நாணயத்தின் மதிப்பு

அன்புள்ள ஜெ,

நலம். வாழ்க்கையை பற்றியும் அதன் பொருளைப் பற்றியும் அரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு சமீப காலமாக அதிகம் இருந்து வருகிறது. வாழ்க்கையை எவ்வாறு அணுக வேண்டும் என்று என்னை நானே கேட்பதுண்டு. சிறிய எண்ணம் கொண்டவர்களை பார்க்கும் போது வாழ்க்கை இவ்வளவு தானா என்று எண்ண தோன்றுகிறது.

நான் என் கல்லூரி படிப்புகள் முடிந்ததும் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிக்கு சென்றேன். எனக்கு அந்த வேலை பிடித்து இருந்தாலும், மாதம் போதிய சம்பளம் வந்தாலும், என்னால் அங்கு சரிவர பொருந்த முடியவில்லை. சில ஆண்டுகள் பொருந்தாத பல நிறுவனத்தில் மாறி மாறி என் கால்களை ஊன்ற முயன்றேன். பின்னர் பல தயக்கங்களுக்கு  பிறகு,  ஐடி வேலையே வேண்டாம் என விட்டு விலகினேன். இப்போது ஒரு கல்லூரியில் பகுதி நேர பேராசிரியராக பணியாற்றி வருகிறேன். ஆனால் இங்கும் என்னால் என் கால்களை ஊன்றி கடைசிவரை இதே வேலையில் இருக்க முடியாது என்று தோன்றிவிட்டது.

இப்படி எந்த வேலையாக இருந்தாலும் சிறிது காலத்திற்கு பின்பு ஒரு அலைகழிப்பு ஏற்பட்டு விடுகிறது, ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது. என் தந்தை ஒரே அலுவலகத்தில் 35 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார், ஆனால் என்னால் சில காலம் கூட தாக்கு பிடிக்க இயலாது. இது சரிதானா? என் தேடல் என்ன என்று எனக்கு பிடிபடவில்லை. ஆனால் தேடுவது மட்டுமே தான் வாழ்க்கையா?

நன்றி,

ஷர்மிளா.

*

அன்புள்ள ஷர்மிளா,

உங்கள் வாழ்க்கையில் உள்ள இதே பிரச்சினையை பலரும் என்னிடம் சொல்லுவதுண்டு, குறிப்பாக இந்த தலைமுறையினர்.

அவர்களின் முந்தைய தலைமுறையினருக்கு இது ஒரு பிரச்சினையாகவே தெரிந்திருக்காது. வேலை என ஒன்று கிடைக்கவேண்டும். அதில் குறைவான உழைப்பு, நிரந்தரத்தன்மை, போதிய ஊதியம் இருக்கவேண்டும். அவ்வளவுதான், வாழ்க்கை நிறைவடைந்துவிட்டது. அவர்கள் எவரும் வேலையில் நிறைவு என சிந்தனைசெய்தவர்கள் அல்ல. அவர்களுக்கு வேலை என்பது மகிழ்ச்சியோ மனநிறைவோ கொள்ளத்தக்கது என்னும் நினைவே இல்லை.

ஏன்? ஏனென்றால் வேலை என்பது அவர்களுக்குக் காகிதப்பணம் போல. அதற்கென தனிமதிப்பென ஏதுமில்லை. அந்த பணத்தைக் கொண்டு வாங்குவனதான் அவர்களுக்கு முக்கியம். அந்தப் பணத்தின் மதிப்பு அதுதான். அந்த வேலையைக்கொண்டு அவர்கள் சமூக அந்தஸ்து, நிலையான சீரான வாழ்க்கை ஆகியவற்றை அடைந்தனர். குடும்ப கடமைகளைச் செய்தனர். ஆகவே நிறைவுற்றிருந்தனர்.

நீங்கள் செய்வதென்ன, இந்தக் காகிதப்பணத்தால் என்ன செய்வது என திகைக்கிறீர்கள். அதைவைத்து காதுகூட குடையமுடியாதே என்கிறீர்கள். நீங்கள் வெள்ளிநாணயத்தை பெற்றீர்கள். அதன்பின் தங்கத்தை நாடினீர்கள். அடுத்து பிளாட்டின நாணயம் தேவைப்படும். அது நிறைவே இல்லாத பாதை. அந்தப் பணத்தால் எதை வாங்குவதென்று யோசியுங்கள்.

இந்தியாவில் அல்ல, முதலாளித்துவம் திகழும் எந்நாட்டிலும் வேலை என்பது வாழ்க்கை அல்ல, வாழ்க்கைக்கான நிபந்தனை மட்டுமே. வேலையை கொண்டு நாம் ஈட்டிக்கொள்வன என்னென்ன என்பதே வேலையின் மதிப்பு. முதன்மையாக உலகியல் அலைக்கழிப்புகளும் போராட்டங்களும் இல்லாத வாழ்க்கை. உணவு, உடை,உறைவிடம், சமூகநிலை ஆகிய அடிப்படைகளுக்காகவே நாம் முதன்மையாக வேலை செய்யவேண்டும். அந்த அடிப்படைகளுக்காக ஒருவர் போராடும் நிலை இருந்தால் அவர் வாழவில்லை, பிழைக்கிறார். வெறுமே காலந்தள்ளுகிறார். வாழ்க்கை முழுமையாகவே பொருளில்லாமலாகிப்போகும் நிலை அது.

