சாரு, கடிதங்கள்

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி 

அன்புள்ள ஜெ,

சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி. இது எந்தவகையான விவாதங்களை உருவாக்கும் என்று சொல்லமுடியாது. ஆனால் தமிழிலக்கியத்தின் சரித்திரத்தைப் பார்த்தால் எப்போதுமே ஒரு விஷயத்தைக் கவனிக்கலாம். மாறுபட்ட துருவங்களுக்கு ஒருவர்மேல் ஒருவர் ஆர்வம் இருந்துகொண்டிருக்கிறது. சுந்தர ராமசாமிக்கு எப்படி ஜி.நாகராசன் மேல் ஆர்வமிருந்ததோ அப்படி.

நவீன இலக்கியமென்பது ஒரு குறிப்பிட்ட அழகியலோ மதிப்பீடோ கொண்டது கிடையாது. அதில் எல்லாவகையான அழகியலுக்கும் மதிப்புண்டு. அது வைத்திருக்கும் அளவுகோல் அதற்குரிய வடிவை அது அடைகிறதா, அது என்ன விளைவை உருவாக்குகிறது என்பதுதான். சாரு ஒரு rupture ஐ உருவாக்கும் எழுத்தாளர். அவருடைய எழுத்து ஒரு மாதிரியான menace என்றுதான் சொல்லவேண்டும். நம் உறைந்துபோன கலாச்சாரத்துக்கு அவர் ஒரு தொந்தரவு.  அதுவும் கலையின் ஒரு பணிதான்.

ஜி.சுந்தரராஜன்

***

அன்புள்ள ஜெ,

சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது எதிர்பார்த்ததுதான். 2016ல் சிங்கப்பூரில் சந்தித்தபோதே அவருக்கு விருது வரிசையிலிருப்பதாகச் சொன்னீர்கள். சாருவின் எழுத்து தொடங்குவது புதுமைப்பித்தனின் விபரீத ஆசை என்ற கதையில் (அதைவைத்துத்தான் மலேசியாவில் ஒரு பெரிய சர்ச்சையே நடைபெற்றது) அதன்பிறகு கரிச்சான்குஞ்சு. ஜி.நாகராஜன், தஞ்சை பிரகாஷ் என்று ஒரு மரபு உண்டு. அந்த மரபுக்கு இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன்.

கே. முருகபூபதி

***

முந்தைய கட்டுரைதிராவிட இயக்கமும் மறக்கப்பட்ட பிள்ளைகளும்
அடுத்த கட்டுரைசந்திப்புகளில் பரிசு