சியமந்தகம், கடிதம்

சியமந்தகம் – அழிசி பதிப்பகம்

கோவையில் ஜெ 60 விழா- ஒரு நிறைவான நாள்
நன்றிகளும் வணக்கங்களும்

அன்பின் ஜெ,

வணக்கம்.உங்கள் மணிவிழா கட்டுரைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.அத்தனை பேரின் அன்பும் உள்ளத்தை தொடுகின்றன.நானெல்லாம் எதை எண்ணுவது? என் சிந்தனை முழுக்க உங்கள் எழுத்துக்கள்தான் நிறைந்துள்ளன.

வாசிப்பதையே தொழிலாகக் கொண்ட எனக்கு  விஷ்ணுபுரம் ” கையில் கிடைத்தபோது தான் புது உலகு திறந்தது.அப்புனைவின் அத்தனை வழிகளிலும் நுழைந்து வாழ்ந்து திளைத்திருந்தேன். கிறித்தவ பிண்ணனியில் வளர்ந்த எனக்கு அதுவரை நானறிந்திராத வாழ்வின் பக்கங்களை சொல்லியது உங்கள் படைப்புகள் தான்.ஜெயமோகன் ஜெயமோகன் என்று தேடித்தேடி வாசித்தேன்.இன்றைய காந்தி,இந்து ஞான மரபில், கொற்றவை, அறம், காடு  , ஊமைச்செந்நாய்,கிளிசொன்ன கதைகள் என்று உங்கள் எழுத்துக்களிலேயே மூழ்கி இருந்தேன்.

அதுவரையில் வார இதழ்களிலும் நானறிந்த நூலகங்களிலும் வாசித்தறிந்த எல்லாமே சிறு துளி மட்டுமே என உணர்ந்தேன். இலக்கியம் என்பதன் முழுமையை அறிய உங்கள் எழுத்துக்கள் தான் எனக்கு அடிப்படை.

இந்நிலத்தின்  பல்லாயிரம் ஆண்டுகளின் ஞானம்,உளத் தேடல்கள், ஆலயங்களின் தொன்மை, அவற்றின் மையமாக வளர்ந்த கலைகள், ஆன்மீகம் என்று அத்தனை அடுக்குகளையும் புரிந்து கொள்ளத் தொடங்கினேன்.வாசிப்பது என்பதையே உள்ளத்தில் ஒரு குற்ற உணர்வுடனே அதுவரையில் செய்து கொண்டிருந்தேன்.எனக்கு சொல்லித்தந்த ஆசிரியர்கள் குடும்பங்கள் என்று எல்லாருமே என்னை அதற்காக எப்பொழுதும் கண்டித்துக் கொண்டே இருந்ததும் அதற்கு காரணம்.என்னால் வாசிக்காமல் சில மணிகள் கூட இருக்க முடியாது என்பதாலேயே சிறு பிள்ளையிலிருந்தே ஒளித்து மறைத்தாகிலும் படித்துக்கொண்டே தான் இருப்பேன்.

ஆனால் இலக்கிய வாசிப்பு என்பதே ஒரு பேருவகை, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், விதி சமைப்பவர்கள் என்றெல்லாம் உங்கள் கட்டுரைகள் வாசித்த பிறகே எனக்கு என் வாசிப்பின் மீதும் எழுத்தின் மீதும் அத்தனை பெருமிதம் வந்தது.இலக்கியம் என்பதன் உயர்வினை அறிந்துகொண்டேன்.

சங்கப்பாடல்கள் கம்பன் கபிலன் என்றெல்லாம் அதன்பிறகே முழுமையாக வாசித்தேன்.என் வாழ்க்கை, என் பேச்சு எல்லாமே மாறியது.

யாதெனின் யாதெனின் ” என்ற குறளை புல்வெளி தேசம் நூலில் மேற்கோள் காண்பித்திருப்பீர்கள்.அதை வாசித்த கணம் எனக்கு இன்னும் நினைவிலிருக்கிறது. அதிகம் செலவழிக்காவிட்டாலும் அதுவரை நான் பார்த்ததும் ஆசைப்பட்ட எல்லாவற்றையும் வாங்கி விடுவேன்.ஆனால் உங்கள் எழுத்தே என் இயல்பை மாற்றியது.யாதெனின் என்பதன் பொருளை உண்மையாக உணர்ந்தேன்.என் வாழ்க்கை முறையே மாறியது.அது மனதிற்கு மிகப்பெரிய விடுதலையாக அமைந்தது.

அதே போல ” நான்கள்” என்று பிரித்து எழுதியிருப்பீர்கள்.இலக்கியத்தையும் வாசிப்பையும் எழுத்தையும் ஒன்றாக குழப்பிக் கொள்ளாமல் எப்படி சமன்செய்வது என்பதையெல்லாம் நான் அறிந்து கொண்டேன்.

