‘தாமரை’ வெளியீட்டுவிழா உரை
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். தாமரை குறும்பட வெளியீட்டு விழாவில் தாங்கள் கலந்துகொண்டு, இயக்குனர் ரவிசுப்பிரமணியன் அவர்களையும், படத்தில் பங்காற்றிய அனைவரையும் பாராட்டிப் பேசியதைக் கேட்பதற்கு மகிழ்வாக இருந்தது. விழாவில் இறைவணக்கத்தின்போது எடுத்த புகைப்படத்தை சந்தோஷ் அனுப்பியிருந்தார். அரங்கு நிறைந்து நண்பர்கள் வெளியில் எல்லாம் நின்று பார்க்கும் அளவு கூட்டம் என்று மகிழ்வாகவும், அதே சமயம் நிறைய நண்பர்கள் நிகழ்வை நின்றுகொண்டு கவனிக்கவேண்டுமே என்று கவலையாகவும் இருந்தது.
தங்களின் உரையில், ரவிசுப்பிரமணியனின் ஜெயகாந்தன் பற்றிய ஆவணப்படத்தை குறிப்பிட்டுச் சொல்லியிருப்பீர்கள். அந்தப் படத்தில், ஜெயகாந்தன், ‘மகாபாரதம் தெரியாதவன் இந்தியனாகவே இருக்கமுடியாது’ என்று சொல்லும் ஒரு காட்சி வரும். அந்தக் காட்சியை வெண்முரசு ஆவணப்படத்தில், வைத்துக்கொள்ள அனுமதி கேட்டுத்தான் ரவிசுப்பிரமணியன் அவர்களை முதன் முதலில் அழைத்துப் பேசினேன். அன்று ஆரம்பித்த நட்பு, தொடர்ந்து, நல்ல சமூகப்பார்வையை முன்வைக்கும் ஒரு குறும்படத்தை எடுக்கும் பணியில் கொண்டு சேர்த்துள்ளது.
நமக்கு செயலால் கிடைக்கும் பயனைவிட, செயலில் கிடைக்கும் அனுபவம்தானே மிக முக்கியம். கற்றுக்கொள்ளவும் பெற்றுக்கொள்ளவும் நிறைய இருந்தது. நோய்த்தொற்றுக் காலத்தில் எடுக்கப்பட்ட படங்களுக்கிருந்த எல்லாச் சிக்கல்களும், தாமரை படத் தயாரிப்பின்பொழுதும் இருந்தன. நான் வீடியோவில் அழைக்கும்பொழுது, ஒளிவடிவில் வரும் ரவியும் இசையமைப்பாளர் திவாகரும் முகக்கவசத்தைக் கீழிறக்கிவிட்டுப் பேசுவார்கள். இரு நாட்களில் நடக்கவேண்டிய டப்பிங்க் விஷயங்கள் இரு வாரங்கள் ஆகும். யாருக்காவது உடல் நிலை சரியில்லாமல் போகும். எங்கள் கணினி பணிகளில் திடீரென்று பணியை விட்டுச் செல்லும் ப்ரோக்ராமர்ஸ் போல, ரவியுடன் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், முழு நீளப்படங்களில் வாய்ப்பு வந்தது என விட்டுப்போவார்கள். படத்திற்கான இசைப்பணி நடக்கும்பொழுது, ஸ்டுடியோ a/c மோட்டார் காப்பர் வயர்களை திருடிச் சென்றிருப்பார்கள். விடிகாலையில் எழுந்திருக்கும் ரவி, எனது மாலையில் சொல்வதற்கு நிறைய வைத்திருப்பார். அவரது குரலில் கேட்பதற்கு ஸ்வாரஷ்யமாக இருக்கும் விஷயங்கள், படம் நகரமாட்டேன் என்கிறதே என்ற கவலையை கொடுக்கும்.
செப் 10 அன்று, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பி.கீதா ஜீவன் அவர்கள், ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் அவர்கள், தயாரிப்பாளர் காமாக்ஷி ஸ்வாமிநாதன், நீங்கள், நண்பர்கள் எல்லாம் கலந்துகொண்டு, தாமரை, குறும்படத்தை வெளியிட, கவலைகள் மகிழ்ச்சியாக மாறிவிட்டன. இதுவரை உங்களின் உரை மட்டுமே ஸ்ருதி டி.வி-யில் காணக் கிடைக்கிறது. அமைச்சரின் கருணை உணர்வையும், பி.சி.ஸ்ரீராமை அவரின் ரசிகனாக முதல் முறையாக பார்க்கும் மகிழ்வையும் முன்வைக்கும் உங்கள் உரையில், கலை exclusive-ஆக இருந்து inclusive-ஆக கடந்த நூறு வருடங்களில் பரிணாமம் எடுத்ததை குறிப்பிட்டு தாமரை குறும்படத்தின் பங்கை நீங்கள் விளக்கியது, படத்தை பல ஆயிரக்கணக்கான ரசிகர்களிடம் எடுத்துச் செல்லும். படத்தின் பேசுபொருளின்பால் ஈர்க்கப்பட்டு, தங்களது நேரத்தையும், திறமையையும் தானம் கொடுத்த கலைஞர்களால் மட்டுமே இந்தப் படம் சாத்தியமாகியுள்ளது. தங்களின் உரையும், பாராட்டும், அவர்களது உழைப்பிற்கு கிடைத்த முதல் பரிசு.
ஆஸ்டின் சௌந்தர்