தமிழினி மாத இதழ்

பதிப்பகங்களில் தமிழினிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதன் ஆசிரியர் வசந்தகுமாரின் தனிப்பட்ட ரசனையின் தேர்வில் தேறிய படைப்புகளே அதில் நூலாக வெளிவருகின்றன. ஆகவே தமிழினி நூல்கள் மேல் வாசகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு எப்போதுமுள்ளது. தமிழில் தொடர்ச்சியாக புதிய எழுத்தாளர்களை கண்டெடுப்பதும் அறியப்படாத முக்கியமான எழுத்தாளர்களை மீட்டு முன்னிலைப்படுத்துவதும் தமிழினியின் பணிகளாக எப்போதும் இருந்து வருகின்றன

தமிழினி பதிப்பக வெளியீடாக வந்துள்ள ‘தமிழினி’ மாத இதழ் வழக்கமான தமிழ் சிற்றிதழ்களிலிருந்து முற்றாக மாறுபட்ட தடத்தில் இயங்கவிருப்பது தெரிகிறது. தமிழ் சிற்றிதழ்களில் ஐரோப்பாவை நோக்கி திருப்பி வைக்கப்பட்டவை என்ற குற்றச்சாட்டு எப்போதும் உண்டு. அவற்றில் பெரும்பகுதி ஆங்கில வழி மொழியாக்கங்களாக இருப்பது வழக்கம். ஆங்கிலம் வழியாக அறியக்கிடைக்கும் கருத்துக்கள் கோட்பாடுகள் மற்றும் நூல்கள் பற்றிய எழுத்துக்கள் மீதியை அடைத்திருக்கும். மிகச்சில பக்கங்களே அசலான எழுத்துக்கும் தமிழ் பண்பாடு, தமிழ் வாழ்க்கை சார்ந்த விஷயங்களுக்கும் அளிக்கப்பட்டிருக்கும்.

தமிழினி மாத இதழ் முழுமையாகவே தமிழ் படைப்பியக்கத்திற்கும் பண்பாட்டுச் செயல்பாடுகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இணையத்திலிருந்து எடுக்கப்பட்ட நவீன ஓவியங்கள் சிற்றிதழ்களின் அட்டைகளை நிறைப்பது வழக்கம். தமிழினி அழகிய தமிழ்ச் சிற்பமொன்றை ஜனவரி அட்டையில் தாங்கி வந்துள்ளது. ‘கலை இதழ்’ என்ற அடையாளமும் கொண்டிருக்கிறது.”தமிழின் திசைவழியை அடையாளம் காணவும் காலங்காலமாக வருகின்ற பண்பாட்டு மரபுகளை காப்பாற்றிவைக்கவும் தமிழினி தன்னை நேர்ந்துகொள்கிறது. கேளிக்கையன்று இதன் பொதுநோக்கு– சமூக நலன்’ என்று அறிவித்துக் கொண்டுள்ளது

தமிழாய்வாளரும் தனித்தமிழியக்கவாதியுமான கரு ஆறுமுகத்தமிழன் இதன் ஆசிரியராக பணியாற்றுகிறார். ‘திருமூலர் காலத்தின் குரல்’ என்ற ஆய்வுநூலின்மூலம் பரவலான வாசக ஆர்வத்தைப் பெற்றவர் இவர். குஜராத்தில் மோடியின் வெற்றியைப்பற்றிய கடுமையான கண்டனம் ஒன்றை எழுதியிருக்கிறார். பொதுவாகவே இதழெங்கும் நல்ல தமிழுக்கான ஒரு தேடல் உள்ளது

ராஜ சுந்தர ராஜன் முகவீதி என்ற தொகுப்பை எழுதிய முக்கியமான கவிஞர் அ.முத்துகிருஷ்ணன் இவரது குஜராத்- தெஹல்கா வெளிப்படுத்தல்கள் பற்றிய நூல் இந்த புத்தகக் கண்காட்சியில் பெரும் வரவேற்பைப்பெற்றது மகுடேஸ்வரன் காமக்கடும்புனல் என்ற கவிதைநூல் புகழ்பெற்றது  எம்.கோபாலகிருஷ்ணன் (மணல்கடிகை நாவலாசிரியர்) தேவதேவன், நாஞ்சில்நாடன், ஜெயமோகன் போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள்

வழக்கமாக தமிழ்ச் சிற்றிதழ்களில் காணப்படாத தமிழாய்வாளர்களின் பங்கேற்பு இவ்விதழின் சிறப்பு. அ.கா பெருமாள் மறைந்த தமிழறிஞர் ஆ.முத்துசிவன் பற்றி எழுதியிருக்கிறார்.ஸ்ரீரங்கம் மோகனரங்கன் பரதக்கலை பற்றியும் செந்தீ நடராசன் ரதி சிலை பற்றியும் எழுதியிருக்கிறார்கள். ‘கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள’ என்ற ஒரு குறளுக்கு ஐந்துக்கும் மேற்பட்ட – ஐந்துமே பொருத்தமான– விரிவான உரைவிளக்கம் அளித்து இரா.குப்புசாமி எழுதியுள்ள கட்டுரை மிகவும் குறிப்பிடத்தக்கது

வசந்தகுமார் 67இ பீட்டர்ஸ் சாலைஇராயப்பேட்டை சென்னை 600014ல் இருந்து வெளியாகிறது இதழ்.

தொடர்புக்கு 91 9884196552.

[email protected]

http://www.anyindian.com மிலும் சந்தா கட்டமுடியும்

முந்தைய கட்டுரைகட்டுரை வடிவம் பற்றி ஒரு கடிதம்…
அடுத்த கட்டுரைடைம்ஸ் ஆ·ப் இண்டியா இலக்கிய மலரும் ஜாம்பவான்களும்