கோவையில் என் மணிவிழா நிகழ்ச்சி நடந்த அதே 18-09-2022 அன்று சென்னையில் வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றிவிழா நடைபெற்றது. அதில் நான் கலந்துகொள்ளாவிட்டாலும் அந்தச் செய்திகள் வந்தடைந்துகொண்டே இருந்தன. என்னைச்சுற்றி என் பழைய நண்பர்கள், புத்தம்புதிய நண்பர்கள். நடுவே அச்செய்தி வேறொரு உலகில் இருந்து வந்துகொண்டே இருந்தது.
வெந்து தணிந்தது காடு தொடர்பான பலவகையான விமர்சனங்கள் வந்துகொண்டே இருந்தன. வெளியே சமூக ஊடகங்களில் எழுதுபவர்களின் கருத்துக்கள் ஒட்டுமொத்தமாக முக்கியமானவை. அவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் கடந்ததும் திரைத்துறையினர் தொகுத்து பொதுவாக என்ன சொல்லப்பட்டது என்று பார்ப்பார்கள். மற்றபடி தனித்தனியாக எவரும் வாசிப்பதில்லை.
ஏனென்றால், பலருக்குத் தெரியாத ஒன்று உண்டு. ஒரு சினிமாவின் முதல்காட்சி முடிந்து இருபது நிமிடங்களுக்குள் அது எந்த அளவு வெற்றி, தோராயமாக எவ்வளவு வசூல்செய்யும் என சினிமாத் துறையினர் தெரிந்துகொள்வார்கள். அத்துடன் அந்தக் கணம் வரை இந்த பதற்றம் மறைந்து உற்சாகம் உருவாகிவிடும். இயல்பாக திரைப்படத்தின் முதற்காட்சி முடிந்தபின் எழும் கருத்துக்கள் மட்டுமே முக்கியம். எண்ணி, கருதி பின்னர் சொல்லப்படும் கருத்துக்கள் பெரிதாக வசூலை பாதிப்பதில்லை.
அதன்பின் வசூலின் வரைபடத்தை கவனித்துக் கொண்டிருப்பார்கள். வசூலின் வரைபடம் சினிமாவுக்கு உள்ளே இருக்கும் எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஞாயிற்றுக்கிழமை உச்சம், திங்கள் காலை சிறுசரிவு, திங்கள் மாலை மீண்டும் எழுச்சி என அது எப்படி செயல்படும் என்பதெல்லாம் பெரும்பாலும் அனைவருமே வகுத்து வைத்திருக்கும் வரைபடம். எந்த ஏரியாவில் என்ன நிகழும், அதற்கு என்ன பொருள் என்பதெல்லாமே பெரும்பாலும் தெரிந்தவை. வெந்து தணிந்தது காடு அடுத்தவாரம் நோக்கி சற்றும் குறையா விசையுடன் சென்றுகொண்டிருக்கிறது. அது ஏற்கனவே பெருவெற்றி என்பது நிறுவப்பட்டுவிட்டது.
வசூல் டிராக்கர்கள் என ஒரு சாரார் இயங்குவதை, அவர்களை வைத்துக்கொண்டு பலர் ஆவேசச் சண்டைகள் போடுவதை இப்போதுதான் கண்டேன். எந்த தொழிலிலும் போல சினிமாவிலும் வசூல், அதன் பங்கு விகிதம் எதையும் அந்தக் குறிப்பிட்ட வணிகத்துக்கு வெளியே உள்ள எவரும் எவ்வகையிலும் கணித்துவிட முடியாது. அவரவர் தோதுப்படியே சொல்வார்கள். (அது ஏன் என்று தெரியாதவர்களுக்கு வியாபாரம் என்றால் என்னவென்றே தெரியாது) ஆனால் அந்த விவாதங்களும் ஒருவகையில் நல்லதே. சினிமா பற்றிய பேச்சுக்கள் ஆவேசமாக நிகழ அது காரணமாகிறது.
எல்லாமே கணிக்கப்படக்கூடியவை என்றால் எதிர்பாராத தன்மைகள் உண்டா? அது எப்போதுமிருக்கும். ‘மல்லிப்பூ’ பாடல் சினிமாவின் முகம் என ஆகும் என எவரும் எதிர்பார்க்கவில்லை, ஏனென்றால் அதில் சிலம்பரசன் முதன்மையாக ஆடவில்லை. அப்படிச் சில ஆச்சரியங்கள் எல்லா சினிமாவிலும் உண்டு.
