வெந்து தணிந்தது காடு, ‘பிரமோ’வும் படமும்

ஜெ,

திரைப்படம் சார்ந்த promotionகள் நேர்காணல்கள் போன்றவற்றை பெரும்பாலும் தவிர்த்து வந்துள்ளீர்கள்… இப்பொழுது, தொடர்ந்து திரைப்படம் சார்ந்த நேர்காணல்கள்… மேடை பேச்சுகள்.

பொன்னியின் செல்வனின் பட்ஜெட் அதை கட்டாயமாக்கலாம்… கூடவே அதன வரலாறு பற்றி பேச வேண்டிய இடம் உங்களுக்கு உள்ளது.

வெந்து தனிந்தது காடு… மீண்டும் அது ஒரு வணிக அம்சங்கள் குறைவான வாழ்வை சொல்லும் கதை எனும்பொழுது அதை எழுத்தாளன் சொல்வது தான் சரியாக இருக்கும்.

இந்த காரணிகளை புரிந்துக்கொள்கிறேன்… அனால்… இவற்றை தாண்டி… பொது மேடைகளில் தோன்றுவது… மக்களுக்கு பரிச்சயமான முகமாக மாறுவது குறித்த உங்கள் பார்வையில்… எண்ணங்களில் ஏதேனும் அடிப்படை மாற்றம் நிகழ்ந்துள்ளதா என அறிந்துக்கொள்ள விரும்புகிறேன்.

பிகு: இந்த promotion… promo என்பதற்கு ஒரு நல்ல தமிழ் வார்த்தை கூறுங்களேன்… நேரடியாக ஊக்குவித்தல் என்ற சொல் இருந்தாலும், பரப்புரை என்பதற்கு அருகே வரும் சொல் தானே சரியாக வரும்?

அன்புடன்

ரியாஸ்

அன்புள்ள ரியாஸ்,

நான் திரைப்படத்தை ஒரு தொழிலாகவே பார்க்கிறேன். அதில் என் பணியை மிக விரைவாக, மிகநிறைவாக செய்து அளிப்பவன் என இயக்குநர்களிடையே அறியப்படுகிறேன். ஆகவே பதினெட்டு ஆண்டுகளாக அந்தத் தொழில் சிறப்பாகச் செல்கிறது. அதற்கு மேல் எந்தப்படத்திலும் நான் ஈடுபாடு கொள்வதில்லை.

என் படங்களில் வெளியீட்டுவிழா, வெற்றிவிழாக்களில் நான் கலந்துகொண்டதில்லை. படங்களின் வெற்றி பற்றிய செய்திகளை பொதுவாக அதிகம் கருத்தில் கொண்டதுமில்லை. திட்டமிட்டே அந்த மனநிலையை கைக்கொள்கிறேன். ஏனென்றால் நான் இலக்கிய எழுத்தாளன். என் ஆர்வங்கள், தேடல்கள் வேறு. என் பணிக்களம் முற்றிலும் வேறொன்று.

சர்க்கார் மற்றும் 2.0  வெளியான நாட்களில் பயணங்களிலும் இலக்கியக் கூட்டங்களிலும் இருந்திருக்கிறேன். நெல்லை கட்டணக்கூட்டம் நடக்கும் இடத்துக்கு மிக அருகே சர்க்கார் படம் ஓடும் அரங்கு. அங்கே வாசலில் பெரும்கூட்டம், ரகளை. அப்போதுகூட நான் சர்க்கார் பார்த்திருக்கவில்லை.

என்னைப் பொறுத்தவரை எல்லா படங்களும் இயக்குநரின் ஆக்கங்கள். வெற்றிதோல்வி அவர்களுக்குரியது. நான் பொறுப்பேற்க முடியாது. நான் இயக்குநர் கோருவதை அளிப்பவன் மட்டுமே. இயக்குநர் என்னிடமிருந்து பெறுவது எதுவோ அதுவே சினிமாவில் இருக்கும். அதில் நான் எவ்வகையிலும் தலையிடுவதில்லை. பல இயக்குநர்கள் நான் எழுதியவற்றில் இருந்து மிகமிகக்குறைவாகவே எடுத்துக்கொள்வார்கள், நான் மறுப்பு தெரிவித்ததே இல்லை. அது அவர்களின் படம், அவ்வளவுதான்.

