தத்தமில் கூடினார்கள்- மரபின்மைந்தன் முத்தையா

சியமந்தகம் – அழிசி பதிப்பகம்

கோவையில் ஜெ 60 விழா- ஒரு நிறைவான நாள்
நன்றிகளும் வணக்கங்களும்

ஜெயமோகன் 60 பிறந்தநாள் அழைப்பிதழை வண்ணதாசன் அவர்களுக்கு புலனத்தில் அனுப்பிவிட்டு “நீங்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறதா” என்று கேட்டிருந்தேன்.

“கால் எலும்பு முறிவுக்குப் பிறகு வெளியே எங்கும் கம்பு ஊன்றி கொண்டு தான் நடக்கிறேன். இரண்டு நாட்களில் சொல்லட்டுமா” என்று பதில் அனுப்பினார்.

“சொல்லுங்கள்.. வருவதாகவே சொல்லுங்கள்” என்றேன்.

மறுநாளே வருவதாக குறுஞ்செய்தி அனுப்பியதோடு தன் மகனிடம் சொல்லி ரயில் பயணச்சீட்டும் பதிவு செய்துவிட்டார்.

செப்டம்பர் 18ஆம் தேதி காலை அவரை வரவேற்க நண்பர் மணியனும் நானும் அரை மணி நேரம் முன்னதாகவே ரயில் நிலையம் சென்று விட்டோம். ரயிலும் இருபது நிமிடங்கள் முன்னதாகவே வந்து விட்டது

ரயிலிலிருந்து அவர் இறங்கிய போது கூட அவ்வளவு சிரமம் தெரியவில்லை.

ஆனால் காரில் ஏறி அமர்வதற்கு அவருக்கு சில நிமிடங்கள் பிடித்தன.

இருக்கையில் பக்கவாட்டில் அமர்ந்து பாதிக்கப்பட்ட காலை இரண்டு கைகளால் பிடித்து மெல்ல உள்ளே வைத்து அடுத்த காலையும் மெல்ல உள்ளே நகர்த்திக் கொண்டார்.

இது போன்ற உபாதையுடனா இவரை தனியே கிளம்பி வரச் சொன்னோம் என்கிற குற்ற உணர்வு கூட ஏற்பட்டது.

அவர் வழக்கமாக தங்கும் சென்ட்ரல் பார்க் அப்பார்ட்மெண்டில் அறை தயாராக இருந்தது.

முதல் நாள் வேறொரு விழாவுக்கு வந்திருந்த பேச்சாளர் புலவர் திருவாரூர் சண்முகவடிவேல் அவர்கள் வண்ணதாசன் வருவதை அறிந்து அவரைப் பார்த்துவிட்டு ஊருக்கு போகலாம் என்று காத்திருக்கும் செய்தியை சொன்னதும் மிகுந்த உற்சாகம் அடைந்தார் .

புலவர் தங்கி இருந்த ஆர் வி ஹோட்டலில் எல்லோரும் காலை உணவுக்கு சந்தித்தோம்.

உணவரங்கத்தில் தொடங்கிய கலகலப்பான பேச்சு புலவரின் அறையிலும் நீடித்தது.

“மாலையில் நான்கரை மணிக்கு வெண்முரசு ஆவணப்பட திரையிடல் இருக்கிறது. அரை மணி நேர இடைவேளைக்குப் பிறகு விழா தொடங்கும் என்று நடராஜன் சொல்லியிருக்கிறார். உங்களுக்கு அவ்வளவு நேரம் வந்து அமர்ந்திருக்க முடியுமா அல்லது விழாவுக்கு மட்டும் வருகிறீர்களா” என்று நண்பர் மணியன் கேட்டார்.

”நாலரைக்கே போய்விடலாம்” என்றார் வண்ணதாசன்.

அவரை முறைப்படி வரவேற்பதற்காக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில் இருந்து அரங்கா விஜய் சூரியன் திருமதி விஜய் சூரியன் ஆகியோருடன் சாம்ராஜூம் வந்திருந்தார்.

4:15 மணி அளவில் அரங்கம் சென்று சேர்ந்த போது ஜெயமோகன் வாசகர் திரளுக்கு நடுவே நூல்களில் கையொப்பம் இட்டுக் கொண்டிருந்தார்.

நான் மெல்ல நெருங்கி “அப்படியே செக் புக்கிலும் ஒரு கையெழுத்து போட்டு குடுங்க” என்றேன்.

“செக்குல போடுறது வேற கையெழுத்து” என்றவரிடம் வண்ணதாசன் வந்திருக்கும் செய்தியை சொன்னேன்.

அதற்குள் வண்ணதாசன் நெருங்கி வந்துவிட “பயணத்தை ரொம்ப குறைச்சிக்கிட்டீங்கன்னு கேள்விப்பட்டேன் இதுக்காக இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்க ரொம்ப நன்றி” என்றார் ஜெயமோகன்.

விழா அரங்கில் சென்று அமர்ந்த போது பலரும் வண்ணதாசனை நெருங்கி வந்து மகிழ்ச்சியோடு பேசி படங்கள் எடுத்துக் கொண்டார்கள். அவர்களில் இரண்டு இளைஞர்கள் “நாங்க உங்க பின்னாலேயே இருக்கோம் என்ன வேணும்னாலும் கூப்பிடுங்க” என்றார்கள்.

சொன்னது போலவே திரையிடல் முடிந்ததும் அவரை கைப்பிடித்து வெளியே அழைத்துச் சென்று பாதுகாப்பாக திரும்பவும் கொண்டு வந்து அமர வைத்தார்கள்.

