ஈரோடு இலக்கியச் சந்திப்பு, கடிதம்

ஆசிரியருக்கு,

ஈரோடு  விஷ்ணுபுரம் அலுவலகதில் முதல் சந்திப்பு 11.09.22 காலை 10.30 முதல் மதியம் 01.30 வரை நிகழ்ந்தேறியது. இதில் 15 பேர் பங்கேற்று அகரமுதல்வனின் “மன்னிப்பின் ஊடுருவல்”, சாருவின் 7 th seal, Ivan the terrible ஆகிய திரைப்படங்கள் மீது அவர் கட்டுரை, மோகனரங்கன் சமீபத்தில் மொழியாக்கிய “அங்கே சொற்களுக்கு அவசியமில்லை” தொகுப்பில் உள்ள நான்கு அயல் கவிதைகள் ஆகியவற்றின் மீது ஒரு உரையாடல் நிகழ்த்தினோம். கடலூர் சீனு சிறப்பு விருந்தினர்.

விவாதத்திற்கும் உரையாடலுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. உரையாடல் நம் வாசிப்பை பகிர்வது, நம் தரப்பை வலியுறுத்தாமல் இருப்பது. விவாதம் நம் தரப்பை வலியுறுத்தி வெற்றி பெறுவது. உரசாமல் போனால் உரையாடல் வெற்று அரட்டையாகிவிடும் அதனால் பலனில்லை. உரையாடலின் எதிர்ப்பு மிகுந்தால் விவாதமாகும் நட்பான சூழல் கெடும், சந்திப்புகள் தொடராது. ஆகவே உரையாடல் பெண் பார்க்கும் போது சுவற்றில் கோடிட்டு பின் மணமகனை நிறுத்தி உயரப்பொருத்தம் பார்ப்பது போல. ஒரு பெண் பார்க்கும் வைபவம் போல இந்த சந்திப்பு இருந்தது, வரதட்சணையை கறாராக பேசிக் கொண்டே ஒரு இணக்கமான சூழலில் கூடிக் கலைந்தோம்.

அகரமுதல்வனின் “மன்னிப்பின் ஊடுருவல்” சிறுகதை பற்றி பேசும் போது இதன் நேர்த்தி, ஒரு போராளியின் சமரசம், இக்கதை விவாதத்துக்கு உள்ளாக்கும் விழுமியம் ஆகியவை குறித்து பேசப்பட்டது. ஒரு ஈழ போராளிக்கு ஒரு துரோகியை சுட்டுக் கொல்ல உத்தரவு வருகிறது, அந்த துரோகி ஒரு பெண். அதை நிறைவேற்றும் முன் முள்ளிவாய்க்கால் போர் உச்சம் அடைந்து அப்போராளி சரண் அடைகிறார். சில ஆண்டுகளுக்கு பின்னர் இருவரும் தமிழகத்தில் அகதியாக சந்திக்கிறார்கள். போராளி துரோகியை மணம் முடித்து குழந்தை பெறுகிறான்.

இக்கதையில் ஒரு யாழ்ப்பாணி வருகிறான் அவன் போராளியின் மனசாட்சியை தொந்தரவு செய்கிறான், பின்னர் காணாமல் போகிறான். அவன் தோன்றும் இடமும் மறையும் இடமும் கச்சிதமாக பின்னப்பட்டு உள்ளது, அவன் ஒரு ஆள் அல்ல மனசாட்சியே தான். தலைப்பும் கதையை விரிவாக்குகிறது, மன்னிப்பு என்பது போராளி செய்யும் சமரசத்துக்கும் சேர்த்து தான், அது ஒவ்வொரு கட்டமாக பரவி இருவரையும் அணைத்துக் கொள்கிறது. இறுதியில் ஒரு புலம் பெயர் அகதி வாழ்வில் போராளியும் துரோகியும் இணைந்து வாழ்ந்து குழந்தை பெற உரிமை உண்டு என ஒரு குரலுடன் கதை முடிகிறது. இதில் உள்ள அபத்தம் ஒரு ஊமைச் சொல்லாக நம்முள் எஞ்சுகிறது.

