கோவை விழா, கடிதங்கள்

சியமந்தகம் தொகைநூல் வாங்க

கோவையில் ஜெ 60 விழா- ஒரு நிறைவான நாள்

நன்றிகளும் வணக்கங்களும்

அன்புள்ள ஜெ ,

உங்கள் சியமந்தகத்தில்  கலந்துகொள்ள வேண்டும் என, அறிவிப்பு வந்த அன்றே முடிவெடுத்து விட்டேன் .ஆனால் நான் என் வீட்டில் “சியமந்தகம்” என்றால் என்ன என்று விளக்க வேண்டியிருந்தது காரணம்  அறுபதாம் திருமணம் என்ற பதம் மட்டுமே  அவர்களுக்கு தெரியும் .நான் உங்கள் வாசகனாக மட்டுமல்ல என் சகோதரியின் (அருண்மொழிநங்கை) பிறந்த ஊர்க்காரன் என்ற முறையில் கலந்து கொள்வது அவசியம் என நினைத்தேன்.

பட்டுக்கோட்டையில் இருந்து கிளம்பும் போது நான் நினைத்தது ,நீங்கள் எழுத்தாளனாக எனக்கு தந்தது என்ன என்று? வாழ்க்கையில் நேர்மறை எண்ணங்களை வகுத்துக் கொள்வது எப்படி ? எப்படி சோர்விலிருந்து நம்மை மீட்டு லட்சியவாதம் நோக்கி செல்வது என்பதை உங்கள் எழுத்தின் வழியே நான் கண்டடைந்தேன் .எத்தனையோ படைப்பாளர்களின் படைப்புக்களை வாசித்திருந்தாலும் உங்கள் எழுத்தின் வழி மட்டுமே உங்களுடன்  மிக அணுக்கமாக உணர்ந்தேன் .உங்களுடன் நேரில் சந்தித்து உரையாடியது  கூட கிடையாது . அது தேவைகூட இல்லை .எழுத்தாளனின் படைப்பு போதும் அவனுடன்  உரையாட . வள்ளுவனையும் ,கம்பனையும் இவ்வளவு ஏன் ஜெயகாந்தனையும் நேரில் பார்த்தா அவர்களுடன் ஒன்றினோம் ? அவர்கள் நம் ஆளுமை மீது ஆதிக்கம் செலுத்தவில்லை ? அப்படித்தான் இதுவும் . ஒரு வேளை  நேரில்  சந்தித்தால் சில குணங்கள் நமக்கு ஒத்து போகாமல் கூட இருக்கலாம் .யார் கண்டது ?.ஆதலால் நேரில் காணாமல் படைப்பின் வழி அனுக்கமாவது நல்லது. படைப்பை கொண்டாடும் நம் சமூகத்தில் நாம் பெரும்பாலும் படைப்பாளனை கொண்டாடியதில்லை .நாம் கொண்டாட தவறிய ஆளுமைகள் எத்தனையோ பேர் இங்குண்டு. அது பாரதியில் துவங்கி சுந்தர ராமசாமி வரை பெரும் பட்டியல் உண்டு .ஆனால் உங்களுக்கு அந்த நிலையை உங்கள் வாசகர்களாகிய நாங்கள் தரமாட்டோம் என்பதன் அறிகுறிதான் இது போன்ற விழாக்கள் .

விழா நடைபெறும் கிக்கானி பள்ளிக்கு நான் மாலை தான் வந்தேன் .அரங்கத்தில் வெண்முரசு ஆவணப்படம் ஓடிக்கொண்டிருந்தது .எனக்கு ஒரே ஆச்சர்யம் , அது ஆவணப்படம் குறித்தல்ல ,கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் உள்ளே அமர்ந்திருந்தனர். தமிழ்நாட்டில் ஒரு நடிகருக்கு மட்டுமே   இது போன்ற கூட்டம் சாத்தியம் .கேரளத்தில் தான் எழுத்தாளர்களுக்கு கூட்டம் கூடும் என படித்திருக்கிறேன் .ஒரே பிரமிப்பு .வெளியில் வந்து விஷ்ணுபுரம் ஸ்டாலில் சிறில் அலெக்ஸ் மற்றும் செந்தில் குமார் இருந்தனர் .அங்கே உங்களின் “தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்” அபி குறித்து விஷ்ணுபுரம் வெளியிட்டு ஆய்வு தொகுப்பு” “குமரித்துறைவி” என  மூன்று புத்தகங்களை வாங்கினேன் .

அலை அலையாய் வாசகர்களை ஒரே நேரத்தில் கண்டது உண்மையில் பரவசம். பவா, பாரதி பாஸ்கர், யுவன் என எல்லா ஆளுமைகளும் என் அருகில் மற்றவர்களுடன் பேசி கொண்டிருக்க நான் ஒரு வார்த்தையும் பேசாது அவர்களை பார்த்து கொண்டிருந்தேன். யாரிடமும் பேசாது பாத்துக்கொண்டிருப்பது கூட சுகமே.  எழுத்தாளர்கள் வண்ணதாசன், கீரனூர் ஜாகிர் ராஜா, முஜிபுர் ரகுமான், அகர முதல்வன், என எல்லா ஆளுமைகளும் ஒரே இடத்தில் இருப்பது உங்கள் மீது கொண்ட அன்பு தானன்றி வேறில்லை. உங்களை போல் பிற எழுத்தாளர்களை அறிமுகம் செய்தது தமிழகத்தில் வேறு எழுத்தாளர் யாருமில்லை என்றே நான் நினைக்கிறேன்.

