சுவாரஸியம் என்பது என்ன ? அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள்

என் அலுவலகத்தில் அ.முத்துலிங்கத்தின் இந்தக் கட்டுரைத்தொகுதியை மேஜைமேல் வைத்திருந்தேன். ஒரு சக ஊழியர் பார்த்துவிட்டு சும்மா மேஜைமேல் வைத்தே புரட்டிப்பார்த்தார். ஏதோ சினிமாபற்றிய கட்டுரை அவருக்கு ஆர்வமூட்ட அதை படித்துப் பார்த்தவர் அப்படியே படிக்க ஆரம்பித்துவிட்டார்.

”சார் படிச்சுட்டு குடுத்திடறேனே” என்றார்.

எனக்கு பயம். நான் அதைப்பற்றி படித்துவிட்டு பேசவேண்டியிருக்கிறது. நண்பருக்கு எதையுமே படிக்கும் பழக்கம் கிடையாது.

ஏற்கனவே ஒருமுறை இந்த நண்பர் என் மேஜைமேல் இருந்த ஒரு நூலை எடுத்துப் பார்த்துவிட்டு ”இது எப்டி சார் வாராவாரம் வருமா?” என்று கேட்டவர்.

”இல்லீங்க, இது ஒண்ணுதான் வரும்” என்றேன், எப்படி விளக்குவது என்று தெரியாமல்.

”மாசாமாசமா சார்?”.

நான் பொறுமை காத்து ”சார் இது இப்டி ஒண்ணுதான் சார் …தொடர்ச்சியா வராது”என்றேன்.

”நிறுத்திட்டானா?”என்றபடி அதைப்புரட்டிப்படித்து ”எண்பது ரூபாயா? அச்சடிச்ச தாளுக்கா? என்னசார் அநியாயமா இருக்கு!” என்றார்.

”ஏன் சார்?” என்று பரிதாபமாகக் கேட்டேன்

”சார் விகடனேகூட பத்து ரூபாதானே? எம்பது ரூபா போட்டா எவன் வாங்குவான்? அதான் நின்னிருச்சு” என்றார்.

நண்பர் நன்றாக படித்து நல்ல பதவியில் இருப்பவர். ஆனால் அவர் பாடநூல்கள், இதழ்கள் தவிர நூல்கள் என ஒரு விஷயமும் உண்டு என்பதையே அறிந்திருக்கவில்லை. அப்படிப்பட்ட நண்பர் புத்தகத்தை இரவல் கேட்கிறார். ஆனால் அவர் ஒன்றை நினைத்தால் நடத்தாமல் விடமாட்டார். என்னால் எதையும் எவருக்கும் மறுக்கவும் முடியாது. கொண்டுபோய்விட்டார்.

நான்காம் நாள் திருப்பிக் கொண்டுவந்தார். சரிதான், இரும்புக்கடலை கடித்து பல்வீக்கம் என நான் நினைத்தேன்.”படிச்சீகளா சார்?”என்றேன்.

”படிச்சிட்டேன் சார். சூப்பர். சிரிச்சு சிரிச்சு மண்டைக்குள்ள ஒருமாதிரி டிரா·பிக் ஜாம் ஆயிட்டேன் சார்… ”என்றபடி சிரிக்க ஆரம்பித்தார். ”யார் சார் இவரு?” என்றார்.

”இலங்கைக்காரர் சார்”

நண்பரால் நம்ப முடியவில்லை”அப்டியா சார்? அவங்களுக்கு அங்க யுத்தம் வெட்டு குத்துன்னு ஆயிரம் பிரச்சினைகள். எப்டி சார் சிரிப்பா எழுதறாங்க?”.

நான் ”கஷ்டம் இருந்தாத்தானே சார் நல்லா சிரிப்பு வருது?” என்றேன்.

”ஆமா சார். எங்கம்மா சொல்லுவா, எங்கப்பா செத்துப்போய் பிள்ளைகளோட தனியா நின்னப்போ அழுது அழுது தீந்துபோய் ஒருநாள் ராத்திரி சிரிச்சுட்டாளாம். அன்னையோட கஷ்டம் போச்சுடான்னு சொல்வாள்.வாஸ்தவம்”என்றார் ”என்ன சார் வேலபார்த்தார்?”

