விஷ்ணுபுரம் விருது,2022
இந்த ஆண்டு விஷ்ணுபுர விருது சாருக்கு அளிக்கப்படும் என்பது பெரும் மகிழ்வை அளிக்கிறது. இதை சிறிதும் எதிர்பார்க்க வில்லை ஏன் என்றால் விஷ்ணுபுர வாசகர் வட்டத்தைச் சார்ந்த எவரும் சாருவை ஒரு இடத்தில் கூட குறிப்பிட்டு நான் பார்த்ததில்லை. புனிதப்படுத்தலுக்கும் அதிகார குவியலுக்கும், அதிகாரத்தால் வரும் பாசிச தன்மைக்கும் எதிரா சுயவரலாரும் புனைவும் கலந்த வெளிப்படை தன்மை கொண்ட எழுத்து அவருடையது. சமூகத்தால் போலி பாசாங்குகள் மூலம் அழுத்தி வைக்கப்பட்ட பாலியல் குற்றங்களை பேசுவதால் வாசகனின் புனிதப்படுத்தல் சிதைவுருகிறது.
உதாரணமாக தாய் என்னும் புனிதப்படுத்தல் ஆனால் அதே தாய் ஒரு பெண்ணாக குடும்பத்தில் எவ்வாறு சுரண்டப்படுகிறாள் என்பதை அவர் சுட்டும் போது அது வாசகனை நேரடியாக தாக்குகிறது உடனே வாசகன் பொங்கி எழுந்து தனது வெற்று கூச்சல்களை வசையாக அவர் மீது வைக்கிறான். அவரது உலகம் முற்றிலும் வேறானது அவரை முதலில் வாசிக்கும் எவரும் என்ன இது ஒரே சுயபுராணமாக இருக்கிறது என்று தோன்றும் ஆனால் அதுதான் அவரது பானி என்று புரிந்து கொண்டு அணுகும் போது அவர் நமக்கு வேறொரு உலகத்தை காட்டுகிறார். தமிழில் எந்த எழுத்தாளரும் நேரடியாக என்னை பதித்தது இல்லை சாருவின் எழுத்தே என் ரசனையை சிந்தனையை , வாழ்வின் மீதான பார்வையை மாற்றியது… வாழ்த்துக்கள் சாரு ..
ஏழுமலை.
அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு,
சாருவிற்கான இந்த ஆண்டு விஷ்ணுபுர விருது மிக முக்கியமான அங்கீகாரம். இந்த தளத்தில் சில நாட்களுக்கு முன் பகவத் கீதை பற்றி சொல்லும் போது “அது ஒரு மருந்து. நோய்பட்டவன்தான் சாப்பிடணும். நோய் இல்லாதவன் மருந்து சாப்பிட்டா புது நோய்கள்தான் வரும்!” என்று தங்கள் பெரியப்பா கூறியதாக எழுதியிருந்தீர்கள். ஒரு வகையில் சாருவின் எழுத்துக்கும் இது பொருந்தும் என நினைக்கிறேன்.
என்னுடைய இருபதுகளின் துவக்கத்தில் சில பிரச்சனைகளால் மிகுந்த மனச்சோர்வுடன் தற்கொலை எண்ணங்களோடு இருந்தேன். அந்த பித்து மனநிலையில் அது வரை நான் அறிந்த இயல்பான வாசிப்பு, இசை, நட்பு, உறவுகள் என எதுவும் என்னை ஆற்றுபடுத்தவில்லை. அனைத்தையும் களைத்து போட்டு அதில் தெரியும் உண்மை ஒன்றை சாருவின் எழுத்தில் நான் கண்டேன். பல மாதங்களாக தொடர்ந்த அந்த பித்து மனநிலையில் என்னை சாரு மிக தீவிரமாக ஆட்கொண்டார். அவர் வழியாக நான் அறிந்த பிறழ் சினிமா கலைஞன் கிம் கி டுக். இவர்களின் பித்து நிலை ஒரு வகையில் என்னுடைய பித்து நிலையை மிகச் சிறிய கோடாக மாற்றி என்னை குணப்படுத்தியது எனலாம். அந்த மனநிலையில் சாரு, கிம் கி டுக் மற்றும் சாரு வழியாக அறிமுகமான பிறழ் இசை இவை அளித்த எக்ஸ்டஸியை இப்போது என்னால் அடைய முடியாது. இந்த நோயுற்றவனை காப்பாற்றிய மருத்துவர்கள் அவர்கள்.
சாரு அவரே பலமுறை கூறியது போல் ஒரு ஹெடோனிஸ்ட். ஒருவகையில் ஒரு மனிதன் இத்தனை கஷ்டங்களுக்கு இடையேயும் தன்னளவில் மகிழ்ச்சியாக இருப்பதன் மூலமே நம் துயரங்களை கேள்விக்குள்ளாக்குகிறார். அவர் ஒரு மகாரசிகர். இலக்கியம், சினிமா, இசை இவற்றில் தன்னை பாதித்தவற்றை இந்த அளவுக்கு எக்ஸ்டஸியுடன் எழுத முடிந்ததை சாருவிடம் மிகவும் வியக்கிறேன். சாரு எப்போதும் புதுமையை நாடுபவர். எங்கு தான் விரும்பும் திறமை இருந்தாலும் அதை உரத்துச் சொல்ல தயங்காதவர்.
