சாரு, கடிதங்கள்

எழுத்தாளர் சாருவுக்கு இந்தவருட விருது அளிக்கப்படுவது தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அளிக்கிறது, மகிழ்ச்சி அவருக்கு இந்த விருது மூலம் கிடைக்கும் இலக்கிய அங்கீகாரம் பற்றி அல்ல.

ஏற்கனவே இந்த விருது சாஹித்ய அகாடமி விருதைவிட உயர்ந்ததாக கருதப்படுகிறது, ஆனாலும் இலக்கியத்தின் சில தரப்புகளை இந்த விருது இன்னமும் பொருட்படுத்தவில்லை என்ற பொருமல் சில நடுநிலையாளர்களிடம் உண்டு.  

வேத மறுப்பும் உள்ளடக்கியது தான் இந்திய மெய்யியல் மரபு. காமத்தை பழகும், பிணத்தை மெய்தேடலுக்கான கருவியாக உபயோகிக்கும் வாமாச்சார முறையையும் உள்ளடக்கியது தான் தாந்த்ரீக மரபு

அந்த வகையில் பிறழ்வெழுத்தையும் உள்ளடக்கி இந்த இலக்கிய விருது முழுமை அடைகிறது என்பதே என்னுடைய புரிதல், என் புரிதலும் இலக்கிய அறிவும் எல்லைக்குட்பட்டது.

சாகித்ய அகாடமியை நம் விருது என்றோ தாண்டி சென்றுவிட்டது, விருது வளர்ந்து ஞானபீடத்தையும் கடக்க வேண்டும் என்பதே என் ஆசை.

(வாமாச்சாரம் பற்றி : https://www.jeyamohan.in/762/)

சங்கர் பி

அன்புள்ள ஜெ

சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுவது எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அளிக்கிறது. என் வரையில் என் மனதில் ஓஷோவுக்குச் சமானமான ஒரு இடம் சாருவுக்கும் உண்டு. நான் ஒரு சின்ன குடும்பத்தில் வளர்ந்தவன். செண்டிமெண்டுகள்தான் எங்களுக்கெல்லாம் சங்கிலி. அம்மா செண்டிமெண்ட், அப்பா செண்டிமெண்ட், தங்கை செண்டிமெண்ட். அதோடு சாதி, மதம், திமுக அரசியல். எல்லாம் சேர்ந்து என்னை மூச்சுத்திணறச் செய்யும் காலத்தில்தான் சாருவும் ஓஷோவும் அறிமுகமானார்கள். நான் கட்டுண்டிருக்கிறேன் என்பதையே நான் அவர்கள் வழியாகத்தான் அறிந்தேன். சாரு எனக்கு அறிமுகம் செய்த எழுத்தாளர்கள் ஒருவகை. ஓஷோ அறிமுகம் செய்த எழுத்தாளர்கள் இன்னொரு வகை. நான் அவர்கள் வழியாக சென்றேன், எனக்கான வழியை நான் கண்டுகொண்டேன். ஆனால் இன்றைக்கு நம் முன் செண்டிமெண்டுகளையும் டாபூக்களையும் களைந்து வெளியே செல்ல இளைஞர்களுக்கு வழிகாட்டுபவர்கள் இவர்கள் இருவரும்

செல்வராஜ்.எஸ்

முந்தைய கட்டுரைமேற்கத்திய இசைரசனைப் பயிற்சி முகாம், அறிவிப்பு
அடுத்த கட்டுரைவின்ஸ்லோ, அகராதி அறிஞர்