ஞானியரின் உலகம்

ஏழாம் உலகம் மின்னூல் வாங்க

ஏழாம் உலகம் வாங்க

The Abyss வாங்க

(ஏழாம் உலகம் புதிய பதிப்புக்கான முன்னுரை)

நான் ஒருமுறை திருவண்ணாமலையில் மேடையில் பேசும்போது சொன்னேன், அந்த ஊரில் நான் பிச்சை எடுத்திருக்கிறேன் என்று. நண்பர்கள் திகைத்துவிட்டனர். என்னை ஒரு பிச்சைக்காரனாக அவர்களால் கற்பனை செய்ய முடியவில்லை. நான் சொன்னேன், ‘பிச்சைக்காரர்களை நாம் கவனிப்பதில்லை, விரைவாக எதையாவது கொடுத்துவிட்டு நகர்ந்துவிடுகிறோம். கொஞ்சம் கவனியுங்கள், அது எவ்வளவு பெரிய உலகம் என தெரியவரும். திருவண்ணாமலையின் மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க அளவுக்கு பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள்’

1981ல் நான் வீடுவிட்டு கிளம்பினேன், துறவியாகும் நோக்கம் இருந்தாலும் சிலமாதங்களில் திரும்பி வந்தேன். ஆனால் ஓரிரு வாரங்களில் மீண்டும் கிளம்பினேன். அப்போதுதான் திருவண்ணாமலையிலும் பழனியிலும் பிச்சை எடுத்து வாழும் துறவியாக, பிச்சைக்காரர்களுடன் ஒருவனாக சில காலம் இருந்தேன். ஏழாம் உலகம் அந்த அனுபவங்களில் இருந்து முளைத்த நாவல்.

2003ல் நான் ஏற்கனவே காடு என்னும் ஒரு நாவலை எழுதியிருந்தேன். தமிழின் மிக பாவியல்பு (Lyrical) தன்மை கொண்ட நாவலாக அது கருதப்படுகிறது. காலைப்பொன்வெயில் போன்ற ஓர் ஒளி எல்லா வாழ்க்கையிலும் தோன்றி விரைவாக மறைந்துவிடும், அதைப்பற்றிய நாவல் அது. அதன் மிதப்பில் நான் இருந்த நாட்களிலொன்றில் பேருந்தில் அலுவலகம் செல்லும்போது வழியில் ஏதோ நடந்தது. என் அகம் திடுக்கிட்டது. எண்ணங்கள் எழுந்து விரிந்தன. நான் பழனியில் பிச்சைக்காரர்களுடன் ஒருவனாக வாழ்ந்த நாட்களை மீண்டும் வாழ்ந்தேன்.

அந்நினைவுகளில் துலங்கி வந்த முகம் ராமப்பனுடையது. தொழுநோயால் உடல் ஊனமுற்ற அவர் நான் சந்தித்த பெருந்தன்மையும், அன்பும், அறவுணர்வும் கொண்ட பெரிய ஆளுமைகளில் ஒருவர். சாலையில் நான் பார்த்த எவரோ ராமப்பனை நினைவூட்டியமையால்தான் என் அகம் நிலையழிந்தது என உணர்ந்தேன். அலுவலத்தில் எனக்கு அன்று பணிச்சுமை இல்லை. அன்றைய எங்கள் மாவட்டத்தலைவர் பாலசுப்ரமணியம் என்னை எழுத்தாளனாக அடையாளம் கண்டு எனக்கு பணிச்சுமை இல்லாத வேலையை அளித்திருந்தார். அலுவலகத்திலேயே எழுத ஆரம்பித்தேன். மதியம் வீடு திரும்பி எழுதிக்கொண்டே இருந்தேன்.

ஒருவாரத்திற்குள் எழுதி முடித்தேன். நாலைந்து நாட்களிலேயே அச்சிடப்பட்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் நூல் விற்பனைக்கு வந்தது. தமிழில் அன்றுமுதல் இன்றுவரை திகைப்புடனும், அதைக் கடந்து எழும் ஓர் ஆன்மிகமான விடுதலையுணர்வுடனும் வாசிக்கப்படும் நாவலாக இது உள்ளது.

இன்று விளிம்புநிலை மக்களைப் பற்றி எழுதுவதை பலர் கூறிவருகிறார்கள். இந்நாவல் விளிம்புக்கும் அப்பாலுள்ளவர்களைப் பற்றிப் பேசுகிறது. இந்துத் தொன்மங்களின்படி அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் என ஏழு. பாதாளத்தில், நாம் அறியவே முடியாத ஆழத்தில் வாழும் மக்கள் என்னும் பொருளில் இந்நாவலுக்கு மூலத்தில் ஏழாம் உலகம் என்று பெயரிடப்பட்டது.