”இவரு பெரிய அதிகாரியா வேல பார்த்தார் சார்…”

”சும்மாருங்க சார்,வெளையாடாதீங்க…”

”இல்ல சார் நிஜம்மாவே பெரிய அதிகாரிதான்”

”சார் எனக்கு முப்பதுவருச சர்வீஸ். நான் இன்னை தேதிவரை சிரிக்கிற மூஞ்சியோட ஒரு அதிகாரிய பாத்தது இல்ல…நிஜம்மாவே அதிகாரியா, இல்ல அதிகாரி மா….திரியா?”

நான் யோசித்து ”ஐநாவிலே இருந்தார்…” என்றேன்.

”அது சரி, ஐநாவே நம்ம சுப்பிரமணியம் சாமி மாதிரி ஒரு ஜோக்குதான் சார்”. என்றபின் ”சார் நான் இதைப் படிச்சிட்டு குடுக்கறேன்”என்று நான் அதிர்ச்சியில் வாய் திறக்கும் முன் கோணங்கியின் ‘பொம்மைகள் உடைபடும் நகர’த்துடன் நடந்து போனார்

நண்பர் மிக பரபரப்பான ஆள். விவசாயம் உண்டு. ஆகவே இரவு பதினொரு மணிக்குமேல் பன்னிரண்டுமணிவரைத்தான் படிக்க நேரம் கிடைக்கும். அந்நேரத்தில் தூங்காமல் உட்கார்ந்து படித்தேன் என்றார். அதன் பின் என் மனைவியும் அதேபோல நள்ளிரவில் விளக்கைப் போட்டுக்கொண்டு இதைப்படிப்பதைக் கண்டேன். இவ்வளவுக்கும் இது ஒரு கதைத்தொகுப்பு அல்ல. இது கட்டுரைத்தொகுப்பு.

* ஒரு உயர் அதிகாரி. சிறு வயதில் மாணவராக இருந்த போது கைலாசபதியால் தூண்டுதல் அடையப்பெற்று அக்கா என்று ஒரு சிறுகதைத்தொகுதியை வெளியிட்டார். அதன் பெரிய வேலைக்கு போய் விட்டார். ஈழ இனப்பிரச்சினை காரணமாக வெளியேறி சியரா லியோன் சென்றார். அங்கிருந்து ஐநா அதிகாரியாக ஆப்ரிக்கா மேற்காசியா நாடுகளில் வேலைக்குச் சென்றார். அந்நாட்களில் பல வருட உழைப்பின் விளைவாக கணிப்பொறி மென்பொருளை நிர்வாக இயலுக்கு பயன்படுத்துவது பற்றி தடிமனான மூன்று பகுதிகள் கோண்ட ஒரு நூலை எழுதினார். அது புகழ் பெற்ற மேலைநாட்டு பதிப்பகம் ஒன்றால் வெளியிடப்பட்டது. நூல் வெளிவந்த சில மாதங்களில் அந்த மென்பொருளே இல்லாமலாயிற்று

மனம் சோர்ந்திருந்த நாளில் இலங்கை சென்றபோது அங்கே ஒரு இலக்கியக்கூட்டத்தில் ஒருவர் அக்கா தொகுதியின் ஒரு கதையைக் குறிப்பிடுவதைக் கேட்டார். முப்பது வருடமாகியும் இலக்கியம் காலாவதியாகவில்லை! நான் கூட அக்கா தொகுதி பற்றி அப்போது எழுதியிருக்கிறேன்.

