கோவை விழா, கடிதங்கள்

சியமந்தகம் – அழிசி பதிப்பகம்

கோவையில் ஜெ 60 விழா- ஒரு நிறைவான நாள்
நன்றிகளும் வணக்கங்களும்

மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெ அவர்களுக்கு ,

18-9-2022 அன்று கோவையில் நடத்தப்பட்ட உங்களின் மணி விழாவில் கலந்து கொண்டேன். ஒரு அருவியைப்பற்றி கேள்விப்பட்டு, அதன் காட்சிகளை, ஒலியை தூரத்தில் இருந்து பார்த்து, கேட்டு வந்தவனுக்கு அதை நோக்கி அருகே-அருகே போக வேண்டும் என்ற ஒரு curiosity கலந்த ஆர்வம், excitement, அதுதான் அறிவு அருவியான உங்களை நான் சந்திக்கும் வரையில் இருந்தது.

உங்கள் பக்கத்தில் வந்தவுடன் அருவியின் சாரலில் உடல் குளிர்ந்து முகத்தில் ஒரு பெருமூச்சுடன் விரியும் ஒரு புன்னகை போல் ஓர் புன்னகை மலர்ந்தது. ஆனால் சாரலை தாண்டி அருவியின் முழு தாக்கத்தை, பிரம்மாண்டத்தை ஏறிட்டு பார்ப்பவன் ரெண்டு அடி பின் வைத்து விலகி நின்று பார்ப்பது போல, நேற்று என்னை விட வயதில் மூத்தவர்கள் எல்லாம் உங்கள் கரங்களை பிடித்து கண்ணீர் மல்க ஒற்றி கொள்ளும் போது, காலில் விழுந்து வணங்கிக்கொளும் போது நான் கை குலுக்கி கை ஒப்பம் வாங்கிய கரங்களின் பாரத்தை, ஆழத்தை முழுதாக உணர்தேன்.

ஜெயமோகன் எனும் ஆளுமையின் முழு பிரமாண்டம், மகத்துவம் கண்டு, சற்று தள்ளி நின்றே ஓர் பேர் அருவியை வியந்து பார்பதற்கப்பால், வியப்பும் மரியாதையுமாய் உங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். இப்பெரும் மன அருவியின் தாக்கத்தால் என்னால் உங்களிடம் சரியா பேச முடியாமல், போயிற்று, that’s why I’m writing this letter to you.

ஆனால் உண்மையை சொல்லப் போனால் நான் இக்கடிதத்தை எழுதுவது நான் அனுபவித்த அப்பெரும் ஆளுமையின் நெருக்கத்தை, வியப்பை அவ்வனுபவங்களை என்ன வென்று எனக்கு நானே பதியம் செய்து கொள்ள தான் இதை எழுதி இருக்கிறேன் என்று புரிகிறது. தமிழ் இலக்கியத்தில் நீங்கள் சொன்னது போலவே உங்கள் படைப்புகள் வெறும் அரசியல், வெறும் அழகியல் என்று இல்லாமல், அதற்கு நடுவே ஆன ஒரு இடத்தில அறம் என்ற தனி பாதையிட்டு சென்று கொண்டு இருக்கின்றன. அதுவே உங்களுக்கு பலதரப்பட்ட, பரவலான வாசகர்களை அளித்து இருக்கிறது.

எனக்கு உங்களின் அறம் சிறுகதைகள் மற்றும் காடு நாவல் மிக பிடித்தமானவை. வணங்கான், நூறு நாற்காலிகள், யானை டாக்டர், சோற்று கணக்கு, ஓலைச்சிலுவை ஆகியவை மிகப்பிடித்தமானவை. காடு நாவலில் பின்னிப் பின்னி காதலும் காமமும் அழகாக தொட்டு தொட்டு எடுத்திருக்கிறீர்கள் ஒரு இளைஞனுக்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்.

