அன்புள்ள ஜெயமோகன்,
வெந்து தணிந்தது காடு படத்துக்கு வாழ்த்துக்கள். மேலும் அதிக திரையரங்குகள் கூட்டப்பட்டு மாபெரும் வெற்றி நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்த ஆண்டின் பெரிய வெற்றிகளில் ஒன்று. தெற்கே மிகச்சிறிய ஊர்களிலெல்லாம் படம் இன்றுமுதல் தொடங்கப்பட்டிருக்கிறது. சிம்புவுக்கு தெற்கத்திச்சீமையில் ஒரு பெரிய தொடக்கமாக அமைந்துள்ளது இந்தப்படம். சிம்புவுக்கு இவ்வளவு பெரிய டபுள் டிஜிட் தாண்டிய ஓப்ப்பனிங் இருக்கும் என்று படம் நிரூபித்துள்ளது. தமிழகத்துக்கு வெளியேயும் பெரிய வெற்றி. இது நீடிக்கவேண்டும்.
படத்துறையில் இருப்பவன் என்பதனால் ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். படத்தில் சிம்பு சிறப்பாக நடித்துள்ளார். ஆனால் அதே அளவுக்கு சிறப்பாக பலர் நடித்துள்ளனர். இரண்டுபேரை குறிப்பாகச் சொல்லவேண்டும். இசக்கியாக நடித்தவர், மாசாணமாக நடித்த பத்மன்.
இரு கதாபாத்திரங்களும் மிகச்சிறப்பாக எழுதப்பட்டவை. அவர்களின் பெயர்கள் வெளியே வரவேண்டும். அவர்களுக்கும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்து முகங்கள் பரிட்சயமாகவேண்டும். அதுதான் மலையாளத்தில் நடக்கிறது. ஹீரோவை மட்டுமே வைத்து படங்களைப் பார்க்ககூடாது.
ராவுத்தராக நடித்த ஜாஃபர், சரவணனாக நடித்த அப்புக்குட்டி இருவருமே ஏற்கனவே பெயர்பெற்றவர்கள். அவர்களையும் சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. படத்தை ஒரு கணமும் சலிப்பில்லாமல் கொண்டுசெல்ல உதவியவர்கள் இந்த சிறிய கதைபாத்திரங்கள். விமர்சகர்கள் இவர்களைச் சுட்டிக்காட்டுவதில்லை. படத்தின் வெற்றிக்கு இவர்கள் முக்கியமான காரணம். அதைச் சுட்டிக்காட்டவே இதை எழுதினேன்.
சரவணப்பெருமாள்