அதன்பின்னர்தான் * இலக்கியத்துக்கு வந்தார். இனி தன் வாழ்நாள் முழுக்க இலக்கியத்துக்கே என எண்ணும் * இலக்கிய சர்ச்சைகளுக்குக் கூட ஒதுக்க நேரம் இல்லை என்று எண்ணுபவர். இன்று தமிழில் மிக விரும்பி படிக்கப்படும் முக்கியமான எழுத்தாளர். இத்தனை நாள் வரலாற்றில் எந்த ஈழ எழுத்தாளரும் தமிழ்நாட்டில் இத்தகைய வரவேற்பையும் அங்கீகாரத்தையும் பெற்றதில்லை

தமிழில் எழுதிய எல்லாவற்றையுமே எவரையும் படிக்கவைக்கும் திறன் கொண்ட மூன்று எழுத்தாளர்கள் மட்டுமே உள்ளனர். கல்கி அவர்களில் காலத்தால் முன்னோடி. சுஜாதா அடுத்தவர். அ.முத்துலிங்கம் தொடர்பவர். ஆனால் அ.முத்துலிங்கம் வணிக எழுத்தாளர் அல்ல. எழுத்தை ஒவ்வொரு கணத்திலும் தீவிரமாகவே அணுகிய இலக்கியவாதி. அவ்வகையில் அவரை நாம் புதுமைப்பித்தனின் மரபுவரிசையைச் சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்தவேண்டும். கி.ராஜநாராயணன்,நாஞ்சில்நாடன் வகையைச் சேர்ந்தவர் என்று சொல்லவேண்டும்.

ஒட்டுமொத்தமாக இவர்களை சுவாரஸியமான எழுத்தாளர்கள் என்று சொல்கிறோம். நீண்டநாளாக தமிழ்ச் சிற்றிதழ் உலகில் சுவாரஸியம் என்பது இலக்கியத்துக்கு எதிரான ஒன்று என்ற எண்ணம் இருந்தது. இலக்கியம் என்றால் சுவாரஸியமே இல்லாமல் வரண்டுதான் இருக்கும் என்ற மனப்பிம்பம். தமிழ் சிற்றிதழ்களுக்கு அழகியல் ரீதியாக இரண்டு முகங்கள்தான் இருந்தன. ஒன்று இயல்புவாதம்[ நாச்சுரலிசம்] இன்னொன்று அதிலிருந்து சற்றே முன்னகர்ந்த நவீனத்துவம்.

அன்று ஓங்கி நம் பண்பாட்டையே நிறைத்திருந்த வணிக இலக்கியத்துக்கு எதிரான ஒரு பண்பாட்டு சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது தமிழ் சிற்றிதழ் உலகம் என்பதைக் காணலாம். ஒருபக்கம் அகிலன்,நா.பார்த்த சாரதி, சாண்டில்யன் என பெரும் பட்டியல். லட்சக்கணக்காக விற்கும் இதழ்கள். லட்சக்கணக்கான வாசகர்வட்டம். பணம் புகழ் . அதற்கு எதிராக இருநூறு பிரதிகள் அச்சிடப்படும் சிற்றிதழ்களில் தமிழ் நவீன இலக்கியம் உருவானது.

அந்த வணிக எழுத்து சுவாரசியத்தையே அடிப்படையாகக் கொண்டது. மிதமிஞ்சிய கற்பனாவாதம் மூலமும் செயற்கையான உத்திகள் மூலமும் சுவாரஸியத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது அது. ஆகவே நவீன இலக்கியம் சுவாரஸியத்துக்கு எதிராக ஆகியது. வாழ்க்கை அப்படி கனவுக்கொந்தளிப்பாகவும் திடுக்கிடும் திருப்பங்களும் மர்மங்களும் நிறைந்ததாகவும் இல்லை என்ற எண்ணம் இலக்கியச் சூழலில் வலுவாக உருவாயிற்று.

