கல்பற்றா நாராயணன் உரை – கடிதம்

அன்புள்ள ஜெ,

ஜெ60 மனதுக்கு நிறைவான ஒரு நாள். காலையில் பச்சைநாயகி சன்னதியில் வைத்து அந்த பெண் திருமுறையை பாடியபோதே அந்த நாள் முழுதும் நிறைந்துவிட்டது. அகத்திற்குள் வெறெதுவும் செல்லவில்லை. அன்று முழுதும் மிதந்துகொண்டே இருந்தேன். அந்த நாளை இன்னும் இனிமையாக்கியது கல்பற்றாவின் பேச்சு. ஒரு கவிஞன் மட்டுமே ஆற்றக்கூடிய உரை.

ஆச்சரியமாக, கல்பற்றாவின் இந்த கவிதையை சுதா ஸ்ரீனிவாசன் அன்று அனுப்பித் தந்திருந்தார். அந்த உரையில் அறம் தொகுப்பு பற்றிய அவரது பேச்சுக்கு அணுக்கமான கவிதை. நாங்கள் சேர்ந்திருந்து அதை மொழிபெயர்த்தோம்.

மேலும் அன்றைய உரையையும் மொழிபெயர்க்க முயன்றோம். கல்பற்றாவின் பாடலை எங்களால் மொழிபெயர்க்க முடியவில்லை, அதிலுள்ள உரையை மட்டும் மொழிபெயர்த்தோம். அதை இத்துடன் இணைத்துள்ளேன்.

அன்புடன்

ஆனந்த் குமார்

புதிரின் நண்பன் நான் (கல்பற்றா நாராயணன் உரை தமிழில்)

நிர்வாண உண்மை

ஒரு ஊரில்
ஒரு அதிகாலையில்
உண்மையும் பொய்யும் குளிக்கக் கிளம்பினர்
கரையில் ஆடைகள்
அவிழ்த்து வைத்து
அவர்கள் ஆற்றில் இறங்கினர்.

பொய்க்கு எப்போதும் அவசரம்
அது எதையும்
உணர்ந்து அனுபவிப்பதில்லை
ஏற்கனவே சொன்னவை
மறந்துவிடுமென அது
தன்னை மறந்து
உறங்குவதுகூட இல்லை.
எத்தனை இடங்களில்
எத்தனை பாரங்கள்;

பொய் நொடியில் குளித்து கரையேறியது
பொய் அதே உடையை மீண்டும் அணிவதில்லை
இன்னொருவர் உடைமேல்தான்
அதற்கு எப்போதும் மோகம்
உண்மை கழட்டி வைத்த
ஆடையை அணிந்து
பொய் அவசரமாய் இறங்கிப்போயிற்று

உண்மைக்கு அவசரமில்லை
செல்லமுடியாத இடத்திற்கு
குறித்தநேரத்தில் வந்துவிடுவதாக
அது சொல்லியிருக்கவில்லை
உண்மை தன் நேரத்தை
மற்றொருவருடையதுடன் பிணைத்துக்கொள்வதில்லை
உண்மை நிதானமாக குளித்து ஏறியது
கரையில் தனது உடை இருந்த இடத்தில்
பொய்யின் உடை

உண்மை இன்னொருவர் உடையை அணிவதில்லை
அதற்கு காட்டுவதற்கு எதுவுமில்லை
தவறிழைக்காததனால் வெட்கமுமில்லை
உண்மை ஒன்றும் அணியாமல் புறப்பட்டது
உண்மையின் அணிகள் இல்லாமல்
உண்மையை காணாதவர்
ஒருபோதும் உண்மையை
காண்பதேயில்லை

கல்பற்றா நாராயணன் 

முந்தைய கட்டுரையதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை, மாடு!
அடுத்த கட்டுரைவாணிஸ்ரீயின் நிலம்