நினைவுமீன்கள்
அன்பு ஜெ,
மணிவிழா வாழ்த்துகள். கோவை நிகழ்வுக்கு வர இயலவில்லை. விழா சிறப்பாக நடந்ததாகச் சொன்னார்கள். மகிழ்ச்சி.
உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கக் கடிதம் எழுத நினைத்தேனில்லை. இராயகிரி சங்கரின் வாழ்க்கைக் குறிப்புகளை நீங்கள் அறிமுகப்படுத்தி இருந்தீர்கள், அல்லவா? அதற்காகவே எழுதத் துவங்கினேன். அனிச்சையாய் வாழ்த்து வெளிப்பட்டு விட்டது. என்னளவில், நான் உங்களைப் போன்ற இலக்கிய ஆளுமைகளைத் தனித்துப் பிறராக உணர்வது கிடையாது. ஆகவே, சம்பிரதாயமாக எதையும் துருத்திச் செய்ய முற்படுவதில்லை.
தங்கள் மணிவிழா சமயத்தில் ஒரு தகுதியான ஆளுமையைத் தளத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். இராயகிரி சங்கர் எனும் பெயரை நான் முதன் முதலாக உங்கள் வழியாகவே கேள்விப்படுகிறேன். அவரின் நினைவோடையில் நீந்தும் மீன்கள் நான்கு பகுதிகளையும் ஒன்றரை மணி நேரத்தில் முழுமூச்சாய் வாசித்து முடித்தபோது, உங்களுக்கு இணையாக அவரும் என் மனதில் சித்திரமாகத் துவங்கி இருந்தார்.
மொழியில் சிடுக்கு இல்லை. வார்த்தைகளில் கனம் இல்லை. நடையில் தயக்கம் இல்லை. அப்பால் நகரத் திமிறும் வாசகனைத் தன்பால் இழுத்து வரும் மாயக்கரங்கள் சில எழுத்தாளர்களுக்குத்தான் வாய்க்கும். இராயகிரி சங்கருக்கு வாய்த்திருக்கிறது; வாழ்த்துகள் சங்கர்!
முருகவேலன்(சக்திவேல்)
கோபிசெட்டிபாளையம்.