வாழ்க்கை சலிப்பூட்டுவது. சாதாரணமான விஷயங்களால் ஆனது. அதை அப்படியே சொல்ல முயல்வதுதான் இலக்கியம் என்று எண்ணினார்கள். இந்த நோக்கே இயல்புவாதத்தை உருவாக்கியது. நீல பத்மநாபன், ஆ.மாதவன் ஆ.மாதவன் போன்றவர்களை இதற்கு சிறந்த முன்னுதாரணமாகச் சொல்லலாம். இங்கே நவீனத்துவம் உருவானபோது இயல்புவாதத்தின் நீட்சியாக அது இருந்தது. இயல்பான அன்றாடவாழ்க்கையின் தளத்தில் வைத்து வாழ்க்கையின் சாரமின்மையையும் மனிதவாழ்க்கையின் தனிமையையும் அது பேசியது.இப்போக்கின் முன்னுதாரணமான படைப்பாளிகள் நம்மிடையே உண்டு அசோகமித்திரன், சா.கந்தசாமி போன்றவர்கள்.

நவீனத்துவம் பின்னகர்ந்த காலகட்டத்தில் இலக்கியம் தன்னை உருமாற்றிக் கொண்டபோது மீண்டும் கற்பனைவீச்சுக்கும், வாசிப்புச் சுவாரஸியத்துக்கும் முன்னுரிமை அளிக்க ஆரம்பித்தது. இறுக்கமான வடிவமுள்ள படைப்புக்குப் பதிலாக நெகிழ்வான ஆனால் சிக்கலான அமைப்புள்ள படைப்புகள் வெளிவந்தன. அ.முத்துலிங்கம் அந்த மாற்றத்தை முன்னெடுத்த படைப்பாளி.

ஓர் எழுத்தின் ஆழம் என்பது அதன் கதாபாத்திரங்கள், நிகழ்வுகள், கருத்துச் சரடு ஆகியவற்றில் உருவாகும் நுட்பமான மோதலின் விளைவாக உருவாவது. ஆழம் என்பது எப்போதும் ஒரு முரணியக்கமாகவே உள்ளது. ஆழத்தை நிராகரிக்கும் இலக்கியப் படைப்பு இருக்க முடியாது. ஆழம் என்று ஏதுமில்லை, மேல்தளம் மட்டுமே உள்ளது என்று வாதிடும் பின்நவீன இலக்கியப்படைப்புகளுக்கும் இது பொருந்தும். ஒரு எழுத்தை இலக்கியமாக்குவது அதன் ஆழமேயாகும்.

ஆனால் இன்றைய ‘நவீனத்துவத்துக்கு பிறகான எழுத்து’ என்பது எப்படியோ சுவாரஸியத்தை கட்டாயமாக்குகிறது. பிடிவாதமாக அதற்கு எதிரான நிலை எடுக்கும் சில படைப்புகள் உண்டு. அவை தங்களை காவியமாகவோ ஆய்வாகவோ ஆவணத்தொகையாகவோ உருவகம்செய்துகொள்ளும் படைப்புகள். ஆனால் இன்றைய சூழல் என்பது சுவாரஸியம் தேவை என்று வலியுறுத்துகிறது.

முதல் காரணம் இன்றைய எழுத்துப்பெருக்கம். நவீனத்துவம் ஆண்ட காலத்தில் தமிழில் வருடத்துக்கு நாநூறு நூல்கள் வெளிவந்தன. இப்போது பன்னிரண்டாயிரம் நூல்கள் வெளிவருகின்றன. இதைத்தவிர இணையத்தில் வெளியாகும் ஆயிரக்கணக்கான பக்கங்கள். இந்த பெரும்பரப்பில் வாசகனை தன்னிடம் அழைக்கும் பொறுப்பு எழுத்துக்கு வந்துவிடுகிறது. தன்னை கவனிக்கச் செய்யவும் வாசிக்க வைக்கவும் அது முயல்கிறது. ஆகவே சுவாரஸியமான மேல்தளம் தேவையாகிறது. ஆய்வுக்கட்டுரைகள் செய்திக்கட்டுரைகள் எல்லாமே சுவாரஸியமாக எழுதப்பட்டாக வேண்டுமென்ற நிலை படிப்படியாக உலகமெங்கும் உருவாகி வருகிறது.

இந்த இயல்பை இன்றைய எழுத்துக்களில் நாம் சாதாரணமாகக் காணலாம். எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் போன்றவர்களின் எழுத்து இந்த சுவாரஸிய அம்சத்துக்கு முக்கியத்துவமளிப்பதைக் காணலாம்.