நம்மருகே உள்ள உலகம்தான், நாம் அதைப் பார்ப்பதில்லை. நம் கண்களுக்கு தென்படுவதில்லை. என்னிடம் இந்நாவல் வெளிவந்தபோது இப்படி ஓர் உலகு உண்டா என்று பலர் கேட்டனர். சபரி மலையில் அத்தனை உயரத்தில் இரண்டு கால்களும் இரண்டு கைகளும் இல்லாத ஒருவர் படுத்துக்கிடந்து பிச்சை எடுக்கிறாரே, அவர் அங்கே எப்படி வந்தார் என யோசித்ததுண்டா என்று நான் கேட்டேன். என்னிடம் பேசியவர் திகைத்துவிட்டார். அவர் அவ்வாறு எண்ணியதே இல்லை. அப்படி அவரை அங்கே கொண்டுவந்து போடும் அமைப்பு ஒன்று செயல்படுகிறது, அதற்கு லாபம் வருகிறது, அந்த அமைப்பின் வணிகப்பொருள் அந்த மனிதர் என்று நீங்கள் உணரமுடியாதா என்று கேட்டேன்.

இந்நாவல் வெளிவந்த பின் தொடர்ச்சியாக எனக்கு இந்நாவல் காட்டும் உலகம் பற்றிய செய்திகளை பலர் அனுப்பிக் கொண்டிருந்தனர். அச்செய்திகள் முன்னரும் வந்துகொண்டுதான் இருந்தன. அவர்கள் அவற்றை பார்க்கவில்லை. பார்க்கும் விழிகளை இந்நாவல் அளித்தது. அதுவே இதன் பங்களிப்பு.

ஆனால் இந்நாவல் விளிம்புநிலை மக்களின் சார்பில் நின்று அறச்சீற்றத்துடன் பேசும் ஆக்கம் அல்ல. மனிதாபிமானம், இரக்கம், கருணை எதையும் இது முன்வைக்கவில்லை. இது அவர்களில் ஒருவராக இருந்தவனால் எழுதப்பட்டது. ஆகவே வாசகனுக்கு அவர்களில் ஒருவனாக வாழும் அனுபவத்தை அளிக்கிறது. அவர்களின் வாழ்விலும் வேடிக்கையும், விளையாட்டும், நட்பும், காதலும், துயரமும், வன்முறையும், சாவும் எல்லாம் உண்டு என்று வாசகன் வாழ்ந்து அறியச் செய்கிறது.

இந்நாவலை ஒட்டியே நான் திரைக்கதை-வசனம் எழுதி பாலா இயக்கி தேசிய விருதுகள் பெற்ற நான் கடவுள் என்னும் திரைப்படம் 2009ல் வெளிவந்தது. ஏழாம் உலகம் காட்டும் அதே பிச்சைக்காரர் உலகைச் சேர்ந்தவர்களையே நடிக்கவைத்தார் பாலா.அதில் மதுபாலா என்ற பெண் இருந்தாள், பதினாறுவயது. ஆனால் உடல் ஐந்து வயது வளர்ச்சி கொண்டது, உள்ளம் மூன்றுவயது வளர்ச்சி மட்டுமே கொண்டது. மதுபாலா எதையும் தன் அண்ணனுக்கு (உண்மையில் பத்துவயது இளைய தம்பி) கொடுக்காமல் சாப்பிடுவதில்லை. அவளிடமிருக்கும் எந்த உணவையும் எவர் கேட்டாலும் உடனே சிரித்தபடி கொடுத்துவிடுவாள். பால்பற்களுடன் மதுபாலாவின் சிரிப்பு மிக அழகானது.

அவள் அப்படி கொடுக்க காரணம் எளிதானது. மதுபாலா பசியையே அறிந்ததில்லை. அந்தப் பிச்சைக்கார உலகில் அத்தனை பிச்சைக்காரர்களும் அவளுக்கு உணவு அளித்தபடியே இருந்தனர். மதுபாலா அவர்களிடையே திகழும் ஒரு சிறு தேவதை.

நான் திருவண்ணாமலையில் பிச்சை எடுத்ததைச் சொன்னேன். அப்போது உடன் பிச்சை எடுத்தவர், நான் அவரை சகபிச்சைக்காரர் என்று பின்னர் எழுதியிருக்கிறேன், யோகி ராம்சுரத் குமார். தமிழகத்தில் நம் காலத்தில் வாழ்ந்த மெய்ஞானியரில் ஒருவர். பின்னர் நான் அவரைச் சந்திக்கச் சென்றிருக்கிறேன். தன்னை அவர் ‘This begger’ என்றுதான் சொல்லிக்கொள்வார். பிச்சைக்காரர்களின் உலகம் ஓர் எல்லை, அது நம் சமூகத்தின் அடித்தட்டின் அடித்தளம். ஆனால் அது வளைந்து வட்டப்பாதையில் நம் சமூகத்தின் உச்சத்தில் இருக்கும் துறவிகளை, ஞானிகளை வந்தடைகிறது. அவர்களும் அங்குதான் இருக்கிறார்கள். மாங்காண்டி சாமி அங்குதான் இருக்க முடியும்.

