திரு ஜெயமோகன் அவர்களுக்கு என் வணக்கங்கள்.
என் பெயர் தீபிகா அருண். கதை ஓசை (www.kadhaiosai.com) எனும் என் போட்காஸ்ட் தளத்தில் கடந்த 3.5 ஆண்டுகளாக பல கதைகளை ஒலிவடிவில் பதிவிட்டு வருகிறேன். நீங்கள் எழுதிய யானை டாக்டர், டார்த்தீனியம் உள்ளிட்ட சில கதைகளையும் பதிவிட்டுள்ளேன்.
பொன்னியின் செல்வன் நாவலை 2 வருடங்களுக்கு முன் பதிவிடும்போது கிட்டத்தட்ட 1.5 ஆண்டுகள் அந்த புதினத்தின் கதாபாத்திரங்களோடு வாழ்ந்த அனுபவத்தில் கிடைத்த ஒரு யோசனையை இப்போது செயலாக்கம் செய்துள்ளேன்.
பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களைக் கொண்டு கார்டு கேம் ஒன்றை வடிவமைத்து இப்போது விற்பனைக்கு வெளியிட்டுள்ளேன் (www.timerollgames.com). நம் சோழர்களின் பெருமையை வெவ்வேறு வடிவில் உலகத்தாரிடம் எடுத்துச் செல்லவேண்டிய கடமை நம் ஒவ்வொருவரிடமும் உண்டு என்பதை நீங்கள் பொன்னியின் செல்வன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் அருமையாக கூறியிருந்தீர்கள். எப்படி உலகமெங்கும் ஹார்ரி பாட்டரையும், அவென்ஜ்ர்சயும் கொண்டாடுகிறார்களோ அது போல் நம் தமிழ் அரசர்களையும், இலக்கியங்களையும் கொண்டாட என்னால்
முடிந்த ஒரு சிறு முயற்சி இந்த விளையாட்டு. இத்துடன் விளையாட்டின் சில புகைப்படங்களையும் இணைத்துள்ளேன்.
பொன்னியின் செல்வன் புதினத்தின் பாத்திரங்களாக நடித்து, அறிவுக்கூர்மையையும் திறமையையும் உபயோகித்து சக வீரர்களை வென்று அடுத்த சோழ பேரரசரை தேர்வு செய்யும் ஒரு சிறந்த இராஜதந்திரியாக மாறுவதே இவ்விளையாட்டின் குறிக்கோள்!.பொன்னியின் செல்வன் கதையை அறிந்தவர்கள் வெகு உற்சாகமாக இவ்விளையாட்டை விளையாடலாம் ஆனால் கதையை அறியாதவரும் எளிதாக ஆடும் வகையிலேயே இவ்விளையாட்டு அமைக்கப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பு.
இந்த முயற்சிக்கு உங்கள் அன்பும் ஆசிகளையும் கோரும்,
தீபிகா அருண்