சுவாரஸியம் என்பது என்ன? எப்படி உருவாகிறது அது? எதற்காக நாம் சிரிக்கிறோம்?திரைப்பட நண்பர் ஒருவர் சொன்னார், நமது கதாநாயக நடிகர்களை தெலுங்கிலும் கன்னடத்திலும் கொண்டு செல்ல முடியும். நகைச்சுவை நடிகர்களை தமிழை விட்டு வெளியே எடுக்க முடியாது. காரணம் அவர்கள் மண்ணுடன் கலந்தவர்கள் என.

சுவாரஸியம் என்பது ஒரு பண்பாட்டுடன் இரண்டறக் கலந்துள்ளது. ஒரு பண்பாட்டின் உணர்ச்சிகரமான ஈடுபாடுகள், வெறுப்புகள், இடக்கரடக்கல்கள் ஆகியவற்றை அறிந்த ஒருவரால்தான் அப்பண்பாட்டின் நகைச்சுவையை ரசிக்க முடியும். நகைச்சுவை என்பது இப்படிப்பட்ட ‘பண்பாட்டு ஒழுங்குமுறைகள்’ மூலம் அன்றாட வாழ்க்கையில் உருவாகும் அபத்தத்தை சுட்டிக்காட்டுவதன் மூலமே நம்மைச் சிரிக்க வைக்கிறது.

இதற்குச் சிறந்த உதாரணமாக இந்நூலில் உள்ள அக்காவின் சங்கீத சி¨க்ஷ என்ற கட்டுரையைச் சுட்டிக்காட்டலாம். கட்டுப்பெட்டியான யாழ்ப்பாணத்து வேளாளச் சூழலை நம் மனத்தில் உருவகித்துக் கொள்ளும்போதே ”தெருவில் வாரானோ என்னை திரும்பிப்பாரானோ” என்று ஒரு கன்னிப்பெண் பாடி இசை பயிலும்போது ஏற்படும் அபத்தம் உறைக்கிறது.

கல்கி ஒரு குட்டிக்கதையை ஒரு இடத்தில் சொல்கிறார். நான்குநேரி ஜீயருக்கு திருநெல்வேலியில் ஒரு கிளைமடம். அங்கே இருந்த தாத்தாச்சாரிய சாமிகள் குளத்தில் விழுந்து கால் ஒடிந்துவிட்டது. குப்பனை அழைக்கிறார்கள். ”டேய், நீ என்ன பண்றே , ஓடி நான்குநேரிக்குப் போய் ஜீயர் சன்னிதானத்தைப் பார்த்து இப்டிச் சொல்றே. எப்டிச் சொல்லுவே? ”ஸ்ரீஸ்ரீஸ்ரீ உபய வேதாந்த மகா கனம் ராமானுஜதாச அண்ணா தாத்தாச்சாரியார் ஸ்வாமிகள் ஸ்ரீ புஷ்கரணியிலே திருப்பாதம் வழுக்கி விழுந்து திருக்கால் ஒடிந்து ஸ்ரீமடத்திலே திருப்பள்ளிக் கொண்டிருக்கிறார்’ அப்டீன்னு சொல்லணம் புரியறதோ?”

சரி என்று குப்பன் ஓடிப்போய் நான்குநேரி மடத்தில் ஜீயரைக் கண்டு சுருக்கமாகச் சொன்னான் ”மொட்டைத்தாதன் குட்டையிலே விழுந்தான்”

இந்த நகைச்சுவையில் நாம் சிரிப்பது அந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீயில் உள்ள நீண்டகால பண்பாடு ஒன்றின் உள்ளீடற்ற படோடோபத்தைப் பார்த்துதான். நகைச்சுவை என்பது எப்போதும் நுண்ணிய பண்பாட்டு விமரிசனமாகவே அமைகிறது. தன் எழுத்தின் முதல்தளத்தில் மென்மையாக இந்த விமரிசனத்தைப் படரவிட்டிருப்பதனாலேயே அ.முத்துலிங்கத்தின் எல்லா எழுத்தும் நம்மால் சிறு புன்முறுவலுடன் படிக்கப்படுகிறது. அக்காவும் அவரும் சேர்ந்தே படிக்க ஆரம்பித்தவர்கள். ‘அக்கா மு.வரதராசனார், நா.பார்த்த சாரதி என்று படிப்படியாக முன்னேறி இப்போது ரமணி சந்திரனை எட்டியிருக்கிறாள்’ என்ற வரி மூலம் அ.முத்துலிங்கம் முன்வைப்பது மிக ஆழமான ஒரு பண்பாட்டு விமரிசனத்தை.

