கே.ஆர்.எஸ்- கடிதம்,விளக்கம்

கே.ஆர்.எஸ் – கல்வித்தகுதிகள்

அன்புள்ள ஜெ

கேஆர்.எஸ். என்னும் பெயரில் எழுதி வந்த கண்ணபிரான் ரவிசங்கர் பற்றி ஒரு கேள்விக்கு அவருடைய தமிழறிவு மீதான மதிப்புடன், அவர் தேவநேயப் பாவாணரின் மரபினர் என்று எழுதியிருந்தீர்கள். அவருடைய டிவீட்களை சுட்டி அனுப்பியிருக்கிறேன். தயவுசெய்து இவற்றையும் பார்க்கவும். இதுதான் பாவாணர் மரபா? நானும் பாவாணரின் தனித்தமிழ் மரபைச் சேர்ந்தவன்தான்.

அழகு மாணிக்கவாசகம்

***

அன்புள்ள அழகு,

இந்த டிவீட்களை பார்க்க எனக்கு வாய்க்கவில்லை. பொதுவாக சுட்டிகளை கிளிக் செய்து முழுக்கப்படிப்பது நான் இன்று இருக்கும் பரபரப்பில் இயல்வது அல்ல. இவற்றை நீங்கள் அனுப்பியமைவால் வாசித்தேன். வருத்தமாக இருந்தது.

கே.ஆர்.எஸ் தமிழ் பற்றி எனக்கு எழுதிய கடிதம் வழியாக எனக்கு அறிமுகம். சில மொழிசார்ந்த விவாதங்களில் அவருடைய அடிப்படைவாத அணுகுமுறையை கவனித்திருக்கிறேன். அவருடைய இந்த டிவீட்டுகள் அவருக்கும் அவர் முன்னோடி என நினைப்பவர்களுக்கும் இழிவைச் சேர்ப்பவை.

நான் எதிர்நிலையைச் சொல்லவில்லை. அதை நான் புரிந்துகொள்கிறேன். அந்த எதிர்நிலையை முன்வைத்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தமிழ்விக்கி அளித்துள்ள முக்கியமான இடமே எங்கள் நிலைபாட்டை காட்டுவது. இவை மிகமிக மலினமான ரசனையும் நாகரீகமறியாத மூர்க்கமும் கொண்டவை. வருந்துகிறேன், அவருக்காக. ஒவ்வொருவருக்கும் இருக்கும் முதற்கடமை தன் தந்தை, தன் குரு என்னும் இருசாராரின் பெருமையை காப்பாற்றுவதே.

வேறொன்றும் இனி இதில் சொல்வதற்கில்லை.

ஜெ

முந்தைய கட்டுரைவிடுதலை, ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைசாரு,கடிதங்கள்