”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்!”

D. Jayakanthan

‘நல்ல கதை என்பது எலியின் உயிர்வாதையையும் பூனையின் பசியையும் ஒரேசமயம் சொல்வது’– மிகப்பழைமையான சொலவடை இது. சொல்வது எத்தனை எளிதோ அத்தனை சிரமமானது சாதிப்பது. இன்னொரு கோணத்தில் நிரந்தரமான விவாதத்துக்கு உரியது. ‘அம்மையை அடித்தாலும் அதிலிமிருக்கும் இரண்டு பக்கம்’ என்று மலையாளப் பழமொழி. அப்படியானால் நியாயம் என்றும் தர்மம் என்றும் ஒன்றுமில்லையா என்ன?

உண்டுதான். கலைஞன் எப்போதுமே நீதியின்குரல்தான். நீதி என்பது பலவகை. அன்றாட உலகியல் நீதி ஒன்று நம் கண்ணுக்குப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மண்ணில் மனிதரை இதுகாறும் வாழவைத்த பெருநீதி ஒன்று அழியாமல் என்றுமுள்ளது. சிறுநீதிகளின் அன்னை அது. காலம்தோறும் தன்னை உருமாற்றி காட்டிக் கொண்டே இருக்கும் ஆழம் அது. அரசியல்வாதிகள் அப்படி ஒரு அழியாத நீதி உண்டு என்பதை மறுப்பார்கள். நேற்று மதவாதிகள் மறுத்தார்கள். அரசியல்நீதியும் மதநீதியும் மட்டுமே அவர்கள் கண்ணுக்குப்படும். மானுடநீதி எப்போதும் அதனுடன் முரண்பட்டு குற்றம்சாட்டப்பட்டு கழுவிலேறும். ஆயினும் அதுவே அழியாமல் இக்கணம் வரை மனிதகுலத்தைக் கொண்டுவந்துள்ளது. இலக்கியம் என்றும் அதன் குரல்.

நீதிக்கும் அப்பாற்பட்ட ஒன்று இலக்கியத்தில் உள்ளது என்றால் இப்பிரபஞ்சத்தின், மானுட வாழ்வின் அறிந்துகொள்ள முடியாத இயக்கவிதியைப் பற்றிய அகத்தரிசனம்தான். பிரபஞ்சத்தின் பேரியக்கத்தின் முன் மனிதகுலமே ஒரு நடுங்கும் புல்நுனி நீர்த்துளிதான் என்ற பிரக்ஞையிலிருந்து பிறப்பது அந்த தரிசனம். அந்த கோணத்தில் மானுடப்பெரும் நீதியே கூட பிரபஞ்சத்தில் நாம் ஏற்றிக் கொள்ளும் ஒரு பாவனை மட்டுமே. அல்லது அந்த உக்கிரமான பெருவிரிவின் முன் நாம் முன்வைக்கும் ஒரு விண்ணப்பம் அல்லது மன்றாட்டு மட்டுமே. அந்த உச்சத்தை தன் புனைவால் சென்று தொடும் கலைஞன் அழியாநீதியை தன் புனைவால் நிராகரித்து பெருவெளியின் புரிந்துகொள்ள முடியாத மௌனத்தை தன் கலையில் தேக்கி வைப்பான். இயற்கையைப்போலவே கருணையற்றதாகவும் மர்மம் மிக்கதாகவும் இருக்கும் அப்படைப்பு.

எலியையும் பூனையையும் இயக்கும் பெருநியதியைக் கண்டு அங்கே பிரமித்து நின்றுவிடுபவை என்பதனால் உலகப்பேரிலக்கியங்களை பெரும்பாலும் மனிதாபிமானப் படைப்புகள் என்று சொல்ல முடிவதில்லை. ஹென்றி ஜேம்ஸ் தல்ஸ்தோயின் ‘போரும் அமைதியும்’ நாவலைப்பற்றி ”காடுபோல வடிவமற்றது, மனிதத்தன்மையற்றது ” என்று இதனால்தான் சொன்னார்.

