மொழி, மொழிபெயர்ப்புக்காக ஒரு தளம்

சுசித்ரா[ ஆசிரியர் ஒளி சிறுகதை தொகுதி]

அன்புள்ள ஜெ,

கோவை மணிவிழா நிகழ்வில் கலந்துகொண்டது மிக நிறைவான அனுபவமாக இருந்தது. உங்களையும் அருண்மொழி அம்மாவையும் சந்தித்து ஆசி பெற்றதும், உங்கள் மாணவர் நிரையில் ஒருத்தியாக அந்தத் ததும்பலில் இருந்ததும், என் வாழ்நாளுக்கென சேமித்து வைத்துக் கொள்ளப்போகும் அனுபவம். உங்கள் பணிகளை பற்றி நீங்கள் கூறும்போதெல்லாம் உங்கள் ஆசிரியர்களின் பெயர்களைச் சொல்கிறீர்கள். ஓர் ஆற்றொழுக்கு போல. நானும் அந்த ஆறு தான் என்று உணர்ந்து கொள்ளும்படியான தருணமாக அது அமைந்தது.

ஆகவே இப்போது நாங்கள் தொடங்கியிருக்கும் இந்தப்பணியையும் அநாதியான ஓர் ஆணையின் இயல்பான வெளிப்பாடாகவே எண்ணிக்கொள்கிறேன். இப்படி ஓர் அமைப்புக்கான தேவை பலகாலமாக உணர்ந்த ஒன்று. சில நாட்களுக்கு முன்னால் ஒரு காலை நேர மன எழுச்சியில் மொழி என்ற பெயரை முதலில் அடைந்தேன். பிறகு அந்த மொத்தக் கனவும். தொடங்கிவிடலாம் என்று முடிவுசெய்தேன். ப்ரியம்வதாவிடம் சொன்னேன், உற்சாகமாக இணைந்துகொண்டார். இது அவருடைய கனவும் கூட.

இந்திய அளவிலேயே இந்திய இலக்கியம் என்று சொன்னால் அது ஆங்கிலத்தில் எழுதப்படும் இந்திய இலக்கியம் என்ற பிம்பம் இருக்கிறது. ஆனால் இந்தியாவுக்கு பிரம்மாண்டமான செவ்விலக்கிய பின்னணி உள்ளது. நவீன இலக்கியத்தில் தனித்துவமான ஆக்கங்களும் அதை இயற்றிய மனிதர்களும் இருக்கிறார்கள். நமக்கேயான தனித்துவமான கருத்துகள் தோன்றியிருக்கிறது. ஆனால் அவை இந்தியாவின் பல்வேறு பிராந்திய மொழிகளில் இயற்றப்பட்டுளது என்பதாலும், அவற்றுக்கிடையிலான உரையாடல்கள் நிகழ்ந்தாலும் ஆங்கிலம் வழியாக நிகழவில்லை என்பதாலும், அவை உரிய கவனம் பெறாமல் இருக்கின்றன.

இது இந்தியாவின் நவீன அறிவுத்தள அமைப்பில் ஒரு மிகப்பெரிய பிழை. ஆபத்தான இடைவெளி. இன்று தமிழகத்திலிருந்து ஆங்கிலத்தில் சோழர் வரலாற்றைப் பற்றி எழுதுகிறவர்கள் குடவாயில் பாலசுப்ரமணியத்தை அறிந்திருக்காததை சமீபத்தில் சொல்லியிருந்தீர்கள். இது வரலாறு; மேலும் புறவயமானது. வரலாற்றுக்கே இந்த நிலைமை இருக்க இலக்கியத்தைப் பற்றிச் சொல்ல வேண்டாம். அப்படிப்பட்ட எண்ணற்ற குருட்டுப்புள்ளிகளை சீர்படுத்த வேண்டிய கடமை நம் முன் உள்ளது.

தமிழ் விக்கிக்கான ஆங்கில பக்கங்களை உருவாக்கும் வேலை இந்தக் குருட்டுப்புள்ளியை சீர்செய்யும் பணியில் முதல் படி. அது பண்பாட்டுக் களத்தில் உள்ள இடைவெளிகளை நிரப்பும். ஒவ்வொரு மொழியிலும் இப்படி உருவாக்கப்பட்டால் பெரிய நன்மை பயக்கம்.

புனைவிலக்கியத்தை பொறுத்தமட்டில் அந்தத்தளம் மேலும் நுண்மையானது. ஏனென்றால் அது ரசனை சார்ந்தது. விரிவான வாசிப்பையும் தொடர்ச்சியான எழுத்தையும் உரையாடலையும் கோருவது. அதிலும், இந்திய மொழிகள் அனைத்திலிருந்தும் அதனதன் இலக்கியங்களை தேர்ந்த மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு மொழிமாற்றி அறிமுகம் செய்து, அதைப் பற்றி பேச, எழுத தகுதியானவர்களை கண்டுபிடித்து, அதற்கான வாசகர்களையும் அடைந்து தொடர்ச்சியான உரையாடலை நிகழ்த்துவதென்பது நினைத்தாலே மலைக்க வைக்கும் செயலாக உள்ளது.