படம் முழுமையடைந்தபோது அதன் 3 மணிநேர நீளம் சினிமா பார்க்காத பலருக்கும் அச்சத்தை ஊட்டியது. தயாரிப்பாளருக்கு கடும் நெருக்கடி இருந்தது, இருபத்தைந்து நிமிடம் வெட்டும்படிச் சொன்னார்கள். வெட்டவேண்டுமா என்று மாறிமாறிப் பேசிக்கொண்டோம். (அதைப்பற்றி நானும் கௌதமும் பேசிக்கொண்ட சிறு பகுதி பதிவாகி வெளியாகியுள்ளது)
நான் என் தரப்பைச் சொன்னேன். இதேபோலத்தான் கடல் படமும் இரண்டேமுக்கால் மணிநேரம் இருந்தது. கடைசிநேரத்தில் இருபத்தைந்து நிமிடம் குறைக்கப்பட்டதனால்தான் அந்தப்படம் பெருவாரியானவர்களுக்கு புரியாமல் போனது. நுண்ணிய திரைரசிகர்கள் அந்த விடுபட்ட பகுதியையும் புரிந்துகொண்டு இன்று அப்படத்தை கொண்டாடுகிறார்கள். அதேபோல ஆகிவிடக்கூடாது என்று சொன்னேன்.
பலகதைகள் கொண்ட சினிமாவுக்கு, ஒரே களத்தில் நிகழும் சினிமாவுக்கு நீளம் கூடாது. ஒரு வாழ்க்கைப்பயணத்தைச் சொல்லும் சினிமாவுக்கு நீளம் பலசமயம் பலம். ரசிகன் மானசீகமாக வெளியேறாமல் பார்க்கமுடிந்தால் போதும், ஒரு வாழ்க்கையை பார்த்து முடித்த நிறைவு உருவாகும். படம் போனதே தெரியவில்லை என ஒரு நீளமான படத்தைப் பற்றி ரசிகன் சொன்னாலே அது வெற்றிதான். வெந்து தணிந்தது காடு சீராக ஒழுகிச்செல்லும் கதையோட்டம் கொண்டது. அதிரடிகள் இல்லை. அதிரடிகள் இருந்தால்தான் அடுத்த அதிரடியை ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆகவே நீளம் பிரச்சினை இல்லை என்றேன்.
என் தரப்பினைச் சொல்லிவிட்டு வெட்டுவதென்றால் எவற்றையெல்லாம் வெட்டலாம் என பதினைந்து நிமிடக் காட்சிகளைப் பரிந்துரைத்தேன். ஆனால் அவை இல்லாமலானால் கதையில் பெரிய இடைவெளிகளை உருவாகின்றன என்று கௌதம் நினைத்தார். எப்பகுதியும் வெறுமே படத்தில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. இறுதியில் மூன்றுமணிநேரம் இருக்கட்டும் என அவர் முடிவெடுத்தார். எதையும் வெட்டவில்லை. அம்முடிவை தயாரிப்பாளரும் ஏற்றுக்கொண்டது மிகப்பெரிய விஷயம்.
இன்று திரையரங்கில் அந்த நீளமே பெரிய சாதக அம்சமாக இருக்கிறது. சிலம்பரசன் வழியாக ஒரு வாழ்க்கைமாற்றத்தையே திரையில் பார்க்க முடிவதற்கு அந்த நீளமே முதன்மைக் காரணம்.
நான் நண்பர்களிடம் வெளிவந்த விமர்சனங்களில் இந்தக் கதை உண்மையில் முத்து டான் ஆகும் கதை அல்ல, இது இரட்டைக்கதை, அதைப்புரிந்துகொண்டு எழுதப்பட்ட விமர்சனம் இருந்தால் மட்டும் அனுப்பும்படிச் சொன்னேன்.மற்ற விமர்சனங்கள் எல்லாம் இந்த வணிக ஆட்டத்தின் ஒரு பகுதி என்பதற்கு அப்பால் மதிப்பற்றவை.
அப்படி வந்தவை ஓரிரு விமர்சனங்கள்தான். மலையாள இயக்குநர் -கதாசிரியர் வினீத் சீனிவாசனின் குறிப்பு முக்கியமானது. தமிழில் எனக்கு பிடித்த விமர்சனம் கீழே.
