பொன்னியின் செல்வன் ட்ரைலர் பார்த்தேன். இந்த வகை மாதிரியில் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும், அவை அனைத்தையும் மறக்கும் வண்ணம் தற்கால க்ராஃபிக் நாவல்கள் போன்றதொரு ஓவியத் தன்மையில், ஈர்க்கும் பின்னணி இசை மற்றும் ஒலி வடிவமைப்பு கொண்டு, தீவிரமான கதாபாத்திர வெளிப்பாடுகள் கொண்டு, fresh ஆக வந்திருக்கிறது.
இரண்டு பாகங்களும் வெளியான பின்னர், உயர்தர தயாரிப்பில் இப்படத்தின் வண்ணமிக்கு காட்சி சித்திரங்களை நிறைத்து, இதன் திரைக்கதை புத்தகமாக வெளியாகும் என்றால் அது மணிரத்னம் அவர்களின், பொது வாசிப்பு சூழலுக்கான என்றென்றைக்குமான பங்களிப்பாக இருக்கும்.
உண்மையில் இந்த டிரைலரை நிலம் குத்தி நிற்கும் புலிக்கத்தி எனும் பொ.செ குழு வெளியிட்ட முதல் சித்திரம் துவங்கி ஒவ்வொன்றாக அடுத்தடுத்து அது வெளியிட்ட சித்திரங்கள் பாடல்கள் வழியே ஒவ்வொன்றாய் வரிசையாக பார்த்தபடி இறுதியாக வந்து சேர்ந்தேன். முதல் ஓவியத்தில் உள்ள கத்தி துவங்கி, அந்தக் கத்திவெட்டில் காட்சி அறுந்து முடியும் ட்ரைலரின் இறுதி கணம் வரை, பொ.செ குழு இதை பொது மக்களுக்கு கொண்டுவந்த விதம் அபாரம்.
இவற்றுக்கு வெளியே நான் மிக மிக ரசித்தது மார்க்குலக மைந்தர்கள் இவற்றின் மேல் நிகழ்த்திய ‘காத்திரமான‘ உரையாடல்களை. முதல் போஸ்டர் வெளியானதுமே ஐயைய்யே சோழர் கத்தி இப்புடியா இருக்கும், என்று துவங்கி வைத்தது மார்க்குலக மைந்தர்களில் ஒன்று.
உண்மையில் போர்க் கத்திகள் எனும் தலைப்பு அதன் வழியே ஒட்டு மொத்த உலக போர் வரலாறுகளையே தொகுத்து எடுத்துவிடலாம் ஒரு மாபெரும் தகவல் சுரங்கத்தைக் கொண்ட ஒன்று. இணையத்தில் தேடினாலே போதும்.
பொ.செ முதல் ஓவியத்தில் வரும் கத்தி பொம்பியி க்ளாடியஸ் எனும் வகையை சேர்ந்தது. நவீன போர்த் தளவாடங்கள் உள்ளே நுழையும் வரை பண்டைய போர்களில் ஆதிக்கம் செலுத்தியது இந்த வகை கத்தியே. பயின்று பயின்று அதன் வசதி மற்றும் சாத்தியங்கள் பொருட்டு உலகம் முழுவதும் எல்லா போர்களிலும் இவ்வகை கத்தியே ஆயுதங்களில் முன்னணி வகித்திருக்கிறது. சோழர்காலத்தில் யவனக் கத்திகள் நிறையவே புழக்கத்தில் இருந்திருக்கின்றன.
