காமத்துக்கு ஆயிரம் உடைகள்:எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உறுபசி’

‘மரணம் அதுவரை வாழ்க்கைக்கு இல்லாதிருந்த ஓர் அர்த்தத்தை அளிக்கிறது’ என்று அல்பேர் காம்யூவின் புகழ்பெற்ற வரி ஒன்று உண்டு. பல நாவல்கள் இவ்வரியின் நீட்சியாக நமக்குப் படிக்கக் கிடைக்கின்றன. குறிப்பிடத்தக்கவை இரண்டு. டாக்டர் சிவராம காரந்தின் ‘அழிந்த பிறகு’ என்ற கன்னட நாவல் அதில் ஒன்று.[தமிழில் சித்தலிங்கையா. தேசிய புத்தக நிறுவனம் வெளியீடு] சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே.சில குறிப்புகள்’ இன்னொன்று. இரண்டுமே இறந்துபோன ஒருவரை நினைவுகள் மற்றும் தடையங்கள் மூலம் தேடிப்போய் மெல்லமெல்ல ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளும் கதைகள். ‘ஜே.ஜே.சில குறிப்புகள்’ ஜே.ஜேயின் குணச்சித்திரத்தை மெல்லமெல்ல உருவாக்க முயல்கிறது. மாறாக ‘அழிந்தபிறகு’ உருவாகி நெஞ்சில் நிற்கும் ஒரு குணச்சித்திரத்தை மறுவார்ப்பு செய்துகொள்கிறது.

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய உறுபசி இவ்வகையைச் சார்ந்த நாவல். சம்பத் என்ற நண்பர் ஒருவரின் இறப்புக்குப் பின்னர் அவனது நண்பர்கள் பல்வேறு கோணத்தில் மெல்ல மெல்ல அவனை கண்டடைவது பற்றிய கதை– அல்லது அப்படியெல்லாம் ஒருவரை நாம் கண்டடைவது சாத்தியமல்ல என்று காட்டும் கதை. கல்பற்றா நாராயணன் எழுதிய கவிதை ஒன்றில் பழைய பள்ளித்தோழரை தற்செயலாக தெருவில் சந்திக்கும் அனுபவம் வருகிறது. இருவரும் வெவ்வேறு திசையில் வெகுதூரம் விலகி வளர்ந்துவிட்டவர்கள்.’ தொலைவில் சாலையில் மரக்கூட்டங்களுக்கு நடுவே செல்லும் பேருந்து போல அவன் அவ்வப்போது மறைந்து மறைந்து வெளிப்பட்டான்’ என்கிறார் கல்பற்றா நாராயணன். உறுபசியின் கதைக்கட்டுமானத்துக்கு சரியாகப்பொருந்தும் படிமம் இது. சம்பத் இந்நாவலில் அவ்வப்போது மறைந்து மீண்டும் வெளிப்படுகிறான். ஒவ்வொரு முறையும் அவனது குணச்சித்திரம் மாறிவிட்டிருக்கிறது.

அந்தக் கோணத்தில் நோக்கினால் சம்பத்தின் மாற்றத்தைப் பற்றிய நாவல் இது என்று சொல்லலாம். சம்பத்தின் மரணத்துக்குப் பின்னால் சம்பத் பற்றிய நினைவுகளுடன் மூன்று நண்பர்கள் ஒரு பயணம் மேற்கொள்வதில் ஆரம்பிக்கிறது நாவல். சம்பத்துக்காக அழுவதா வேண்டாமா என்பது கூட அவர்களிடம் உறுதியாக இல்லை. அவர்கள் எவருமே சம்பத்துடன் சீரான உறவை வைத்திருந்தவர்கள் அல்ல. ஒருவர் சம்பந்துக்கு மற்றொருவருடன் தான் நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்று எண்ணிக் கொள்கிறார்கள். ஒருவரை பார்க்கும் இன்னொருவருக்கு அவர் சம்பத் மரணத்துக்காக ஆறுதல்தான் கொள்கிறானோ என்று தோன்றுகிறது. சட்டென்று அவனை மீறி அழுகையும் வருகிறது.

