கவிதையை பயில்தல்

Poetry and Man

அன்புள்ள ஜெயன்

கவிதைகளை தொகுப்பாக கொண்டு வருவதற்கு வயது முக்கியமா? எனக்கு 22 வயதாகிறது. 17 வயதில் இலக்கியம் படிக்கத் தொடங்கினேன். தமிழில் கல்யாண்ஜி, இசை, சாம்ராஜ், வெய்யில், நரன், ஷங்கர் ராம சுப்ரமணியன், இளங்கோ கிருஷ்ணன் மற்றும் சில கவிஞர்களின் கவிதைகளை படித்திருக்கிறேன். ஆங்கிலத்தில் கீட்ஸ், வேர்ட்ஸ்வொர்த், ஆஸ்கர் வைல்டு, டி. எஸ்.எலியட், ராபர் ப்ராஸ்ட், வால்ட் விட்மன், டிக்கின்சன் ஆகியோரின் கவிதைகள் பரிட்சயம். ரொமாண்டிக் கவிதைகளுக்கும், பின்நவீனத்துவ கவிதைகளுக்கும் இடையில் அவ்வப்போது சிக்கிக் கொண்டது போன்ற உணர்வு சில சமயங்களில் தோன்றும். 

நான் இரண்டு வருடமாக கவிதை எழுதி வருகிறேன். சிற்றிதழ்களுக்கு அனுப்பியுள்ளேன். கனலி இணைய இதழில் சில கவிதைகள் பிரசுரமாகின. 60-70 கவிதைகளை தொகுப்பாக கொண்டுவர எண்ணமுள்ளது. எனவே, ஒரு வளர்ந்து வரும் பதிப்பகத்தை தொடர்பு கொண்டேன். அவர் இப்படிச் சொன்னார். ” உங்கள் கவிதைகளை படிக்க நேரம் கிடைக்கவில்லை. இப்போது தான் நேரம் கிடைத்தது. நீங்கள் ஆரம்ப நிலையில் உள்ளீர்கள். உங்களின் கவிதையில் படிமம், குறியீடுகள் அவ்வளவாக இல்லை. இன்னும் முயற்சி செய்யுங்கள்என்றுச் சொன்னார். அவர் என் கவிதைகளை முழு கவனத்துடன் படித்தாரா என்பதில் சற்று சந்தேகமுள்ளது

நான் இப்போது தொகுப்பாக கொண்டு வர முடிவெடுத்துள்ளேன். இருந்தாலும் எனக்குள் நிறைய கேள்விகள். இன்னும் மூன்றாடுகள் காத்திருந்து பார்க்கலாமா என. ஒரு தெளிவு வேண்டி உங்களிடம் இதை கேட்கிறேன்

( நீங்கள் விரும்பினால், சில கவிதைகளை உங்களுக்கு அனுப்புகிறேன்

இப்படிக்கு 

தீ.

***

அன்புள்ள நண்பருக்கு

இந்தக்கேள்வி எழுதத்தொடங்கும் பெரும்பாலானவர்களால் கேட்கப்படுகிறது. ஏனெனில் பெரும்பாலும் கவிதையில் தான் எழுத்தாளர்கள் தொடங்குகிறார்கள். அதற்கான காரணம் ஒன்றுதான். தொடக்க காலத்தில் எழுதவருபவர்களிடம் அனுபவத்துளிகள் மற்றும் எண்ணத்துளிகள் மட்டுமே இருக்கும். அந்தத்துளிகளை அப்படியே பதிவு செய்வது அல்லது வெளிப்படுத்துவது மட்டுமே அவர்களால் இயலும். அதற்கு உரிய வடிவமாக அவர்களுக்குத் தோன்றுவது கவிதைதான். ஏனெனில் கவிதை மிகச் சிறியதாக இருக்கிறது. ஒருகுறிப்பிட்ட வெளிப்பாட்டுத்தருணம் மட்டும் அதற்குப் போதுமானது.ஆகவே அவர்களுக்குக் கவிதை உகந்ததாக, எளிதானதாக உள்ளது.