நான் மலைப்பகுதியில் வளர்ந்திருந்தாலும் பழங்குடியினர் வாழ்வு , மரபுகள் பண்பாடுகள் பற்றியெல்லாம் தெளிவான புரிதல்கள் இருந்ததில்லை.உங்கள் எழுத்துக்களே எனக்கு அவற்றையெல்லாம் கற்றுத் தந்தன.இன்னும் இன்னும் ஒவ்வொரு நாளும் உங்கள் இணையப்பக்கத்தை வாசித்தே எல்லாவற்றையும் அறிகிறேன்.

என் வாழ்வில் தினமும் அதிகமுறை நான் சொல்லும் பெயர்கள் ஜெயமோகனும் ஜெயகாந்தனும் என்பது என் நண்பர்களுக்குத் தெரியும்.என்னவோ தமிழ்  எழுத்தாளர்களெல்லாம் என் சக தோழர்கள் போலவும் தினமும் அவர்களிடம்  நான் பேசுவது  போலவுமே அவர்களின் மேற்கோள்கள்  கதை மாந்தர்கள் என் வாயில வந்து கொண்டே இருப்பார்கள்.இவையெல்லாம் திட்டமிட்டவை அல்ல.என் இயல்பே அதுதான்.அவர்களிடம் பேசாவிட்டால் என்ன? ஒவ்வொருநாளும் அவர்களின் எழுத்துக்களே என்னை நடத்துகின்றன.அதைவிட வேறென்ன அணுக்கம் வேண்டும்?

ஜெ, முதலில் உங்கள் எழுத்து எனக்கு அறிமுகமானது  சங்க சித்திரங்கள் தொடர் மூலமாகத்தான்.

வாசிப்பு என்பது என்னுடன் இணைந்தது.ஆனால் பெரிய இலக்கிய வட்டாரத் தொடர்புகளோ அறிமுகங்களோ எனக்கு இருந்ததில்லை.ஜெயகாந்தனை மட்டுமே முழுமையாக வாசித்திருந்தேன். அதன்பிறகு உங்கள் புத்தகங்களை தேடித்தேடி வாசித்தேன்.இப்பொழுது நினைக்கையில்  அந்த வயதில் எவ்வளவு தீவிரமாக வாசித்திருக்கிறேன் என்பது எனக்கே வியப்பாகத்தான் இருக்கிறது.பள்ளி படிப்பு வரை மிக நன்றாக படித்த நான் ,  தவறான வழிகாட்டுதல்களால், அன்றைய கல்வித்துறை குழப்பங்களால்  எனக்கு கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாத ஒரு மருத்துவ பட்டயப்படிப்பில் சேர்க்கப்பட்டு  என் வாழ்வு திசைமாறி மனதளவில் நான் முழுமையாக உடைந்திருந்த காலகட்டம் அது.

அப்போது  தான் இணையம் அறிமுகமானது. .ஸ்மார்ட் போன் இல்லை. இபுக், பிடிஎப் என்று போனில் வாசிக்க முடியாது.புத்தகங்களைத் தேடி பைத்தியம் போல அலைவேன்.என்னிடம் இருக்கும் அத்தனை பணத்திற்கும் புத்தகங்களை வாங்குவேன்.வேலூரின் அத்தனை லெண்டிங் லைப்ரரிகளிலும் புத்தகங்களை வாரிக் கொண்டு வருவேன்.இலக்கிய புத்தகங்கள் கிடைப்பதே அரிதான காலம். என் படுக்கையின் கீழும் என்னைச் சுற்றிலும் புத்தகங்களாய் இருக்கும்.அப்படிப்பட்ட சூழலில் என்னை மீட்டது இலக்கியம் மட்டுந்தான்.உங்கள் புத்தகங்களை அப்படித்தான் வாசிக்கத்தொடங்கி இன்று வரை தொடர்கிறேன்.

உங்கள் பயணக் கட்டுரைகள் எனக்களித்த மன உணர்வுகளை சொல்ல முடியாது.எனக்கெல்லாம் வாழ்வு சில கிலோமீட்டர்களிலேயே சுற்றி வருவது தான்.வீடு பணிபுரியும் இடம், உறவினர் நண்பர்கள் எல்லாமே திருவண்ணாமலை வேலூரைச் சுற்றியே சுழல்வது தான்.இந்திய நிலத்தின் அத்தனை ஆறுகளையும் கோவில்களையும் சாலைகளையும் மலைகளையும் மக்களையும் நான் அறிந்து கொண்டதே உங்கள் எழுத்துகளில் தான்.இன்னும் எழுதிக்கொண்டே இருக்கலாம்.அத்தனைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் வணக்கங்கள்.

உங்கள் மணிவிழா தினத்தில் மேலும் மேலும் நீங்கள் மேன்மையுற வேண்டுகிறேன்.

அன்புடன்

மோனிகா மாறன்.

முந்தைய கட்டுரைகௌதம் மேனன், துருவநட்சத்திரம், மீட்சி-கடிதம்
அடுத்த கட்டுரைசேலை, கடிதம்