இரண்டு மொழிக்கட்டுமானங்கள்.

இனிய ஜெயம்

நண்பர்கள் அவ்வப்போது என்னுடன் விளையாடும் நோக்கில் ஏதேனும் செய்வார்கள். அந்த வகையில் நேற்று ஒரு நண்பர்,  பெயர் நீக்கப்பட்ட இரண்டு கவிதைகளை வாட்ஸாப்பில் அனுப்பி எனது மதிப்பீட்டில் இரண்டில்  முதல் தர கவிதை எது அடுத்த தர கவிதை எது என்று வினவி இருந்தார்.

அந்த கவிதைகள் கீழே

ஞாபகத் தைலக்காடுகளின்
சேமிப்பு அடுக்குகளில்
ஒற்றை நாணயத்தைப்போல் இருக்கிறேன்.

யாதுமற்று சிதறிக்கிடக்கிறது.
அடுக்கில் இருந்தபோது
மியூசியம் போல் இருந்தவை
இப்போது இடுகாட்டு என்புகளைப்போல்
பேகொள்ளச் செய்கிறது.

இதமான ரகசிய நாணயங்கள் கூட
அழிந்து கிடக்கிறது.

எனக்கு ஒன்றுதான் தேவை.
கடலைப்பூட்டி எங்கே வைத்தேன் சாவியை என்று ஞாபகமில்லை.

உங்களுக்குத் தெரிந்தால் கொஞ்சம் நினைவூட்டுங்கள்
அல்லது எடுத்துத்தாருங்கள்.

எல்லோரும் காத்திருக்கிறார்கள்.

இன்னொன்று

வரைபடத்திலிருந்து
தன் பெற்றோர்களை அறிமுகப்படுத்துகையில் 

கையிலிருக்கும் பிடித்தமான பூவொன்றைப் பற்றி யாரிடமும் கூறுவதேயில்லை அவ்வரைபடத்திலிடம்பெறாத ஓரு தம்பியுமுண்டு

தன் கால்கொலுசுகளின் மீது கொள்ளைப்
பிரியமவளுக்கு

பள்ளியில் கடிந்துகொண்ட ஆசிரியர் பற்றி
பாட்டியிடம் ஆறேழுமுறை உரைத்தாயிற்று 

பெற்றோர்களைச் சந்திப்பதற்கு வாரவிடுமுறைகள்
போதுமானதாயில்லை

பாட புத்தகங்களின் இடையிடையே
வெட்டப்பட்ட  படங்களுக்கு அவள்மீது குற்றங்களேதுமில்லை

தன் பேரவாவாக இருந்தவொன்றை எவரிடமேயும்
சொல்ல வேண்டுமென்றிருந்தாள்

ஆழ புதைத்த சில்லரைக்காசுகள் ஏதாயிற்றோ?
அப்பொழுது அவள் வயது 8

அதன்பின்னான அவளை
யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

சரி கவிதைகள் எங்கே அய்யா என்று பதில் போட்டேன்.

(முதல் கவிதை ஸ்ரீகாந்த் என்பவர் எழுதியதாம் அவருக்குத்தான் அடுத்த யுவா)

மாட்டுநீங்களா… இரண்டாம் கவிதை காளிமுத்து எழுதியது. தொகுப்புக்கு உங்கள் நண்பர் அமிர்தம் சூர்யா தான் முன்னுரை எழுதி இருக்கிறார். மேற்கண்ட கவிதையை காட்டி காளி முத்து அந்த விருதுக்கு தகுதியானவர்தான் என்று அபிலாஷ் சந்திரன் சொல்லி இருக்கிறார். இப்போ என்ன சொல்றீங்க என்று கேட்டிருந்தார்.

அமிர்தம் சூர்யா எவரையும் நேர்நிலை வார்த்தைகள் சொல்லி அரவணைத்துக் கொள்ளக் கூடியவர். தன் இயல்பில் அத்தகு மனம் கொண்டவர். முதலில் பாராட்டுவோம் அதற்குத்தான் இங்கே யாரும் இல்லை. விமர்சனம் செய்யத்தான் நிறைய பேர் உண்டே என்னும் நிலைப்பாடு கொண்டவர். புதிய படைப்பாளியை வரவேற்கும் அவர் பண்பும் அவரது பாராட்டும் முன்னுரையும் எந்த இளம் படைப்பாளிக்கும் முக்கியமானது. அது ஒரு ஆசி. வாழ்த்து. அது விவாதப்பொருள் அல்ல.

அபிலாஷ் சந்திரன் அவர்களை எடுத்துக்கொண்டால், இலக்கிய விமர்சனத்தில் அவர் அடி முடி காண இயலா அண்ணல். அவர் புகழ் பாட ஆயிரம் நாவுகள் கொண்ட அந்த ஆதிஷேஷனாலும் இயலாது. எளியவன் நான் எம்மாத்திரம்.

இருப்பினும் ஒன்றை சொல்ல முடியும். கடந்த பத்து வருடத்தில் நவீன தமிழ் கவிதைகளில் மலட்டுக் கவிதைகளின் பெருக்கத்துக்கு பின்னான  காரணங்கள் பலவற்றில் முக்கியமானது

“அடடே புக்கோவ்ஸ்கியே சொல்லிட்டாரே”

“நிக்கோனார் பார்ரா வந்த பிறகு தமிழ்க் கவிதை எங்கயோ போய்க்கிட்டு இருக்கு. அது எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் எனும் நீர்ம நிலைக்கு வந்து நெடுங் காலம் ஆகிறது.” (பார்ரா!)