ஆனால் இன்று செவ்வாய்க்கிழமை காலை டீ குடிக்கப்போனபோது அங்கே சந்தித்த ஆட்டோ ஓட்டுநர் ”படம் நல்லாருக்கு. ரெண்டு கதை சார், துப்பாக்கிய கீழ போட்டவன் தப்பிச்சான்…” என்றார்
“அவன் எங்க போட்டான்…அதில்லா அவன் கைய உதறிட்டு கீழே விழுது?” என்றார் டீக்கடைக்காரர்.
அதுதான் மிகச்சரியான அலசல். ஆச்சரியமாக முன்முடிவில்லாமல், படங்களை விமர்சிக்கும் வழக்கமான டெம்ப்ளேட்டுகள் இல்லாமல், படத்தைப் பார்த்த சாமானிய ரசிகர்கள் ஏறத்தாழ எல்லாருமே அந்த இடங்களை தொட்டிருந்தார்கள். அவர்களே படத்தை வெற்றிப்படமாக்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு நனறி
ஒரு விமர்சனம்
Gopalakrishnan Sankaranarayanan
வெந்து தணிந்தது காடு- எனக்குப் பிடித்திருந்தது. தமிழின் சிறந்த கேங்ஸ்டர் திரைப்படங்களில் ஒன்று என்று கூறுவேன்.
ஜெயமோகன் கதையையும் அவரும் கெளதமும் இணைந்து திரைக்கதை வசனங்களும் எழுதியிருக்கிறார்கள். நிச்சயமாக இது ஒரு பரீட்சார்த்த முயற்சி. முதல் பாதி முழுக்க இடைவேளைக் காட்சியைத் தவிர Theatre/Mass Moment எதுவும் இல்லை. நெல்லை வட்டார கிராமத்திலிருந்து பிழைப்புத் தேடி ஒரு பரோட்டா கடையில் வேலை பார்க்க மும்பைக்குச் செல்லும் நாயகன் முத்துவீரன் ஒரு கேங்ஸ்டராக உருவெடுக்கும் தருணத்துக்கான பில்டப் தான் முதல் பாதி முழுவதும். இரண்டாம் பாதி நாயகனின் கேங்ஸ்டர் வாழ்க்கையை பதிவு செய்கிறது. அதிலும் சில சுவாரஸ்ய தருணங்கள் உண்டு என்றாலும் அவற்றை வழக்கமான தியேட்டர் மொமண்ட் என்று சொல்ல முடியாது. எது எப்படி என்றாலும் ஒரு படம் பார்வையாளரின் ஈடுபாட்டைத் தக்க வைக்க வேண்டும். எனக்கு இந்தப் படத்தின் 90 சதவீதம் ஈடுபாட்டுடன் பார்க்க முடிந்தது. இரண்டாம் பாதியில் மட்டும் என்ன செய்வதென்று தடுமாற்றத்தால் கொஞ்சம் காதல் காட்சிகளை அளவுகடந்து நீட்டித்ததாகத் தெரிகிறது. அதிலும் நாயகனும் நாயகியும் வாயசைத்துப் பாடுவதெல்லாம் பொருந்தவேயில்லை.
படத்தில் ஒரே ஒரு காட்சியில்கூட நமக்கு சிம்பு தெரியவில்லை. முத்துவீரன்தான் தெரிகிறார். ஒரு நடிகராக சிம்புவின் ஆகச் சிறந்த் பங்களிப்பு இந்தப் படத்தில்தான் என்று உறுதியாகச் சொல்லலாம். படத்தின் இன்னொரு நாயகன் ஏ.ஆர்.ரகுமான். பாடல்களில் படத்தின் முக்கியத் தருணங்களில் அவர் குரலில் ஒலிக்கும் ‘மறக்குமா நெஞ்சம்’ பாடல் மிகச் சிறப்பு. மல்லிப்பூ ரசிக்கவைத்தது. பின்னணி இசையோ வெகு சிறப்பு. ஜெயமோகனின் வசனங்கள் சில இடங்களில் மிக அழுத்தமாக இருந்தன.ப்ளூ சட்டை மாறன் கிண்டல் செய்து இங்கே பரவலாக பகிர்ந்து troll செய்யப்பட்ட “ஸ்க்ரூ-மெஷின்”வசனம் உண்மையில் மிக நல்லவசனம். படத்தின் மையக் கதாபாத்திரங்கள் சிக்கியிருக்கும் சூழலை அதைவிட கச்சிதமாக ஒற்றை வசனத்தில் புரியவைத்திருக்க முடியாது. அதே நேரம் வேறு சில இடங்களில் ஜெயமோகனின் வசனங்கள் சினிமாவுக்கு பொருந்தாதவையாகவும் அவருடைய கதைகளைப் படித்தவர்களுக்கு சற்று அவருடைய டெம்ப்ளேட்டாகவும் ஒலிக்கின்றன.