நாம் எண்ணுவது போல புதுக்கவிதை உருவானபின்னர் அனைவரும் கவிதை எழுதித் தொடங்கினார்கள் என்று சொல்ல முடியாது. அதற்கு முன்பு செய்யுள் காலகட்டத்திலும் அனைவருமே எழுதிக்கொண்டிருந்தது கவிதைதான். சொல்லப்போனால் புதுக்கவிதையை விட செய்யுள்தான் இன்னும் எளிமையானது. அந்த யாப்பமைதியை கற்றுக்கொண்டால் எதைவேண்டுமானாலும் அதற்குள் அமைக்க முடியும். ஒரு குறிப்பிட்ட ஓசை அமைந்துவிடுவதனால் அது கவிதை போல தோன்றவும் செய்யும். யாப்பு சென்ற பிறகு இன்று புதுக்கவிதை எழுதுவது இன்னும் கடினமாகியது என்பதே உண்மை. ஏனெனில் குறைந்தபட்சம் அது வசனமல்ல கவிதை என்றாவது தோற்றமளிக்கவேண்டும்.

இன்று புதுக்கவிதைக்குரிய யாப்பு முறை காலப்போக்கில் உருவாகி வந்துள்ளது. அதில் ஓர் அனுபவத்தை குறைவான சொற்களில் வரிகளை மடித்து எழுதிவிட்டால் கவிதை போலத் தோற்றமளிக்கிறது.  ஆகவே சென்ற காலங்களில் அன்றாட வாழ்க்கையை அப்படியே சொல்லும் பல்லாயிரக்கணக்கான வெண்பாக்கள் எப்படி எழுதிக்குவிக்கப்பட்டனவோ அப்படி இப்போது புதுக்கவிதையும் எழுதிக் குவிக்கப்படுகிறது. இதை எவரும் எதுவும் செய்யமுடியாது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய பண்டிதர்கள் இந்த வெண்பா- ஆசிரியப்பா பெருக்கத்தைப் பற்றி புலம்பி எழுதியிருக்கிறார்கள்.

குட்டுதற்கோ பிள்ளைப்பாண்டியன் இங்கில்லை. குறும்பியளவாக் காதைக்குடைந்து தோண்டி

எட்டினமட்டு  அறுப்பதற்கோ வில்லியில்லை. இரண்டொன்றாமுடிந்து தலையிறங்கப்போட்டு

வெட்டுதற்கோ கவி ஒட்டக்கூத்தனில்லை விளையாட்டாக் கவிதைதனை விரைந்துபாடித்

தெட்டுதற்கோ அறிவில்லாத்  துரைகளுண்டு தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே 

என்ற புலம்பல் இங்கு பதினாறாம் நூற்றாண்டு முதலே உள்ளது.வே.சாமிநாதய்யர் அவருடைய தன் வரலாற்றில் இத்தகைய செய்யுள் பெருக்கத்தைப்பற்றி ஏராளமாக வருந்தியும் கேலியாகவும் எழுதியிருக்கிறார். ஆனால் காலத்தின் வெள்ளத்தில் அச்செய்யுடகள் பெரும்பாலும் காணாமலாயின.

எண்ணிப்பாருங்கள் பாரதியின் காலத்தில் எழுதிய இன்னொரு கவிஞர் உங்களுக்கு நினைவுக்கு வருகிறாரா? அதற்கு முந்தைய காலத்து கவிஞர்களில் எத்தனை பேர் உங்கள் நினைவில் எஞ்சுகிறார்கள். மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை எழுதிய பலநூறு தனிப்பாடல்கள், ஏராளமான புராணங்கள், சிற்றிலக்கியங்களில் ஓரிரு வரிகள் மட்டுமே இங்கு எஞ்சுகின்றன ஆகவே கவிப்பெருக்கம் என்பது எப்படி இயல்பானதோ அவற்றில் பெரும்பாலானவை காலத்தில் அழிந்து நினைவில் எஞ்சும் சிலவே வரலாறாகின்றன என்பதும் இயல்பானது தான்.

தொடக்கநிலையாளர்கள் அனுபவத்தின் துளிகளை கவிதைகளாக எழுதும்போது அவை அவர்களுக்கு மிக அந்தரங்கமானவை என்பதனால் தீவிரமான கவிதைகள் என்ற எண்ணம் அவர்களுக்கு உருவாகிறது. புள்ளிகளை வைத்தாலே கோலம் போடுபவரின் உள்ளத்தில் ஒரு கோலம் தோன்றிவிடுவது போல. ஆனால் வாசகனிடம் சென்றடைபவை வெறும் புள்ளிகள்தான். மிக வழக்கமான வடிவில் போடப்பட்ட புள்ளிகள் என்றால் மிக வழக்கமான ஒரு கோலத்தை பார்ப்பவனும் கற்பனை செய்து விட முடியும். ஆனால் அதில் கலையில்லை.