ஜெயகாந்தன் எப்போதுமே மனிதாபிமானி. தமிழின் மனிதாபிமான இலக்கியத்தின் முதல்பெரும்பெயர் அவர்தான். அப்படித்தான் அவர் அறியவும்பட்டிருக்கிறார். ஆனால் எந்த உயிர்ப்புள்ள படைப்புலகையும்போல பொது இலக்கணத்தில் வகுத்துவிடமுடியாத கதைகள் அவரது எழுத்திலும் உள்ளன. அவை பொதுவாக அதிகம் விவாதிக்கப்பட்டதில்லை, விவாதிக்கப்படும்போதுகூட அவை அவரது மைய ஓட்டமான மனிதாபிமான நோக்குடன் இணைத்தே புரிந்துகொள்ளப்படுகின்றன. ‘நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ’ அத்தகைய கதை.

இந்து ஞான மரபு உருவாக்கிய உதாரண ஆளுமை ஒன்றை ஜெயகாந்தன் முன்னிறுத்துகிறார். இவ்வுலக வாழ்க்கை என்பது ஒரு தவம் மட்டுமே என்ற புரிதலில் இருந்து உருவான நெறிகள் கொண்டவர் அவர். கற்றல் கற்பித்தல் மட்டுமே வாழ்க்கையாகக் கொண்டவர். சபலங்களும் சஞ்சலங்களும் இல்லாதவர். ஆகவே தன்னளவில் முழுமை கொண்டவர். விடுதலை பெற்றுவிட்டவர். பூமியுடன் தனது தர்மத்தால் மட்டுமே கட்டுபட்டவர். ஏதோ ஒருபுள்ளியில் அதையும் கைவிட்டு ‘சர்வ தர்மான் பரித்யக்ஞ மாமேகம் சரணம் விரஜ’ என்ற பெருவெளியின் அழைப்பை ஏற்று அடிபதறாமல் அவரால் சென்றுவிட முடியும்.

அவருக்கு மனைவியாகவே முழு வாழ்க்கையையும் அறிந்தவளின் பார்வையில் சொல்லப்படுகிறது கதை. சகதர்மிணி என்ற சொல்லுக்கு அனைத்து வகையிலும் பொருந்தும் வாழ்க்கை. சக்கரத்தில் ஒட்டியிருக்கும் பல்லி சுற்றிச் சுற்றி வெகுதூரம் செல்வதுபோல என்று சங்கப்பாடல் அந்த அறத்தை உவமை சொல்லி விளக்குகிறது. அவள் அறிந்தது அவரை மட்டுமே. ஆகவே அவரது தர்மத்துக்கு அவளும் கட்டுப்பட்டவளாகிறாள். சின்னச் சின்ன சஞ்சலங்களை அவரது சொற்கள் இல்லாமல் செய்கின்றன.

அவள் ஒரு லாட்டரிச்சீட்டு வாங்குகிறாள். ஒரு சிறுவன் கட்டாயப்படுத்தினான் என்று வாங்க நேர்ந்ததுதான். அதற்கு லட்சரூபாய் விழுகிறது. பெரும் செல்வம். அதைக் கொண்டு வந்து அவர் காலடியில் வைக்கிறாள் ”நமக்கு எங்கே விழப்போறதுன்னு அசட்டையா இருந்துட்டேன்… பிரைஸ் விழப்படாதுன்னு ஸ்வாமிய வேண்டிட்டேன்…. இப்போ இப்படி ஆயிடுத்தே… மன்னிச்சு இதையும் என்னையும் ஏத்துண்டே ஆகணும்..”

அவர் எளிதாக அதை நிராகரித்துவிடுகிறார். ”நான் எப்பவுமே உஞ்சவிருத்தி பிராமணன்தான். என் தோப்பன், பாட்டன் – எல்லோரும் வந்த வழி அதுதான். லட்சாதிபதிக்கு புருஷனா இருக்கற அந்தஸ்து, கொணம் எதுவும் எனக்குக் கெடையாது…” ஏனென்றால் நிராகரிப்பதனூடாகவே அவர் முன்னால் சென்றுகொண்டிருக்கிறார். அவர் உதறிய ஒவ்வொன்றையும் புன்னகையுடன் வென்றிருக்கிறார். அவருக்கு அதுவும் ஒரு சுயசோதனைக் களமாக இருக்கலாம்.