போராளி தனிமையானவன், அவனுக்கும் பாலியல் தேவை உள்ளது. அவனுக்கு மணமுடிக்கும் வாய்ப்பு குறைவு. அவன் துரோகியின் வடிவழகில் மயங்குகிறான். போராளி ஒரு சித்தாந்த வாதி அல்ல, துரோகிக்கும் இரண்டு குழந்தைகள் உண்டு, துணையின்றி கிடக்கிறாள் போராளியை இணைத்துக் கொண்டு ஒரு பாதுகாப்பு தேடிக் கொள்கிறாள். இந்த சமரசத்தை நோக்கி வாழ்வு இருவரையும் உந்துகிறது.

துரோகி புலி இயக்கத்தில் இல்லை, வெளியில் இருந்து இயங்கும் ஒரு ஆள் காட்டி, போராளியும் போரிட்டு செத்தவன் அல்ல, சரண் அடைந்தவன் தான். இப்போது ஆணை நிறைவேற்றும் காலச் சூழல் மறைந்து விட்டது. அரசியல் ரீதியாக இப்போது அவன் அரசு பிரஜை, அகதி. ஆணை நிறைவேற்றி அறிக்கையை அனுப்ப இன்று இயக்கம் இல்லை, ஆகவே ஆணை காலாவதி ஆகிவிட்டது. ஆணையை நிறைவேற்றினால் அது அரசியல் நடவடிக்கை ஆகாது, தனிப்பட்ட வஞ்சம் தீர்த்தல் ஆகிவிடும். அதே சமயம் மன்னிக்கவும் அவனுக்கு உரிமை இல்லை. ஒரு சித்தாந்தத்துக்கும் சமூக வாழ்வுக்கும் உள்ள முரண் என்றும் உள்ளது. இந்நிலையில் நீதியின் முன் போராளியின் இச்செயல் பெறும் மதிப்பு என்ன என்கிற இக்கட்டை இக்கதை முன் வைக்கிறது. இறுதியில் இரண்டு எதிர் எதிர் குரல்கள் ஒலிக்கிறது.

சாரு கட்டுரைகளில் அவர் அடிக் கோடிடும் காட்சிகள் என்ன என்பது பற்றி பேசப்பட்டது. உதாரணமாக Seventh Seal படத்தில் மரணத்தின் புதிர் முன் வைக்கப்பட்டாலும் அவர் சுட்டிக் காட்டும் பாதிரி தங்க வளையலை திருடி மது விடுதியில் விற்க முயலும் காட்சி ஒரு விழுமிய வீட்சி. சாரு ஒரு படைப்பின் மையத்தை விட அதன் அங்கத்தில் தான் கவனம் கொள்கிறார். 7 th Seal என்கிற கிறித்துவ தொன்மம் பற்றியும் பேசப்பட்டது. சீனு தேகம் நாவலின் துவக்கம் பற்றி பேசினார். மரணம் பற்றிய உபநிஷத்து விவாதம் முடியும் இடத்தில் பன்றி வேட்டைக்கு செல்லும் காட்சி ஒரு அபாரமான துவக்க முரண் என்றார்.

இறுதி அமர்வு இந்த கவிதைகள் –

  1. ஜெரால்டு குர்ஸ் கவிதை :

நேசம்

பசும் புல்வெளி நடுவே
ஒரு மஞ்சள் நிறத்
தொலைபேசிக் கூண்டு.

நீ மட்டும்
இப்போது இங்கே
இல்லாதிருந்தால்,
உன்னை அழைத்துப்
பேசியிருப்பேன்.

  1. எஹுதா அமிக்காய் கவிதை :

ஒருவரை மறப்பது

ஒருவரை மறப்பது என்பது
புறவாசல் விளக்கை அணைக்க மறப்பது போலதான்.
மறுநாள் பகல் முழுவதும்
அது எரிந்துகொண்டிருக்கும் ஆனால், அந்த வெளிச்சம்தான்
பிறகு உங்களை நினைவுகொள்ளச் செய்கிறது.

  1. ஸ்பைக் மில்லிகன் கவிதை :

கண்ணாடியே கண்ணாடியே

பருவத்தின் மிருது கூடின
இளம்பெண் தன் மகிழ்வின் கூந்தலை வாரி முடிக்கிறாள்.
‘நீ மிகவும்
அவலட்சணமாக இருக்கிறாய்’ என்றது கண்ணாடி.
ஆனாலும்
அவளுடைய உதட்டில்
ஊசலாடிக்கொண்டிருக்கிறது
கள்ளமானதொரு புன்னகை.
‘நீ அழகானவள்’ என்று
அன்று காலையில்தான்
அந்தப் பார்வையற்ற பையன்
அவளிடம் சொல்லியிருந்தான்.