கவிதையில் தொடங்கும் பெரும்பாலானவர்கள் காலப்போக்கில் தாங்கள் கவிஞர்கள் அல்ல என்று கண்டுகொள்கிறார்கள். அனுபவத்தின் துளிகளை சிந்தனை சார்ந்தும் உணர்வு நிலைகள் சார்ந்தும் ஒன்றோடொன்று இணைத்து சித்திரங்களாக ஆக்க தங்களால் இயலும் என்று தெரிந்துகொள்கிறார்கள். அவர்களை அது புனைவு நோக்கி கொண்டுவருகிறது. நானும் அவ்வாறு புனைவு நோக்கி வந்தவன்தான். கவிதையிலேயே நீடிப்பவர்கள் தங்களுடைய வெளிப்பாட்டு முறை கவிதை என்பதை கண்டுகொண்டவர்கள்.

கவிதையின் வெளிப்பாட்டு முறை என்பது கற்பனை சார்ந்ததோ சிந்தனை சார்ந்ததோ அல்ல. முழுக்க முழுக்க மொழி சார்ந்தது. கவிதையின் அடிப்படை அலகென்பது சொல். சொல்லிணைவுகளின் அழகுகளின் ஊடாக எண்ணங்களோ உணர்வுகளோ வெளிப்படும்போது மட்டும்தான் அது கவிதை. ஒருகவிதை காலத்தில் நிலைகொள்வது அது உருவாக்கும் சொல்லிணைவுகளின் அழகினால் மட்டுமே. நவீன கவிதை படிமங்களை உருவாக்குகிறது. பலசமயம் படிமங்கள் அந்தக் கவிதையிலிருந்து பறந்தெழுந்து படிமங்களாகவே நிலைகொள்கின்றன. ஒரு கவிஞனின் படிமத்தை அவன் சொன்ன வரிகளில் அன்றி வேறு வரிகளில் நாம் நினைவுகூர்வோம் என்றால் அது கவிதையல்லாது ஆகிவிடுகிறது என்பதுதான் உண்மை.

கவிதையை எப்படி மதிப்பிடுவது என்பதுதான் உங்கள் வினா. உண்மையில் கவிப்பெருக்கம் என்பது மிகப்பெரிய தீங்கை கவிதைக்குதான் விளைவிக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு கவிதைக்கும் அளிக்கப்படவேண்டிய கூர்ந்த கவனத்தை அது இல்லாமலாக்குகிறது. கவிதையைப் பொறுத்தவரை கூர்ந்து படித்தால் மட்டுமே அது கவிதையாகிறது. விரைவாகப் படித்து செல்லுகையில் அது தொடர்புறுத்த மறந்துவிடுகிறது. பலசமயம் நல்ல கவிதையை இணையப்பக்கத்தில் போகும் போக்கில் படிக்கும்போது அது ஒரு அனுபவக்கீற்றென்றோ, எளிமையான கருத்தென்றோ, அறிவிப்பென்றோ தோன்றிவிடும். அதை ஒரு விமர்சகன் எடுத்து ஒரு உணர்வுப் பின்புலத்தில் பொருத்திக்காட்டும்போது மகத்தான கவிதையாக மாறிவிடுகிறது.

மிக அரிய கவிதைகள் வெறும் சொற்கூட்டுகள் மட்டுமே. (Poetic Utterence) என்று அதைச் சொல்வார்கள். வெறும் சொல் வெளிப்பாடுகள் அவை. அவற்றின் மேல் வாசகன்  உள்ளம் குவிந்து வாசகனின் உள்ளத்தில் புகுந்து அவை தங்களைத் திரும்ப திரும்ப ஒலிக்க விடும்போது தான் அவை கவித்துவ அனுபவத்தை அளிக்கின்றன. இந்தக் கவனம் கவிதைக்கு வாசகனால் அளிக்கப்பட வேண்டும். அதற்கு கவிதையை வாசிப்பால் அடிக்கோடிட வேண்டும். கவிதை என்பதே அடிக்கோடிடப்பட்ட சொல்லாட்சி என்றொரு விவரணை உண்டு

