ஒரே ஒரு கேள்வி.
சாரு நிவேதிதாவுக்கு நீங்கள் விஷ்ணுபுரம் விருது அளிக்க போகன் சங்கர் ஒரு காரணமா?
பெயரிலி
அன்புள்ள பெயரிலி,
நான் பிறகருத்துக்களால் செல்வாக்கடையாமல் இருக்கும் பாறை அல்ல. என் பல கருத்துக்களை லக்ஷ்மி மணிவண்ணன், போகன், அனீஷ் கிருஷ்ணன் நாயர், ஈரோடு கிருஷ்ணன், கடலூர் சீனு என பலர் பாதித்திருக்கிறார்கள். என் மகன் அஜிதன் என்னை பெருமளவுக்கு இன்று இட்டுச்செல்லும் விசை.
இம்முறை போகன் மற்றும் நாஞ்சில்நாடன்.
அதனாலென்ன?
ஜெ
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விருதுகளின் criterion என்ன? ஒரு பேச்சுக்காகக் கேட்கிறேன்.
பெயரிலி
அன்புள்ள பெயரிலி,
பலமுறை சொன்னதுதான். இலக்கிய அளவுகோல். நவீனத்தமிழிலக்கியத்தின் ஏதேனும் ஓர் எழுத்துமுறையில் வாழ்நாள் பங்களிப்பு. அது ஜெயமோகன் ஏற்றுக்கொள்ளும், அல்லது ஜெயமோகன் எழுதும் வகை எழுத்தாக இருக்கவேண்டியதில்லை. ஜெயமோகன் வகை எழுத்தை வலியுறுத்தவோ வளர்க்கவோ இந்த விருது உருவாக்கப்படவில்லை.
அந்த அளவுகோல் ஜெயமோகனோ அவர் நண்பர்களோ உருவாக்குவது அல்ல. ஏற்கனவே தமிழ் நவீன இலக்கியச் சூழலில் வாசகர் நடுவே உருவாகி திரண்டுள்ள அளவுகோலாகவே இருக்கும். ஆகவே பெரும்பாலும் விருதுபெறுபவர்களின் பட்டியல் இந்த விருது தொடங்குவதற்கு முன்னரே முடிவாகிவிட்ட ஒன்று.
இரண்டு அளவுகோல்கள் கூடுதலாக உண்டு. ஒன்று, அவர்கள் சாகித்ய அக்காதமி போன்ற புகழ்பெற்ற விருதுகளை ஏற்கனவே பெற்றிருக்கலாகாது. இரண்டு, வயது.
வயது வரிசை சிலசமயம் மீறப்படும். அதற்கு சில தவிர்க்கமுடியாத காரணங்கள் இருக்கும்.
ஜெ