தனிமையும் இருட்டும்

ப்ரகிருதிஸ்-த்வம் ச சர்வஸ்ய குணத்ரய விஃபாவினி

காளராத்ரி மகாராத்ரி மோகராத்ரிஷ் ச தாருணா

மூவியல்பால் முதல்பேரியற்கையைப் படைத்தவள் நீ

கரிய இரவு, பேரிரவு, பெருவிழைவின் இரவு

நீ முடிவிலா ஆழம்.

(தாந்த்ரோக்த ராத்ரி சூக்தம், தேவிபாகவதம்)

https://www.saatchiart.com/art/Painting-BLUE-SHAKTI/977590/3510670/view

புதிரின் நண்பன் நான் (கல்பற்றா நாராயணன் உரை தமிழில்)

நண்பர் ஒருவர் கேட்டார், கல்பற்றா நாராயணன் அவருடைய உரையில் குறிப்பிட்ட அந்த ‘நரகத்’தைப்பற்றி. ’அது என்ன? அது இப்போது எஞ்சியிருக்கிறதா ?சற்றேனும்?’ என்றார்.

எண்ணிப்பார்க்கிறேன். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அதை முழுமையாகக் கடந்து வந்துவிட்டேன் என்று எண்ணியிருக்கிறேன். ஆனால் சாதாரணமாக நினைவுகூர்கையிலேயே ஒவ்வொரு துளியுமென அது நினைவில் மீண்டெழுவது விந்தையாக இருக்கிறது. அதன் ஒரு துளிகூட ஒளி மங்கவில்லை.

இருளுக்கும் ஒளி உண்டு மிகக் கூரியது. அதன் பல்லாயிர்ம் முட்களில் ஒரு முனை கூட மழுங்கவில்லை. இன்று எண்ணுகையில் அந்த நாட்களை கணம் கணமென திரும்ப வாழ முடியுமென்றே தோன்றுகிறது. இவ்வண்ணமே என் இறுதிக்கணம் வரை எஞ்சும் என்று படுகிறது.

இப்போது இப்படி சொல்லிப்பார்க்கிறேன். அது ஒரு செல்வம். ஒரு சேமிப்பு. அங்கிருந்து தான் எடுத்துக்கொண்டே இருக்கிறேன். அது பல்லாயிரம் டன் எடையுள்ள அழுத்தத்தால் செறிவாகி, கல்லாகிக் குளிர்ந்து, மேலும் குளிர்ந்து, மேலும் செறிந்து, வைரம் என்றாகி, ஒளிகொண்டு அங்கிருக்கிறது. செறிவானவை விரிகையில் அவை வெடிக்கின்றன. இன்று புனைவுக் களியாட்டுக்கதைகளை பார்க்கையில் அதிலுள்ள கொண்டாட்டமும் சிரிப்பும் கூட ஒருவகையில் அதன் வெடிப்புதானோ என்று தோன்றுகிறது.

அது என்ன? அதை எப்படி நேரடியாக சொல்லி விளக்கவைக்க முடியும். முடியுமெனில் இத்தனை கதைகள் எழுதியிருக்கமாட்டேன். இத்தனை ஆயிரம் பக்கங்கள், இத்தனை லட்சம் சொற்கள் அள்ளி வைத்திருக்கமாட்டேன். அது வெடித்து, பெருகி, கொழுந்துவிட்டு, புகை மலைகளாகி, ஒளிப்பெருக்காகி, பேரழிவாகி, பெருங்கனலென்றாகி மட்டுமே தன்னை வெளிக்காட்டக்கூடிய ஒன்று.