சம்பத் பற்றிய சித்திரம் மிக இயல்பாக ஒரு நினைவுப்படிமத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. தீப்பெட்டி மீது அவனுக்கு இருந்த மோகம். தீப்பெட்டியை வாங்கினால் எப்போதுமே அவன் அதை முகர்ந்து பார்ப்பான். லைட்டரில் எரியும் தீயைவிட தீக்குச்சியிலெரியும் தீயை தான் விரும்புவதாகச் சொல்கிறான். அந்த தீயின் நடுக்கமும் நிலையின்மையும் அவனுக்குப் பிடித்திருக்கிறது.  சம்பத்தின் குணச்சித்திரத்தினுள் நுழைவதற்கான ஒரு மையபப்டிமமாக அனிச்சையாக இது நாவலில் உருக்கொண்டிருக்கிறது. எரிந்து தீர்வதற்கான ஒரு யத்தனமே அவன் வாழ்க்கை என்ற எண்ணம் நாவல் முழுக்க உருவாகிக் கொண்டிருக்கிறது.

சம்பத்தின் குணச்சித்திரத்தின் முதல் சித்திரமாக வருவது அவன் தன்னுடன் ஒரு விபச்சாரியை அழைத்துக் கொண்டு ஆங்கிலப்படம் பார்க்க வந்த இடத்தில் குடும்பத்துடன் வந்த நண்பனை இயல்பாக வந்து அறிமுகம் செய்துகொண்டு உன் மனைவி கருத்தடை செய்துகொண்டாளா, குண்டாக இருக்கிறாளே என்று கேட்கும் தருணம். அவனுடைய கட்டற்ற தன்மை மட்டுமல்ல சீண்டும் தன்மை, தன்னை காட்டிக்கொள்வதற்காகவே சிலவற்றை செய்யும் இயல்பு என பொதுவாக போதைப்பழக்கத்திற்குள் சென்று விழுபவர்களிடம் காணும் பல இயல்புகள் அவனிடம் உள்ளன.

சட்டென்று கோணம் மாறுகிறது. சம்பத் ஓயாமல் படித்துக் கொண்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் இளைஞனாக அறிமுகமாகிறான். பெண்பிள்ளைகளை வயதுக்கு வந்ததும் கட்டிக் கொடுத்துவிடுவதுபோல நம்மையும் நடத்தினால் நன்றாக இருக்கும் இல்லையா என்று கேட்கிறான். ஒருவன் சம்பாதித்தால் மட்டுமே உடலுறவு கொள்ள முடியும் என்ற நிலைமை எத்தனை கொடுமையானது என்கிறான்.
இன்னொரு நினைவோட்டத்தில் நண்பனிடம் சம்பத் தன்னுடைய சிறுவயதில் தோழியொருத்தியின் உடைகளை பிடுங்கி அவள் மலைக்குட்டையில் விழுந்து இறக்கக் காரணமாக அமைந்ததைப் பற்றி சொல்லி அழுகிறான்.

அதன் பின் சம்பத்தின் இறப்புக்குப் பிந்தைய காட்சியின் அசாதாரணமான அவலத்தை ஒரு ஆவணப்படத்தின் நிதானத்துடன் காட்டிச் செல்கிறது நாவல். மிகச்சிறிய ஒரே அறையில் மனைவியுடன் குடும்பம் நடத்தியவன் அவன். அவனது இறப்பின் துயரத்தை உணர அவன் மனைவிக்கு அவகாசம் இல்லை. தாளமுடியாத நெரிசல் கொண்ட நகரத்து தெரு. அவளே ஒவ்வொன்றையும் செய்தாகவேண்டிய நிலை. அன்னியத்தன்மை. விசித்திரமான கேலிநாடகம் போல ஒவ்வொன்றும் நடக்கிறது. அவளே தெருக்குழாய்க்குப்போய் வரிசையில் பிணத்தைக் குளிப்பாட்ட நீர் எடுத்து வருகிறாள். வரும் அவ்ழியில் அவளது ஈர உடையை ஆண்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். அவள் நகரத்துக்குப் புதிது. சம்பத் நோய் முற்றி சானடோரியத்தில் செத்துக் கொண்டிருக்கும்போது எங்குபோவதென தெரியாமல் அவள்தான் அவன் நண்பனை தொடர்பு கொண்டிருக்கிறாள்.