நான் இதுவரை எழுதிய படங்களில் என் எழுத்துக்கு மிகஅணுக்கமாக அமைந்த படம் வெந்து தணிந்தது காடு. ஆகவே அதில் என் ஈடுபாடு சற்று மிகுதி. அதைவிட கௌதம் மேனன் வெல்லவேண்டும் என நான் விரும்பினேன். இனிய மனிதர், மிக அணுக்கமாக நான் உணரும் ஒருவர், முந்தைய படங்களின் சிக்கல்களால் பலவகை நெருக்கடியில் சிக்கி இருப்பவர். ஒரு வெற்றி அவரை மீட்டுவிடும் என நினைத்தேன்.

அவருடைய அந்த பதைப்பை அருகிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். சினிமாக்களை பலர் பலவகையாக பார்க்கிறார்கள். பெரும்பாலானவர்களுக்கு அது கேளிக்கை. சிலர் அதிலும் கசப்பையும் காழ்ப்பையும் கலந்து, படம் எடுக்கப்படும்போதே அது தோல்வி அடையவேண்டும் என எழுதுகிறார்கள். ஆனால் எனக்கு அது சிலருடைய வாழ்க்கை. அவர்களின் தவிப்பையும் வேண்டுதலையும் உணர்கிறேன். ஆகவே எந்தப்படமும் வெல்லவேண்டும் என்றே நான் வேண்டிக்கொள்வேன்.

அதிலும் கௌதம் இனிய நண்பர். எந்த எதிர்மறைக்கூறுகளும் இல்லாதவர். சினிமா என்னும் மீடியம் மீது அர்ப்பணிப்பு கொண்டவர். அதிலும் என் நண்பர் மணி ரத்னத்தை குருவாக நினைப்பவர். அத்தனைச் சிக்கல்களிலும் சினிமாவை பயின்றுகொண்டே இருப்பவர். இந்தப்படத்தில் அவருடைய திரைமொழியே மாறியிருப்பதை எவரும் காணலாம்.

ஆகவே இந்தப்படம் வென்றே ஆகவேண்டும் என முதல்முறையாக அத்தனை விரும்பினேன். வெற்றிச்செய்தி காலை எட்டரைக்கு பல்வேறு திரையரங்குகள், வினியோகஸ்தர்களிடமிருந்து வந்தபோது முதல் எண்ணமே “கௌதம், உங்கள் வெற்றி. உங்கள் விடுதலை” என்றுதான்.

அத்துடன் படத்தில் சிம்புவை பார்த்தேன். என் மகனின் வயதுதான். ஆனால் உடலை உருக்கி, உழைத்து, தன்னை நிறுவிக்கொண்டிருக்கும் அந்த அர்ப்பணிப்பு என்னை பிரமிக்கச் செய்தது. படம் முழுக்கக் கொண்டுவந்திருக்கும் சீரான உடல்மொழியும், அந்த உடல்மொழி முத்துவின் அகம் மாற மாற அதுவும் மாறிக்கொண்டிருப்பதும் என்னை பெரிதும் கவர்ந்தன. நீங்கள் படம் பாருங்கள், தொடக்கத்தில் வரும் அந்த முத்துதானா கடைசியில் வரும் அந்த முத்து என. அந்த அர்ப்பணிப்புக்கு ஏற்பு அமைந்தே ஆகவேண்டும் என்ற பதற்றம் வந்தது.

’சார் உங்லி கேங்’ என புகழ்பெற்ற ஒரு கிரிமினல் கூட்டத்தின் கதை இது. ‘நான்குவிரல் கூட்டம்’. இரண்டாம்பகுதியின் கதை அதுதான். ஒவ்வொரு படுகொலைக்குப்பின்பும் நான்குவிரலால் ரத்தத்தை தொட்டு சுவரில் தீற்றிவிட்டுச் செல்வார்கள். இந்தப்படத்திலேயே கடைசியில் பார்க்கலாம். ஆனால் படத்தின் (ரஹ்மான் இசை இல்லாத) வடிவை கடைசியாகப் பார்க்கும்போது முத்துவை நினைத்து ஒரு பெருமூச்சுதான் வந்தது.