சாவு எங்கும் உள்ளது. கொடிய சாவுகளை இளமையில் சந்திப்பவர்களும் பலர் உள்ளனர். என்னைவிட தீவிரமான வாழ்வனுபவங்களினூடாக கடந்து சென்ற பலரை இப்போதும் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறேன். சுமையேற்றும் வாழ்க்கையை ஒவ்வொரு கணமும் தோளில் வைத்துக்கொண்டிருப்பவர்களை ப்பார்க்கிறேன். அவர்களைவிட என்னுடையது பெருந்துயரம் என்று ஒருபோதும் கூறமாட்டேன். அவர்கள் மேல் ஒவ்வொரு கணமும் பரிவும் அணுக்கமும் கொள்கிறேன். ஒப்பு நோக்குகையில் என் துயர் பொருட்படுத்தக்கூடியது அல்ல என்று தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை.

உண்மையில் நான் கூறும் அந்த நரகம் என்பது சாவு அளிப்பதல்ல. இழப்பு அல்ல. சாவிலிருந்து நான் அடைந்த தத்துவவெறுமைதான். நின்றிருக்கும் மண் இல்லாமல் ஆகும் இடம். நம்ப ஒன்றும் இல்லாமல் ஆகும் தருணம். ஒவ்வொன்றையும் வகுத்து அடுக்கி அதன்மேல் நின்றுகொண்டுதான் இவ்வாழ்வை சந்தித்துக்கொண்டு தான் இருக்கிறோம். வகுபட்டவை அனைத்துமே இன்மை என்றாகும் கணம். இருட்டு, முற்றிலும் தனிமை.

முன்பொரு கதை எழுதினேன். தனிமையும் இருட்டும். அந்த வரி பல நாட்கள் என்னுள் சுழன்றுகொண்டிருந்தது. அத்தலைப்புக்கு நான் எழுதிய கதையை எந்த தொகுப்பிலும் நான் சேர்த்ததில்லை. மிக சாதாரணமான ஒன்று அது. ஆனால் தலைப்பு இன்றும் கவித்துவமாக இருக்கிறது. தனிமையும் இருட்டும். ஒன்றையொன்று வளர்ப்பவை அவை.

இப்போது அதை இப்படிச் சொல்கிறேன். அது ஈடு இணையற்ற தனிமை.  கல்பற்றா அதை தன் உரையில் சொல்கிறார். அத்தகைய ஒரு தனிமையிலிருந்து அன்றி இத்தகைய ஒரு செயலூக்கம் வர இயலாது என்று கூறுகிறார். அது உண்மை. வெற்றிடத்தை உருவாக்குகையிலேயே பெருவிசை எழுகிறது. அல்லது பெருவிசை வெற்றிடத்தை உருவாக்குகிறது.

அந்த தனிமை இன்று உள்ளதா? உள்ளது. அத்தனிமையை செயல்களால் நிறைத்துக்கொண்டேன். இப்புவியின் இனிமைகளால் நிறைத்துக்கொண்டேன். உறவு, நண்பர்கள், பயணங்கள், வாசிப்பு கனவு என. அதற்கப்பாலும் எஞ்சும் ஒரு துளி உள்ளது. புட்டியில் எவ்வளவு விட்டாலும் நிரம்பாமல் ஒரு துளி அளவுக்கு எஞ்சும் வெற்றிடம் அது. இங்கு நிரப்பப்படுபவை அனைத்தும் பெருகிப்பெருகி அந்த சிறு வெற்றிடத்தை செறிவுள்ளதாக்குகின்றன.

அத்தனிமை என்றும் உள்ளது. அத்தனிமை மட்டுமே கொண்டவர்களை யோகி என்கிறோம். யோகத்தனிமை என்றும் யோகஇருள் என்றும் நூல்கள் அதைக் குறிப்பிடுகின்றன. காளராத்திரி மகாராத்திரி மோகராத்திரி. அதில் அமர்கையில் நானும் யோகி என்றாகிறேன். பலநாட்களுக்கு ஒருமுறை, பல தருணங்களுக்கு ஒருமுறை இயல்பாக அனைத்துக்கும் அப்பால் எஞ்சி நிற்கும் அந்த தனிமையை சென்றடைந்து திகைக்கிறேன்.

