கல்பற்றா உரை, மேடையில் உருக்கொண்ட அற்புதம்

எனக்கெல்லாம் மலையாளிகள் சாதரணமாக பேசுவதே ஒரு performance போல இருக்கும். குரலின் ஏற்ற இரக்கங்கள், எதையும் ஆத்மார்த்தமாக சொல்வதான பாவம் எல்லாம் சேர்ந்து அவர்களை கவனிக்க வைக்கும். அதில் கல்பற்றாவின் கவித்துவமும் இணையும்போது அவர் கோவையில் நிகழ்த்திய உரை ஓர் அற்புதம் என்றே சொல்வேன்.
பொதுவாக கோவை ஜெ-60 விழா உரைகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். பாரதி பாஸ்கர், பவா, மரபின் மைந்தன் முத்தையா மூவரின்  உரைகளும் அவர்கள் தங்கள் களங்களில்  செயலாற்றுவதற்குரிய தார்மீக விசையை எப்படி தங்கள் எழுத்திலிருந்து அடைகிறார்கள் என்பதாக அமைந்தது. யுவனின் உரை ஒரு ப்ரியத்துக்குரிய நண்பனை அடையாளம் காட்டுவதாக இருந்தது. வாசகப் பரப்பிலும் விமர்சன உலகிலும் தாங்கள் உருவாக்கியுள்ள செல்வாக்கையும் அதை உள்வாங்கி கடந்து செல்லவேண்டிய எதிர்பார்ப்பையும் கூட முன்வைத்தார். உங்கள் உரையை நீங்கள் ஆசிரியர்களை நினைவுகூரவும் அவர்களின் தாள்பணியவும் அமைந்த வாய்ப்பாகவே பயன்படுத்திக் கொண்டீர்கள். இது உங்களுக்கான விழா என்பதால் ஆசிரியர்களை நினைவுகூர்தல், நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தல், மேலும் செயலூக்கத்தை முன்வைத்தல் என்பதற்கப்பால் மேடையை அதிகம் கைப்பற்றக்கூடாது என்ற கவனத்துடன் பேசியதாகத் தோன்றியது.
முதன்முறையாக நீங்கள் பங்குபெறும் மேடையில் உங்கள் உரையைவிடவும் முதன்மையான உரையாக அமைந்த உரையை கல்பற்றாவின் பேச்சில் கண்டேன். விழா நேரத்தில் ஒருவித பரவசத்தில் புரிந்தும் புரியாமலும் கேட்ட கல்பற்றாவின் உரையை மீண்டும் யூடியூபில் கேட்டேன். துவக்கத்திலேயே enigma என்றொரு ஆழமான சொல்லுடன் தொடங்குகிறார். தொடர்ந்து அவர் பேசிய பன்னிரெண்டு நிமிட உரையில் பல்வேறு கவித்துவ உருவகங்கள், சொல்லாட்சிகள் வழியாக ஜெயமோகன் எனும் எழுத்தாளர் எவ்வாறு ஒரு enigma என்று நிறுவி செல்லும் உரை. ஜெயமோகன் எனும் எழுத்தாளர் ஒட்டுமொத்தமாக தமிழ் வாசகர்களுக்கு, நண்பர்களுக்கு, இலக்கிய மரபிற்கு, இந்திய மரபிற்கு என்னவாக இருக்கிறார் இருக்கப்போகிறார் என்பதை சொல்லிப் பார்க்கும் உரை. இதில் பல வரிகள் தனியாக கவனித்தால்கூட கவித்துவமானவை. அறம் கதைகள் பற்றி பேசும்போது சத்யம் தன்னளவிளேயே கொண்டுள்ள அழகு, முழுமை பற்றி சொன்னது. சத்யத்தை பூரணமாக்கும் பொருட்டு தூவப்படும் பொய்கள் எப்படி சத்யத்தின் பகுதியாகவே ஆகிவிடுகின்றன என்பதாக நான் புரிந்து கொண்டேன். நரகத்தின் இருள் அதிலிருந்து மீள்கையில் பன்மடங்கு ஒளியாக சகலருக்கும் பரப்பும் இடத்தில் ‘தான் இனி ப்ராகிசிக்கயே உள்ளூ..’ என்று அவர் பேசிய இடம் ஓர் உச்சம். முன்பு தனிப்பேச்சில் ஒருமுறை மலையாள மேடைப்பேச்சு என்பது எப்படி தமிழ் மேடை மரபைக் காட்டிலும் பலபடிகள் முன்நகர்ந்த ஒன்று என்பதை சொல்லியிருக்கிறீர்கள். அதை இன்று அனுபவபூர்வமாக உணர்ந்தோம். ‘எழுதிக் கழியும்போ மாத்ரம் ரூபம் கொள்ளுன்ன ஒன்னு’ என்று அவர் தங்கள் எழுத்தைப் பற்றி ஓரிடத்தில் குறிப்பிட்டார். கல்பற்றாவின் உரையும் அந்த மேடையில் ரூபம் கொண்ட அற்புதம்.
அன்புடன்,
பாரி
முந்தைய கட்டுரைவல்லுறவை வெல்ல!
அடுத்த கட்டுரைவல்லிக்கண்ணன்