இச்செயலை நாங்கள் தொடங்கியுள்ளோம். ‘மொழி‘ (Mozhi) என்று அந்த அமைப்புக்கு பெயர் வைத்துள்ளோம். இந்திய அளவிலான அமைப்பு என்றாலும் தமிழ் பெயர் தான் வைத்துள்ளோம். எப்படி ‘சம்வாத’ போன்ற சம்ஸ்கிருத வார்த்தைகளை பெயர்களாக போடுகிறார்களோ, அதுபோல் தமிழிலிருந்து ஒரு வார்த்தை. மொழி. இந்திய மொழிகளுக்கு இடையே ஒரு வெளியாக இது அமையும். வெவ்வேறு இந்திய மொழிகளில் எழுதப்பட்ட, எழுதப்படுகின்ற இலக்கியங்களின் மொழியாக்கங்களை, அவற்றைப் பற்றிய மதிப்புரைகளை, விமர்சனங்களை பிரசுரித்து, அவற்றைப் பற்றி ரசனை அடிப்படையில் விவாதங்களை முன்னெடுப்பது இந்த அமைப்பின் முதல் குறிக்கோள். ரசனை அடிப்படையில் இந்தியாவெங்கும் இலக்கியத்தை அணுகக்கூடிய இளைய தலைமுறையினர் சிலரை ஒன்று திரட்டுவது இரண்டாம் குறிக்கோள். இலக்கியத்தைப் பற்றி தொடர்ச்சியாக, கலாபூர்வமாக எழுதக்கூடிய வாசகர்களை, விமர்சகர்களை, இலக்கிய ரசனையாளர்களை வளர்த்தெடுப்பது மூன்றாம் குறிக்கோள்.

பொருத்தமான நபர்களை கண்டடைந்து அவர்களிடம் கட்டுரைகள், மொழியாக்கங்கள் வாங்கி பிரசுரித்து அவற்றின் மேல் விவாதம் உருவாக்க எண்ணியுள்ளோம். மாதம் ஒரு முறை ஒரு பிராந்திய மொழி எழுத்தாளருடன் சூம் வழியாக இணைய விவாதம் ஒன்றை ஒருங்கிணைக்க எண்ணியுள்ளோம். வெவ்வேறு மொழிப் பின்னணிகளிலிருந்து வாசகர்கள் பங்கெடுக்கும் நிகழ்வாக அதை கனவுக் காண்கிறோம்.

இதை ஒரு நண்பர் குழுவாகவே உத்தேசிக்கிறோம். எங்களுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் செயல்பாடுகளே ஒரு விதத்தில் முன்மாதிரி. சென்ற சில ஆண்டுகளாக நாம் அறிமுகம் செய்துகொண்ட வேற்று மொழி எழுத்தாளர்கள் போல மேலும் சிலரை, மாதம் ஒருவர், இருவர் என்று இணையம் வழியே அறிமுகம் செய்துகொண்டு அவர்கள் நூல்கள் குறித்து விவாதங்கள நிகழ்த்தி பதிவுசெய்யலாம் என்று திட்டமிட்டுள்ளோம். நீங்கள் 1990-களிலிருந்து தமிழ்-மலையாளக் கவிஞர்களுக்கிடையே சந்திப்புகளை ஒருங்கிணைத்ததை பற்றி எழுதியவற்றை வாசித்திருக்கிறேன். இன்று யோசிக்கையில் அப்படியான தொடர்ச்சியான, தீவிரமான சந்திப்புகள் நடந்தது என்பது சற்று திகைப்பூட்டுகிறது – ஒரு கணக்கில் அவை எளிமையான இயல்பான விஷயம், கவிஞர்களுக்குப் பேசிக்கொள்ள மொழி ஒரு தடையா? – ஆனால் எவ்வளவு அரிதாக நடக்கிறது! அவ்வளவு தீவிரமான இயங்கல் எங்களுக்கு சாத்தியப்படாமல் போனாலும் ஒத்த மனதுடைய ஒரு குழுவை திரட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