ஆனால் அ.முத்துலிங்கம் ஒருபோதும் நக்கல் செய்வதோ மட்டம் தட்டுவதோ இல்லை. பண்பாட்டின் பலதளங்கள் பல முகங்களைப்பற்றிய புரிதல் கொண்ட ஒருவரின் சமநிலை எப்போதும் அவரிடம் உள்ளது. ஒவ்வாத விஷயங்களை நோக்கி ஒரு சிறு புன்னகையே அவரது எதிர்வினையாக இருக்கிறது.

சுவாரஸியத்தை உருவாக்கும் இரண்டாவது அம்சம் நடையழகு. நடை என்று நாம் சொல்லும்போது எப்போதும் மொழியையே உத்தேசிக்கிறோம். ஆனால் மொழித்தேர்ச்சிக்கும் நடைக்கும் தொடர்பே இல்லை. நல்லநடை என்பது முழுக்க முழுக்க கவனிப்புத்திறன் சார்ந்தது. வெளியுலகையும் அக உலகையும் கூர்ந்து பார்ப்பதும் அவற்றை துல்லியமாகச் சொல்லி விட முயல்வதுமே நல்ல நடையாக ஆகிறது. நல்ல நடை என்று சொல்லப்படும் படைப்புகளை கூர்ந்து ஆராயுங்கள் அவற்றில் மொழியாலான சித்திரங்கள் நிறைந்திருக்கும்.

அ.முத்துலிங்கம் ஒரு கதையில் கனகி என்ற பெண்ணைப்பற்றிச் சொல்கிறார். அவள் வாய் மூடியிருக்கும்போதும் வட்டமாக இருக்கும். அத்துடன் ஓர் உவமை. மீனின் திறந்த வாய் போல.

இத்தகைய வர்ணனை என்பது குழந்தைத்தனம் மிக்க ஒரு கவனிப்பினூடாக உருவாகக் கூடியது என்பதை கவனிக்கலாம். உலகத்தின் சிறந்த இலக்கிய நடை எல்லாமே உள்ளே ஒரு குழந்தைப்பார்வையை கொண்டிருக்கிறது. உலகம் நமக்குப் பழகிவிட்டிருக்கிறது. தொடர்ந்து பழகி வருகிறது. அதன் புதுமையால் நாம் உலகை அடையாளப்படுத்துவதில்லை அதன் பழகிய தன்மையால் அடையாளப்படுத்துகிறோம். குழந்தைகள் உலகை எப்போதும் புதிதாகப் பார்க்கின்றன. வேறுபாடுகளால் அடையாளப்படுத்துகின்றன. இலக்கியமும் அதையே செய்கிறது.

அப்படி அவதானிப்பைச் சொல்லும் போது எழுத்தாளனின் மன இயல்பும் வந்து கலந்துகொள்கையிலேயே நடை முழுமைபெறுகிறது. ஆப்கானிஸ்தானில் கல்விமான்களும் சாதாரணர்களும் ஒன்றாக ஒரே ரொட்டியை பிய்த்து தின்பார்கள். கல்விமான்கள் ஏழாம் வாய்ப்பாடு தெரிந்தவர்கள். மற்றவர்கள் தெரியாதவர்கள் என்று ஒரு வரி வருகிறது. நட்பார்த்த ஒரு கிண்டல். ஒரு புன்முறுவல். இவை இரண்டும் கலந்ததே அ.முத்துலிங்கத்தின் நடை.

