சாரு, கடிதங்கள்

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி 

அன்புள்ள ஜெ,

சாரு நிவேதிதாவுக்கு இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பது ஓர் இனிய ஆச்சரியம். ஆனால் அதில் அவ்வளவு ஆச்சரியப்படவும் ஏதுமில்லை. இவ்விருதை தொடங்கும்போதே நீங்கள் சொன்னதுதான், இவ்விருது ஓர் இலக்கியமரபை உருவாக்கும் நோக்கம் உடையது அல்ல. இது ஒரு குறிப்பிட்ட வகையான இலக்கிய அழகியலுக்கு அளிக்கப்படும் விருதும் அல்ல. இது நவீனத் தமிழிலக்கியத்திற்கு அளிக்கப்படும் விருது. அவ்வகையில் பார்த்தால் சாரு நிவேதிதாவுக்கு இது அளிக்கப்பட்டே ஆகவேண்டும். இந்த முடிவு மிகமிக முக்கியமான ஒரு சமிக்ஞை. நீங்கள் ஏற்காத ஓர் எழுத்துமுறைக்கும் கூட விஷ்ணுபுரம் விருதில் இடமுண்டு என்பது ஒரு பெரிய செய்தி.

சாரு நிவேதிதா ஓர் இலக்கிய ஆளுமையாக நாற்பது ஆண்டுகளாக இங்கே இருக்கிறார். நான் அவரை வாசித்தது நான் டெல்லியில் வேலைபார்த்த காலத்தில் அவர் ஷார்த்ர் பற்றி எழுதிய ஒரு சின்ன நூல் வழியாகத்தான். இன்றைக்கு பல எல்லைகளைக் கடந்திருக்கிறார். பலகோணங்களில் எழுதிக்கொண்டிருக்கிறார். அவருடைய சீரோ டிகிரி, எக்ஸைல் இருநாவல்களும், நிலவுதேயாத தேசம் என்னும் பயணக்கட்டுரைநூலும், பழுப்புநிறப் பக்கங்கள் என்னும் இலக்கிய அறிமுக நூலும் முக்கியமான படைப்புகள் என்பது என் வாசிப்பில் நான் உணர்வது.

ஜி.ஞானசம்பந்தன்

***

அன்புள்ள ஜெயமோகன்,

சாரு நிவேதிதாவுக்கு இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விருது என்பது ஆச்சரியம். ஆனால் இந்த விருதுவரிசையைக் கவனித்தால் நீங்கள் பொதுவாக எழுதிவரும் விமர்சனங்களின் அடிப்படையிலேயே அளிக்கப்படுகிறது என்று தெரிகிறது. வயதுதான் வரிசையை தீர்மானிக்கிறது. சீரோ டிகிரி வெளிவந்த காலகட்டத்தில் அதைப்பற்றி முழுமையான கோணத்தில் பாராட்டி எழுதிய தமிழ் விமர்சகர் நீங்கள். சொல்புதிது இதழில் என நினைக்கிறேன்.

தனிப்பட்ட முறையில் பலருக்கும் சாரு நிவேதிதா மீது ஒரு கசப்பு உண்டு. அவர் வேண்டுமென்றே அந்த கசப்பை உருவாக்கிக்கொள்கிறார் என்றும் தோன்றும். ஆனால் இந்த விருது எல்லாவகையிலும் தகுதியான ஒன்று. தமிழிலக்கியத்தின் விரிந்த பரப்பில் ஒரு முக்கியமான படைப்பாளியாக அவருக்கு இடமுண்டு.

பாராட்டுக்கள்

ஜே.எஸ்.

முந்தைய கட்டுரைபுத்தகங்கள் தேடிவருமா?
அடுத்த கட்டுரைபிரம்மானந்தர், வேதாந்தம் -கடிதம்