நினைவின் அடுத்த காட்சியில் சம்பத் நாலுநாளைக்கு தேவையான தண்ணீரை சேர்த்து வைப்பதற்கான பெரிய பிளாஸ்டிக் வாளியும் பிற பிளாஸ்டிக் பொருட்களுமாக தெருவில் வைத்து கதைசொல்லும் நண்பனைச் சந்திக்கிறான். உற்சாகமாக, ஒரு புது வாழ்க்கையை தொடங்கப்போகும் பரபரப்புடன் இருக்கிறான். அவர்கள் கரும்பு ஜூஸ் குடிக்கிறார்கள். ஒரு கரும்பு பிழியும் இயந்திரம் வாங்கி தொழிலை ஆரம்பிப்பது பற்றி பேசுகிறான். வருமானம் வருவதுடன் பிடிக்காதவரக்ளை நினைத்துக் கொண்டு கரும்பை சக்கையாகப் பிழியலாம். அந்தப் பொருட்களுடன் அவர்கள் ‘நீர்க்குமிழி’ படம் பார்கக்ச் செல்கிறார்கள்.

சம்பத்தின் சித்திரம் இன்னொரு நண்பனின் கோணத்தில் கல்லூரிக் காட்சியில் விரிவடைகிறது. இந்நாவலிலேயே யதார்த்தத்தின் அழகால் விசித்திரமானதோர் உயிர்த்துடிப்புடன் இருக்கும் பகுதி இதுதான். சற்றும் எதிர்பார்க்க முடியாத, அந்த எதிர்பார்க்க முடியாமையே வாழ்க்கையின் யதார்த்தம் என்ற நம்பிக்கையையும் உருவாக்கக் கூடிய, சித்திரம் இது. தமிழ் இலக்கியம் படிக்கவேண்டுமென்றே விரும்பி கல்லூரிக்கு வந்து சேர்ந்தவன் சம்பத். மற்றவர்கள் வெவ்வேறு கட்டாயங்களால் வந்தவர்கள்.

கல்லூரிக்கு தமிழ்த்துறையில் யாழினி என்ற பெண் வந்துசேர்கிறாள். அவள் அப்பா மயில்வாகனன் ஒரு பொறியாளர். தீவிர நாத்திகர். திராவிட இயக்கத்தவர். அதற்கேற்ற மேடைப்பேச்சுப் பண்பாட்டுடன் வளர்க்கப்படும் யாழினியுடன் இணையும் சம்பத் அவனும் ஒரு நாத்திகப்பேச்சாளனாக உருவகிறான். யாழினி அவனது ‘நல்ல தோழி’ ஆக உருவெடுக்கிறாள். இருவரும் சிந்தனையாளர் முகாமுக்குச் சென்றுவருகிறார்கள். வேட்டிக் காட்டிக் கொள்கிறான். புத்தகங்களை கூவிக்கூவி விற்கிறான். கம்பராமாயணப்பிரதியை எரித்து கைதாகி கல்லூரியிலிருந்து விலக்கபப்ட்டு அரசியல் பேச்சாளனாகி அனல் பறக்க பேசி புகழ் பெற்று ஓர் அரசியல் நட்சத்திரமாக மாறும் வாய்ப்பிலிருந்த சம்பத் அங்கிருந்து சட்டென்று உதிர்ந்து மறைகிறான். பின்னர் நாம் காணும் நாளெல்லாம் படித்துக் கோண்டு வீட்டில் காமத்துடன் முடங்கிக் கிடக்கும் சம்பத் அதிலிருந்து எஞ்சி வெளியேறியவன்.
அதன் பின் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் ஒரு நண்பனின் நினைவில் மீண்டும் யாழினி வருகிறாள். அவள் சம்பத்தை ஏதோ தொலைதூரத்து நினைவாக மட்டுமே வைத்திருக்கிறாள். தமிழார்வமும் நாத்திகமும் எல்லாம் சரிதான், சாதியும் அந்தஸ்துமெல்லாம் சரியாகக் கணக்கிடப்பட்டு வைத்திருக்கும் சமூகம் இது என்பதை சம்பத் அப்போது மிகவும் கசந்து புரிந்துகொண்டு எங்கோ சென்றுவிட்டிருக்கிறான். யாழினிக்கு அதெல்லாம் உள்ளூர எப்போதுமே தெரியும். குறள்நெறியில் இளைஞர்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு பேருரையை நிகழ்த்திவிட்டு மேல்படிப்புக்கு சாதாரணமாகக் கிளம்பிச் செல்கிறாள். டெல்லியில் நல்ல நிலையில் இருக்கும் அவள் சம்பத் மரணத்துக்குப் பின்னர் வந்து அவன் மனைவியைப் பார்க்கிறாள். யாழினியின் நினைவில் சம்பத் காமம் குமுறிக் கொந்தளித்தபடி இருக்கும் ஓர் இளைஞன். அவனது காமம் அவளை சற்றே கவர்கிறது. அதன் பின் அச்சுறுத்துகிறது. அவனை விட்டு விலகவும் அதுவே காரணமாகிறது.