படத்தின் காதல் காட்சிகள் பெரிதாகக் கவரவில்லை என்றாலும் அவற்றை முற்றிலும் ஒதுக்கிவிட முடியாது,. இந்தப் படத்தின் நாயகிக்கு நாயகனைக் காதலிப்பதுதான் வேலை என்றாலும் அவள் சுயமரியாதை அற்றவளாக நாயகனுக்கு தன்னை முற்றிலும் அடிபணிகிறவளாக இருக்கவில்லை. பணத்தாசை பிடித்த தந்தையிடமிருந்து அவளை மீட்க நாயகன் தந்தைக்கு பணம் கொடுக்க முன்வர அதற்கு முன் அதில் தன் விருப்பத்தைக் கேட்காததை நாயகனிடம் கேள்வி எழுப்புகிறாள். வேலை போய்விடக் கூடாது என்பதற்காக முதலாளியின் அழைப்பை ஏற்று ஹோட்டல் ரூமுக்குச் செல்கையில் அவளைப் பார்க்கும் நாயகன் அந்த முதலாளியை அடித்து துவம்சம் செய்கிறானே தவிர நாயகியை ஒரு வார்த்தைகூட தவறாகப் பேசவில்லை. அவளை அந்த நிலைக்கு இட்டுச் சென்ற சூழலைப் புரிந்துகொள்கிறான்.
இதைத் தவிர படத்தின் நாயகன் இருக்கும் கேங்ஸ்டர் குழுவுக்கு எதிர் கேங்க்ஸ்டர் குழுவில் ஒரு மலையாள இளைஞன் இருக்கிறான். நாயகனும் அவனும் சந்தித்துக்கொள்ளும்போது கனிவாகப் பேசிக்கொள்கிறார்கள். நாயகன் அவனது குழுவில் துப்பாக்கியால் சுட்டு எதிரிகளை வீழ்த்துவதில் கைதேர்ந்துவிட எதிர் குழு இளைஞனோ அந்த கேங் லீடரின் பாலியல் அடிமையாக இருக்கிறான். அதைக் குறித்து அவன் நாயகனிடம் பகிர்ந்துகொள்ளும்போது நாயகன் அவனை இழிவுபடுத்தவில்லை, குறைசொல்லவில்லை, வேறு பிழைப்பைத் தேடிக்கொள்ளலாமே என்று அறிவுரை கூறவில்லை. இதற்கெல்லாம் மாறாக “நீ யாரையும் கொலை செஞ்சதில்லல்ல” என்று ‘நீ ஒன்றும் என்னைப் போன்ற பாவி அல்ல’ என்று அவனுக்கு உணர்த்த முயல்கிறான். உண்மையில் இது படத்தின் மிகச் சிறந்த தருணம், இறுதியில் அந்த நண்பன் ஒரு பெண்ணால் விரும்பப்பட்டு அவளைத் திருமணம் செய்துகொண்டு குழந்தைப் பெற்று நிம்மதியாக வாழ்கிறான். உண்மையில் நாயகனைவிட மேம்பட்ட வாழ்க்கை. ஆனால் நம் தொழில்முறை விமர்சகர்கள் யாரும் இதை கவனப்படுத்தியதாக நான் பார்க்கவில்லை.
கெளதமின் திரைப்படங்களிலேயே இது முற்றிலும் வித்தியாசமானது. அவருடைய திரைப்படங்கள் எதனுடைய சாயலும் இதில் இல்லை,. விமர்சகர்களின் கருத்துக்கு மதிப்பளித்து வேறொரு எழுத்தாளரின் கதையைப் பெற்று திரைக்கதை வசனத்தை அவருடன் இணைந்து பணியாற்றி அவருக்கு முதன்மைப் பெயரைக் கொடுத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். அதோடு கெளதம் படங்களிலும் ஜெயமோகன் தமிழில் பணியாற்றிய படங்களிலும். இதுவே அரசியல் சரித்தன்மைவாய்ந்த படம். இருவரும் இந்தக் காலகட்டத்தின் நிர்ப்பந்தத்துக்கு அடிபணிந்தோ வணிகக் காரணத்துக்காகவோகூட இதைச் செய்திருக்கலாம். ஆனாலும் இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம் என்றே கருதுகிறேன்.