என் பெயர் கார்த்திக். நான் அகிம்சை பொருளாதார கூட்டமைப்பு என்னும் முன்னெடுப்பை ஒருங்கிணைத்து வருகிறேன். இந்த கூட்டமைப்பின் நோக்கம் உள்ளூர் வாழ்வாதாரங்கள், கிராமத்து பொருளாதாரம் மற்றும் காந்தி மற்றும் ஜே சி குமரப்பாவின் விழுமியங்களை முன்னிறுத்தி இளைஞர்களை ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுத்துவது ஆகும். இதன் முதல்கட்டமாக அகிம்சை சந்தை என்னும் நிகழ்வை நடத்தவுள்ளோம். இந்நிகழ்வில் தென்னிந்தியாவைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள், இயற்கை உணவு, கைத்தறி நெசவு, சிறு வன உற்பத்தி பொருட்கள் மற்றும் மூலிகை மருந்துகள் என தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தவுள்ளனர். இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முக்கிய மாற்றுச் சிந்தனையாளர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் பிற தலைவர்களின் கல்வி அமர்வுகள், பயிற்சி பட்டறைகள், குழந்தைகளுக்கான கலை மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் கலை நிகழ்வுகளுடன் மாபெறும் இயற்கை கொண்டாட்டமாக இந்நிகழ்வு அமையவுள்ளது. இந்நிகழ்வை துவக்கி வைக்க பூட்டான் நாட்டின் முன்னாள் பிரதம மந்திரி திரு ஜிகமே தின்லே அவர்கள் வர உள்ளார்.
காந்தி முன் நிறுத்திய பல விழுமியங்கள் நடைமுறை படுத்த படாவிட்டாலும், உலகம் அதை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் அவரது பொருளாதார சிந்தனைகள் மட்டும் எந்தவித அங்கீகாரமுமற்று உள்ளது. அதே போல காந்திய பொருளாதார கருதுக்களை முன்னிறுத்திய பொருளியல் வல்லுனரான ஜே சி குமரப்பாவின் கருத்துகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் இன்றைய காலகட்டத்திற்கு இவர்களது பொருளியல் கருத்துக்கள் மிகவும் பொருத்தமானதாகும். இதை வலியுறுத்துவதே இந்நிகழ்வின் நோக்கமாகும்.
தாங்கள் இந்நிகழ்வில் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறோம். மேலும் இந்த நிகழ்வை பற்றி பரவலாக பகிருமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி,
இப்படிக்கு,
கார்த்திக்.