சம்பத்தின் வாழ்க்கையில் விசித்திரமான அபத்தம் கலந்த அந்த இளமைப்பருவம் என்ன விளைவை ஏற்படுத்தியது என்பதை கணிப்பது இந்நாவலில் ஆர்வமூட்டும் ஒரு விஷயம். முன்பின்னாக கலைந்த நினைவுகள் கொண்ட இந்நாவலில் அதற்கான முன்னுக்கு நகர்ந்து வாசிக்க வேண்டியிருக்கிறது. நட்டும்போல்ட்டும் விற்கும் தொப்பை பெருத்த விற்பனைப்பிரதிநிதியாக மொழிப்போராளி சம்பத்தை நண்பன் காணும் காட்சியில் அந்தத் தொடர்ச்சியைக் காணலாம். அந்த சம்பத் மாணவ சம்பத்துக்கு ஒரு வகையான எதிர்வினை. யாழினிக்கும் அக்காலத்திய கற்பனை சஞ்சாரத்துக்கும் சம்பத் தானே அளித்துக் கொண்ட தண்டனை அது.

அந்த சம்பத்தை அவன் வந்து அடைவதற்கு மிகக் கசப்பான ஒரு வாழ்க்கைக் காலகட்டத்தை அவன் தாண்டியிருக்கக் கூடும். அதை உணர்த்தும் காட்சிகள் மிக வலுவாக சித்தரிக்கபப்ட்டுள்ளன. சம்பத்துடன் அவன் அக்கா வீட்டுக்கு செல்கிறான் நண்பன். நண்பனை முன் வைத்து கசந்துப்போன உறவுகளை சரிசெய்துகொள்ள முடியுமா என்று பார்ப்பது சம்பத்தின் நோக்கம். அவள் வீட்டில் அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது சம்பத்தின் அப்பா வருகிறார். வெயிலில் வந்தமையால் முதலில் கண் தெரியவில்லை. கண்தெரிந்ததும் வெளியே போய் ஒரு விறகுக் கட்டையை எடுத்துவந்து முகத்தோடுசேர்த்து மூர்க்கமாக அடிக்கிறார். அடிபட்டு துவண்ட சம்பத் தானும் மூர்க்கம்கொண்டு அப்பாவை தாக்குகிறான்.

