சிலுவையின் பெயரால் மின்னூல் வாங்க
சிலுவையின் பெயரால் என்னும் நூலின் தொடக்கப்புள்ளி என்பது நீண்ட காலத்திற்கு முன்பு ஒருமுறை கே.சி.நாராயணன் சென்னையில் மாத்ருபூமி நிருபராக பொறுப்பிலிருந்தபோது பார்சன் காம்ப்ளக்ஸிலிருந்த அவருடைய தங்குமிடத்தில் சக்கரியா உட்பட பல இலக்கிய நண்பர்கள் கூடிப்பேசிக்கொண்டிருந்தபோது இறையியலில் ஆய்வு செய்பவரான மாத்யூ என்னும் நண்பர் கூறிய ஒரு வரி என்று இன்று எண்ணுகிறேன். இலக்கியவாதிகள் பேசும் கிறிஸ்து இங்குள்ள கிறிஸ்தவ பக்தர்கள் அறியாதவர்.
கிறிஸ்தவ பக்தர்கள் ஒரு அமைப்பின் முகமாக கிறிஸ்துவைப் பார்க்கிறார்கள். வேண்டியதை அளிக்கும் கருணை கொண்ட தேவனாகவும் சொர்க்கத்துக்கு அழைத்துச்செல்லும் தூதனாகவும் அவரைப் பார்க்கிறார்கள். ஒருவரலாற்று நாயகனாகவோ ஆன்மீக ஆசிரியராகவோ அவனை அவர்கள் அறியமாட்டார்கள். இலக்கியவாதிகள் பார்க்கும் கிறிஸ்து டால்ஸ்டாய், தாஸ்தயேவ்ஸ்கி, நிகாஸ் கசந்த்சகீஸ், ஜோஸ் சரமகோ என வெவ்வேறு எழுத்தாளர்களால் எழுதி உருவாக்கப்பட்டவர். எனக்கு உடனடியாக அது உண்மை என்று தோன்றியது. தமிழில் இலக்கியவாதிகள் மத்தியில் க.நா.சுவின் அன்பு வழி என்னும் நாவல்தான் கிறிஸ்துவை அறிமுகம் செய்தது. அந்தக் கிறிஸ்து அல்ல குமரி மாவட்டத்தில் பலநூறு கிறித்துவ வழிபாட்டிடங்களில் வணங்கப்படும் கிறிஸ்து.
சுருக்கமாகச் சொன்னால் அது மதத்துக்கும் ஆன்மிகத்துக்குமான தீர்க்க முடியாத முரண்பாடுதான். ஆன்மீகம் உயிர்த்துடிப்பானது நகர்ந்துகொண்டிருப்பது தனிநபர்களைச் சார்ந்தது. மதம் உறுதியானது நிலைகொண்டது. பெருந்திரளாக மக்களைத் திரட்டுவது. கிறிஸ்தவ மதம் கிறிஸ்து மறைந்து இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் ரோமானியப் பேரரசர் கான்ஸ்டன்டீன் அவர்களால் ஒரு மதமாக வரையறுக்கப்பட்டு மையத்திருச்சபை அமைக்கப்பட்டு இன்று காணும் வடிவில் நிறுவப்பட்டது. பின்னர் அதிலிருந்து மேலும் மேலும் கிளைகளென திருச்சபைகள் பிரிந்து உலகளாவ வளர்ந்தன.
கான்ஸ்டன்டீனுக்கு முன்னால் கிறிஸ்தவ மதம் ஒரு ஆன்மீக இயக்கமாகவே இருந்தது. அடித்தள மக்களிடம் விடுதலையையும் மீட்பையும் பற்றிய கனவுகளையும் உருவாக்கிய ஒரு ஆன்மிக பெருக்காக அது திகழ்ந்தது. அது மக்களைத் திரட்டுவதைக்கண்டு தன் பேரரசின் அதை அடித்தளமாக அமைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவ மதத்தை உருவாக்கினார். ஒரு ஆன்மிக மரபு மதமாகும்போது அது சிலவற்றை ஏற்கிறது சிலவற்றை மறுக்கிறது. இன்று காணும் பைபிள் கான்ஸ்டன்டீன் கூட்டிய அவையால் அறுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. அந்த அவையால் நிராகரிக்கப்பட்ட திருச்செய்திகள் இருந்தன. அவற்றில் முதன்மையானது தாமஸ் எழுதிய சுவிசேஷம். மக்தலீனா எழுதிய சுவிசேஷமும் இருந்திருக்கிறது. இவை ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகாலம் முழுமையாக மறுக்கப்பட்டன. அவற்றை கையில் வைத்திருப்பதும் குற்றமெனக்கருதப்பட்டது.