இதை மொழிகளுக்கு இடையிலான ஒரு வெளியாகவே உத்தேசிக்கிறோம். இந்திய மொழிகளுக்கிடையே ஆங்கிலம் இன்று இயல்பான ஒரு இணைப்பு மொழியாக அமைந்துள்ளது; மேலும் ஆங்கிலத்தில் ஒரு விஷயம் பதிவாகுகையில், நமக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவிலையோ, அதன் மேல் கவனமும் வெளிச்சமும் கூடுகிறது. ஆகவே இப்படியான செயல்பாடு எப்படியோ ஆங்கிலத்தை பயன்படுத்திக்கொள்ளும். ஆனால் அதே சமயம் இந்த வெளியில் எல்லா மொழிகளும் சமமானவை என்ற கொள்கையை நாங்கள் கொண்டுள்ளோம். ஆகவே இணைய விவாதங்களில் அவரவர் அவரவர் தாய்மொழியிலேயே பேசுவதை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம். ஆங்கிலத்துக்கோ மற்ற மொழிக்கோ மொழிமாற்றம் செய்யும் நண்பர்களை நம்பி களம் இறங்குகிறோம். உண்மையில் பெரும்பாலான இந்திய மொழிகளை சற்று கூர்ந்து கவனித்தால் 20-30% எப்படியும் புரியும். தொடர்ந்து கவனம் கொண்டு மொழிபெயர்ப்பாளர்களின் உதவியோடு உரையாடுகையில் நம்முடைய மொழிபிரக்ஞையும் விரிவதற்கான வாய்ப்பு உண்டு இல்லையா?

சமீபத்தில் ஒரு நேர்காணலில் நமது நண்பர் மணவாளன் அவர்கள் ஒரு வருடத்தில் மலையாளம் மொழி கற்று பி.கெ.பாலகிருஷ்ணனின் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதை பற்றிச் சொல்லியிருந்தீர்கள். அது எனக்கு பெரிய உத்வேகமாக இருந்தது. ஒரு வகையில் ‘மொழி’ உருவானது அந்த இடத்திலிருந்து தான். ஒரு வருடத்தில் ஒரு பிராந்திய மொழியை இலக்கிய விமர்சனக் கட்டுரை மொழியாக்கம் செய்யும் அளவுக்குக் கற்றுக்கொள்ள முடியும் என்று நான் நினைத்திருக்கவில்லை. இவர்கள் இருக்கிறார்கள் என்றால் ‘மொழி’ போல் ஒன்றைத் தொடங்கலாம் என்று நினைத்தேன். (ஒரு சவாலுக்காக நான் மலையாள லிபியை ஒரு நாளில் மனப்பாடம் செய்தேன். ஆறு நாள் தொடர்ந்து அக்‌ஷரம் கூட்டிப் படித்தேன். ஏழாம் நாள் ஒரு பக்க கதையை வாசித்து மொழிபெயர்த்தேன். 70% சரி).

மொழி அமைப்பின் முதல் நிகழ்வாக ஒரு தமிழ்-ஆங்கிலம் சிறுகதை மொழிபெயர்ப்புப் போட்டியை ஒருங்கிணைப்பதாக உள்ளோம். நம்மிடம் போதிய அளவுக்கு நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை. இளைய தலைமுறையினர் இன்னும் பலர் வர வேண்டும். ஆகவே நல்ல பரிசுத்தொகையுடன் கூடிய ஒரு போட்டி. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டமும் விஷ்ணுபுரம் பதிப்பகமும் பரிசுகளுக்காக தொகையை ஏற்றுக்கொள்ள பெருந்தன்மையுடன் முன்வந்துள்ளனர். நடுவர்கள் அ.முத்துலிங்கம், என்.கல்யாண் ராமன், கன்னட-ஆங்கில மொழிபெயர்ப்பாளர் தீபா பஸ்தி. போட்டியை பற்றிய மேலும் தகவல்களை இன்னும் சில நாட்களில் பகிர்ந்துகொள்கிறேன்.

உங்கள் மணிவிழாவை ஒட்டி இந்தச் செயல்பாட்டைத் தொடங்குவது மிகுந்த உத்வேகத்தையும் மனநிறைவையும் அளிக்கிறது. உங்களுக்காக நித்யா வைத்திருந்த திட்டத்தை பற்றிச் சொன்னீர்கள். உங்கள் வழியாக அந்தத் திட்டம் மேலும் விரிவுகொண்டுள்ளதாக நினைக்கிறேன்.

உங்கள் ஆதரவையும் ஆலோசனைகளையும் கோருகிறோம்.

அன்புடன்,

சுசித்ரா

*

அன்புள்ள சுசித்ரா,

வாழ்த்துக்கள்.

இத்தகைய எந்த முயற்சியும் இந்திய அளவில் கவனிக்கப்படுவது அது மேற்குலகில் கவனிக்கப்படுகிறதா என்பதைக்கொண்டே. மேற்கத்திய விமர்சகர்கள், கல்வியாளர்கள், வாசகர்கள் இதில் ஈடுபடவேண்டும். அவர்களின் பங்களிப்பையும் கருத்துக்களையும் பெற முயலவேண்டும். அதுவே முதன்மையானது.

நீண்டகாலத் தொடர்செயல்பாடுதான் எதையும் கண்கூடான வெற்றியாக ஆக்குகிறது.

வாழ்த்துக்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைபுதுவை வெண்முரசுக் கூடுகை,52
அடுத்த கட்டுரைகௌதம் மேனன், துருவநட்சத்திரம், மீட்சி