ஜெயந்தியின் நினைவுகளில் விரியும் இன்னொரு சம்பத் லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குவதில் மிதமிஞ்சிய மோகத்துடன் இருக்கிறான். நினைவு தெரிந்த நாள் முதல் பணிப்பெண்ணாக வேலைபார்ப்பதன்றி வேறெதுவும் அறியாத அவள் அவன் எடுத்த ஒரு லாட்டரி டிக்கெட். அச்சகத்தில் பணியாற்றுகிறான். அங்கே பணத்தை கையாடிவிட்டு ஓடிப்போய் சென்னைக்குவருகிறான். அங்கே ஒரு வாழ்க்கையை தொடங்கவிருக்கிறான். கரும்பு பிழியும் யந்திரத்தைப் பற்றிய கனவுடன் பிளாஸ்டிக் வாளிகளுடன். 

சம்பத்தின் சித்திரங்கள் நாவல் முடிந்தபின்னும் ஒழுங்குக்கு வருவதில்லை. கிழித்துப்போடபப்ட்ட ஒரு சித்திரத்தின் துண்டுகளாக அவை இல்லை. வெவ்வேறு சம்பத்களின் தனித்தனிப்படங்களாக அவை உள்ளன. இளம்பருவத்தோழியின் மரணத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன். லட்சியவாத பாவனையுடன் அலையும் மாணவன். பெண்பித்தன். குடிகாரன். சிறுவணிகன். லாட்டரிச்சீட்டு மோகம் கோண்டவன். திருமணம்செய்துகொண்டு வாழ்க்கையை தொடங்குபவன். மரண மோகம் கொண்ட நோயாளி. சடலம். சடலத்தில் இருந்து பின்னோக்கிச் சென்று மீண்டும் இவையனைத்தும். இச்சித்திரங்களை அடுக்கி நாம் உருவாக்கிக் கொள்ளும் சம்பத்துகளும் பலர். அந்த சாத்தியக்கூறுகளே சம்பத் என்று சொல்லலாம்.

ஆனால் எப்படி அடுக்கினாலும் அனைத்திலும் இடம்பெறும் சம்பத்தின் பொதுக்கூறு என்பது காமமே. எல்லா வேடங்களிலும் அவனில் அது எரிந்துகொண்டிருக்கிறது. அந்தக் காமம் கூட ஓர் இயல்பான உணர்வாக இல்லாமல் எதிர்வினையாக இருக்கிறது. சிறுவயதுத் தோழியின் மரணத்துக்கு அவன் அளிக்கும் எதிர்வினையாக அது இருக்கலாம். அந்தக் காமத்துக்கு அவன் வித விதமான உடைகளை அணிவித்துப்பார்க்கிறான். போக்கிரியின் உடை. வணிகனின் உடை. சூதாடியின் உடை. எல்லாவற்றையும் எரித்து அவனையும் எரித்து அழிகிறது அது. ‘உறுபசியும் ஓவாப்பிணியும் செறு பகையுமாக’ தழல்விடும் காமம்.

எஸ்.ராமகிருஷ்ணனின் நடை உணர்ச்சியற்ற அறிக்கைத்தன்மை கொண்டதாக இருப்பது இந்த நாவலுக்குச் சரியாகப்பொருந்துகிறது. மிக அவலமான காட்சிகளைகூட அது சாதாரணமாக ஒளிப்பதிவுக்கருவி போல காட்டிச் செல்கிறது. சம்பத் இறந்து கிடக்கும் காட்சியைக் காணும் நண்பனின் நோக்கில் அவன் சட்டைக்காலரில் ஊரும் எறும்புதான் நகர்ந்துகொண்டிருக்கிறது. எத்தனையோ முறை எபப்டியெல்லாமோ சொல்லபப்ட்டுவிட்ட மானுட அவலம்தான். ஆனால் அதன் அபாரமான நம்பகத்தன்மை காரணமாகவே அது மிக அருகில் நிகழ்வதாக மாறி நம்மை பலவகையான சிந்தனைச் சுழல்களுக்குள் கொண்டுசெல்கிறது. அதுவே இந்நாவலை வெற்றிகரமாக ஆக்குகிறது.

யாமம் :எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு

முந்தைய கட்டுரைமதம் , ஆன்மீகம், கிறித்தவம் : ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைவார்த்தை