மார்க்குலக மைந்தர்கள் சோழனின் கத்தி என்றதுமே வேதாளம் சொல்லும் கதை ஓவியத்தில் விக்ரமாதித்தன் வைத்திருப்பானே அந்த கத்தி என்று நினைத்து விட்டார்கள். அந்த வகை கத்தியும் போரில் பயன்படும் ஒன்றுதான் ( பொ.செ வில் அதை ஊன்றி எழும் போஸில் தான் ஜெயம் ரவி இருக்கிறார் ) அந்த கத்திப் பட்டையின் முன் பகுதி கூர்மையாகவும் , கத்தியை எடை கொள்ள செய்யும் பொருட்டு பட்டையின் பின் பகுதி தடித்தும், கத்தி முனை சற்றே பின் பக்கம் வளைந்தும் ,கைப்பிடி வளையத்தோடும் இருக்கும். இது வெட்டுக் கத்தி. தலைக்கு மேலாக ஓங்கி வெட்டுகயில் கத்தி கை விட்டு நழுவி விடாதிருக்கவே அதன் கைப்பிடியில் வளையம் கொண்டிருக்கிறது.
இந்த பொ.செ முதல்விளம்பரக் குத்துக் கத்தி கொண்டு வெட்டவும் முடியும் தோல் கவசத்தை துளைத்து குத்தவும் முடியும். இந்த கத்தியின் பட்டை இரு புறமும் கூரானது. அந்த பட்டையின் நடுப்பகுதி தடித்து, அது கத்தியின் முனையில் சென்று ஈட்டியின் கூர்மையில் முடியும். மணிக்கட்டை சுழற்ற வசதியாக அதன் கைப்பிடி உள்ளங்கை அகலத்தை தாண்டாது. வளையமும் இருக்காது. இந்த கத்தியை மண் நோக்கும் விதத்தில் தலைகீழாக பிடித்தும் பயன்படுத்த முடியும். சுழன்று சென்று இலக்கை தாக்கும் வண்ணம் வீசி எறியவும் முடியும். (க்ளாடியேட்டர் படத்தில், இந்த கத்தியை போரில் எத்தனை விதமாக பயன்படுத்த முடியுமோ அனைத்தையுமே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்) இந்த பொ.செ ஓவியத்தில் மேலதிகமாக இந்த கத்தியில் சேர்க்கப்பட்ட ஒன்றே ஒன்று பிடியில் உள்ள புலிகள். இணையாக மற்றொரு தகவலாக ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்களில் ஒன்று இந்த வகை கத்தி. அதாவது இந்த வகை கத்தியின் சங்க கால வடிவம்.
இரண்டாவதாக மார்க்குலகமைந்தர்கள் அங்கலாய்த்த விஷயம் கதாபாத்திர தேர்வுகள். இதற்கு முன்னர் கமல் நேர்காணல் ஒன்றில் இதற்கு பதில் சொல்லி இருக்கிறார். அது
” எழுத்தில் கோழி முட்டை போட வேண்டும் என்றால் சிக்கல் குறைவு. அதே கோழி சினிமாவில் முட்டை போட வேண்டும் என்றால் நூறு பேர் வேண்டும் நிறைய செலவு ஆகும். அதற்கு பின் அதை பார்ப்பவர் ஐயயோ என் மனசுல இருந்த கோழி முட்டை சிகப்பு கலர்ல சதுரமா இருந்துச்சி இந்த சினிமா கோழி முட்டை என்னை ஏமாத்திருச்சி அப்டின்னு வருத்த படுவார். வாசகர்கள் கனவில் இருக்கும் பொதுவான கோழிமுட்டை என்பது வேறு, சினிமாவால் நனவில் எந்த எல்லை வரை (அந்த கனவின் அருகே) செல்ல முடியுமோ அது வரை சென்று, எல்லோருக்குமான முட்டை எதுவோ அதை மட்டுமே காட்ட முடியும். எழுத்தில் உள்ள கோழி முட்டை உங்கள் மனதில் உள்ள கோழிமுட்டையாக மாறுவதற்கு இடையே ஒரு பிராசஸ் இருக்கிறது. உங்கள் மனதில் உள்ள முட்டை அந்த பிராசஸ் வழியே உருவானது. சினிமாவில் அதெல்லாம் கிடையாது. அது நேரடியாக முட்டையைக் காட்டி விடும். அந்த பிராசஸ் இல்லாமல் முட்டையை பார்க்கும் நிலை இருக்கிறதே அதைத்தான் எழுத்து மாதிரி சினிமா இல்ல என்று சொல்லி விடுகிறோம். சினிமா பார்ப்பது என்பது வேறு. அதை நாம புரிஞ்சிக்க கொஞ்ச நாள் ஆகும். பாப்போம்“
இது மகாநதி படத்தின் சூழலின் போது கமல் பேசியது. அந்த கொஞ்ச நாள் இன்னும் வர வில்லை என்றே தோன்றுகிறது.
