சாரு, கடிதங்கள்

அன்புள்ள ஜெ

சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

இன்றைக்கு இதை பொதுவெளியில் சொல்லமுடியாத நிலை. இங்கே நம் இலக்கியச் சூழலில் எல்லாமே பொலிட்டிக்கலில் கரெக்ட் ஆகவே இருந்தாகவேண்டும். இல்லை என்றால் வசைதான். அப்படி எல்லாருமே பொலிடிக்கலி கரெக்ட் ஆக வாழும் ஒரு உலகம் எங்கே உள்ளது என்று கேட்டால் பதில் கிடையாது. நான் மாற்றுத்திறனாளி. இங்கே இலக்கியச் சூழலில் மாற்றுத்திறனாளி பற்றி எவராவது ஏதாவது சொன்னால் அடிக்கப்பாய்கிறார்கள். எல்லாருமே மனிதாபிமானிகள். ஆனால் நேர்வாழ்க்கையில் அந்த மனிதாபிமானத்தை எங்கேயுமே பார்க்கமுடியாது.

சாருவிடம் நான் பார்த்ததே சுதந்திரம்தான். சாரு என்றாலே சுதந்திரம்தான். அயோக்கியனாகவோ அற்பனாகவோ எப்படிவேண்டுமென்றாலும் இருப்பேன், என் இஷ்டம் அதுன்னு ஒருவன் சொல்லிவிட்டால் அதன்பிறகு சுதந்திரம்தான். எனக்கு அவருடைய நாவல்களில் அந்தச் சுதந்திரம்தான் பிடித்திருந்தது. சீரோ டிகிரியை விட எக்ஸைல் சிறப்பான நாவல். எக்ஸைல் நாவலில் நாம் அத்தனைபேரும் எத்தனை அபத்தமான அற்பத்தனமான வாழ்க்கையிலே நீடிக்கிறோம் என்று சொல்லியிருப்பார். அதில் ஒரு பொம்புளை ஆபீசர் வருவார். சான்ஸே இல்லை.

சூர்யா

***

அன்புள்ள ஜெ

சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சாருவின் ஒட்டுமொத்த பங்களிப்பு என்ன என்று பார்த்தால் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற இந்த சின்ன மிடில்கிளாஸ் உலகம் மிடில்கிளாஸ் சென்சிபிலிட்டி மிடில்கிளாஸ் அரசியலுக்கு வெளியே எவ்ளவு பெரிய கிரியேட்டிவான உலகம் இருக்கிறது என்று காட்டியதுதான். இலக்கியம் என்றால் நல்ல விஷயங்களைச் சொல்லணும், நல்ல மனுஷன் என்றால் ஒழுக்கமான பக்திமான் என்றெல்லாம் ஒரு நம்பிக்கை இருந்த சூழலில் சாரு எல்லாவற்றையும் உடைத்து இன்னொரு உலகை காட்டியிருக்கிறார். எனக்கெல்லாம் அவர் காட்டியதுதான் நவீன உலகம்.

செந்தில்குமார் ராஜ்

விஷ்ணுபுரம் விருது,2022

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி 

முந்தைய கட்டுரைகி.ரா.விருது வழங்கும் விழா
அடுத்த கட்டுரைசில முகங்கள்