சாரு, கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டதை ஒட்டி வந்துகொண்டிருக்கும் கடிதங்களைப் பார்த்தேன். இணையத்தில் பலபேர் திட்டி, வசைபாடி எழுதி ஓய்ந்துவிட்டனர். நீங்கள் அவற்றை எல்லாம் இங்கே பிரசுரிக்கவே இல்லை. அவற்றுக்குப் பதிலும் சொல்லவில்லை.

அவற்றை நீங்கள் ஓரு நிமிடம்கூட கணக்கிலெடுக்கவில்லை என்பது எனக்கு பிரமிப்பாக இருந்தது. எப்படி இப்படி இருக்க முடிகிறது என்றுதான் நினைத்துக்கொண்டே இருந்தேன். ஆனால் இங்கே எதையாவது சாதிக்கவேண்டும் என்றால் இப்படித்தான் இருந்தாகவேண்டும். நமக்கு தோன்றியதைச் செய்யவேண்டும். அதற்கு வரும் எதிர்ப்புகளை பொருட்படுத்தக்கூடாது. சிறப்பு.

செ.ரவி

 

அன்புள்ள ஜெ,

 

சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது பற்றிய செய்திகளை வாசித்துக்கொண்டிருந்தேன். அவரைப்பற்றி ஒரு விஷயம் எனக்குச் சொல்லவேண்டியிருக்கிறது.

நாம் அனைவருமே கொஞ்சம் இறுக்கமானவர்கள். Moral constriction என்று அதை ஓஷோ சொல்கிறார். நம் மிடில்கிளாஸ் வாழ்க்கை அதை நமக்குச் சொல்லித்தருகிறது. நாம் நம்மை இறுக்கிக்கொண்டிருக்கிறோம். மிச்சமுள்ளவர்களை கண்காணித்தபடியும் இருக்கிறோம். குறைசொல்லிக்கொண்டே இருக்கிறோம். நம் மனசுக்குள் நமக்கு ஆயிரம் மீறல்கள். ஆனால் அதை நாம் பார்ப்பதில்லை. அல்லது அதை தவிர்க்க பிறரை இன்னும் கண்காணிக்கிறோம்.

நான் என் 28 வயதில் சாருவை வாசித்தேன். அப்போது எனக்கு ஒரு தப்பு நடந்துவிட்டிருந்தது. என் வாழ்க்கையில் நான் திரும்ப நினைத்துப்பார்க்க விரும்பாத ஒரு தப்பு அது. அதனால் நான் மிகுந்த குற்றவுணர்ச்சி அடைந்தேன். ஆகவே கசப்பும் வெறுப்பும் கொண்டவனாக இருந்தேன். சாருவின் சீரோ டிகிரி தற்செயலாக படிக்கக்கிடைத்தது. சாரு எந்த பதிலையும் சொல்லவில்லை. ஆனால் எனக்கு ஒரு  unwinding நடந்தது. இன்றைக்கு நான் மிக ஈசியானவனாக ஆகிவிட்டேன். இன்றைக்கு அதெல்லாமே பழைய கதை. ஆனால் சாருவின் நாவல் அதை எனக்குச் செய்தது.

விஷ்ணுபுரம் விருதுக்காக சாருவுக்கு வாழ்த்துக்கள்.

செல்வா

விஷ்ணுபுரம் விருது,2022

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி 

முந்தைய கட்டுரைஅக்டோபர் 1,2 வாசிப்பு பயிற்சி முகாம் இடங்கள் நிறைவு
அடுத்த கட்டுரைகவிதைகள் இதழ்