பத்மநாபனின் செல்வம்- மேலும் விளக்கம்

திருவிதாங்கூர் மன்னர் உத்ராடம் திருநாள் மார்த்தாண்டவர்மாவின் நல்ல பேட்டி

ஜடாயு

http://www.hindustantimes.com/StoryPage/Print/719270.aspx

 

 

8

 

 

அன்புமிகு ஜெயமோகன் அவர்களுக்கு,

தினமணி தலையங்கத்தில்.. இந்தப் பின்னூட்டம் கண்ணில் பட்டது.. இதில் வரும் செங்கோட்டை மேட்டர் புரியலீங்களே..

 “அந்தக் காலத்தில் மன்னர்கள் வரும் காலங்களைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற பொக்கிஷங்களை ஏற்படுத்தினர். திரு. சர்.சி.வி.ராமன் சொன்னதுபோல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த செங்கோட்டை போன்ற ஊர்கள் எந்த விதத்திலும் முன்னேறாமல் இருப்பது கண்கூடு. இந்தப் பொக்கிஷங்களும், பண்டைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த முன்னேறாத ஊர்களும் பாதுகாக்கப்படவேண்டியவை. பொக்கிஷங்கள் அரசியல்வாதிகளால் கொள்ளை அடிக்கப்பட்டுவிடக்கூடாது.” ‍‍‍… நவாஸ்.
– அன்புடன்
   நண்பன் சத்யா, மதுராந்தகம்.
888

திரு ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம்

அன்ந்தபத்மநாப சுவாமி கோவில் சொத்துக்கள் குறித்து மிகப்பெரிய அளவில் விவாதங்கள் நடந்து வருகின்றன. நேற்று டி.என்.ஏ தளத்தில் மாளவிகா வெலயனிகல் எழுதிய கட்டுரை பார்க்க நேர்ந்த்து. அதில்  பி.சங்குன்னி மேனன் எழுதிய மதிலகம் ரெகார்ட்ஸ், கேரள சரித்ரம் என்ற நூலையும், ஏ.ஸ்ரீதர மேனன் எழுதிய திருவிதாங்கூரிண்டே சரித்ரம் என்ற நூலையும் மேற்கோள் காட்டித் திருவிதாங்கூர் மன்னர்கள் பல தகாத செயல்களில் ஈடுபட்டு அச்சொத்துக்களை ஈட்டினார்கள் என்று கூறியுள்ளார் கட்டுரை ஆசிரியர்.

உதாரணத்திற்குத் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டவும் ’மார்பக வரி’ கட்டவேண்டியிருந்த்து என்றும் ஒரு தாய் கொதித்தெழுந்து தன் இரு மார்புகளையும் வெட்டி எடுத்து வந்து மன்னனிடம் வீசியெறிந்தாள் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

நீங்கள் அந்த இரு நூல்களையும் படித்திருக்கிறீர்களா? மேற்கண்ட விவரங்கள் உண்மையா, அல்லது, துவேஷப் பிரசார வகையைச் சேர்ந்தவையா? உண்மை என்றால் இத்தனை வருடங்களாக ஏன் வெளியில் பேசப்படவில்லை?

இவ்விஷயத்தில் சற்றே வெளிச்சம் காட்டவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கட்டுரையைக் கீழே கொடுத்துள்ளேன்.

வணக்கம்

தமிழ்ச்செல்வன்.

 

http://www.dnaindia.com/india/report_sri-padmanabhaswamy-the-lord-of-the-rings-necklaces-and-taxes_1564164-all

 

 

8888

 

நண்பர்களுக்கு

இந்த விஷயத்தில் இத்துடன் விவாதத்தை முடித்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். சொல்லவேண்டியதை எல்லாம் அனேகமாகச் சொல்லிவிட்டேன்.

பொதுவாக இப்படி ஒரு முக்கியமான விஷயம் வரும்போதுதான் நம் இதழாளர்களின் அசிங்கமான அறியாமையும் அக்கறையின்மையும் முன்முடிவுகளும் வெளிப்படுகின்றன. இவர்கள் எப்படி இச்செய்திகளை எழுதுவார்கள் என்பதைக் கண்டிருக்கிறேன். தொலைபேசியில் நாலைந்துபேரை அழைத்து சில்லறைத் தகவல்களைக் கேட்டுக்கொள்வார்கள் . சம்பந்தப்பட்ட புத்தகங்களின் பெயர்களைக் குறித்துக்கொள்வார்கள். தங்களுக்குத் தோன்றியதை எழுதுவார்கள். அக்கருத்துக்களில் நேர்மையோ தகவலுண்மையோ சமநிலையோ இருப்பதில்லை. இந்த மாளவிகா ஏதாவது ஒரு வரலாற்று நூலையாவது புரட்டிப்பார்த்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை.