குறிப்பாக படத்தின் மௌனமான கிளைமாக்ஸை. (கடைசிச் சவரக்கடைக் காட்சி) ஓரிரு நிமிடம் கூட நீளாத அதுதான் உண்மையில் இந்த சினிமாவில் முதலில் எழுதப்பட்ட காட்சி. அதிலிருந்து பின்னகர்ந்து வந்துதான் முழுத் திரைக்கதையும் எழுதப்பட்டது. அந்தக் காட்சியில் முத்துவை எழுதும்போது அவன் ஒரு வீரன் என நினைத்து எழுதினேன். சிம்புவின் நடிப்பு உண்மையில் முத்து வென்றானா, அல்லது அது அவனுடைய நரகமா என்ற எண்ணத்தை உருவாக்கி உள்ளத்தை அழுத்தியது.

எப்படியோ உள்ளே சென்றுவிட்டேன். படம் எடுக்கத் தொடங்கும்போது முழுக்கமுழுக்க யதார்த்தமான, மிகையே இல்லாத உலகமாக இருக்கவேண்டும் என நினைத்தோம். நடுவே மீண்டும் கோவிட். ஓராண்டு தாமதம். இந்த இடைவெளியில் நான்கு பெரும்படங்கள் வந்தன. ஆர்.ஆர்.ஆர், கே.ஜி.எஃப், புஷ்பா, விக்ரம். அவை கதைசொல்லலில் ஒரு பாணியை நிறுவின. மிகமிக வேகமாக மின்னிச்செல்லும் காட்சிகள். எங்கும் எதையும் நிறுவாமல் ஓடிக்கொண்டே இருக்கும் நிகழ்ச்சிகள், மிகப்பயங்கரமான சண்டைக்காட்சிகள்.

அதெல்லாம் இந்தப்படத்தில் இல்லை. அதை எதிர்பார்த்து வரும் ரசிகர்கள் ஏமாற்றம் அடையலாம். ஆகவே வேண்டுமென்றே இந்தப்படத்தை கொஞ்சம் மெதுவாகச் செல்லும் படம் என்றே சொல்லி நிறுவினோம். உண்மையில் இது வேகமாக செல்லும் திரைக்கதை கொண்ட படம். எந்த இடத்திலும் தொய்வு இருக்காது. ஆனால் விக்ரம் பாணி அல்ல. கண்மண் தெரியாத பரபரப்பு இருக்காது, சீரான ஒற்றை வேகம் இருக்கும். அதற்கும் நான் காணொளிகளில் வந்து சொல்லவேண்டியிருந்தது, ஏனென்றால் நான் அதை எழுதியவன்.

இன்று படத்தைப் பார்க்கையில் இது பெண்களுக்கான படம் என்றும் படுகிறது. சிம்பு மிக அற்புதமாக நடித்திருக்கிறார். இனி அதைப்பற்றிப் பேசவேண்டியதில்லை. ஆனால் இரண்டு காட்சிகளில் சித்தி இட்னானி மிகமிக நெருக்கமான பெண்ணாக வந்து நம்மருகே அமர்ந்திருக்கிறார். அத்தனை இயல்பான நடிப்பு.

இப்போது இந்தப்படம் ஒரு ‘பிளாக்பஸ்டர்’ என்று ஆகிவிட்டது. மிகப்பெரிய தொடக்கத்திறப்பு கொண்ட இந்தவகைப் படங்கள் நல்ல எதிர்வினைகளையும் பெற்றுவிட்டால் நேரடியாக நூறுகோடி கிளப் நோக்கித்தான் செல்லும். ஆகவே மானசீகமாக இதிலிருந்து விலகிக் கொள்கிறேன். இனி இது என்னுடையதல்ல. இது சிம்பு – கௌதம் படம்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஜெ

பிகு: பரப்புரை சரியான சொல் அல்ல. இதில் உரை மட்டும் இல்லை. காணொளிகள் எல்லாமே உள்ளன.

முந்தைய கட்டுரைஐந்து நெருப்பு[ சிறுகதை]
அடுத்த கட்டுரைகி.ரா.முழுத்தொகுதிகளும், முன்விலைத்திட்டம்