‘இந்த மாயை வலையிலே நான் மாட்டிக்கலே; எனக்கு இது வேண்டாம்’னு அந்தத் தரித்திரச் சீட்டைக் கிழிச்சு எறி. ஆமாம் கிழிச்சு எறிஞ்சுடு. வேறே யார் கிட்டேயாவது குடுத்து அதுக்கு வட்டி வாங்கிண்டாலும் ஒண்ணுதான், நன்றியை வாங்கிண்டாலும் ஒண்ணுதான். சூது மனசுக்கு அதெல்லாம் தோணும். அதுக்கெல்லாம் பலியாகாம எந்த விதத்திலயும் அந்தச் சூதுக்கு ஆட்படாமே அதை கிழிச்சு எறிஞ்சுடு. இரண்டும் உன்னோட இஷ்டம். அது பாவமா, பாக்கியமான்னு முடிவு பண்ண வேண்டியது நீ…”

ஆனால் அவளால் அதை கிழிக்க முடியவில்லை. லட்சுமி அல்லவா என்கிறாள். ஆனால் ஒரு கணத்தில் அவளுள் உள்ள ஒரு பொறி வெளியே தெறித்து வருகிறது. ”பணம் பெரிசா, ஞானம் பெரிசாங்கிறதெல்லாம் நேக்குத் தெரியாது. ஆனால், பணம் – அது எவ்வளவு அதிகம்னாலும் எப்படி நிலையில்லையோ அதே மாதிரி மனுஷாளும் எவ்வளவு பெரிய ஞானியாயிருந்தாலும் வாழ்க்கை சாசுவதமில்லையே! …அப்படி நினைக்கிறதோ சொல்றதோ மகா பாவம். ஆனால் இந்தக் காலத்திலே எப்பேர்ப்பட்ட பதிவிரதையும் உடன்கட்டை ஏறிடுறதில்லையே! இவருக்கு அப்புறம் ஒருவேளை நான் இருக்க வேண்டி வந்ததுன்னா… சிவ! சிவா!…”

ஆம் அதுதான் உண்மை. சக்கரம் ஆணிகழன்றபின் பல்லி எங்கு செல்லும்? அவளுடைய இடமென்பது அவருடைய நிழல் என்பதே. அதற்குப் பின்? உடன்கட்டை ஏறிவிடமுடியாதே. அனாதைக்கிழவியாக பசித்து இரந்து தெருவில் சாகவேண்டுமா என்ன? ஒரு உன்னதமான உறவின் பயனாக அவளுக்குக் கிடைப்பது அதுவாகத்தான் இருக்குமா? எத்தனை காலமாக அந்த அச்சம் உள்ளூர இருந்திருக்கும். பிள்ளைகள் இல்லையே என்று உணரும்போதெல்லாம். கணவர் அவருக்கு தேடிவந்த பெரிய பதவிகளை உதறும்போதெல்லாம். அனைத்துச் சஞ்சலங்களையும் அவரிடம் பேசியே வென்ற அவளால் இந்த சஞ்சலத்தை மட்டும் அவரிடம் பேசவே முடியாது. அவள் லாட்டரி சீட்டு எடுத்துப்பார்த்தது தற்செயல்தானா?