  1. அன்னா அக்மதோவா கவிதை

எப்படி விடைபெறுவது என்று நடிக்கத் தெரியவில்லை

எப்படி விடைபெறுவது என்று தெரியாமல்
நாம் தோளோடு தோள் சேர்ந்தபடி அலைகிறோம்.
அந்தி,முன்னதாகவே இருண்டுகொண்டிருந்தது. நீ எதோ யோசனையில் ஆழ்ந்திருக்க
நான் மௌனமானேன்.
நாம் தேவாலயம் ஒன்றிற்குப் போகலாம்
ஒரு திருமணம், பெயரிடுதல், நல்லடக்கம்
எதையேனும் காண்போம்.
பிறகு ஒருவரை ஒருவர்
ஏறெடுத்தும் பாராமல் அங்கிருந்து கிளம்புவோம்
என்ன குறை நமக்கு?
அல்லாது போயின்
கல்லறைத் தோட்டமொன்றிற்குச் செல்வோம்
மெதுவாக மூச்செறிந்தவாறு
இறுகி உறைந்துவிட்ட பனி மீது அமர்வோம். ஒரு சிறிய குச்சியால்
மாட மாளிகைகளை நீ வரைவாய் அங்கே நாம் எப்போதும் சேர்ந்திருப்போம்.

முதலில் கவிஞர்கள் மதாரும் மோகனரங்கனும் உரையாடினர். மதார் இந்த கவிதைகள் மூன்று முறை மொழியாக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும் இதுவே தனக்கு நெருக்கமானது எனவும் கூறினார். வடிவத்துக்கும் கவிதைக்கும் உள்ள தொடர்பு பற்றியும் அதை மொழியாக்கத்தில் தக்க வைக்கும் சிரமம் பற்றியும் கேட்டார். வடிவத்தில் மட்டும் நிற்கும் கவிதை என்றால் அது இயலாது. ஒரு கவிதை அதன் உள்ளடக்கத்துக்கு தேவையான வடிவத்தை தானே தேரும் என்றால் அது மொழியாக்கத்திலும் கைமாறும் என்றார் மோகன ரங்கன். வெவ்வேறு ஆங்கில மொழியாகத்தில் ஒரே கவிதை கிடைப்பதும் மாறுபட்ட தமிழ் மொழியாக்கத்துக்கு காரணம் என்றார்.

முதல் கவிதை பெரிய கணம் மட்டுமல்ல வாழ்க்கை இது போன்ற மெல்லிய கணங்களும் தான், ஒரு அழகிய அனுபவத்துக்கு உள்ளானவர்கள் நெருக்கமானவர்களிடம் உடனே பகிர்வார்கள், தொலைபேசியில் நேரில் உள்ளதை விட நெருக்கம் கூடுகிறது, பசுமை வெளியில் ஒரு மஞ்சள் நிறம் என்கிற சூரியோதயம் போன்ற வர்ண பேதம் தரும் அழகு ஆகியவை பேசப்பட்டது.

மூன்றாவது கவிதை தோற்றத்துக்கும் ஆளுமைக்கும் உள்ள வேறுபாடு குறித்தும், ஒரு பெண் உணரும் தோற்றக் கவலை குறித்தும், பொய்யில் நிறைவடையும் பெண் தன்மை குறித்தும், ரேமண்ட் கார்வரின் The Cathedral சிறுகதை குறித்தும் பேசப்பட்டது.

இறுதி கவிதை முதல் பகுதி விண்ணிலும் இரண்டாம் பகுதி மண்ணிலும் நிகழ்கிறது, அன்னா அக்மதோவாவின் தனி வாழ்வு இக் கவிதையை மேலும் துலக்குகிறது எனவும் பேசப்பட்டது.

கிருஷ்ணன்,
ஈரோடு.

***

முந்தைய கட்டுரைநாமக்கல் உரை -கடிதம்
அடுத்த கட்டுரைசாரு, கடிதங்கள்