இப்படி ஒரு விஷயம் எழுந்துவரும்போது இதில் எப்படி முற்போக்குக் கருத்து சொல்வது என்பதைப்பற்றிய கவனமே இம்மாதிரி அரைவேக்காடுகளிடம் இருக்கிறது. அந்த வகையான கருத்துக்களுக்கு அரட்டைகளில் மதிப்பு அதிகம். சொல்பவர் தனி வாழ்வில் எந்த அயோக்கியனாக போலியாக இருந்தாலும் அவனுக்கு ஒரு அடிப்படை மதிப்பை அக்கருத்து ஈட்டித்தருகிறது. ஆகவே அதை வாசிக்கவிரும்புகிறார்கள், இதழாளர்கள் எழுதுகிறார்கள்.

திருவிதாங்கூரை ஒரு நவீன நலம் நாடும் ஜனநாயக அரசாக எவரும் சொல்லவில்லை. அது நிலப்பிரபுத்துவ அரசு. அத்தகைய எந்த அரசும் மேல்கீழ் அதிகார அடுக்கினால் ஆனதாகவே இருக்கும். பிறப்படிப்படையில் மக்களைப் பகுத்து அவர்களை உழைப்பில் ஈடுபடுத்தக்கூடியதாக, அவர்களின் உழைப்பில் இருந்து உபரியைச் சுரண்டி மேலே மேலே கொண்டுசென்று மையத்தில் தொகுப்பதாகவே இருக்கும். அது உலகமெங்கும் அப்படித்தான். திருவிதாங்கூரின் அரசும் அப்படியே இருந்திருக்கும். வேறு வழியே இல்லை.

ஆனால்  இந்தப் பெரும் செல்வம் இருந்ததனாலேயே இது முழுக்கமுழுக்கப் படையெடுப்புகளினால் கொள்ளையடிக்கப்பட்டது, மிகையான வரிவசூல்கொடுமைகளால் ஈட்டப்பட்டது என்ற ஒரு முடிவுக்கு வருவது அவதூறே ஆகும். சரி, இந்தச்செல்வம் கண்டுபிடிக்கப்படும் வரை திருவிதாங்கூர் செல்வ வளமற்ற அரசு கொண்டது என்று சொல்லப்பட்டதே, அப்படியென்றால் இந்தக் குற்றச்சாட்டுகளை இவர்கள் சுமத்தாமலிருந்தார்களா என்ன?

திருவிதாங்கூரின் படையெடுப்புகள் முழுக்கமுழுக்க மார்த்தாண்ட வர்மா மகாராஜாவால் நடத்தப்பட்டவை. அவரது காலகட்டத்தில் திருவிதாங்கூர் மைய அரசு இல்லாமல் எட்டுவீட்டுப்பிள்ளைகள் என்ற நிலக்கிழார்களின் ஆதிக்கத்திலும் கோயில் சொத்துக்களைக் கைகளில் வைத்திருந்த பிராமணர் குழுக்களின் ஆதிக்கத்திலும் இருந்தது. திருவிதாங்கூரின் மிக மோசமான காலகட்டம் அது. பதவிக்கு வந்ததுமே மார்த்தாண்ட வர்மா இந்தப் பிரபுக்களை ஒழித்தார். பிராமண குழுக்களை நாடுகடத்திக் கோயில்களைத் தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தார். அவர்களின் சொத்துக்களும் செல்வங்களும் அவர் கைக்கு வந்தன.

அச்செல்வம் அவருக்குத் தமிழ்நாட்டில் இருந்து கூலிப்படைகளை வாடகைக்கு எடுக்க உதவியது. அதைக்கொண்டு அவர் வடக்கே அவரது எல்லைகளை அபகரித்து வைத்திருந்த சிறிய சிறிய அரசுகளை வென்று திருவிதாங்கூரை மீட்டு ஒரே நாடாக்கினார். அவரது எல்லைக்குள் துறைமுகங்களைக் கைப்பற்றி வைத்திருந்த டச்சுக்காரர்களையும் போர்ச்சுகீசியர்களையும் தோற்கடித்தார். அதற்குப் பிரிட்டிஷ் படைகளின் உதவியைப் பெற்றுக்கொண்டார். அதன்பின் திருவிதாங்கூர் போர்களில் ஈடுபட்டதில்லை.  இந்தப்போர்களையே திருவிதாங்கூரின் கொள்ளைகளாகச் சித்தரிக்கிறார்கள் இப்போது.