இந்தக் கவனத்தை இன்றைய சூழலில் வாசகர்கள் கொடுப்பதில்லை அதற்கு அவனுக்கு வாய்ப்பில்லை. ஒவ்வொரு இணைய இதழிலும் ஏராளமான கவிதைகள் வெளியாகின்றன. சிற்றிதழ்களில் பக்க நிரப்பிகளாகவும் இடைவெளி நிரப்பிகளாகவும் கவிதைகள் வெளியாகின்றன. பெரும்பாலும் அவற்றை எழுதுபவர்கள் தொடக்கநிலை கவிஞர்கள்  அதாவது கட்டுரையாளரோ எழுத்தாளரோ ஆகவேண்டியவர்கள் ஒரு பயிற்சிக்காக கவிதைகளை எழுதி தொடங்குகிறார்கள்.

இத்தனை கவிதைகளிலிருந்து தரமான ஒரு கவிதையை அடையாளம் காண்பதென்பது தொடர்ந்து வாசிப்பும் தொடர்ந்து கவனமும் அளிப்பவர்களால்தான் முடியும் .அத்தகையோர் ஐம்பது பேருக்குள் தான் தமிழ்நாட்டிலேயே இருக்கிறார்கள். நான் அந்த ஐம்பது பேரை நம்பிதான் அடுத்த கட்ட வாசிப்பையே நிகழ்த்துகிறேன். கவிதையின் முழுப்பெருக்கத்தையும் படிப்பதற்கு எனக்கு பொழுதில்லை. அவ்வாறு ஒரு தேர்ந்த வாசகன் ஒரு கவிதையை அடையாளப்படுத்திவிட்டால் அவற்றின்மேல் வாசக கவனம் குவிவதை அக்கவிதை மேலும் மேலும் படிக்கப்படுவதை வாழ்வதை நீங்கள் காணலாம்.

இன்றைய சூழலில் கவிதைத் தொகுப்புகளை  போடுவது மிக எளிது. நூறு பிரதிகளுக்குள் அச்சிடலாம். அல்லது எந்த செலவும் இல்லாமல் அமேசானில் ஏற்றலாம். அவற்றுக்கான வாசகனை கண்டடைவது தான் இங்கு அரிதினும் அரிது. முன்பே இங்கு கவிதை தொகுதிகள்  தொடக்கநிலை கவிஞர்களால் எழுதப்பட்டு, சொந்தத்தில் அச்சிடப்பட்டு, சுண்டல் போல விநியோகிக்கப்படுகின்றன. பிரசுர நிலையங்கள் கவிதைகளை வெளியிடுவது மிக அரிது .ஏனெனில் வாசகர்கள் கவிதைகளை வாங்குவதில்லை. வாங்குவது அத்தனை உகந்ததும் அல்ல. நூறு ரூபாய் பணம் கொடுத்து ஒரு கவிதைத் தொகுப்பை வாங்கினால் அதில் ஒரு கவிதையேனும் நன்றாக இருக்கவேண்டும் என்ற உறுதிப்பாடை அளிக்கும் தொகுதிகளே ஆயிரத்தில் ஒன்றுதான் இங்கு.

அப்படியானால் எவ்வாறு கவிதையை எழுதி வெளியிடுவது? உலகெங்கும் உள்ள வழிமுறை உண்டு. கவிதைக்கான Peer Groups எனப்படும் தேர்ந்த வாசக வட்டங்களை சார்ந்து செயல்படுவது. எக்காலத்திலும் தமிழில் அவ்வாறு தான் இருந்திருக்கிறது. ஒரு கவிஞன் தனக்குத்தானே எழுதிக்கொண்டு ,எங்கோ ஒரு சிற்றூரில் வாழ்ந்துகொண்டிருப்பான் என்றால் அவன் தன்னைத்தானே பார்க்கவோ தன்னைத்தானே செழுமைப்படுத்திக்கொள்ளவோ வாய்ப்பு அமைவதே இல்லை. அவன் கவிதையை இன்னொருவர் உளம் குவித்து படிப்பதற்கான வாய்ப்பே அமைவதில்லைஆகவே முற்றிலும் கவனிக்கப்படாதவனாக, படிக்கப்படாதவனாக அவன் எஞ்சுவதே வழக்கம். காலப்போக்கில் அவன் கசப்பு கொண்டவனாகிறான். ஏதோ வஞ்சமோ சதியோ செயல்பட்டு தன்னை முழுக்க வே நிராகரிக்கிறது என்ற உளநிலைக்கு செல்கிறான். அதன்பின் புலம்பிக்கொண்டே இருக்கிறான். எந்தக்கவிதையை எவர் அங்கீகரித்தாலும் அங்கு வந்து தன் கசப்பையும் காழ்ப்பையும் கொட்டுகிறான்.

