கோவையில் ஜெ 60 விழா- ஒரு நிறைவான நாள்

இந்த ஆண்டு எனக்கு அறுபது, சென்ற ஏப்ரலிலேயே அது முடிந்துவிட்டது. இந்த ஆண்டை ஒரு வகையில் நான் முன்னரே திட்டமிட்டுக்கொண்டேன். இன்னும் பெரிய அறைகூவல்களுடன். தமிழ் விக்கி அதில் முதன்மையானது. அப்பணி இன்று என் பொழுதில் பெரும்பகுதியை எடுத்துக்கொள்கிறது.

என் மணிவிழாவை கொண்டாடவேண்டும் என்று முதன்மை ஆர்வத்துடன் இருந்தவர் கோவை நண்பர் ‘டைனமிக்’ நடராஜன். கோவை நன்னெறிக் கழகத்தின் பொறுப்பில் இருக்கிறார். அவருடன் மதிப்பிற்குரிய இயகாகோ சுப்ரமணியம், டி.பாலசுந்தரம், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன் சௌந்தரராஜன் என பலர் இணைந்து இவ்விழாவை ஒருங்கிணைத்தார்கள்.

நான் சனிக்கிழமை காலையே கோவை வந்துவிட்டேன். சனி காலை முதல் திங்கள் மாலை கிளம்புவது வரை நண்பர்களுடன் இருந்தேன். தமிழகம் முழுக்க இருந்து நண்பர்கள் வந்திருந்தனர். அனைவருக்கும் தங்க கோவையில் குஜராத்தி பவன் மற்றும் சாய் வில்லா என்னும் இரண்டு தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஞாயிற்றுக்கிழமை காலை பட்டீஸ்வரர் கோயிலுக்கு நண்பர்களுடன் சென்று வந்தோம். அங்கே நம் மரபுப்படி நானும் அருண்மொழியும் மாலைமாற்றிக்கொண்டோம். மீண்டும் ஒரு மாலை மாற்றல் கோவை மேடையில். நண்பர்கள் மதிப்புக்குரிய ஆசிரியர்கள் நிறைந்த அவை. கோவை கிக்கானி பள்ளி அரங்கில் ஆயிரத்தி இருநூறுபேர் நிறைந்தமர்ந்த பெரிய கூட்டம்.

விழாவில் என்னைப்பற்றி 105 எழுத்தாளர்களும் வாசகர்களும் எழுதிய கட்டுரைகள் அடங்கிய பெருநூல் சியமந்தகம் (தொகுப்பு சுனில் கிருஷ்ணன்) வெளியிடப்பட்டது. கோவை ஆட்சியர் சமீரன் வெளியிட்டார்.

ஒவ்வொரு உரையும் ஒவ்வொரு வகையில் உணர்ச்சிகரமானது, அணுக்கமானது. எல்லா வகையிலும் முழுமைகூடிய நிகழ்வு.

இந்நாள் என் வாழ்க்கையின் இனிய நினைவுகளில் ஒன்று

முந்தைய கட்டுரைஆதிவண் சடகோபன், ’தூக்கிட்டுப் போ!’
அடுத்த கட்டுரைவெந்து தணிந்தது காடு, வெற்றிவிழா