திருவிதாங்கூர் அதன் பரம்பரை தேசத்து எல்லைக்கு வெளியே போரிட்டதில்லை, போர் முழுக்க அதன் குறுநில மன்னர்களிடம்தான். அவர்கள் ஒன்றும் பெரும் செல்வக்குவைகளுடன் இருந்த மாமன்னர்களும் அல்ல. காயங்குளம், கொடுங்கல்லூர்,ஆற்றிங்கல் போன்ற அரசுகள் உண்மையில் அரசுகளே அல்ல. கோயில் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த ஷத்ரியர்கள்  நிலையற்ற அரசியல் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அப் பிராந்தியங்களில் தனியராசங்கத்தை உருவாக்கிக்கொண்டவர்களே அவர்கள். அவர்களைக் கோயிக்கல் தம்புரான்கள் [கோயில்கல்] என்பார்கள். அவர்களையே திருவிதாங்கூர் வென்றது.

அவர்களின் நாட்டையும் மக்களையும் திருவிதாங்கூர் கொள்ளையடித்தது என்பதற்கோ கோயில்களை அழித்தது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை. அவை திருவிதாங்க்கூர் நிலங்கள். ஆனால் கண்டிப்பாக நெடுங்காலமாகத் திருவிதாங்கூர் மத்திய அரசிற்கு வரிகொடுக்காமலிருந்த நிலப்பிரபுக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கும். கப்பம் பெறப்பட்டிருக்கும். அது நிலப்பிரபுத்துவ அரசு செயல்படும் விதம். ஆகவே இதைக் கொள்ளைச்செல்வம் என்பவர்கள் இந்தியாவிலும் உலகிலும் அன்றிருந்த எல்லா அரசுகளும் சேர்த்த எல்லா செல்வத்தையும் கொள்ளைச்செல்வம் என்றே சொல்லவேண்டும்.

வரிவசூல் விஷயம். ஒரு நிலப்பிரபுத்துவ அரசு எப்படி வரிவிதிக்குமோ அப்படித்தான் அன்றைய வரிவசூல் இருந்தது. இன்றைய முதலாளித்துவ அரசு அனைத்து நுகர்வுகளுக்கும் வரி விதிக்கிறது – குழந்தை உணவுகளுக்கும்கூட.  அன்று திருவிதாங்கூரில் நில அளவை இல்லை. ஆகவே நிலவரி இல்லை.  அன்றெல்லாம் விற்பனை வரிகளோ வேறு மறைமுக வரிகளோ இல்லை. இதனால் வரிவசூல் சில குறிப்பிட்ட அடையாளங்களின் அடிப்படையில் அமைந்தது.   வீடுகட்டுவது, பல்லக்கில் செல்வது,மீசை வைத்துக்கொள்வது போன்றவை ஒருவரின் செல்வத்தின் அளவுகோல்கள். அது வரிக்குக் காரணமாக அமைந்தது.

தலைவரி, முலைவரி என்ற இரு வரிகளை நாம் ஆவணங்களில் காண்கிறோம். ஏதாவது ஒரு வரலாற்று நூலை வாசித்தால்கூட இவை என்ன என்று தெரியும்.  ஆணையும் பெண்ணையும் குறிக்கும் வரி இது.  அதுவன்றி முலையூட்டுவதற்கான வரி அல்ல. கொஞ்சமாவது வரலாறு தெரிந்த ஒருவர் நடைமுறையில் அப்படி எப்படிச் செய்யமுடியும் என யோசித்துப்பார்க்கமுடியுமா? நாடுமுழுக்க சென்று யாரெல்லாம் முலைகொடுக்கிறார்கள் என்றா கணக்கிட முடியும்? அதுவன்றி அன்றெல்லாம் எல்லா பெண்ணும் எப்போதுமே முலைகொடுப்பவளாகத்தானே இருந்திருப்பாள்? இந்த இதழாளர்கள் எப்போதாவது எதைப்பற்றியாவது சிந்தித்திருக்கிறார்களா?

அன்றைய திருவிதாங்கூரில் இருவகை மக்கள்தான் இருந்தார்கள். நில உடைமைகள்,நில அடிமைகள். நில அடிமைகள் ஒரு பைசாகூட வரி செலுத்தவேண்டியதில்லை, காரணம் அவர்களுக்கு வருமானமும் இல்லை சேமிப்பும் இல்லை. சோறுமட்டுமே அளிக்கப்பட்டு வயல்வெளிகளில் வாழ்ந்த புலையர்கள் என்ன முலைவரியும் தலைவரியும் அளித்திருப்பார்கள்?

