கைதிகள், திரைப்படமாக

கைதிகள், நாடக வடிவம், திருவண்ணாமலை

கைதிகள் கதை படமாகிறதா என பல கேள்விகள். ஆமாம், படமாகிறது. அதற்குப்பின் ஒரு சுவாரசியமான கதை உண்டு. அதையே ஒரு கதையாக எழுதி படமாக்கலாம்.

ரஃபீக் இஸ்மாயில் என்னும் உதவி இயக்குநர் என்னை அணுகி கைதிகளை ஒரு குறும்படமாக எடுக்க அனுமதி கோரினார். நாற்பது நிமிட படம். சொந்தச்செலவில். அவர் பவா செல்லதுரை வழியாக என்னை அணுகினார். விஷ்ணுபுரம் விருது விழாவில் என்னை வந்து கண்டு அந்தக் கோரிக்கையை முன்வைத்தார். 2018 என நினைக்கிறேன்.

ரஃபீக் நெடுங்காலம் சினிமாவில் உதவி இயக்குநராக இருந்தவர். பல திரைப்பட முயற்சிகள். சில முயற்சிகள் பாதியிலேயே நின்றுவிட்டன என்றார். நான் அனுமதி கொடுத்தேன், ஒப்பந்தமெல்லாம் இல்லை. சொல்தான். 

ஆனால் அனுமதி கொடுத்த மூன்றாம் மாதம் மணிரத்னம் அதை படமாக்க அனுமதி கேட்டார்நவரசா வரிசையில் ஒன்றாக. ரஃபீக்குக்கு அனுமதி அளித்துவிட்டதைச் சொன்னேன். அதன் பின் சில மாதங்கள் கழித்து பாலா அதே கதையைக் கேட்டார். அனுமதி அளித்துவிட்டதைச் சொன்னேன்.

அதன்பின் வெற்றிமாறன் அதன் உரிமையை கேட்டார். அதை ரஃபீக்குக்கு அளித்துவிட்டதைச் சொன்னேன். ஒப்பந்தமெல்லாம் இல்லை என்றாலும், அவருடைய முதல்முயற்சி வெல்லட்டும் என எண்ணினேன்.

வெற்றிமாறன் கைதிகள் வேண்டும் என உறுதியாக இருந்தார். நீங்களே ரஃபீக்கிடம் பேசுங்கள் என்று நான் சொன்னேன். அவரே விட்டுக்கொடுத்தால் நல்லது, நான் சொல்ல மாட்டேன், அது அவர் சொத்து என்றேன். 

வெற்றிமாறன் சிரித்துக்கொண்டுநான் கேட்டாலே இந்தக்கதையோட வேல்யூ கூடிரும்தரவே மாட்டார். இருந்தாலும் டிரை பண்றேன்என்றார். 

வெற்றிக்காக அவர் நண்பர் சுப்ரமணியம் சிவா ரஃபீக்கிடம் பேசினார். ரஃபீக் தன் வாழ்க்கை இது, முடியாது என மறுத்துவிட்டார். அதை சுப்ரமணியம் சிவா என்னிடம் சொன்னார்.

அதன்பிறகுதான் துணைவன் கதையை வெற்றிமாறன் முடிவு செய்தார். அதுதான் இப்போது விடுதலை ஆக மாறியிருக்கிறது. படப்பிடிப்பு நடைபெறுகிறது.

ஆனால் ஒரு நல்லது நடந்தது, வெற்றிமாறன் சொன்னபடியே அவர் கேட்டதனாலேயே கைதிகள் கதையின் மதிப்பு கூடியது. டர்மெரிக் மீடியா அதை தயாரிக்க முடிவுசெய்திருப்பதாகவும், இரண்டரை மணிநேர திரைக்கதையாக விரித்தெடுப்பதாகவும் ரஃபீக் சொன்னார். ஒப்பந்தம் அனுப்பிவைத்தார். படப்பிடிப்பு தொடங்கியது.

ஆக, இப்போது இரண்டு போலீஸ் படங்கள். விடுதலையும், கைதிகளும் (பெயர் மாறக்கூடும்) விடுதலைக்கு வெற்றிமாறன் திரைக்கதை எழுதியிருக்கிறார். ரஃபீக் கைதிகளுக்கு திரைக்கதை எழுதியிருக்கிறார்.

விடுதலை நவம்பரில் வெளிவரலாம். தொடர்ந்து கைதிகளும் வெளிவரலாம். இரண்டுமே வெற்றிபெறவேண்டுமென விரும்புகிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைசு.வேணுகோபாலுக்கு தன்னறம் விருது
அடுத்த கட்டுரைசாரு, கடிதங்கள்