ஒவ்வொரு ஊரிலும் அவ்வாறு கவனிக்கப்படாத கவிஞர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களில் மெய்யாகவே கவித்திறன் கொண்டவர்கள் பலர் இருக்கக்கூடும். ஆனால் எப்படிக் கண்டுபிடிப்பது? அவர்கள் செய்யக்கூடிய ஒன்றே ஒன்றுதான் உள்ளது. மூத்த தலைமுறை கவிஞர்கள் மற்றும் கவிதை வாசகர்களுடன் உறவு கொண்டிருப்பது. அவர்களின் அரங்குகளில் பங்கெடுப்பது. அவர்களுடன் விவாதத்தில் ஈடுபடுவது. அவர்களுடன் தொடர்ந்து கவிதை குறித்து உரையாடி தன்னை மேம்படுத்திக்கொள்வது. தமிழில் நான் அறிந்து சிலர் மிக எளிதாக சிறந்த கவிதையை கண்டுபிடிக்கவும், சற்று பிசிறடிக்கும் கவிதையை செம்மைப்படுத்தவும், ஒரு தொகுதிக்கு தேவையான  சரியான கவிதைகளைத் தேர்ந்தெடுக்கவும் திறன்கூடியவர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக லக்ஷ்மி மணிவண்ணன்.

விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதுபெற்ற மதார் மிக ஆரம்பநிலைக்கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தார். ஆனால் குறுகிய காலத்திற்குள் அவருக்கு நெல்லையிலும் குமரியிலும் இருகும் நல்ல கவிதை வாசகர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. அவர்களுடன் தீவிரமாக உரையாடலில் ஈடுபடுகிறார். அவருடன் கவிதைகளின் தரம் அதன் வழியாக மேம்படுகிறது. தொடர்ச்சியாக அவருடைய கவிதைகளின் மேல் ஓர் இலக்கிய கவிக்குழுவின் வாசிப்பும் விமர்சனமும் நிகழ்கிறது. அது அவரை மேம்படுத்துகிறது. ஒருகட்டத்தில் அவர் சிறந்த கவிதைகளை எழுதத் தொடங்குகிறார். அக்கவிதைகளிலிருந்து சிறந்த கவிதைகளைத் தெரிவு செய்து ஒரு தொகுதியாக லக்ஷ்மி மணிவண்ணன் கொண்டு வருகிறார். அத்தொகுதி இன்று தமிழகம் முழுக்க கவனிக்கப்பட்ட நூலாக உள்ளது.

இன்னொரு உதாரணம் ஆனந்த்குமார். ஓரிரு ஆண்டுகளுக்குள்ளேயே அவருடைய கவிதைகளின் தரம் மேம்பட்டதை அவருடைய கவிதைகள் தமிழகம் முழுக்க வாசகர்களால் ஏற்கப்பட்டதைக் கண்டேன். அவருடைய உருவாக்கத்திலும் லக்ஷ்மி மணிவண்ணனின் பங்களிப்பு உண்டு

ஆகவே ஒரே வழிதான் உள்ளது. கவிதை எழுதுவதும் இதழ்களுக்கு அனுப்புவதும் தேவைதான். ஏனெனில் இதழ்களின் ஆசிரியர்கள் கவிதைகள் வாசிப்பை ஒரு தெரிவை நிகழ்த்துகிறார்கள். அது இன்றியமையாதது. அதற்கு இணையாகவே உங்கள் கவிதைகளைக் கவனிக்கும் உங்கள் கவிதைகளின்மேல் தொடர் விவாதத்தை உருவாக்கும் மூத்த கவிஞர்களின் வாசகர்களின் வட்டத்தை அணுகுங்கள் அவர்களுடன் இருங்கள்

ஜெ

லக்ஷ்மி மணிவண்ணன் தமிழ் விக்கி

மதார் தமிழ் விக்கி

ஆனந்த்குமார் தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைபொன்னியின்செல்வனும், வரலாறும்
அடுத்த கட்டுரைசென்னையில் ஒரு படவிழா