”நேக்கு ஒரு குறையும் இல்லை… ஆமாம்… எந்தக் கோயிலிலே வந்து வேணாலும் நின்னு ஈரத் துணியைக் கட்டிண்டு சொல்வேன் – எனக்கு ஒரு குறையும் இல்லை… ”என்று அவள் கதையில் சொல்கிறாள். ஆனால் அது அவளுக்குள் உள்ள ஓர் உண்மைக்கு எதிராக அவளே சொல்லிக் கொண்டதுதான் போல. ”…உஞ்சவிருத்தி பண்றதிலே எனக்கென்ன பெருமை! எல்லோரும் பிச்சைக்காரின்னு சொல்லுவா. கட்டினவளைப் பிச்சைக்காரியா விட்டுட்டான்னு இந்த மகா ஞானியைப் பத்தியும் பேசுவா. அவர் கிழிச்சு எறியலாம். நான் அதைச் செய்யலாமா? ”எத்தனை சொற்கள் எத்தனை மாய்மாலங்கள். தன்னைத்தானே ஒளித்துக்கொள்ள!

மறுபக்கம் கிழவர் இந்த நவீனகாலத்தைக் கண்டு பதைத்து சாபமிட்டு பழமையில் அவர் கண்ட உன்னதத்தில் முகம் புதைத்துக் கொள்கிறார். அவரை நோக்கும்போது அந்த பற்றின்மையின் குரூரத்துக்கு அப்பால் உள்ள நியாயமும் தென்படுகிறது. தன் வாழ்க்கையை இறைவனுக்கும் விதிக்கும் அர்ப்பணம் செய்து அச்சமில்லாது ஆயுளைக் கழித்து காலத்தில் மறையக் காத்திருப்பவன் தன் மனைவியை மட்டும் தானே சுமப்பானா என்ன? அதுவும் விதிப்படி என்றுதானே அவன் ஆத்மா சொல்லும்? அப்படி சுமப்பவனாக இருந்திருந்தால், அத்தகைய சிந்தனையின் துளியாவது அவனிடம் இருந்திருந்தால், அவன் அத்தோடு நின்றிருக்க மாட்டான். மனைவி உறவு சுற்றம் நாடு என விரிந்து பற்றில் திளைத்து பிறிதொருவனாக இருந்திருப்பான். எதையுமே அவனால் நிராகரித்திருக்க முடியாது.

ஆனாலும் அந்த துறவின் பின்னால் உள்ள குரூரம் கூரிய சவரக்கத்தி முனைபோல அச்சுறுத்தவே செய்கிறது. ஆடையை கழற்றுவது போல பாசங்களை கழற்றலாமா என்ன? ஞானத்தின் பின்னால் எப்போதுமே ஒரு குரூரம் இருக்கிறது. ஞானம் அஞ்ஞானத்தை நிராகரிப்பதன் குரூரம் அது. பேதமையின் எளிமையை காலெடுத்து தாண்டிச்செல்வதன் குரூரம். அதை ஞானத்திலிருந்து பிரிக்க முடியாது.

நீ இறந்தால் நான் என்ன செய்வேன் என்று கேட்கும் மனைவியிலும் உள்ளது மர்மமான ஒரு குரூரம். அவருடன் ஒட்டியிருந்த அந்த முழுவாழ்விலும் அவர் நம்பி ஒழுகிய வாழ்க்கையின் மீது அவளுக்கு ஆழமான அவநம்பிக்கை இருந்திருக்கிறது. அந்த லாட்டரிச்சீட்டை கொண்டுவந்து அவள் காட்டிய கணம் அவருக்கு அகவிழி திறந்து அவளுடைய ஆழம் பிடிபட்டிருக்கும். ஒருவகையில் அது அவருக்கு ஒரு மரணத்தருவாய். அவள் மனதில் தனக்கிருப்பதாக அவர் நம்பியிருந்த ஒரு சித்திரம் கலைகிறது. அது ஒரு மரணமே. இன்னொருவகையில் அவர் நெஞ்சிலிருந்த அவளுடைய மரணமும்கூட.

அவளை சற்றேனும் மீட்டுக்கொள்ள முடியுமா என்ற ஆசையால்தான் கிழித்தெறி என்றாரா? அவள் அதை கிழித்தால் தன்னை அவருக்கு பூரண சமர்ப்பணம் செய்கிறாள் என்று பொருள். அவர் நம்பி வாழ்ந்தவற்றை அவளும் முழுமையாக நம்புகிறாள் என்று பொருள். கிழிக்கவில்லை என்றால் அது ஒரு முழு நிராகரிப்பு. அவள் என்ன செய்யப்போகிறாள்?

