அன்புள்ள ஜெ
சாரு நிவேதிதாவுக்கு வழங்கப்படும் விஷ்ணுபுரம் விருது பலவகையிலும் முக்கியமானது. ஒன்று, நவீனத்தமிழிலக்கியம் ஒன்றும் அம்மாஞ்சித்தனமானது அல்ல, மிடில்கிளாஸ் சென்ஸிபிலிட்டிக்குள் ஒடுங்கிவிடுவது அல்ல என்று அறைகூவிச் சொல்வதுபோல் உள்ளது இந்த விருது. இந்த விருதைப் பற்றி பலவகையான கருத்துக்களைக் கண்டேன். எங்குமே எழுத்து, எழுத்தாளனின் எழுத்துசார்ந்த ஆளுமை பற்றிய பேச்சு இல்லை. பெரும்பாலானவர்கள் பத்தாண்டுகளில் வலையில் நடந்த வம்புகளைச் சார்ந்தே சாருவை அறிந்திருக்கிறார்கள்.
சாருவின் இரண்டு நாவல்களும் இரண்டு வகையில் முக்கியமானவை. சீரோ டிகிரி நாவல் குடும்பம் அரசியல் மதம் ஆன்மிகம் எல்லாவற்றையும் கிழித்துத் துண்டுதுண்டாக்கி ஒன்றாகக் கலக்கி கொட்டி வைக்கிறது. இதுதான் உன்னுடைய அகம் என்கிறது. ஒருவனை சட்டென்று வாந்தி எடுக்கவைத்தால்தான் தெரியும் அவன் வயிற்றுக்குள் என்னென்ன குப்பையை எல்லாம் செலுத்தியிருக்கிறான் என்று. அத்தனை குப்பையையும் தனித்தனியாக அவன் சுவைத்து விழுங்கியிருக்கிறான். சீரோ டிகிரி ஒரு வாந்தி. நம் சமூகமனம் எடுத்த வாந்தி. அதை நாம் திரும்ப்ப்பார்க்க விரும்புவதில்லை. ஆனால் நம்மை நாமே அறியவேண்டுமென்றால் அதைப்பார்த்தே ஆகவேண்டும்.
சாரு எந்தெந்த வம்புகளால் அளக்கப்படுகிறாரோ அந்த வம்புகளையே கதையாக்கியிருக்கும் நாவல் எக்ஸைல். அதில் எல்லா சமகாலக் கிசுகிசுக்களும் உள்ளன. ரகசியமாக அளிக்கப்பட்டால் எதையும் வாங்கி விழுங்கிவிடுபவர்கள் நாம். நம் அகம் எந்தெந்த அலுவலக வம்புகள், சினிமா வம்புகள், அரசியல் வம்புகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்று சாரு நிவேதிதாவின் எக்ஸைல் காட்டுகிறது.
சாருவை எதிர்க்கலாம். ஏனென்றால் அவர் இனிமையை உருவாக்குபவர் அல்ல. ஆனால் புறக்கணிக்க முடியாது என்று விஷ்ணுபுரம் விருதும் காட்டுகிறது.
கிருஷ்ணராஜ்
அன்புள்ள ஜெ.
சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் அவருடைய எல்லா எழுத்துக்களையும் படிப்பவன். அவர் உருவாக்கி அளிக்கும் உலகம் கொஞ்சம் சிக்கலானது. கலைந்துபோன உலகம் அது. நான் ஒருமுறை ஒரு பர்மா அகதியுடன் இந்தோனேசியாவில் பேசினேன். சாவு. இடம்பெயர்வு. கொலை, தற்கொலை, நோய், துரோகம் என வாழ்க்கையே திகிலூட்டும்படி இருந்தது. இன்றையவாழ்க்கையின் எல்லா இருட்டும் உள்ள நாவல்கள் சாரு எழுதியவை.
ஜெய்ராம் குமார்