சோழர்கள் பற்றி…

குடவாயில் பாலசுப்ரமணியன்

கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி

பர்ட்டன் ஸ்டெயின்

சி.தேசிகாச்சாரியார்

சோழர்கள் தெலுங்கர்கள் என்று நான் சொல்லிவிட்டேன், சோழர்களை இழிவுசெய்கிறேன் என்று ஒரு கும்பல் மின்னஞ்சல்களாக அனுப்பிக் கொண்டிருக்கிறது.

இவர்கள் எங்கே எதை புரிந்துகொள்கிறார்கள் என்றே தெரியவில்லை. எப்படி இவர்களிடம் வரலாறு பற்றி பேசமுடியும்? ஏன் இங்கே மாபெரும் வரலாற்றாசிரியர்கள் எல்லாம் பொதுவெளியில் ஒன்றுமே சொல்லாமல் வாய்மூடி இருக்கிறார்கள், ஏன் சாதிமதஇன வெறியர்கள், உதிரிகள் மட்டுமே கூச்சலிடுகிறார்கள் என்று இப்போதுதான் புரிகிறது.

இங்கே வரலாற்றில் எவருக்கும் ஆர்வமில்லை. விதவிதமான காழ்ப்புகள் மட்டுமே உள்ளன. அதை பொதுவெளியில் கக்க சினிமா ஒரு சந்தர்ப்பத்தை அளிக்கிறது. அவ்வளவுதான். சினிமாவுக்குச் செய்யப்படும் மாபெரும் விளம்பரத்தில் ஒரு சிறுபகுதியை தங்களை நோக்கி ஈர்க்க முயல்கிறார்கள்.

சோழர்காலம் தமிழகத்தின் பொற்காலம் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பவன் நான். இன்றல்ல, சென்ற இருபதாண்டுகளாக. அதன்பொருட்டு ஒருபக்கம் என்னை பிராமண அடிவருடி என வசைபாடுகிறார்கள். சோழர்கள் காலத்தில்தான் பிராமணியம் வளர்ந்தது என்றும், சோழர்காலம் இருண்டகாலம் என்றும் ,நான் அதை ஆதரிக்கிறேன் என்பதனால் நான் சாதிவெறியன் என்றும் சொல்கிறார்கள்.

மறுபக்கம் சோழர்களை நான் இழிவுசெய்கிறேன் என்றும், சோழர்கள் தமிழர்களின் பொற்கால ஆட்சியாளர்கள் என்பதை நான் மறுக்கிறேன் என்றும் இன்னொரு சாரார் சொல்கிறார்கள்.

இரண்டு குரல்களும் ஒரே சமயம் எழுகின்றன. ஆச்சரியமென்னவென்றால் மேலே சொன்ன இரு சாராருக்கும் இடையே சண்டையே இல்லை. இவர்களின் சண்டை முழுக்க சினிமாக்காரர்களுடன் மட்டும்தான்.

சோழர்கள் தெலுங்கர் என்று நான் சொல்லவில்லை. சொல்லுமளவு வரலாறு அறியாதவனும் அல்ல. முற்காலச் சோழர் ஆட்சி களப்பிரர் காலத்துடன் முடிவுக்கு வந்தபின் சோழர்களின் வம்சாவளியினர் பழையாறையைக் கைவிட்டுவிட்டு முந்நூறாண்டுக்காலம் இன்றைய தெலுங்கு நாட்டில் ஏழு சிற்றரசர்களாக இருந்தனர், அவர்கள் தெலுங்குச் சோழர்கள் என அழைக்கப்பட்டனர், அவர்கள் பின்னர் தங்கள் மூதாதையர் நிலத்தைக் கைப்பற்றினர் என்று மட்டுமே சொன்னேன். அது அத்தனை வரலாற்றுநூலிலும் உள்ள செய்தி. நான் கண்டடைந்தது அல்ல.

