அர்ஜுனனும் கர்ணனும்,கடிதங்கள்

அர்ஜுனனும் கர்ணனும்

அன்புள்ள ஜெயமோகன்,

நண்பர் கிருஷ்ணமூர்த்திக்கு நீங்கள் அளித்துள்ள பதில் அருமை.‌ உங்கள் பதிலை கிருஷ்ணமூர்த்திக்கு கிருஷ்ணன் உங்கள் வடிவில் வந்து உபதேசித்ததாகவே எடுத்துக் கொள்ளலாம்‌. கிருஷ்ணமூர்த்திக்கு மட்டுமல்ல,  மற்ற அர்ஜுனர்களுக்கும் அர்ஜுனன் ஆக முயற்சிப்போருக்கும்‌ கூட.

அன்புடன்,

எஸ் கணேஷ்

மும்பை.

***

அன்புள்ள ஜெ

அர்ஜுனனும் கர்ணனும் ஒரு சுருக்கமான ஆனால் செறிவான பதில். அர்ஜுனன் – கர்ணன் என்னும் அந்த பைனரி நம் புராணத்தில் எப்போதும் உண்டு. அர்ஜுனனை விட கர்ணன் மேல் எல்லாருக்கும் ஒரு பாசம்.அர்ஜுனனை கதைநாயகனாக ஆக்கி சினிமா நாவல்கள் அதிகம் இல்லை. ஆனால் கர்ணனை பற்றி ஏராளம். தெருக்கூத்திலேயே கர்ணமோட்சம்தான் பிடித்தமான கதை.

ஆனால் எந்த அளவுக்கு கர்ணன் டிரமாட்டிக்கான கதாபாத்திரமோ அந்த அளவுக்கு அவன் ஒரு நெகெட்டிவ் கதபாத்திரமும்கூட. தெற்கே நெல்லைப்பக்கம் கோயில்களில் அர்ஜுனன் கர்ணன் சிலைகள் இருக்கும். அர்ஜுனன் யோகி போல இருப்பான். கர்ணன் கையில் பாம்பு இருக்கும்.

அந்தப் பாம்பு கர்ணனிடமிருக்கும் நஞ்சு. அது இருக்கும்வரை அவனுக்கு ஞானம் இல்லை. கீதை அவனுக்குப்புரியாது.

ராதே ஷியாம்

***

அன்புள்ள ஜெ

இமைக்கணத்தில் கர்ணனுக்கும் கீதை சொல்லப்படுகிறது. அதன் ஒரு பகுதி மட்டும். அவனுக்கு அவ்வளவே போதும். முழு கீதையும் கேட்கத் தகுதியானவன் யோகியான அர்ஜுனன் மட்டும்தான்

சிவா ராஜ்குமார்

முந்தைய கட்டுரைதற்கல்வியும் தத்துவமும்- 4
அடுத்த கட்டுரைவெள்ளை யானை, கடிதம்