மறுநாள் உடுமலை அருகில் இருக்கும் ரேக் ரவீந்திரன் அவர்களுடைய பண்ணை வீட்டில் சென்று அரை நாள் செலவழித்த பிறகு வண்ணதாசனை ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றோம்.

எதையும் திட்டமிட்டு முன்கூட்டியே செய்து விடக்கூடிய நண்பர் மணியன் ஓர் உணவகத்தில் முன்னதாகவே தொலைபேசியில் ஆர்டர் செய்திருந்தார். உணவு பொட்டலம் தயாராக இருந்தது.

நடைமேடையில் பி1 பெட்டியில் வண்ணதாசனை ஏற்றி விட எத்தனைத்தபோது பிஏ கிருஷ்ணன் போகன் சங்கர் ஆகியோர் சேர்ந்து கொண்டார்கள்.

பி ஏ கிருஷ்ணன் என்னிடம் ஜெயமோகன் எச் ஏ ஒன் பெட்டியில் இருக்கிறார் என்றார்.

வண்ணதாசனிடம் விடைபெற்று கொண்டு கீழே இறங்கிய பின் ஜெயமோகனை பார்க்கச் சென்றோம். என்னைப் பார்த்ததும் திகைத்து “இந்த ரயில்ல தான் வரிங்களா” என்றார்.

”இல்லை வண்ணதாசனை ஏற்றி விட வந்தோம்” என்றதும் சடாரென எழுந்து “நான் அவரைப் பார்த்துட்டு வந்துடுறேன்” என்றார்.

ரயில் பெட்டிகள் ஊடாக ஜெயமோகனும் மணியனும் வர நான் இறங்கி சென்று வண்ணதாசன்  இருந்த பெட்டியை அடைந்தேன்.

“ஜெயமோகன் உங்களைப் பார்க்க வருகிறார்” என்றதுமே “அடடா நான் போய் அவரை பார்க்க மாட்டேனா” என்றபடியே வண்ணதாசன் எழுந்து கொள்ளவும் ஜெயமோகன் வந்து சேரவும் சரியாக இருந்தது.

“இவ்வளவு சிரமத்துக்கு நடுவுலயும் வந்துட்டீங்களே ரொம்ப நன்றி” என்றார் ஜெயமோகன். (வழக்கம்போல “நன்டி” என்று தான் உச்சரித்தார்)

“உங்களுக்கு வராம இருப்பேனாய்யா” என்று நெகிழ்ந்த குரலில் அவர் கேட்க பிணைந்திருந்த நான்கு கரங்களின் பிடி இறுகுவதும் நெகிழ்வதுமாக இருந்தது.

அந்த அற்புதமான வினாடிகளை மணியன் படம் எடுத்தார்.

எனக்கு பெரிய புராணத்தின் இரண்டு காட்சிகள் நினைவில் நிழலாடின.

திருப்பூந்துருத்தியில் திருநாவுக்கரசர் மடம் அமைத்துத் தங்கி இருந்த நேரம் தன் அடியவர்கள் சூழ பல்லக்கில் வருகிற திருஞானசம்பந்தர் “அப்பர் எங்குற்றார்” என்று வினவ “உம்மடியேன்! உம்மடிகள் தாங்குகின்ற பேறுபெற்று இங்குற்றேன்” என்று பல்லக்கின் கீழிருந்து குரல் கொடுத்தார் திருநாவுக்கரசர்.

இருவரும் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு பணிந்த காட்சி சேக்கிழாரின் உயிர்ச்சித்தரமாக பெரிய புராணத்தில் இருக்கிறது.

நன்கு முற்றுச் செழித்த நெற்கதிர்கள் வயல்வெளியில் வளைந்து நிற்கும் காட்சியைக் கண்டு சேக்கிழார்

“பத்தியின் பாலர் ஆகிப் பரமனுக்கு ஆளாம் அன்பர் தத்தமில் கூடினார்கள் தலையினால் வணங்குமா போல்” என்றார்.

முந்தைய நாள் விழா சில மணி நேரங்களில் ஏற்படுத்திய நிகழ்வையும் பரவசத்தையும் மறுநாளில் அந்த சில நிமிடங்கள் ஏற்படுத்தவே செய்தன.

திரும்பும் போது மணியன் ஒரு தகவல் சொன்னார். “சார் ஜெயமோகன் இந்த நாலு பெட்டி தாண்டி வர்றதுக்குள்ள வெவ்வேறு பெட்டிகளில் இருந்த அவருடைய வாசகர்கள்ல சிலரோட பேர சொல்லி எங்க இருக்காங்க எங்க இருக்காங்கன்னு கேட்டார். என்ன விஷயம்னா அவங்க எல்லாம் திருநெல்வேலியில் இறங்கறவங்க. வண்ணதாசனை ஜாக்கிரதையா இறக்கி அழைத்துப் போவதற்கு அந்த சில நிமிடங்களிலேயே அவர் ஆட்களை ஏற்பாடு செய்து விட்டார்” என்றார்.

அன்பு செய்கிற வேலை சாமானியமானதா என்ன என்கிற தொனியில் ரசிகமணி டி கே சி அடிக்கடி கடிதங்கள் எழுதுவது அப்போது நினைவுக்கு வந்தது

மரபின் மைந்தன் முத்தையா

முந்தைய கட்டுரைவியட்நாமின்,  சம்பா இந்து அரசு
அடுத்த கட்டுரைதாமரை, சிறப்புக்குழந்தைகள் – கடிதம்