அந்த தெலுங்குச் சோழர்கள் பிற தெலுங்கு நாட்டுச் சிற்றரசர்களுடன் உறவுகொண்டே ஆட்சி செய்தனர், அவ்வாறுதான் ஆட்சி செய்திருக்க முடியும். பின்னரும்கூட அவர்கள் மண உறவு கொண்டது வெங்கி முதலிய இன்றைய தெலுங்கு நாட்டுடன். மூன்றாம் குலோத்துங்கன் காலம் வரை அவர்களின் அரசியர் பலர் வெங்கிநாட்டவர் என்பது வரலாறு. ஆகவே அவர்களுக்கு இன்றைய தெலுங்குநாட்டுக் குருதிக்கலப்பு மிகுதி. இதுவும் நான் சொல்வது அல்ல. கே.ஏ.நீலகண்டசாஸ்திரி முதல் அத்தனை வரலாற்றாசிரியர்களும் சொல்லும் நேரடியான தகவல் உண்மை. ராஜராஜனின் மகளை மணந்தவனே வெங்கிநாட்டரசன்தான்.

நான் எங்கும் சோழர்கள் தெலுங்கர்கள் என்றோ, தெலுங்கு மரபினர் என்றோ சொல்லவில்லை. அன்றைய காலகட்டத்தில் அப்படி மொழிவாரியாகச் சொல்லவும் முடியாது. மிகத்தெளிவாகவே களப்பிரர் ஆட்சிக்காலத்தில் சோழர்களில்  ‘ஒரு சாரார்’ இன்றைய தெலுங்குநாட்டில் ஆட்சி செய்தனர் என்று மட்டுமே சொல்கிறேன். எதைப்பார்த்துவிட்டு இந்தக்கூச்சல்? எங்கே எவரேனும் ஏதேனும் சொன்னால் அதை வைத்துக்கொண்டு நரம்பு புடைக்கப் பேச ஆரம்பிக்கிறார்கள். காரணம் ஒன்றே, பொன்னியின்செல்வன் வெளியாகும் நேரம். அதைப்பயன்படுத்திக்கொண்டு கொஞ்சம் கவன ஈர்ப்பு அடைவது.

பிற்காலச் சோழர்கள் முந்தைய சோழர்களின் வம்சத்தொடர்ச்சியாகவே இருக்கவே வாய்ப்பு. எத்தனை நூற்றாண்டு கடந்தாலும் நேரடியான ரத்தத் தொடர்ச்சி இல்லையேல் சிற்றரசர்களும் குடிச்சமூகங்களும் ஒரு வம்சத்தவர்களை சோழமன்னர்களாக ஏற்றிருக்க மாட்டார்கள். ஆகவே கரிகால்சோழனின் ரத்தம்தான் விஜயாலயசோழனும் ராஜராஜசோழனும் என்றுதான் வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள்.நானும் அதையே வழிமொழிவேன். அந்த வம்சத்தொடர்ச்சி பாண்டியர்களால் அறுக்கப்பட்டபின் வேறெவரும் சோழர்களாக ஏற்கப்பட்டதுமில்லை.

(நேர் மாறாக இஸ்லாமியர்களாலும் பின்னர் நாயக்க மன்னர்களாலும் வெல்லப்பட்டு சிதறடிக்கப்பட்டபின்னரும்கூட களக்காடு, கயத்தாறு, தென்காசியை ஆட்சிசெய்த சிற்றரசர்கள் பாண்டியர்கள் என்றே பதினைந்தாம் நூற்றாண்டுவரை அழைக்கப்பட்டனர்.ஏனென்றால் அவர்களுக்குப் பாண்டிய அரசமரபுடன் நேரடியான குருதித்தொடர்ச்சி இருந்தது.)

நாம் பேசிக்கொண்டிருப்பது பத்தாம்நூற்றாண்டுக்கு முந்தைய காலம் பற்றி. அன்று தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் தொடக்க நிலையில் இருந்தன. அன்று மலையாளமே இல்லை. இன்றைய மொழயரசியலைக் கொண்டு அன்றைய அரசியல் எல்லைகளை புரிந்துகொள்ள முடியாது. அன்றைய மன்னர்களின் போர்களும் இன்றைய மொழி எல்லை சார்ந்து நிகழவில்லை. உறவுகளும் மொழிஎல்லையால் கட்டுப்படுத்தப்படவில்லை. அன்று தென்ஆந்திரம் அல்லது இன்றைய தெலுங்குநிலமும் சோழநிலமாகவே இருந்திருக்கும்.