நேற்று உங்களை காண அரங்கு நிறைய வந்திருந்த நூற்று கணக்கான வாசகர்களை, போடப்பட்டிருந்த அத்தனை நாற்காலிகளை கண்ட போது எனக்கு நூறு நாற்காலிகள் கதை தான் ஞாபகம் வந்தது. “பல தலைமுறையாய் ஓடியாகி விட்டது, இனி அமர வேண்டும்” என்று வரும் வரி எனக்கும், இன்னும் பல மக்களுக்கும் பெரிய ஊக்கம், ஒரு நம்பிக்கை அளித்த ஒரு மகத்தான வரி ஆகும். அவ்வரிக்கேற்ப நேத்து சென்னையில் இருந்து கிளம்பி வந்து, முன்வரிசைகளில் ஒன்றில் ஒரு நாற்காலியில் அமர்ந்து உங்களை பார்த்ததில், உங்கள் ஏற்புரையை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி. ஆனால் எனக்குள் உங்கள் மேல் கூடி இருக்கும் மரியாதையும், உங்கள் படைப்புகள், எழுத்துக்கள், மேல் கொண்டு இருக்கும் ஈர்ப்பும், வியப்பும் தணிய வேண்டும் என்றால் எனக்கு இன்னும் இதை போல் நூறு நிகழ்ச்சிகள், நூறு நாற்காலிகள் வேண்டும்.

உங்களின் வாசகன் ,

பிரனேஷ் குமார் (பி.கெ.)

சென்னை.

அன்புள்ள பிரனேஷ்

வேறு எதிலும் இல்லாத மெய்யான இன்பமும் நிறைவும் அறிவுச்செயல்பாடுகளில் உண்டு. அதை எளிய பற்றுகளால், ஆணவத்தால் கசப்பாகவும் காழ்ப்பாகவும் ஆக்கிக்கொள்ளாவிட்டால் அது வாழ்க்கையை நிறைக்கும் இனிமையாக ஆகும்.

வாழ்த்துக்கள்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

உங்களை ஜெ 60 விழாவில் சிந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியும் மனநிறைவும் அளித்ததாய் இருந்தது. நாகர்கோயிலில் இருந்து கிளம்பி விழா அரங்கிற்கு 3:15 மணிக்கே வந்துவிட்டேன். பிறகு சரியான  இடம் தேடி அங்கும் இங்கும் மாறி மாறி அமர்ந்தேன். கடைசியாக என் இருக்கைக்கு அருகே கேமராவை வைத்துவிட்டனர். தலையை நிமிர்த்தியும் திருப்பியும் உரைகளை கேட்டதும் புது அனுபவமாய் தான் இருந்தது.

ஓர் ஆண்டு முன்பு நாகர்கோயிலில் நடந்த “விஜி வரையும் கோலங்கள்” நிகழ்ச்சியில் உங்களிடம் ஓரிரு வார்த்தைகள் பேசியுள்ளேன். அப்போது நான் வெண்முரசு வாசிக்கவில்லை என்பதால் மிகுந்த தயக்கத்துடனும் பயத்துடனும் உங்களை அணுகினேன். இப்போது பிரயாகை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அந்த புத்தகத்தில் தான் உங்களிடம் கையெழுத்து வாங்கினேன்.

மற்ற எந்த விழாவிலும் இல்லாதவாறு இங்குதான் முதல் முறையாக “I deserve to be here” என்ற உணர்வை அடைந்தேன். வெண்முரசு ஆவணப்படம் மற்றும் விழாவில் ஆற்றிய உரைகளை கேட்டபோது என்னளவில் ஒரு பெருந்செயலையாவது செய்ய வேண்டும் என்ற ஊக்கம் பிறந்தது. உங்களுடன் எடுத்த புகைப்படத்தை Frame செய்து அதை எப்பொழுதும் எனக்கு நானே நினைவுறுத்திக்கொள்வேன்.  விழா ஆரம்பிக்கும் முன் இருந்த மனக்குழப்பங்கள் மறைந்து மகிழ்ச்சியும் ஊக்கமும் நிறைந்த மனதுடன் வெளிவந்தேன்.

மிகுந்த அன்பு மற்றும் வணக்கத்துடன்,

கார்த்திக்

கிருஷ்ணன்கோவில், நாகர்கோயில்

அன்புள்ள கார்த்திக்

நீங்கள் உணர்ந்தது, இது என் இடம் என நினைத்தது மிக முக்கியமானது. அது ஓர் ஆழ்ந்த உணர்வு. அதைப் பற்றிக்கொள்ளுங்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைகோவை, சொல்முகம் வெண்முரசு கூடுகை 21
அடுத்த கட்டுரைடேனியல் பூர், அடித்தளமென அமைந்த ஒருவர்