நான் என் துறவியாக அலைந்த வாழ்க்கையில் அறிந்தேன், இந்தியாவில் பல ஆயிரம் துறவியர் பிச்சை எடுத்தபடி அலைந்துகொண்டிருக்கிறார்கள். அடையாளங்கள் அற்றவர்கள். இந்த தேசம் உண்மையில் அவர்களுடையதுதானா? சங்கரரும் விவேகானந்தரும் பிச்சை எடுத்திருக்கிறார்கள்.என் ஞானாசிரியர் நித்ய சைதன்ய யதியும் அவருடைய ஆசிரியர் நடராஜ குருவும் பிச்சை எடுத்து இந்தியா எங்கும் அலைந்திருக்கிறார்கள். அது மெய்த்தேடலின் ஒரு பகுதி என்று இங்கே வகுக்கப்பட்டிருக்கிறது. நித்ய சைதன்ய யதியிடம் அந்த திருவோடு இருந்தது. நன்கொடைகளை அவர் அதில்தான் வாங்கிக்கொள்வார்.

எனக்கு மிக உகந்த இந்தியப் படைப்பாளியான வைக்கம் முகமது பஷீர் பிச்சை எடுத்திருக்கிறார். பிச்சை எடுத்தால் மட்டுமே அறியும் ஓர் இந்தியா உண்டு என அவர் எழுதியிருக்கிறார். நானும் என் வழியில் அதை அறிந்திருக்கிறேன். இங்கே அலைந்த அந்நாட்களில் நான் ஒருவேளைக்குமேல் உணவில்லாமல் இருக்க நேரிட்டதே இல்லை. இந்தியாவில் எந்தப்பெண்ணிடமும் உணவு கோரலாம், ஒரு பெண்கூட மறுத்ததில்லை.

ஜெயமோகன்

குமரித்துறைவி வாங்க
வான் நெசவு சிறூகதைத்தொகுப்பு வாங்க
பத்துலட்சம் காலடிகள் சிறுகதைத்தொகுப்பு வாங்க
தங்கப்புத்தகம் சிறுகதைத்தொகுப்பு வாங்க
ஆயிரம் ஊற்றுகள் சிறுகதைத்தொகுப்பு வாங்க
வாசிப்பின் வழிகள் வாங்க
ஆனையில்லா சிறுகதைத்தொகுப்பு வாங்க
ஐந்து நெருப்பு சிறுகதைத்தொகுப்பு வாங்க
தேவி சிறுகதைத்தொகுப்பு வாங்க
அந்த முகில் இந்த முகில் – நாவல் வாங்க
எழுகதிர் சிறுகதைத்தொகுப்பு வாங்க
முதுநாவல் சிறுகதைத்தொகுப்பு வாங்க
பொலிவதும் கலைவதும் சிறுகதைத்தொகுப்பு வாங்க
பின்தொடரும் நிழலின் குரல் அச்சுநூல் வாங்க
இருகலைஞர்கள் சிறுகதைத்தொகுப்பு வாங்க
மலை பூத்தபோது சிறுகதைத்தொகுப்பு வாங்க
இலக்கியத்தின் நுழைவாயிலில் அச்சு நூல் வாங்க
நத்தையின் பாதை அச்சு நூல் வாங்க
மைத்ரி நாவல் வாங்க
ஆலயம் எவருடையது ஆன்லைனில் வாங்க
இந்துமெய்மை ஆன்லைனில் வாங்க
சாதி – ஓர் உரையாடல் ஆன்லைனில் வாங்க
வணிக இலக்கியம் ஆன்லைனில் வாங்க
ஈராறுகால் கொண்டெழும் புரவி ஆன்லைனில் வாங்க
கதாநாயகி ஆன்லைனில் வாங்க
ஒருபாலுறவு ஆன்லைனில் வாங்க
அனல் காற்று ஆன்லைனில் வாங்க
வெண்முரசு – நீர்ச்சுடர் (23) வாங்க
ஞானி ஆன்லைனில் வாங்க
நான்காவது கொலை ஆன்லைனில் வாங்க
விசும்பு ஆன்லைனில் வாங்க
வெண்முரசு – களிற்றியானை நிரை (24) வாங்க
முந்தைய கட்டுரைகிருத்திகா நூல்கள் மறுபதிப்பு
அடுத்த கட்டுரைஅண்ணல்தங்கோ