சென்ற நூற்றாண்டில் அவை நாக்–ஹமாதி என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டன. பின்னர் சாவுகடல் பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் பாப்பிரஸ் சுவடிகளில் இவை அகழ்ந்தெடுக்கப்பட்டன. பொதுவாக இவை கருங்கடல் சுவடிகள் என அழைக்கப்படுகின்றன. ஆனால் இவற்றின் நம்பகத்தன்மையை கத்தோலிக்கத் திருச்சபை நெடுங்காலம் நிராகரித்தது. கார்பன் டேட்டிங் எனப்படும் காலக்கணிப்பு முறை வந்தபிறகு இவை உண்மையானவை தொன்மையானவை என நிறுவப்பட்டது. இன்று மறுக்க முடியாத மாற்று கிறிஸ்தவ தரப்பாக இது உள்ளது. இன்று மதத்திற்கும் ஆன்மிகத்திற்குமான வேறுபாட்டை உணர்வதற்கான மிகச்சிறந்த ஆவணங்கள் இவை.
இந்நூலின் உள்ளடக்கமாக இருக்கும் புனித தாமஸின் சுவிசேஷம் என்னும் சிறுபகுதியை ஏற்கனவே நான் மொழியாக்கம் செய்திருந்தேன். அதை ஒட்டி எனது இணையதளத்தில் கிறிஸ்துவைப்பற்றிய இயல்பான ஒரு விவாதம் தொடங்கியது. எப்படி இன்றைய கிறிஸ்து கிறிஸ்தவ மதத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கிறார். அதற்கப்பால் உள்ள மனிதாபிமானியும் மெய்ஞானியும் கவிஞனுமாகிய கிறிஸ்து யார் என்பது அந்த விவாதங்களின் மையப்பொருள் மக்தலீனா பற்றி, மாற்று பைபிள் பற்றி, மறைக்கப்பட்ட பைபிள் பற்றிய விவாதங்கள் அவ்வாறு உருவாகி எழுந்தன. இலக்கியம் அறிந்த கிறிஸ்துவை உணர்ச்சிகரமான முன்வைக்கும் கட்டுரைகள் இதில் உள்ளன. மதத்தால் கட்டமைக்கப்பட்ட கிறிஸ்துவின் மறைக்கப்பட்ட பகுதிகளைச் சொல்லும் கட்டுரைகள் இதில் உள்ளன.
இந்நூல் ஆன்மீக கிறிஸ்துவையும் அமைப்பு கிறிஸ்துவையும் ஒரே சமயம் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வது. கிறிஸ்தவ மதம் கிறிஸ்து எனும் ஆன்மிக வழிகாட்டி இரண்டுக்குமான வேறுபாட்டை நோக்கி வாசகனை திறக்கச் செய்வது. ஓர் ஆன்மீக ஞானியாக ஒவ்வொரு மனிதனையும் நோக்கி கிறிஸ்து அவருடைய விடுதலையை வழிகாட்டுகிறார். ஒவ்வொரு ஆத்மாவுடனும் தனித்தனியாகவே அவர் பேசுகிறார். இன்றும் கிறிஸ்துவமதம் ஒவ்வொருவரையும் பெருந்திரளில் ஒருவராக உணரச்செய்கிறது. கிறிஸ்துவை மேய்ப்பனாகவும் தங்களை பெரும் மந்தையாகவும் உருவகித்துக்கொள்கிறது. அவ்வாறன்றி கிறிஸ்துவுக்கும் தனக்குமான தனிப்பட்ட உரையாடல் ஒன்றை தொடங்க நினைப்பவருக்கு இந்த நூல் கையேடாக இருக்ககூடும். ஒரு கிறிஸ்தவ பக்தனுக்கு இந்நூலில் படிக்க ஏதும் இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. மெய்ஞான குருவாக ஆன்மிக ஞானியாக இறை வடிவாக கிறிஸ்துவை அறிய விரும்பும் இலக்கிய வாசகன் இதில் கிறிஸ்துவின் ஒளிமிக்க ஒரு முகத்தை கண்டடைய முடியும் என்று தோன்றுகிறது.
சிலுவையின் பெயரால் நூலின் மறுபதிப்புக்கான முன்னுரை