அது என் உடல் பல ஆயிரம் டன் எடைகொண்டதாக ஆகும் தருணம். செயல்களின் அப்பாலுள்ள செயலின்மை. பொருள்களின் அப்பாலுள்ள பொருளின்மை. அத்தனை ஒளிகளையும் மின்மினிகளாக்கும் பேரிருள். அது ஒரு பக்கம் மூளை ஒரு மகத்தான இருநிலை. அந்த தீ எரிந்தணைந்தால், சில சமயம் மட்டும் எஞ்சும் இருளும் குளிரும் இன்மையும் அற்புதமானது.

அதைத்தான் இனிமை என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது இனிமை அல்ல, இனிமைக்கு மறுபுறமென கசப்பு உண்டு. அதை சோதி என்றிருக்கிறார்கள். சோதி அல்ல அது. சோதி எனில் இருளும் உண்டு. அது பிறிதொன்றிலாமை. அச்சொல்லால் அன்றிச் சொல்லமுடியாதது.

அப்போதுதான் உண்மையில் நித்ய சைதன்ய யதிக்கு மிக அண்மையில் இருக்கிறேன். தெய்வங்கள் சூழ அமர்ந்திருக்கிறேன். அக்கணத்தில் என்னை ‘நீ யார்?’ என்று கேட்டால் யோகி என்று தயங்காமல் சொல்வேன். அங்கிருந்து தான் இத்தனை செயல் பெருக்குக்கு திரும்பி வருகிறேன். செய்து செய்து பெருக்கி நிரப்பி எனக்குச் சுற்றும் ஒரு உலகை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன்.

வெறுமையில் இருந்து செயலுக்குச் சென்று மீளும் வெறுமை இன்னொரு வெறுமை. பெருவெறுமை. முதல்வெறுமை எதிர்நிலை கொண்டது. இறுதி வெறுமை முக்குணங்களையும் முதல்பேரியற்கையையும் படைத்தது.

ஒருநாள் இவற்றைக் கைவிடுவேன்.இந்த மண் என்னை ஏற்கனவே விட்டுவிட்டது. நான்தான் இதை பற்றிக்கொண்டிருக்கிறேன். தெள்ளுப்பூச்சிபோல எட்டுக்கைகளாலும் மண்ணை கவ்வியிருக்கிறேன். ஒருநாள் ஒவ்வொரு கையாக விடுவேன். நான் ஆயிரம் கைகள் கொண்ட கார்த்தவீரியன். பல்லாயிரம் செயலாற்றுபவன். ஒவ்வொரு கைகளையும் உதிர்த்து மீண்டும் அந்த தனிமைக்கு சென்று அமரும்போது அது ஏதோ ஒரு புள்ளியில் தித்திக்கத் தொடங்கும் என்று நினைக்கிறேன். இப்போது இனிப்பவை எல்லாம் அப்போது கசக்கலாம்.

கடும் கசப்பிலிருந்து தித்திப்பு உருவாகும் என்று அதிமதுரம் தின்றவர்களுக்கு தெரியும். உக்கிரமான தண்மை சுடும் என்றும் உறைகார்பன்-டை-ஆக்சைடை தொட்டவர்களுக்குத் தெரியும். முரண்களால் இவற்றைப் புரிந்துகொள்ள இயலாது. தித்திப்புக்கும் கசப்புக்கும் அப்பாற்பட்ட ஒன்று, அந்தப்புள்ளியில் திரண்டிருக்கும். அங்கு சென்றமர்வேன். ஒரு மாபெரும் ஊசியினூடாக செல்லும் எறும்பு கூரிய, மிகக் கூரிய முனை ஒன்றை சென்று தொடும். அதற்கப்பால் இருப்பது பெருவெளி.

ராத்ரி சூக்தம், ஆங்கிலத்தில்

முந்தைய கட்டுரைசெய்குத்தம்பி பாவலர் எனும் வியப்புநிகழ்வு
அடுத்த கட்டுரைமணிவிழா கடிதங்கள்