அதாவது வரிசெலுத்துவோர் முழுக்கமுழுக்க நிலஉடைமையாளர்கள் , வணிகர்கள் மற்றும் வருமானமீட்டும் கைவினைஞர்கள் மட்டுமே.  அவர்களில் நாயர்கள், ஈழவர்கள்,நாடார்கள்  இருந்தார்கள் என்பதை மதிலகம் ஆவணங்களில் காணலாம். இந்த சிறுபான்மையோர் செலுத்தும் வரிகளில் ஆண்களுக்கு இவ்வளவு பெண்களுக்கு இவ்வளவு என்று வரி நிர்ணயம்செய்யப்பட்டது. அதுவே தலைவரி,முலைவரி.

இதில் முலைவரி அதிகம். ஏனென்றால் பெண்களிடமே அதிக நிலமிருந்தது. மேலும் குடும்பச் சொத்தில் ஆண்களின் குழந்தைகளுக்குப் பங்கிருக்கவில்லை. பெண்களின் குழந்தைகளுக்கு மட்டுமே பங்குண்டு.  ஆகவே முலைவரி பெண்கள் குழந்தைபெறும்தோறும் மறு நிர்ணயம் செய்யப்பட்டது. இதற்கு நில உடைமையாளர்களிடம் எதிர்ப்பும் இருந்தது.

இன்னொரு வரி இருந்தது. அது அடிமைகளுக்கான வரி. ஒருவர் எத்தனை அடிமைகள் வைத்திருக்கிறாரோ அதற்கேற்ப அதிக வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இதிலும் பெண் அடிமைகளுக்கே அதிக வரி. அவர்கள் குழந்தைகள் பெறுவார்கள் என்பதனால்.

ஒரு நிலப்பிரபுத்துவ அரசின் வழிமுறை இது. அன்றைய உலகச்சூழலில் திருவிதாங்கூர் அரசே இதில் மிகச்சிறந்த போக்கைக் காட்டியது என்பதைக் காணலாம். இங்கே மக்கள் சொத்தை  ராணுவத்தை அனுப்பி நேரடியாகக் கொள்ளையடித்த ஒரு நிகழ்ச்சியைக்கூட காணமுடியாது – அன்றைய அத்தனை நிலப்பிரபுத்துவ அரசிலும் நடந்தது அதுவே.

அத்துடன் இப்படிச் சேர்த்த சொத்து முழுக்க அனந்தபத்மநாபனுக்குரியதாகக் கருதப்பட்டது, காரணம் அரசு அவருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது. மன்னர்கள் அந்த சொத்தின் டிரஸ்டிகளாகவே இருந்தார்கள். சாதாரணமாக நிலபிரபுத்துவ அரசில் மன்னர்கள் மக்களிடமிருந்து பெற்ற செல்வத்தை முழுக்கமுழுக்கத் தங்கள் ஆடம்பரத்துக்கும் போர்களுக்கும் செலவிடுவதே வழக்கம். அன்றைய ஐரோப்பிய அரசுகளே சான்று.

 

ஆனால் திருவிதாங்கூர் மன்னர்கள் பெரும்பகுதி செல்வத்தை மக்கள்நலப்பணிகளுக்கே செலவிட்டிருக்கிறார்கள். கடைசி வரை மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார்கள். அந்த எளிமையை மேலைநாட்டவர் பதிவுசெய்திருக்கிறார்கள். அதைக்கொண்டு அவர்கள் மன்னர்களே அல்ல, வெறும் சில்லறை நிலக்கிழார்களே என இதே ‘ஆய்வாளர்கள்’ சொல்லியும் இருக்கிறார்கள்

 

இந்த மாபெரும் செல்வம் சேர்க்கப்பட்ட காலகட்டத்தில்தான், அதாவது தர்மராஜாவின் காலகட்டத்தில், ஆலப்புழா என்ற துறைமுகம் உருவாக்கப்பட்டது. பெரும் பொருட்செலவில் பெரும் உழைப்பில் திவான் கேசவதாஸ் அதை உருவாக்கினார். அதைத் திருவனந்தபுரத்துடன் இணைக்கும் சாலை அமைக்கப்பட்டது. நாகர்கோயில் அருகே மணக்குடி காயல் முதல் திருவனந்தபுரம் வரை படகுப்போக்குவரத்துக்காக ஏ.வி.எம் கால்வாய் அமைக்கப்பட்டது.  வடக்கே கொல்லம் முதல் திருவனந்தபுரம் வரை சாலை போடப்பட்டது. கிட்டத்தட்ட எட்டாயிரம் குளங்கள் திருவிதாங்கூர் முழுக்க வெட்டப்பட்டன. விளைநிலப்பரப்பு இருமடங்காக்கப்பட்டது.

