சாரு,கடிதங்கள்

 அன்பின் ஜெ!

ஒரு திருமணத்தில்  மணமகன் / மணமகள் – ஏதேனும் ஒரு தரப்பிலிருந்து நாம் பங்கெடுத்திருப்போம். மாப்பிள்ளை/ பொண்ணு இரண்டுமே சொந்தமாக இருந்துவிடுவது விதிவிலக்கு. ஒரு இலக்கிய வாசகனாக விஷ்ணுபுரம் என்பது என் சொந்த இடத்தை போல உணர வைக்குமிடம், அதில் பெரிதாக எந்த கடமைகளிலும் இதுவரை என்னை ஈடுபடுத்திக் கொண்டதில்லை, 2019-ஆம் ஆண்டு (விருது கொடுத்த போதும்) அபியின் வாசகனாக நான் அங்கு வரவில்லை,

ஒரு தாதா இன்னொரு தாதாவுக்கு கொடுத்த கேக் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் 2022 ஆண்டுக்கான விருது சாரு நிவேதிதாவுக்கு என்கிற அறிவிப்பு என் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது.

சாருவையும்கூட முப்பதாண்டுகளாக வாசித்துக் கொண்டிருக்கிறேன், அப்பொழுதெல்லாம் – அதாவது 90-களில் தாங்கள் திருப்பத்தூரிலும், சாரு வேலூரிலும் அரசு ஊழியர்களாக இருந்தனர் என்பது என்னைப் போன்ற (பழைய வட ஆற்காடு) ஆட்களுக்கு முக்கியமான செய்தி. சிற்றிதழ்களின் வழியாக அப்பொழுதே தங்கள் இருவருடைய இலக்கிய எழுத்தின் வகை எனக்குப் பிடிபடத் தொடங்கிவிட்டிருந்தது. இந்த முறை சாருவின் வாசகனாக கோவை விழாவுக்குச் செல்லலாம் என்றிருக்கிறேன்.

விஷ்ணுபுரத்தை, வெண்முரசை எழுதிய தாங்கள்  – அந்த கதையாடல் அனைத்தையும் கவிழ்த்துப் போட்டு எதிர்முனையில் எழுதி வந்த ஒருவருக்கு வழங்க முன்வருவது விஷ்ணுபுர அமைப்பின் பரந்த மனப்பான்மைக்கும், பன்முகத்தன்மைக்கும் எடுத்துக்காட்டான தேர்வும்கூட. இரண்டு மாதம் முன்பே தாங்கள் சொல்லிவிட்டதாக சாரு கூறுகிறார். இரகசிய காப்பு பிரமாணமெல்லா அவருக்கு அது பெரிய சிரமம் – நல்லவேளை தலைவெடிக்கவில்லை, பாவம் சாரு!

ஆனால் தாங்கள் அதிகாரப்பூர்வமாக சொல்லாத, அடுத்து பத்து ஆண்டுகளுக்கான பெயர் பட்டியல் என்னைப் போல பலரிடமும் கைவசமுள்ளது, என்ன –வரிசை கிரமம்தான் சற்று முன் / பின் என மாறும், அதனால் சாருவின் பெயரைப் போல இன்னும் சிலரின் பெயரை நாம் ஒருவாறு யூகித்துவிடக் கூடிய ஒன்றுதானே. அதுகூட இத்தனை ஆண்டு இலக்கிய வாசிப்பில் அறிய முடியா விட்டால் எப்படி?

சாருவுக்கு விருது கொடுக்கச் சொன்ன காரணம் மிக முக்கியமானது, transgressive writing . சாருவுடைய பிறழ்வெழுத்துக்களின் உச்சம் “ஔரங்கசேப்” – டெல்லியின் பழைய பெயர் அஸ்தினாபுரம் என்பார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளாகவே அது பல பேரரசுகளை கண்ட தலைநகரம். அங்குள்ள வீதி ஒன்றுக்கு வைக்கப்பட்டிருந்த பெயரை இன்றுள்ள அரசர்கள் வேறு பெயருக்கு மாற்றிவிட்டதை எல்லாம் நாம் பார்த்துக் கொண்டுதான் உள்ளோம்,.

இந்திய ஆன்மிக பெருமரபில் 108 என்பது மங்கல எண். அது வந்துவிடக் கூடாதென்றோ, என்னமோ – சுந்தர ராமசாமி எழுதிய – ஒருவேளை அந்த எண்ணிக்கையே போதெமென்று சொல்லி வைத்து நிறுத்தியதைப் போலவே பசுவய்யாவுக்கு 107 கவிதைகள். 1931-ல் பிறந்த சுந்தர ராமசாமியும் 1953-ல் பிறந்த சாரு வரை எழுத்து என்பதே கலகச் செயல்பாடுதான், ஆகவே ஒன்றைக்கூட்டி 109 அத்தியாயங்களாக எழுதிய புது நாவல் ஔரங்கசேப். அரக்கனாக சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவருக்கு நாயகன் பாத்திரமளித்து எழுதுவதற்கு சாருவை விட்டால் வேறு யார் இங்கு (தமிழில்) உள்ளனர்?

இந்திய மொழிகளிலேயேகூட உண்மையிலேயே சாருவிடம்தான் அந்த கெத்து உள்ளது. அந்த நாவல் bynge-யில் வந்துக் கொண்டிருந்தபோது உடனுக்குடன் படித்து கருத்துச் சொல்வதிலிருந்து – சாருவுடன் தொடர் உரையாடலில் இருந்திருக்கிறேன். 2021 மத்தியில் கொரானொ பெருந்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக இருந்த நேரம், என் தாயாரும் இயற்கை எய்தியிருந்த வெறுமை படர்ந்த சூழலில் சாருவின் ஔரங்கசேப் வெளியாகத் தொடங்கியது. கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் சாரு இந்த நாவலுக்கு படித்த நூல்களில் சற்றேறக்குறைய 50 / 60 நானும் புரட்டிப் பார்த்திருப்பேன். அந்த வகையில் அதுவொரு இணையோட்டம்.

இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விழாவில் – ஏற்பாட்டாளர்கள் சார்பாகவும், விருதாளர் சார்பாகவும் கலந்துக் கொள்ளும் அரிய வாய்ப்பு அமைந்திருக்கிறது, மாப்பிள்ளை / பொண்ணு இரண்டு தரப்பு சொந்தம் என்பதுபோல…

மிக்க நன்றி ஜெ!

கொள்ளு நதீம், ஆம்பூர்.

***

அன்புள்ள ஜெ

சாருவிற்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்படுவது நிறைவளிக்கிறது. நான் எப்போதுமே சூழலில் எதிர்பார்ப்பது இதைத்தான். இலக்கியம் எல்லா வம்புகளுக்கும் அப்பால் அதற்கான தனிமதிப்பீடுகளுடன் நிலைகொள்ளவேண்டும். சாரு நிவேதிதாவையும் உங்களையும் வம்புகள் வழியாகவே அறிந்தவர்களின் பேச்சுக்களைக் கடந்து இந்த விருது அடுத்த நூறாண்டுக்குப் பேசப்படும்

எஸ்.கௌதம்

***

முந்தைய கட்டுரைகே.ஆர்.எஸ்- கடிதம்,விளக்கம்
அடுத்த கட்டுரைஇரா.மீனாட்சி, அடைதலும் இழத்தலும்