இந்த நூலின் முக்கியமான சிறப்பம்சம் ஒன்று உண்டு, இதுவரை சொன்னவற்றின் நீட்சியாகவே அதைக் கொள்ளவேண்டும். இந்த நூல் அ.முத்துலிங்கத்தின் பிரமிக்கத்தக்க பலதுறை அலைதலுக்கான சான்று. இதில் திரைப்பட விமரிசனங்கள்,உலக நவீன இலக்கிய நிகழ்வுகள், நூல் விமரிசனங்கள், மனிதர்களைப்பற்றிய குணச்சித்திரங்கள், நினைவோட்டங்கள், பல்வேறு அன்றாடவாழ்க்கைக் குறிப்புகள் என பல விஷயங்கள் உள்ளன. ஒரு சமகால எழுத்தாளனின் அக்கறைகள் எந்த அளவுக்கு விரிய வேண்டுமென்பதற்கான சான்றுகளாக உள்ளன இக்கட்டுரைகள். கணிப்பொறி முதல் சமையல் வரை இவற்றின் கைகள் நீண்டு தொடுகின்றன.

இந்நூலுடன் ஒப்பிடத்தக்க இன்னொரு நூல் சுஜாதா எழுதி கணையாழியின் கடைசிப்பக்கமாக வெளிவந்துள்ள ‘கணையாழியின் கடைசிப்பக்கங்கள்’. சுஜாதாவின் அக்கறைகளும் ஆண்டாள் முதல் அணுகுண்டு வரை நீள்கின்றன. ஓயாது தன் சமகாலத்தை எதிர்கொண்டபடியே இருப்பதன் பதிவுகள் இவை. அந்த கனத்த நூலையும் நாம் மிகச் சுவாரஸியமாக புன்னகையுடன் வாசித்துச் செல்ல முடியும்.

ஆனால் ஏற்கனவே சொன்னதுபோல அ.முத்துலிங்கத்தின் ரசனையும் தெரிவும் ஆழமானவையும் கறாரானவையும் ஆகும். தீபா மேத்தாவின் வாட்டர் படத்தையோ அல்லது கிரண் தேசாயின் நாவலையோ அவர் மதிப்பிடும்போது வெளிப்படும் கறார்தன்மை தமிழின் மிக ஆக்ரோஷமான விமரிசகர்களுக்கு நிகரானது, ஆனால் மென்மையான நகைச்சுவையுடன் சொல்லப்படுகிறது, தீபா மேத்தாவின் காலைத்தொட்டு சீமா பிஸ்வாஸ் கும்பிடும்போது ”என்ன தொலைத்தார்கள்?”என்று கேட்கும் கனடாக்கிழவியின் சித்திரம் ‘தண்ணீரின் ஓட்டம் பலவந்தமாக திசைதிருப்பப்பட்டிருக்கிறது, தண்ணீரை தண்ணீராகவே ஓடவிட்டிருக்கவேண்டும்’ என்ற கடும் விமரிசனத்துடன் கலக்கப்பட்டிருக்கிறது.

இந்த நூல் ஒரு சமகால கலை இலக்கியப் பயணத்துக்கு நம்மை இட்டுச்செல்கிறது. வெளிநாடுகளில் மிகுந்த பயிற்சியுடன் நகைச்சுவையும் தகவல் திறனும் கலந்து பேசி கொண்டுசெல்லும் வழிகாட்டிகளைக் கண்டிருக்கிறோம். அத்தகைய ஒரு தேர்ச்சிமிக்க வழிகாட்டியாக அ.முத்துலிங்கத்தின் குரல் நம்முடன் வருகிறது.

[11-08-07 அன்று மதுரை புத்தகக் கண்காட்சியில் உயிர்மை வெளியீடான அ.முத்துலிங்கத்தின் ‘பூமியின் பாதி வயது’ என்ற நூலை வெளியிட்டு ஆற்றிய உரை]

முந்தைய கட்டுரைசில வரலாற்று நூல்கள் 4 – தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன்
அடுத்த கட்டுரைஇலக்கியக் கலைச்சொற்கள்