அறுபது, கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

தங்களது அறுபதாவது அகவை நிறைவு விழா மிகச் சிறப்பாக நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக நன்னெறிக் கழகத்தினரும் நண்பர்களும் செய்திருந்தார்கள். கல்பற்றா அவர்களுடையதும் உங்களுடையதும் யுவன் அவர்களது பேச்சும் ஆத்மார்த்தமாக இருந்தது. அரங்கம் நிறைந்த விழா நீங்கள் எங்களுக்கு யார் என்பதை உலகிற்கு சந்தேகமின்றி காட்டியது.

மதியமும் இரவும் உங்களது ‘ஜமா’வில் கலந்து கொண்டேன். வெவ்வேறு தளங்களில் தன்னியல்பாக சென்ற பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது ‌‌ குறிப்பாக – மாபெரும் சோவியத் யூனியனின் பரப்பியக்க முயற்சிகளை முறியடித்த மூவர் என மொழிபெயர்ப்பாளர்கள் மூவரை சொன்னது தான் உச்சம். வெகுநேரம் சிரித்துக் கொண்டிருந்தோம்.

எழுத்தாளர்கள் சுரேஷ் பிரதீப், சுசித்ரா, ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் சந்திக்க முடிந்தது. ஏற்கனவே முகநூல் வழியாக அறிமுகமாகியிருந்த ராதாகிருஷ்ணன் அவர்களுடன் இரவு வெகுநேரம் வரையிலும் காலையிலும் பேசிக்கொண்டிருந்தேன்.

உங்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றது  எனது நல்லூழ்.  வாழ்வின் ஒவ்வொரு கணமும் – இடரிலும் மகிழ்விலும் – எனக்கு கற்பித்து வழிகாட்டும் ஆசிரியரிடம் முழுதாக பணிந்து ஆசி பெற்றது நம்பிக்கையையும் மனவலிமையையும் தந்தது‌. நான் செய்யக் கூடுவது ஒரு லட்சிய மாணவனுக்கு தகுதியை மேலும் வளர்த்துக் கொள்வது மட்டுமே.

நன்றி

சங்கரன்

***

மிக்க மிக்க அன்புடன்  ஜெயமோகன் அவர்களுக்கு,

ஆயிரத்தொன்று வணக்கங்கள் இ-மெயில் மூலமாக அனுப்ப முடியும் என்றால், இதோ என்னிடமிருந்து அனுப்புகிறேன்.

மூன்று மாதங்களுக்கு முன் வெண்முரசு தொடங்கினேன். சுமார் 35% முடிந்தது. என் வாழ்க்கை முடியும் முன்பே முடிக்க வேண்டும் என்பது என் பிரார்த்தனை. வெண்முரசு முடிக்கும் வரை, அதையும், உங்கள் தினசரி கடிதங்களையும் தவிர வேறு எதுவும் படிப்பதில்லை என்று சபதம் எடுத்துள்ளேன்.

ஒரே ஒரு கேள்வி மட்டும் அய்யா.  சியாமந்தகத்தில் அருண்மொழி அம்மையார் உங்களுடைய காதல் கதையை பற்றி எழுதும் கட்டுரைகளில், உங்களுடைய இளைய கால புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டிருந்தார். மீசை வைத்து மிகவும் சொடியாக இருக்கிறீர்கள். அதை ஏன் எடுத்துவிட்டீர்கள்? மீசை திருப்பி வருவதற்கு சான்ஸ் உண்டா?

இப்படிக்கு, உங்கள் வாசகன், சீடன், பின்பற்றுபவனான

ராஜாமணி.

***

அன்புள்ள ராஜாமணி

நடுவே ஒருமுறை வைத்துப்பார்த்தேன். மீசையிலேயே கை இருந்தது. அதை தவிர்க்கமுடியவில்லை. எடுத்துவிட்டேன்

பார்ப்போம்

ஜெ

முந்தைய கட்டுரைதிருமா 60, கடிதம்
அடுத்த கட்டுரைகிருபா சத்தியநாதன், வந்துசென்ற தேவதை