட்டி விளக்கியவர். அரிச்சந்திரன் கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நாடகமாக்கியவர். பாலி நூலான ததவம்ஸாவை மொழிபெயர்த்தவர்  இப்படி ஆனந்த குமாரசுவாமியை குறித்து தமிழ்விக்கியின் (ஆனந்த குமாரசுவாமி ) மூலம் அறிந்ததிலேயே அவர் மிக முக்கியமான, சுவாரஸ்யமான ஆளுமையாக மனதில் பதிந்திருந்தார்.  தோரியனைட் கண்டுபிடிப்பினால் மேலும் அணுக்கமாகிவிட்டார். தமிழ் விக்கி இப்படி பலரை தொடர்ந்து அறிமுகம் செய்துகொண்டேயிருக்கிறது. நன்றி

அன்புடன்

லோகமாதேவி

முந்தைய கட்டுரைகோவை விழா, கடிதங்கள்
அடுத்த கட்டுரைபோதகர் சத்தியநாதன், ஒரு மகத்தான குடும்பம்