“இலக்கியத்தில் ஏது மேல் கீழ்”

போன்ற உரையாடல்கள்.

இத்தகு உரையாடல்கள்  மலட்டுச் சொற் குப்பை எதுவெனினும் அதற்கு துணை நின்று ஆமாஞ்சாமி போடுவதால், இதுதான் இன்றைய  கவிதை என்று அந்த  வெளி ஆசாமிகள் வடிவமைத்த மாதிரியை முதன்மையாக கொண்டு பெருகுவதே இன்றைய பல மலட்டுக் கவிதைகள். அவற்றைப் பெயர் தனை நீக்கி, குப்பை என்று பெயரிட்டு,தெருவிடை காணும் பச்சை டப்பாவில் எறிந்து, அங்கேயே அவற்றை விட்டு நினைப்பொழிய வேண்டியதற்கு மேல் அவற்றால் ஆவதொன்றும் இல்லை.

மேற்கண்ட இரண்டும் ‘வெறும்’ மொழிக்கட்டுமானம். அவை கவிதைகள் அல்ல.

எதைக் கவிதை என்று சொல்கிறோம். உணர்வுக் கட்டுமானம் எதுவோ அதையே கவிதை என்று சொல்கிறோம். அடிப்படை உணர்வுக் கட்டுமானம் ஒன்றினை அந்தரங்கமாக தொடற்புறுத்தும் வகையிலான, அதனுடைய வெளிப்பாடே மொழிக்கட்டுமானம். இந்த மொழிக்கட்டுமானம் வழியே வெளிப்பட ஒரு உணர்வு தளம் வேண்டும். அந்த உணர்வு உண்மையும் அதன் நீட்சியான தீவிரமும் கொண்டதாக இருக்க வேண்டும். மொழியால் வெளிப்பாட்டு முறையால் படிமங்களால் புத்துணர்வு அளிக்கவேண்டும். மீண்டும் மீண்டும் அதில் சென்று தோயும் வண்ணம் உணர்வுப் பொதிவும் அர்த்த சாத்தியங்களையும் கொண்டிருக்க வேண்டும். அதன் கால் ‘இன்றின்’ நிலத்தில் நின்றிருந்தாலும் அதன் சிறகுகள் ‘என்றுமுள்ள’ வானில் திகழ வேண்டும் அனைத்துக்கும் மேலாக ‘இதை’ இவ்விதமன்றி வேறு எவ்விதத்திலும் கைப்பற்றிவிட முடியாது எனும்படியிலான ‘பிரிதொன்றில்லாத’ தன்மை வேண்டும்.

மேற்கண்ட காளி முத்து கவிதையில் இருப்பது என்ன?

அவளுக்கு 8 வயது.

நாணயங்களை புதைத்து வைத்து விட்டு மறந்து போகும் பால்யம். அவளுக்கு பூ பிடிக்கும். அவளுக்கு கொலுசு பிடிக்கும். அது யாருக்கும் தெரியாது. உடன் பிறந்த தம்பி, பெற்றோர்கள் அவள் உடன் இல்லை. பள்ளி ஆசிரியர்கள் மீதான அவள் பிராதுகளை பாட்டி செவி கொள்வதில்லை.

இப்படிப்பட்ட சூழலில் வளரும் ஒருவளுக்கு ஏதேனும்  (பாலியல் அத்துமீறல் போல) நிகழ்ந்தால். அது யாருக்கும் தெரியப் போவதில்லை. இவள் ஏன் இப்படி இருக்கிறாள் என்று யாருக்கும் புரியப்போவதும் இல்லை.

’அதன் பின்னான அவளை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.’

எனும் இறுதி வரி வழியே அதிக பட்சம் சென்று சேரும் ஊகம் இது மட்டுமே. இந்த ஊகம் பிசினஸ் எல்லாம் ஒளிஞ்சான் கண்டான் விளையாட்டுக்கு மட்டுமே ஆகும். கவிதைக்கு ஆகாது. கற்பனைச் சாத்தியம் என்பதுதான் கவிதைக்கானது.

இந்த பதிலை நண்பருக்கு அனுப்பி விட்டு யுவ புரஸ்கார் அடிதடியில் இதுவரை என்னதான் நிகழ்ந்திருக்கிறது என்று பார்க்க சற்றே வலையுலாவினேன். தண்டனைகளிலேயே மிக மிக கடுமையான தண்டனை ஒன்றை காளிமுத்து அடைந்திருக்கிறார்.

ஜெயமோகன் கண்டித்தால் நிச்சயம் நாம் அந்த ‘படைப்பாளியை’ பாராட்டி கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் ஒரு தோழர், வாசிச்சி நல்லா பெரிய தோழரா வாங்க தோழர் என்று காளிமுத்து அவர்களை வாழ்த்தி அவருக்கு ஒரு பத்து பதினைந்து நூல்களை பரிசளித்திருக்கிறார். அதன் தலைப்புகள் பட்டியலைக் கண்டேன். நாஞ்சில்நாடன் மொழியில் சொல்லவேண்டும் என்றால்  “வாங்குன அடில ஆத்தா வீட்ல வெச்ச சேணத்தண்ணி வெளிய சாடிரிச்சி”. பாவம்தான் கவி காளிமுத்து இன்னும் என்னவெல்லாம் அனுபவிக்க போகிராரோ :).

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைகோவை விழா, கடிதங்கள்
அடுத்த கட்டுரைகுன்றக்குடி அடிகளார்