சோழர்கள் இரணியசிங்கநல்லூரை (இரணியல்) ஆட்சிசெய்ஜ சேரமன்னன் பாஸ்கர ரவிவர்மனைக் கொன்று குமரிமாவட்டத்தை கைப்பற்றினர். மொத்தக் கேரளத்தையும் ஆட்சிசெய்தனர். அவர்களை ஆக்ரமிப்பாளர்கள் என்று இன்று ஒருவர் சொன்னால் அது வரலாற்றுப்புரிதல் அல்ல. சோழர்கள் கட்டிய ஆலயங்களே இங்கு இன்னமும் மிகுதி. அவர்கள் உருவாக்கிய ஏரிகளும் சாலைகளுமே இன்றைய கேரளத்தின் செல்வம்.

அதேபோலத்தான் நெல்லூர், குண்டூர் வரை சோழர்களின் பாசனப்பணிகள் உள்ளன. இன்றைய கர்நாடகத்தின் மூடுபதிரியில் சமணப்பள்ளிகளுக்கு சோழர்கள் அளித்த கொடைகள் பற்றிய கல்வெட்டுக்கள் உள்ளன.

இதை எல்லாம் இவர்களுக்கு எவர் புரியவைப்பது?

சோழர்காலத்தைய அரண்மனைகள் பெரும்பாலும் மரத்தாலானவை, ஆகவே அவை காலத்தில் எஞ்சவில்லை. அன்றைய அரசர்கள் மாபெரும் ஆலயங்களைக் கட்டியதுபோல தங்களுக்கான மாளிகைகளைக் கட்டிக்கொண்டவர்கள் அல்ல. அது தெய்வத்துக்கு எதிரான ஓர் அத்துமீறலாகவே அவர்களால் கருதப்பட்டது. ஆகவேதான் நமக்கு எந்த மாபெரும் அரண்மனை அடித்தளங்களும் கிடைக்கவில்லை.  அன்றைய கோட்டைகள்கூட மண்கோட்டைகளாகவே இருந்திருக்கவேண்டும். ஆகவே அவற்றின் அடித்தளங்கள்கூட எஞ்சவில்லை. இதுவும் நான் சொல்வது அல்ல. வரலாற்றாசிரியர்கள் சொல்வது.

முப்பதாண்டுகளாக தமிழின் தலைசிறந்த படைப்புகளை எழுதுபவனை. நவீனத்தமிழிலக்கியத்தின் நடையையே தனித்தமிழ் நோக்கி கொண்டுவந்தவனை, தமிழறிஞர்கள் ஒவ்வொருவரையாக ஆய்வுசெய்து ஆவணப்படுத்துபவனை, என்றென்றும் தமிழ் நினைவுகூறும் பெரும் பணிகளை முழுவாழ்நாளையும் செலவிட்டு  ஒவ்வொருநாளும் செய்துகொண்டிருப்பவனை அடிவயிற்று ஆவேசத்துடன் தமிழர்விரோதி என குற்றம்சாட்டிக் கூச்சலிடுகிறார்கள் ஒரு சாரார். வெறிநாய் சொறிநாய் என எழுதிக்குவிக்கிறார்கள். இங்குள்ள முற்போக்கினர் அங்கே சென்று புன்னகைக்கிறார்கள்.

இவர்கள் எதையாவது எப்போதாவது வாசிக்கும் வழக்கம் உள்ளவர்கள் தானா? எளிய சாதிவெறி, இனவெறிக்கு அப்பால் மெய்யாகவே இவர்களுக்கு தமிழ்மேல் ஏதாவது அக்கறை உண்டா?

ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?

ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?

ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?–2

ராஜராஜனின் பள்ளிப்படைக்கோயில் உண்மையா?

சோழர்கலை

விராலூர் சோழர் கல்வெட்டு

சோழர்காலச் செப்பேடுகள்- தினமலர் விருது

சோழர்களும் மாமாங்கமும்

பொன்னியின் செல்வன், சோழர்கள்

சோழர்களும் பிராமணர்களும்

அன்றாட வம்புகளும் அறிவுச்சூழலும்

முந்தைய கட்டுரைடேனியல் பூர், அடித்தளமென அமைந்த ஒருவர்
அடுத்த கட்டுரைகோவை விழா, கடிதங்கள்