நெடுங்காலமாக கூகிளில் ஜெயமோகன் என்று தேடினால் ஜெயமோகன் ஒரு மனநோயாளி என்று ஒரு பேச்சுதான் கிடைக்கும். பலர் அதன்பின் உங்களை மனநோயாளி என எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். சமீபத்தில்கூட ஒரு விவாதத்தில் ஒருவர் விரிவாக தரவுகளுடன் அப்படி எழுதியிருந்தார்
நான் என் நண்பர்களுடன் ஒருமுறை பேசும்போது தவறிப்போய் உங்கள் பெயரைச் சொன்னேன். நாலைந்துபேர் ‘அவருக்கு கொஞ்சம் மெண்டல் இல்நெஸ் உண்டுல்ல?’ என்று சீரியஸாகவே கேட்டார்கள். நானும் ஆமாம் என்று சொல்லிவிட்டேன். அவர்களின் மனப்பதிவை நம்மால் மாற்ற முடியாது.
இப்போது சாருநிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டபோது சும்மா சாரு நிவேதிதா என்று இணையத்தில் தேடினேன். நாலைந்து பதிவுகளுக்குள் சிக்கியது சாரு நிவேதிதா மனநோயாளியா என்ற கட்டுரை. அதன்பின் இணையத்தில் பலர் அப்படி எழுதியிருப்பதைக் கண்டேன்.
இந்த ஒரு காரணத்தாலேயே சாரு விஷ்ணுபுரம் விருது பெறுவதற்குத் தகுதியானவர் என நினைக்கிறேன். ஏனென்றால் இந்த மனநோயாளி முத்திரை சாதாரணமானது அல்ல. ஐரோப்பாவில் ஒரு காலகட்டத்தில் சற்று சுதந்திரமாகச் சிந்திக்கும் அத்தனைபேரும் மனநோயாளி என்று முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். சோவியத் ருஷ்யாவில் எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் மனநோயாளி என்ற முத்திரைதான் குத்தப்பட்டது
ஓர் எழுத்தாளன் மனநோயாளி என்ற முத்திரையை பெறுவதென்பது மிக மிக முக்கியமானது. சேனிட்டி என்று அந்த சமூகம் ஒரு வட்டத்தை உண்டு பண்ணி வைத்துள்ளது. அதற்குள் வாழ்ந்தாகவேண்டும் என அத்தனைபேரையும் அது கட்டாயப்படுத்துகிறது. வாழாதவர்களை அது தண்டிக்கிறது. கண்ணுக்குத்தெரியும் ஒரு மாரல் வட்டம் உண்டு. அப்படி தெரியாத ஒரு சூட்சும வட்டம் இது.
எந்த ஒரு சமூகமானாலும் அதன் சூட்சுமமான அதிகாரத்தை சீண்டுபவனை மனநோயாளி அல்லது குற்றவாளி என்றுதான் சொல்லும். ஆனால் அப்படிச் சீண்டாமல் ஒரு நல்ல எழுத்தை உருவாக்கவும் முடியாது. அப்படி ஒரு சீண்டலை நீங்கள் நிகழ்த்தியிருப்பதைத்தான் இந்த மனநோயாளி முத்திரை காட்டுகிறது. வாழ்த்துக்கள.
ராஜேஷ் கிருஷ்ணகுமார்
*
அன்புள்ள ஜெ
சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் வாசிக்க ஆரம்பித்தபோதே சாரு உடனிருக்கிறார். இலக்கியம் என்பது போதிப்பதும் வழிகாட்டுவதும் அல்ல நம்மை நிலைகுலையச் செய்வதும் நம்வழியை நாமே தேடவைப்பதுமாகும் என்று காட்டியவர் சாரு. அவருக்கு இந்த விருது அளிக்கப்படுவதில் மகிழ்ச்சி. சாரு சுட்டிக்காட்டிய பல படைப்பாளிகளை என் வாசிப்பின் வழியாக கடந்து வந்துவிட்டேன். ஆனாலும் இன்றும் சாரு என் வாசிப்புக்குரியவராகவே நீடிக்கிறார். சாருவுக்கு என் வணக்கம்
ஜெயக்குமார் அருண்