சாரு ஒரு ஐகனோகிளாஸ்ட். தமிழ் மரபில் பெரும்பாலும் எந்த ஒரு கலைஞருக்கும் மிக கறாரான விமர்சனம் அவர்கள் மறைவுக்கு சில காலம் பின்னரே எழுதப்படுகிறது. ஆனால் சாரு அவருக்கே உரித்தான எல்லாவற்றையும் உடைக்கும் இயல்பினால் இளையராஜா, கமலஹாசன் போன்ற மாபெரும் சமகால பிம்பங்களையும் உடைத்து நம்மை உலுக்கக்கூடியவர். ஆனால் அவர்களே தன்னை பாதிக்கும் ஒரு அற்புத கலைபடைப்பை செய்யும் போது மிகவும் ரசித்து எழுதுபவர். இதில் நம் தனிப்பட்ட கருத்தைத் தாண்டி ஒரு எழுத்தாளன் தன் அகத்தில் உணர்ந்ததை உள்ளதை உள்ளபடி எழுதினான், எதன் பொருட்டும் தணிக்கை செய்ததில்லை என்பதே எத்தனை ஆச்சரியம். உண்மையில் சமூகத்தில் எழுத்தாளர்களுக்கு மட்டுமே அந்த தார்மீக உரிமை உண்டு.
சாரு ஒரு மிகச்சிறந்த மிருக அபிமானி. ஏன் என்று யோசித்தால் பல சமயம் மனிதர்கள் ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் அன்பு அதிகாரத்தில் சென்று முடிவதை பார்த்து வரும் ஒவ்வாமையினால் தானோ என்று தோன்றுகிறது. அந்த அளவுக்கு பெற்றோர் பிள்ளைகள் மேல், பிள்ளைகள் பெற்றோர் மேல், கணவன் மனைவி மேல், மனைவி கணவன் மேல் என்று எப்படி ஒவ்வொருவரும் அன்பின் வெளிப்பாடாக அதிகாரத்தைக் கொண்டுள்ளனர் என்று தொடர்ந்து பேசுபவர். அதேபோல் சக மனிதர்களின் சின்னத்தனங்களை தைரியமாக விமர்சித்து எழுதுபவர். பணத்தை இறக்காமல் வாய்ச்சவடால் அடிப்பவர்கள், பொய்யாக முகஸ்துதி செய்பவர்கள், நேரத்தை வீணடிப்பவர்கள், தன்னை மிகைப்படுத்துபவர்கள், அடுத்தவர்களை பேசவிடாமல் உரையாடுபவர்கள், தேவையற்ற ஆலோசனை கொடுப்பவர்கள், இடம் பொருள் அறிந்து பேசத் தெரியாதவர்கள், பிறர் உழைப்பை உறிஞ்சுபவர்கள், அழையா விருந்தாளியாக ஒரு இடத்தில் தோன்றுபவர்கள் என்று அவர் எடுத்துக்காட்டும் ஒவ்வொன்றிலும் சாமானிய மனிதர்களான என் போன்றோர் சிலவற்றில் எங்கள் தவறை அடையாளம் கண்டுகொண்டு எங்கள் அறிவின்மையை உணர்ந்து முன்னேற எண்ணற்ற வாய்ப்புண்டு.
சாரு ஒரு அற்புதமான இசை ரசிகர். தான் விரும்பும் இசை எங்கு இருந்தாலும் அதை அடையாளம் காட்ட தவறாதவர். கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி இசை, ராப், பாப் என்று எல்லா வித இசையையும் ஆழ்ந்து ரசிக்கக் கூடியவர். அவர் எழுத்தின் வசீகரத்தினாலேயே எந்த இசை நுண்ணுணர்வும் இல்லாத நான் அவர் அறிமுகப்படுத்திய பல இசையை ரசித்துள்ளேன். “Cradle of Filth” ஒரு காலத்தில் நான் இருந்த பித்து நிலையில் மருந்தாயிருந்தது என்றால், “Four Seasons” எப்போதும் ஒரு இனிய இசை அனுபவமாய் இருக்கிறது. Camila Cabello, Eminem, செம்பை வைத்தியநாத பாகவதர், Saad Lamjareed போன்று அவர் மூலம் என்னைப் போன்ற சாமானியர்களுக்கு அறிமுகமான இசை எண்ணிலடங்காதது.
சாரு ஒரு ஆச்சரியமான பயணி. பயணங்களுக்கு அவர் ஒரு இளைஞராக தன் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும் விதமே என் போன்று உடல் ஆரோக்கியத்தை ஏதோ பேங்கில் போட்ட பணம் போல பத்திரமாக இருக்கும் என நினைக்கும் பலருக்கும் மாபெரும் பாடம்.
சாருவின் எழுத்தும் அவரது வாழ்க்கையும் வேறு வேறு இல்லை என்பதால் என் அளவில் சாருவிடம் நான் அடைந்தது என்ன என்பதை இங்கு எழுதி உள்ளேன். என் வாழ்வில் மாபெரும் ஆசானாக நான் மதிக்கும் தங்களின் தலைமையில், என் வாழ்வின் மிக கடினமான காலத்தில் இறையருளால் நான் கண்டடைந்த எழுத்து மருத்துவரான சாருவிற்கு வழங்கப்படும் இந்த விருதினால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் இருவருக்கும் இறைவன் நூறாண்டு ஆரோக்கியமான ஆயுள் தர இறைவனை பரிபூரணமாக வேண்டுகிறேன். நன்றி.
அன்பும் நன்றியுமுடன்,
சங்கர் கணேஷ்