மூன்றாவதாகவும் (தற்போதைக்கு) இறுதியாகவும் ட்ரைலர் பார்த்து மார்க் மைந்தர்கள்கள் கண்டுபிடித்திருக்கும் அடுத்த விஷயம் ‘ஜெயமோகனுக்கு விவரமே பத்தல, இலங்கை எனும் பெயர் சோழர் காலத்தில் கிடையாது’ என்பது. கல்கி இலங்கை என்ற வார்த்தையையே பொன்னியின் செல்வன் நாவலில் பயன்படுத்தவில்லை என பலர் எழுதியிருந்தார்கள். மார்க் மைந்தர்கள் அறியாதது கல்கியின் பொன்னியின் செல்வனில் இலங்கை என்றுதான் உள்ளது.‘இது இலங்கை‘ என்ற குரல் காதில் ஒலிக்கவே வந்தியத்தேவன் கண் விழிக்கிறான் என்றே கல்கி எழுதுகிறார். அந்த அத்தியாயத்தின் தலைப்பே இலங்கை என்பதுதான்.
இவை போக இலங்கை எனும் பெயர் எப்போதில் இருந்து புழக்கத்தில் இருந்திருக்கும் என்று அங்கே இலங்கை வரலாற்றாய்வாளர்களும் ஆய்வு செய்திருக்கிறார்கள். அவர்கள் வந்து சேர்ந்த இடம் சிறுபாணாற்றுப்படை. தமிழ்நாட்டில் உள்ள மாவிலங்கை எனும் சிற்றூரை ( இந்த ஊர் எங்க ஊர் பக்கம்தான் இருக்கிறது. இங்கே ஒரு குடைவரை கோயில் உண்டு. நமது தளத்தில் எழுதியும் இருக்கிறேன்) பாணன் புகழ்ந்து பாடுகையில் ‘தொன்மையான அந்த இலங்கையின் பெயரை கொண்ட‘ என்ற வரிகளை சுட்டிக் காட்டி, அது இன்றைய இலங்கையாகவே இருக்க வாய்ப்பு மிகுதி என்று சொல்லி காரணங்களையும் நிறுவி இருக்கிறார்கள். (நூலகம் ஆர்க் தளத்தில் நூல்கள் பல உண்டு)
பாடல் கீழே
நறு வீ நாகமும், அகிலும், ஆரமும்,
துறை ஆடு மகளிர்க்குத் தோள் புணை ஆகிய,
பொரு புனல் தரூஉம் போக்கறு மரபின்,
தொல் மா இலங்கைக் கருவொடு பெயரிய,
நல் மா இலங்கை மன்னருள்ளும்,
மறு இன்றி விளங்கிய வடு இல் வாய்வாள்
உறு புலித் துப்பின் ஓவியர் பெருமகன்,
களிற்றுத் தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடி
பிடிக்கணம் சிதறும் பெயல் மழைத் தடக்கை
பல் இயக் கோடியர் புரவலன் (116-125)
பொருளுரை:
நறுமணமுடைய மலர்களை உடைய சுரபுன்னை, அகில், சந்தனம் ஆகிய மரங்களின் துண்டுகளை நீராடும் துறையில் உள்ள பெண்களின் தோள்களுக்குத் தெப்பமாகக் கொண்டு வந்து தரும், கரையை இடிக்கின்ற ஆற்றினையுடைய, தொன்மையான பெருமைமிக்க இலங்கையின் பெயரை, நகரம் தோன்றிய பொழுதில் இருந்து கொண்ட, அழித்தற்கு அரிய மரபை உடைய, மாவிலங்கையின் சிறந்த மாவிலங்கை மன்னர்கள் பலருள்ளும் மறு இல்லாது விளங்கும், பழியில்லாத குறியைத் தப்பாத வாளினையுடைய, புலியைப் போன்ற மிகுந்த வலிமையுடையவன் அவன்.