கதைகளுக்குள் பேசுவதும் கதையை முடித்து தீர்ப்பளிப்பதும் ஜெயகாந்தனின் இயல்புகள். நவீனத்துவம் அதை ஓர் பெரும் அழகியல் பிழையென நம்ப நம்மை பயிற்றுவித்திருக்கிறது. அதை மட்டும் சொல்லியே நாம் அவரது உலகை முழுக்க நிராகரிக்கவும் பழகிவிட்டிருக்கிறோம். ஆனால் எந்த நவீனத்துவ எழுத்தாளனும் தொடாத பல இக்கட்டு நிலைகளை சாதாரணமாக ஜெயகாந்தன் கதைகள் கையாண்டிருப்பதை உணரலாம். கதைகளில் ஒலிக்கும் ஜெயகாந்தனின் குரலை அதன் பல்வேறு குரல்களில் ஒன்றாக மட்டும் காணும் இன்றைய வாசகன் அவற்றுக்கு பலதளங்களிலான வாசிப்பை அளிக்கமுடியும். அத்தகைய மறுவாசிப்புக்குரிய ஜெயகாந்தன்கதைகள் பல. அதில் ஒன்று இக்கதை.

ஜெயகாந்தனின் பெரும்பாலான கதைகளுக்கு யுகசந்தி என்று பெயரிடலாம். அவரைப்பற்றி என் நண்பர் சுகா எழுதிய கட்டுரை ஒன்றில் [வார்த்தை மாத இதழ்] அவரையே ஒரு யுகசந்தி என்று சொல்கிறார். பழங்கால மதிப்பீடுகளும் நவீன யுக மதிப்பீடுகளும் கொள்ளும் மோதலையும் சமரசத்தையுமே மீண்டும் மீண்டும் ஜெயகாந்தன் எழுதியிருக்கிறார். அவ்வகையில் நமது பிற புனைவெழுத்தாளர்கள் எவரும் கவனிக்காத அளவுக்கு அம்மோதலின் உக்கிரமான, நுண்மையான புள்ளிகளை அவர் கண்டிருக்கிறார். அக்கினிபிரவேசம், பிரம்மோபதேசம்,சுயதரிசனம் என அவரது எந்தக் கதையை எடுத்தாலும் இந்த இலக்கணம் பொருந்தும்.

ஜெயகாந்தனின் புனைவுலகில் கணிசமான கதைகள் பிராமணசமூகம் பற்றியவை. பெருநகர் சார்ந்த பிராமண சமூகம் சார்ந்தவை என்றும் சொல்லலாம். அவர் ஆனந்தவிகடனில் எழுதியமையாலும், அன்றைய அவரது வாசகர்கள் அதிகமும் பிராமணர்கள் ஆதலினாலும்தான் அப்படி நிகழ்ந்தது என்று அதற்கு ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது. உண்மையில் நேர் எதிராகவே நான் காண்கிறேன். அவர் பிராமணர்களைப்பற்றி எழுதியமையால்தான் அவருக்கு பிராமண வாசகர்கள் அமைந்தார்கள். ஆகவேதான் அவை ஆனந்த விகடனில் பிரசுரமாயின.

ஜெயகாந்தனின் ஒரு மனம் மரபில் ஆழ வேரூன்றியது. இன்னொரு மனம் நவீனயுகத்தை புத்தெழுச்சியுடன் வரவேற்கும் மார்க்ஸிய நம்பிக்கை கொண்டது. ஆரம்பகால கதைகளில் புதிய காலத்துக்கான அறைகூவலாகவும் எக்காளமாகவும் மட்டும் நின்றன அவரது கதைகள். பின்பு அவர் தன்னுள் உறையும் மரபை அடையாளம் கண்டதும் – ஜெயகாந்தனைப் பொறுத்தவரை திருவள்ளுவர், தாயுமானவர், விவேகானந்தர், வள்லலார், பாரதி ஆகியோரின் சொற்கள் வழியாகவே அதை அவரே கண்டு கொள்கிறார்– மரபுமனத்துக்கும் நவீன மனதுக்குமான மோதல் அவரில் உக்கிரம் கொள்கிறது. அக்காலகட்டத்தில்தான் அவர் ஆனந்த விகடனில் எழுத ஆரம்பித்தார்.