விழாவில் கல்பற்றா நன்றாக பேசினார் ஆனால் சில பதங்கள் புரியவில்லை எனக்கு. ஆனால் கீரனூர் ஜாகிர்ராஜா என்னோடு பேசும் போது விழாவில் கல்பற்றாவின் பேச்சு தான் உச்சம் என்றார் .முத்தையா ,பாரதி பாஸ்கர் ,பவா என அவர் அவர்கள் உங்களை எப்படி உள்வாங்கி உள்ளனர் என்பதை அவர்கள் பேச்சின் வழி தெரிந்தது .ஊருக்கு செல்ல நேரமானதால் பவா பேசி முடித்ததும் கிளம்பிவிட்டேன். வீட்டிற்கு வந்து தான் உங்கள்  உரை மற்றும் யுவன் உரைகளை ஸ்ருதி டிவி சேனல் வழி பார்த்தேன் .இதில் என்ன விசேஷம் என்றால் உங்களை நேரில் பார்க்கவே முடியவில்லை .பரவாயில்லை உங்கள் நிகழ்வில் கலந்துகொண்டதே போதும் .அதுவே நான் உங்களுக்கு செய்யும் மரியாதை.

அன்புடன்

செல்வா ,

பட்டுக்கோட்டை

மணிவிழா கொண்டாடிய பேரன்பும் பெரு மதிப்புக்கும் உரிய ஜெமோ  அவர்களுக்கு..

எனது அன்பும் அகமும் பொங்கி பிரவகிக்கும் நல்வாழ்த்துக்கள். இலக்கியம் சோறு போடுமா? என்று கேட்டதற்கு குமுதத்தில் மாலன் அவர்கள் சொல்லிய பதில்..

‘பசியை கொடுக்கும்’. அப்போது அவர் குமுதத்தின் ஆசிரியராக இருந்தார். சோறு என்ன பிரியாணியே போடும் என்று சுஜாதா பாணியில் பதில் சொல்லி இருக்கலாம். அவ்வாறு அவர் பதில் அளிக்க மறுத்ததற்கு அன்றைய இலக்கிய சூழல் ஒரு காரணம். அதே இலக்கிய உலகின்  விடிவெள்ளியாய் உருவெடுத்த தாங்கள் ‘எழுத்து எனக்கு தங்கத்தட்டில் சோறு போடுகிறது’ என்று பதில் அளித்தீர்கள். இரண்டுக்கும் சுமார் 20 ஆண்டுகள் இடைவெளி இருக்கலாம்.தன்னை அறிந்தவன் தரணியை வெல்வான் இது முதுமொழி. இது உங்களுக்கு முழுக்க முழுக்க பொருந்தும்.

ஒரு எழுத்தாளனாக பல ஆயிரம் நெஞ்சங்களை வசப்படுத்தியுள்ளீர்கள். விஷயத்துக்கு வருகிறேன். உங்கள் மணிவிழாவுக்கு வரவேண்டும் என்பது எனது பேரவா.ஆனால் பணிச்சூழடலால் விடுமுறை கிடைக்காத பரிதாபம் தொடர்ந்ததால் என்னால் வர இயலவில்லை.

ஆனால் விழா நடந்த நாள் அன்று என் மனது கிக்கானி அரங்குக்குள் தான் உலவி கொண்டிருந்தது. ஆனாலும் மனது திருப்தி கொள்ளவில்லை.நேற்று இரவு விழா தொடர்பான உங்கள் பேருரை  வீடியோவை முழுவதும் கேட்ட பிறகுதான் மனம் ஆசிவாசம் கொண்டது..

மரபின் மைந்தன் முத்தையா, கல்பற்றா நாராயணன், பாரதி பாஸ்கர், பவா செல்லத்துரை இவர்களுக்குப் பிறகு நீங்கள் ஆற்றிய உரை உங்களை உங்கள் எழுத்தை, விழாவை பறைசாற்றியது.

கொஞ்சம் பெருமிதம் இருந்தாலும் எந்த புகழுரையும் உங்களுக்குள் ஏறவில்லை என்பதை திண்ணமாய் சொல்லியது. அன்பு நிறைந்த வாழ்த்துக்களுடன்.. நன்றி‌ சார்.

இரா வேல்முருகன்,

மகுடஞ்சாவடி, சேலம்.

முந்தைய கட்டுரைசிப்பியும் நீர்ப்பூச்சியும், கடிதம்
அடுத்த கட்டுரைஆனந்தக் குமாரசாமியும் நிலவியலும் -கடிதம்