 

இந்தியாவின் குறிப்பிடத்தக்க எல்லா வளர்ச்சிக்கட்டுமானங்களும் மேலும் பல்லாண்டு கழித்தே பிற பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டன என்பதை நினைவுகூரவேண்டும். காரணம் பிரம்மாண்டமான தாதுவருஷப்பஞ்சங்களால் இந்தியா அழிந்துகொண்டிருந்தகாலகட்டம் இது. பஞ்சத்தால் செத்தவர்களில் மீதி தமிழ் மக்கள் கூட்டம் கூட்டமாக உலகமெங்கும் கூலியடிமைகளாகச் சென்றுகொண்டிருந்த காலகட்டம்.  தர்மராஜா அவரது நாடு முழுக்க அனைத்து மக்களுக்கும் பசியாற்றும் ஆயிரக்கணக்கான கஞ்சித்தொட்டி அமைப்புகளை உருவாக்கி அவற்றை முப்பதாண்டுக்காலம் நிலைநிறுத்தினார். ஆகவேதான் தமிழகப்பகுதிகளில் இருந்து பிரம்மாண்டமான குடியேற்றம் நிகழ்ந்து  திருவிதாங்கூரின் மக்கள் தொகை அரைமடங்கு கூடியது. இன்றும் திருவிதாங்கூரின் மக்கள்தொகையில் கணிசமானோர் தமிழர்களே.

இந்த செல்வம் அதற்கும் மேலாக உபரியாக ஆனதே ஆகும். அதற்குக் காரணம் திருவிதாங்கூரின் அபரிமிதமான வனவளம்.ஒரு இருநூறு வருடம் வனவளத்தைத் திருவிதாங்கூர் விற்றுக்கொண்டே இருந்திருக்கிறது. அதன் மூலம் அதன் வனவளம் பெரிதும் அழிந்தது என்பதும் அன்றைய நோக்கில் அது ஒரு வளர்ச்சியாகவே எண்ணப்பட்டது என்பதும் வேறு விஷயம்.

பிரிட்டிஷார் இந்தியப்பஞ்சத்தை உருவாக்கியமைக்கும், அவர்களின் அரசு அதை  எதிர்கொண்ட முறையில் இருந்த புறக்கணிப்புக்கும், அந்நிலையைத் தூரகிழக்கு நாடுகளில் தங்களுக்குப் பண்ணையடிமைகளை உருவாக்கப் பயன்படுத்திக்கொண்ட ஈவிரக்கமற்ற சுரண்டலுக்கும் சமானமாக வைத்துப்பார்க்கவேண்டிய விஷயம் தர்மராஜா போன்ற மன்னர்களின் அணுகுமுறை. பிரிட்டிஷாரின் அப்பட்டமான மானுடவிரோதப்போக்கை விதந்தோதும் நம் வரலாற்றாசிரியர்களால் மீண்டும் மீண்டும் இந்திய மன்னர்கள் கூண்டில் நிறுத்தப்பட்டு அவதூறு செய்யப்படுகிறார்கள்.

ராஜராஜசோழனைப்பற்றிப் பேசும்போது சொன்ன அந்த வரிகளையே இங்கும் சொல்லவிரும்புகிறேன்.இந்திய மன்னர்களை இன்றைய நோக்கில் ஜனநாயகவாதிகள் என்றோ அல்லது மனிதாபிமானிகள் என்றோ சொல்ல வரவில்லை. இன்று நாம் அடுத்த வரலாற்றுக்காலகட்டத்துக்கு வந்திருக்கிறோம். அடுத்த தத்துவ- மானுட நோக்கை அடைந்திருக்கிறோம். ஆனால் அன்றைய அளவீடுகளின் படி அவர்கள்,அவர்களுக்குச் சமகாலத்தவர்களான எந்த ஐரோப்பிய மன்னர்களைவிடவும் நீதியுணர்வும் மக்கள் நேயமும் கொண்டவர்களே. அவர்கள் நமக்கு உருவாக்கியளித்த ஏரிகளுக்கு, குளங்களுக்கு, சாலைகளுக்கு, துறைமுகங்களுக்கு நாம் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

 

ஜெ

 

சொல்வனம்  ஆர் வைத்தியநாதனின் கட்டுரை 

முந்தைய கட்டுரையானைடாக்டர் இலவச நூல்
அடுத்த கட்டுரைநாரயணகுருகுல துறவியர்