அவருக்கு நிகராகவே அன்று நவீனத்துவத்தை ஏற்க தன்னை மறு ஆக்கம் செய்தாகவேண்டிய நிலையில் இருந்த பிராமண சமூகம் அவருக்கு இயல்பாகவே களமாக ஆகியது. அந்த அகமோதலுக்கு ஆளான பிராமணர்களே அவரது முதல் வாசகர்களாக ஆனார்கள். அவரது கணிசமான கதைகள் மரபின் வெற்று அடையாளத்தை உதறத்துடிக்கும் மனங்களை மையமாக்கியவை– சுயதரிசனம் போல. நவீனத்துவத்தின் உள்ளூர உறையும் மனிதாபிமானத்தை அடையாளம் கண்டு கொள்பவை– யுகசந்திபோல.

‘நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ..’ கூட அப்படிப்பட்ட ஒரு யுகசந்திதான். லாட்டரி சீட்டு வடிவில் மாமி கையில் வந்து அமர்ந்திருப்பது நவீனத்துவ யுகமேதான். சென்ற நூற்றாண்டில் நங்கூரமிட்ட அவள் கணவர் சஞ்சலமே இல்லாமல் அதை நிராகரித்து தன் யுகப்பழைமையில் நிலைகொள்கிறார். மாமியின் கையிலிருந்து துடிக்கிறது நவீனத்துவம். அதன் அறைகூவல், அதன் அழைப்பு, அதன் வாக்குறுதி. …என்ன செய்வதென்று தெரியாமல் அதை வைத்துக் கொண்டு நிற்கிறாள். ”நான் கையிலே சீட்டை வச்சுண்டு நிக்கறேன். கனக்கறது. இதுக்கு நான் என்ன செய்யட்டும் – சொல்லுங்கோ? ”

பெரும்பாலான கதைகளில் ஜெயகாந்தனுக்கும் ஏதாவது சொல்வதற்கு இருக்கும். அதையும் அக்கதையின் வாசிப்புகளில் ஒன்றாக கண்டு முன்னகர வெண்டும். இக்கதையில் ஜெயகாந்தனே திகைத்து பேசாமல் நின்றுவிடுகிறார். மாமியின் கேள்விக்கு அவருக்கும் ஒன்றும் பதில்சொல்வதற்கில்லை. அந்தரங்கமாகக் கேட்டிருந்தால் அவருள் உறையும் முற்போக்குவாதி ”ஏன் அலட்டிக்கறே, சத்தமில்லாம பணமா மாத்தி பாங்கிலே போட்டு வை” என்று சொல்லிவிடுவாரோ என்னவோ. மரபுவாதி கிழவரை எண்ணி ஓர் அனுதாபப்புன்னகையும் புரிவார்தான்.

ஜெயகாந்தன் – நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ? (1967-1969)

முதற்பிரசுரம் 2008 ஜூலை/ மறுபிரசுரம்

======================================================================

[embedyt]http://www.youtube.com/watch?v=iy0xpl5NztA[/embedyt]

http://www.tamilnation.org/literature/modernwriters/jeyakantan/20.htm

கலைஞனின் உடல்மொழி:ஜெயகாந்தன் ஆவணப்படம்

கடவுள் எழுக! ஜெயமோகனின் ஏழு நூல்களை வெளியிட்டு ஜெயகாந்தன் ஆற்றிய உரை

ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1

ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் — 2

 

முந்தைய கட்டுரைநவீனத்தமிழிலக்கிய அறிமுகம் – ஒரு வாசிப்பு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 74