வணக்கம் திரு. ஜெயமோகன் ,
உங்கள் தளத்தை தினமும் படிக்கும் ஒரு சராசரி வாசகனின் கடிதம்.
ஒரு எழுத்தாளருக்கு எழுதும் முதல் கடிதம்.
தமிழ் விக்கி குறித்து , ஒரு வினைக்கு எதிர்வினையாக நீங்கள் பகிர்ந்தது,எனக்கும் ஒரு பங்கு இருக்க முடியும் , என்று தோன்றியதால்
தமிழ் விக்கி இணைப்புகள் அனைத்தையும் சொடுக்கி சென்று படிப்பேன்.
சிபில் கார்த்திகேசு – இந்த பக்கத்தையும் அவ்வாறே படித்தேன்.
அவரின் செயல்பாடுகளுக்கு “மாபெரும் வாழ்க்கை” – என்பதே பொருத்தமான தலைப்பு.
ஒரு ஊருக்காக ஒரு குடும்பமே வெந்து தணிந்திற்கிறது.
சிபில் கார்த்திகேசு – அந்த உன்னத உயிர்களின் அன்னை உயிர் !
உண்மையில் சிலிர்த்து விட்டது !
சிங்கப்பூரில் வசிப்பதால் , மலேஷிய சீன நண்பர்களும் உண்டு !.
சிபில் குறித்த ஆங்கில இணைய பக்கங்களை அவர்களிடம் பகிர்ந்து ,
இந்த பெண்மணியை பற்றி அவர்களுக்கு ஏதேனும் தெரியுமா ? என்று கேட்க தொடங்கினேன்.
அவர்கள் யாரும் பாடப்புத்தகங்களில் படித்திருக்கவில்லை , விவரங்கள் தெரிந்திருக்கவில்லை.
1948-இல் தன் 49ஆம் வயதில் மரணித்த அவர் –
சந்தேகமில்லாமல் மலேசியா பல் இன சமூகத்தின் ஒற்றுமையின் முகம்.மறக்கப்பட்ட முகம் !
அறிமுகத்திற்கு நன்றி , இது போன்ற மனிதர்களும் , அவர்தம் வாழ்வளிக்கும் செய்திகளும்தான் இரைதேடும் உலகவாழ்க்கையில் சில அர்த்தங்களும் உள்ளன என்று புரிய வைக்கிறது !
நன்றி.
குணா .
கு. அழகிரிசாமி
அன்புள்ள ஜெ
தமிழ்விக்கி கட்டுரைகளிலுள்ள exclusive தன்மை திகைப்பை உருவாக்குகிறது. போகிறபோக்கில் எழுதப்பட்ட கட்டுரை என ஏதுமில்லை. அத்தனை கட்டுரைகளிலுமுள்ள முழுமையான செய்திகள் மட்டுமல்ல தெளிவான பார்வையும் வியப்பூட்டுகின்றன. கட்டுரைகள் தெளிவாக பகுதிகளாக பிரிக்கப்பட்டு செய்திகள் அளிக்கப்பட்டுள்ளன. எல்லா செய்திகளும் அடங்கியிருக்கின்றன. அனைத்தையும் விட முக்கியமானது அந்த மனிதரின் வரலாற்றுப்பின்புலம், பங்களிப்பு ஆகியவை எந்த தொடக்கவாசகனுக்கும் தெளிவாகப் புரியும்படி அளிக்கப்பட்டுள்ளன.
கு.அழகிரிசாமி பற்றிய கட்டுரையை வாசித்து அதை முழுமையாக உள்வாங்கவே ஒருமணிநேரம் ஆகியது. அவ்வளவுசெய்திகள் ஒரு கட்டுரைக்குள் உள்ளன. கு.அழகிரிசாமியின் வாழ்க்கை, இசையார்வம், மரபிலக்கிய ஆர்வம் எல்லாவற்றுடன் அவர் மலேசிய இலக்கியத்தில் ஆற்றிய பணியும் சொல்லப்பட்டுள்ளது.
நன்றி
ரவிக்குமார்