அதன்பின் மேலதிகமாக வேலை நமக்கு ஈட்டித்தருவது, நமக்கான நேரத்தை. நமக்கான பயணங்களை. நமக்கான ரசனைகளையும், நமக்கான அறிவுத்தேடலையும், நமக்கான ஆன்மிக நிறைவையும் நாம் தேடிச்செல்வதற்குரிய பொருளியல் விடுதலையை. பொருளியல் பின்புலம் இல்லை என்பதனாலேயே இவையனைத்தையும் அடையமுடியாமல் சிக்கிக்கொண்டவர்களே நம்மில் முக்கால்வாசிப்பேர்.

இவற்றையெல்லாம் நாம் ஈட்டிக்கொள்வதற்கு உதவுவது பணம், பணத்தை அளிப்பது வேலை. ஆகவே வேலையே ஒரு ‘கரன்ஸி’தான். வேலையைக்கொடுத்து இவை அனைத்தையும் வாங்கலாம். என்ன சிக்கல் என தெரிந்திருக்கும், நீங்கள் அவை எவற்றையும் வாங்க முயலவில்லை. வேலையை மட்டுமே செய்கிறீர்கள்.

முதலாளித்துவ அமைப்பில் எந்த வேலையுமே நம் ஆற்றலை நாம் விரும்பாமலேயே நம்மிடமிருந்து எடுத்துக்கொள்வதாகவே இருக்கமுடியும். நான் எனக்கு இயல்பான, விருப்பமான வேலையை இன்று செய்கிறேன். சினிமாவுக்கு எழுதுகிறேன். ஆனாலும் அது எனக்கு நிறைவளிக்கும் செயல் அல்ல. அது என் வேலை. அதை செய்வதனால் என் பணி என நான் செய்யும் பலவற்றைச் செய்யும் நேரத்தை, செல்வத்தை ஈட்டிக்கொள்கிறேன். நான் நிறைவுறுவனவற்றைச் செய்கிறேன்

நான் இருபதாண்டுகள் மிகமிகச் செயற்கையான ஒரு வேலையைச் செய்தவன்.எப்படி அதைச் செய்தேன்? என் நெறிகள் ஒரே ஒரு அடிப்படையில் அமைந்தவை. அந்த வேலைக்காக நான் வாழவில்லை. நான் வாழ்வதற்காக அதைச் செய்கிறேன். என் இன்பமும் வெற்றியும் நிறைவும் வேறு களங்களில். அதை நான் எய்துவதற்கான நிபந்தனை அந்த வேலை.

உங்கள் இடத்தில் நான் இருந்தால் அந்த வேலையை எவ்வளவு எளிதாக, எவ்வளவு குறைந்தபொழுதில் செய்து முடித்து விடுபடுவது என்பதையே நான் கவனிப்பேன். அதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாக என் உள்ளத்தை அளித்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறப்பாகச் செய்யவே முயல்வேன். அதைச் சிக்கலாக்கிக் கொள்ளும் எதையும் செய்யமாட்டேன். ஆகவே அதில் ஆணவத்தை கலக்க மாட்டேன். அந்தக் களத்தில் உறவுச்சிக்கல்கள், பூசல்களை இழுத்துப்போட்டுக்கொள்ள மாட்டேன்.

நீங்கள் உங்கள் வாழ்க்கையை மகிழ்வும் நிறைவும் கொண்டதாக ஆக்கும் எதையாவது செய்கிறீர்களா? என் பார்வையில் கற்றல்தான் உலகில் நாம் அடையும் இன்பங்களில் முதன்மையானது. ஒவ்வொரு நாளும் எதையாவது கற்கிறீர்களா? அதில் உங்கள் முழு அகஆற்றலையும் செலவழிக்கிறீர்களா? ஒவ்வொருநாளும் அறிவில் ஒருபடியேனும் மேலே செல்கிறீர்களா? கற்றலின் உச்சநிலை என்பது இயற்றல். எதையாவது எழுதுகிறீர்களா? இதை நான் செய்தேன் என்று சொல்லும்படியாக? எழுதுவதுதான் கற்றலுக்குச் சிறந்த வழி.

அடுத்தபடியாக இன்பம் என்பது பயணம். இயற்கையின் அருகே இருத்தல். அதற்கு அடுத்தது இணையுள்ளம் கொண்ட நண்பர்களுடன் இருத்தல். அனைத்துக்கும் மேலானது ஆன்மிகமாக அகம் நிறைதல். நம் அகத்தை நாமே கூர்ந்து நோக்குதல், அதை நிறைவடையச்செய்யும் செயல்களுக்குக் கொண்டுசெல்லுதல். அதைச் செய்கிறீர்களா?

இல்லை என்றால் நீங்கள் கையில் கிடைத்த கரன்ஸியை காகிதமாகவே வைத்திருக்கிறீர்கள். காகிதத்தை என்ன செய்வதென கேட்கிறீர்கள். சிலகாலம் முன்பு ஒரு முதியபெண் மறைந்தார். அவருடைய தலையணை முழுக்கமுழுக்க கரன்ஸி நோட்டுகளால் நிரப்பப்பட்டிருந்தது. பல லட்சம் ரூபாய். வாழ்நாள் முழுக்க கிடைத்த ரூபாயை முழுக்க அதற்குள் திணித்து தலைக்கு வைத்துக்கொண்டு அகப்பட்டதைத் தின்று திண்ணையிலேயே வாழ்ந்திருக்கிறார் அந்தப் பாட்டி.

ஜெ

முந்தைய கட்டுரைஆ.மாதவன், உயிர்த்தெழுதல்கள்
அடுத்த கட்டுரைசோற்றுக்கணக்கு, ஒரு கடிதம்