தத்துவக்கல்வி, ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ,

நலமாகவே இருப்பீர்கள் (அருண்மொழி அக்கா இருக்கும்பொழுது கவலை என்ன?)

உங்கள் தத்துவ வகுப்பு தொடர்பாக ஒரு விண்ணப்பம். இதை  virutal வகுப்பாக நடத்த இயலுமா அல்லது குறைந்தபட்சம் கட்டணத்துடன் கூடிய youtube access வழங்க முடியுமா? (இது வெளிநாடுகளில் வாழுபவர்களுக்கு உதவியாக இருக்குமே)

மேலும் ஒரு விடயம் மற்ற மதங்களை ஒப்புநோக்கில் நம் இந்து மதத்தில் அதிகப்படியான சடங்குகள் உள்ளன. உதாரணத்திற்கு கோவில் கருவறை சாத்தியபிறகு நடைபெறும் ஒரு சடங்கு.. (விளக்குடன் கோவிலை சுற்றி வருதல்)

இந்த காலத்திற்கு ஏற்றவாறு இதை மாற்றி அமைக்க ஏதேனும் செய்ய தாங்கள்எழுதுவீர்களா?இந்த கேள்வி சரியா என நான் அறியேன்..

தங்கள் நேரத்திற்கு நன்றி !!

அன்புடன்
ரமேஷ்

***

அன்புள்ள ரமேஷ்

தத்துவ முகாம்களை அப்படி இணைய ஊடகத்தில் நடத்த முடியாது. நான் உத்தேசிப்பது தத்துவ அறிமுகம் அல்ல. தத்துவப் பயிற்சி. அதற்கு நேருக்குநேர் சந்திப்பு, தெளிவான காலத்திட்டமிடல், திட்டவட்டமான பாடத்திட்டம் ஆகியவற்றுடன் அதற்கு மட்டுமே உரிய இடத்தில் தங்குவதும் அவசியம். கண்டிப்பான நேரடிக் கண்காணிப்பு இன்றி அது இயல்வதே அல்ல.

ஒன்று செய்யலாம், வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு அவர்களுக்காக தனியான நேரடி வகுப்புகளை அங்கே ஏற்பாடு செய்யலாம். ஒவ்வொரு சந்திப்பும் ஒரு வாரம் என்னும் கணக்கில். ஆனால் இப்போது அதற்கான நிதிவாய்ப்புகள் இல்லை என நினைக்கிறேன்

சடங்குகள் இல்லாமல் எந்த மதமும் இல்லை. தத்துவத்தை அன்றாட நடைமுறையாக ஆக்குவதற்குரிய குறியீட்டுச் செயல்களே சடங்குகள். நீண்ட வரலாறு கொண்ட, தொல்குடிப் பாரம்பரியம் கொண்ட மதங்களில் கூடுதலான சடங்குகள் இருக்கும்.

தத்துவம் ஏன் பயிலவேண்டும் என்றால் இதற்காகவே. நமக்கு தெரியாத ஒன்றை மாற்றியமைக்கவேண்டும் என்று பேசுகிறோம் இல்லையா? தெரிந்துகொள்ள முயல்வதன் பெயதான் தத்துவக்கல்வி

ஜெ

முந்தைய கட்டுரைகணக்கும் காதலும்
அடுத்த கட்டுரைசடங்குகள் தேவையா? -கடிதம்