உ.வே.சா அவர்களும் தமது உரையில் இவ்வாறே குறிப்பிடுகிறார். மாக்குலக மைந்தர்ககள் தாராளமாக இவர்களை நம்பலாம்.
உண்மையில் இத்தனை சில்லறைத்தனங்களும் எதற்காக? ஒரு வெகுஜன சினிமா இவர்களையும் உள்ளிட்ட எல்லோரையும் நோக்கித்தானே எடுக்கப்படுகிறது. இந்த வெகு ஜனத்தில் நானும் ஒருவன் இல்லை எனும் ஊமை ஈகோ தவிர இவற்றுக்கு பொருள் என்ன?
கமல் இதற்கும் ஆளவந்தான் சூழலில் மிக அழகான பதில் ஒன்றை தந்திருக்கிறார்.
“நான் புதுசா ஒரு சமையல் ட்ரை பண்ணிருக்கேன். எப்டி இருக்கு சொல்லுங்க அப்டின்னு உங்க கிட்ட தரேன். நீங்க என்ன பண்றீங்க அதை தரைல கொட்டி, விரலால கிண்டி பாத்து, இதுல மிளகு சரியா பொரியல, கிழங்கு சரியா வேகலை அப்டின்னு சொல்றீங்க. சாப்பிட்டு பாத்துதானே சொல்லணும் அதானே முறை ”
இன்றும் அதே நிலை அவ்வாறே நீடிக்கிறது.
காசு கொட்டி நிறுவனம் செய்த விளம்பரங்களை கடந்து இது போன்றவைகளும் எப்படியோ படத்துக்கான புரமோஷன் என்று மாறி விட்டதுதான் ஆச்சர்யம் :).
கடலூர் சீனு
*
அன்புள்ள சீனு,
நம் மக்கள் கவனிப்பது சினிமா ஒன்றையே. பொன்னியின் செல்வன் சினிமாவை வைத்து இத்தனை சரித்திர ஆராய்ச்சி நடைபெறுகிறது. ஆனால் எத்தனைபேர் சரித்திரக்கட்டுரைகள் போடும் இணையப்பக்கத்துக்குச் செல்வார்கள். ஆயிரத்தில் ஒருவர் கூட இல்லை. ஆகவேதான் நான் வரலாறு சினிமாவாக வரவேண்டும் என்று சொல்கிறேன். அடுத்த தலைமுறைக்கு ராஜராஜ சோழன் பெயர் சென்று சேர அது ஒன்றே வழி.
இங்கே ஒரு சினிமா வெளிவந்ததுமே எல்லா அரசியல் தரப்புகளும் வந்து அதை சர்ச்சை செய்கின்றன. அதன்பொருட்டு அதை சர்ச்சைக்குள்ளாக்குகின்றன. ஏன்? அந்த அரசியல் தரப்பை அடுத்த தலைமுறை கவனிக்கச் செய்ய வேறு வழியே இல்லை.
அந்த சர்ச்சைகள் காழ்ப்பின் மொழியில் அமையாதவரை நல்லவைதான். அப்படியாவது சோழர்காலத்தில் என்ன கத்தி பயன்படுத்தப்பட்டது, சோழர் காலத்தில் இலங்கை எப்படி அழைக்கப்பட்டது என்று தெரிந்துகொண்டால் சரி.
ஜெ